அப்துல் கலாம் – முஸ்லிமா? முனாஃபிக்கா?

SatyaMargam.com

டந்த 27-07-2015 அன்று மாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங் Rajiv Gandhi Indian Institute of Management (RG-IIM)  மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை (வியாழன்) இராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.

மறைந்த அப்துல் கலாம் நல்லவர்;  வல்லவர் என்று கூறுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதருமல்ல.  ஆனால் அவர்மீது அதீத அன்போ, எல்லையற்ற வெறுப்போ தேவையில்லை என்பதே நம் கருத்து.

“மரணம் அடைந்தபின் இவ்வுலகில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு கூலியை மறுமையில் அவர் பெற்றுக் கொள்வார்” எனும் நபிமொழி நமக்கு நினைவுபடுத்துவது, மரணித்தவரின் மறுமை நிலை பற்றி பேச இவ்வுலகில் எவருக்கும் அருகதை இல்லை என்பதே. ஆனால், தாங்கள் மட்டுமே சுவர்க்கம் செல்வோர் என்று சொல்லித் திரியும் ஒரு பிரிவினைவாதக் கூட்டம், காண்போரை எல்லாம் ‘நரகவாசிகள்’ என்று சகட்டுமேனிக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

அப் பட்டியலில் மறைந்த அப்துல் கலாமையும் இணைத்து பொதுவெளியில் வைத்து அந்த டாக்டருக்கு போஸ்ட்மார்ட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்துல் கலாம் உருவாக்கிய, மனிதகுலத்திற்குத் நன்மை தரும் பல்வேறு நலத்திட்டங்களைப் புறம் தள்ளிவிட்டு, அவர் ஏன் இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை? ஏன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை? என்கிற ரீதியில் அடுக்கப்படும் இவர்களின் கேள்விகள், வரம்பைக் கடந்து இவர் முனாஃபிக் ஆகத்தான் மரணித்தார் என்றும் அவருக்காக துஆ செய்வதே கூடாது என்றும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதித்துக் கொண்டிருப்பது கவலைக்குரிய,  வருத்தத்திற்குரிய செய்தி மட்டுமன்று. மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

ஏன்?

“இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின்பால் சென்று சேர்ந்து விட்டார்கள்” என்ற (புகாரி 1393)  நபிமொழியை நன்கு அறிந்தும், பலர் நினைவுறுத்திய பின்பும் கூட இந்த வசவுகளில் ஈடுபட்டுட்டுள்ளோர் தம் வீரியத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. மூமின்கள் இறந்துவிட்ட மனிதரின் நல்லறங்களை மட்டுமே பேச வேண்டும்; மஃக்பிரத் பெற்றுத் தர மட்டுமே துஆ செய்ய வேண்டும் என்று பல நபி மொழிகள் உலகத்திற்கு அழகாக முன்மொழிந்திருக்க அவையனைத்தையும் புறந்தள்ளி பிணம் தின்னிகளாக மாறி மரணித்தவரைப் பற்றிப் புறம்பேசி அலையும் பெரும் கொடுமையைக் காண முடிகிறது.

காஃபிர்களுடன் நடந்த போரில், வாளை உயர்த்திக் கொல்லப் போகும் நேரத்தில் கலிமாச் சொன்ன ஒருவரை நான் கொன்று விட்டேன் என்ற நபித்தோழரின் கூற்று நபிகளாரின் காதுகளுக்கு வந்தது.  விசாரணையில், “தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எதிரி அவ்வாறு கூறியிருக்கலாம் அல்லவா!” என்று நபித்தோழர் விளக்கம் அளித்தபோது “உயிரைக் காக்கவே அவர் கலீமாச் சொன்னார் என்று அவரது இதயத்தைப் பிளந்து நீர் பார்த்தீரா?” என்ற நபிகளாரின் கடும் கண்டனம் நினைவில் வந்தால் உள்ளம் உதறல் எடுக்கும்.

“அப்துல் கலாம் சங்கராச்சாரியாரோடு அமர்ந்திருக்கிறாரே;  குத்துவிளக்கு ஏற்றியிருக்கிறாரே;   கோயில்களுக்குச் சென்றிருக்கிறாரே;   இது போதாதா இவர் காஃபீர் என்பதற்கு?” எனும் இவர்களின் வியாக்கியானங்கள் மேற்சொன்ன நபிமொழியைத் தூரம் வீசி எறிகின்றன. இத்தனைப் படங்களை இணைத்தவர்கள் அப்துல் கலாம் பள்ளிவாசல்களில் தொழும் பல்வேறு படங்களை ஏனோ இணைப்பதில்லை!

இந்தியா போன்ற பல்சமூகக் கட்டமைப்பினூடே வாழும் மக்கள் அனைவருக்குமான ஜனாதிபதி அவர் என்பதை மறந்து விட்டு, முஸ்லிம்களுக்கான ஜனாதிபதியாக மட்டுமே அவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற ரீதியில் கேள்வி எழுப்புவது வேடிக்கையானது. அவரது இறை நம்பிக்கையில் பிழை இருந்தால் அதை நியாயத் தீர்ப்பு நாளில் அவரிடம் சரிபார்ப்பவன் இறைவன் மட்டுமே!

இறைத் தூதர் போதித்த சதக்கத்துல் ஜாரியாவாக Green Kalam திட்டத்தில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நடுவதிலிருந்து ஏழை எளியோருக்கு பயன் தரும் பல்வேறு வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டங்களை துவங்கி நிறைவேற்றியவர்;  நபிகளாரின் உன்னத போதனையான சமத்துவத்தினைப் பின்பற்றி மிக உயர்ந்த பதவியிலும் மிக எளிமையாக வாழ்ந்து காட்டியவர்;  கிரிக்கெட்டுக்கு கைதட்டி விசில் அடித்தால்தான் நாட்டை நேசிப்பவன் என்ற கீழ்த்தர மனோநிலையை மாற்றி, நாட்டுப்பற்று என்றால் என்னவென்று இந்தியர்களுக்கு பாடம் நடத்திய முன்னோடி இந்தியர்;  தன்கீழ் பணியாற்றுபவர்களிடம் அன்பாய்ப் பழகியவர்; – சிறந்த தமிழ் மொழிப்பற்றாளர்; உலக அரங்கில் இந்தியர்களைத் தலை நிமிரச் செய்த அறிவியலாளர்; ஜமாஅத் தொழுகையின்போது அவரது பாதுகாப்பிற்காக பள்ளிவாசலுக்குள்ளே பிரத்தியேக இடத்தை ராணுவம் தேர்வு செய்தபோது அதை மறுத்து பிறரைப் போல நானும் இறைவனின் அடிமையே என்று உரைத்து மக்களோடு மக்களாக நின்று தொழுதவர்; இளைஞர்கள்,  மாணவர்கள், குழந்தைகள்தாம் இந்திய முன்னேற்றத்தின் அடிப்படை என்றுரைத்து ‘கனவு கண்டு அதை நோக்கி முயற்சி செய்யுங்கள்’ என்ற சித்தாந்தத்தை பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்தவர்; சிறந்த கவிஞர்; அகந்தை அற்ற நற்குணத்தை பல்வேறு இடங்களில் நிரூபித்தவர்; தன்னடக்கத்திற்குச் சொந்தக்காரர்; தகுதியற்றவர்களுக்குப் பரிந்துரை என்று தம் அதிகாரத்தை துர்பிரயோகம் செய்யாதவர்;  1950 களில் திருச்சி செஞ்ஜோசப் கல்லூரியில் படித்தபோது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்ற வறுமையின் காரணத்தால் சைவத்தை சாப்பிட ஆரம்பித்து அதனையே வாழ்நாள் முழுக்க கடைபிடித்தவர் – மறுமை நாள் சிந்தனைகள் பற்றியும், குர்ஆன் வாசிக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை என்றும் தனது உரைகளில் விளக்கியவர்; பூசணி உடைப்பது போன்ற பிற மத கலாச்சாரங்களை எள்ளி நகையாடாமல் அது அவரவர் நம்பிக்கை என்று கூறியதன் மூலம் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாசூக்காகக் கூறியவர் என இவரைப் பற்றிய சிறப்பம்சங்கள் ஏராளம். (www.satyaMargam.com)

இத்தகைய பண்புகளே, மதம் கடந்த இந்திய மக்களின் அன்பை டாக்டர் அப்துல் கலாமுக்குப் பெற்றுத் தந்தன.

9:84   وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ  அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.

சேரமான் (கேரளா) பள்ளிவாசலில் குர்ஆனுடன் கலாம்!

அப்துல் கலாமை காஃபீராக்குவோர், மேற்கண்ட சூரா தவ்பாவின் 84 ஆவது வசனத்தை ஆதாரமாகக் கூறி மிகத் தவறான விளக்கத்தை அளிக்கின்றனர்.  தப்ஸீர் இப்னு கஃதீர் விளக்கவுரையின்படி, முனாஃபிக் (நயவஞ்சகன்) தொடர்பாக இறங்கிய வசனம் இது. நயவஞ்சகனுக்கு மன்னிப்பு இல்லை எனும் சட்டங்களை அறிவித்த நபியவர்களே முனாஃபிக் என முன்மொழியப்பட்டவருக்கு தமது ஆடையை போர்த்தியதோடு ஜனாஸாவும் தொழ வைத்தார்கள். தயங்கிய நபித்தோழர்களிடம் 70 தடவை பாவமன்னிப்பு கேட்டாலும் முனாஃபிக் மன்னிக்கப்பட மாட்டான் என்று அல்லாஹ் கூறியதால் எழுபதுக்கு மேற்பட்ட முறைகளில் நான் பாவமன்னிப்பு கேட்பேன் என்று கூறியதன் மூலம் நயவஞ்சகனுக்கும் பாவமன்னிப்பு பெற முயற்சித்தார்கள்.

எவர் சுவர்க்கவாசி, எவர் நரகவாசி என்று அல்லாஹ்வும் இறைத்தூதரும் அறிவித்து விட்டவர்களைத் தவிர்த்து, வேறெவரின் மறுமை நிலையைப் பற்றி தீர்ப்பு உரைக்க நம்மில் யாருக்கும் உரிமையோ, தகுதியோ, அருகதையோ கிடையாது. காஃபிர்களுக்கு நேர்வழியின்பால் அழகிய முறையில் அழைப்பு விடுத்து முஸ்லிம்களாக்க ஒருபுறம் நன்மக்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்க –  இன்னொரு சாரார், இருக்கும் முஸ்லிம்களை காபிர்களாக அறிவிப்புச் செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இவர் முஸ்லிம்; – அவர் காஃபிர் என்று தரம் பிரிப்போர் இனியாவது இறைவனுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்.

ஏகபோகத்துக்கு பரவும் ஏச்சும் பேச்சும் பொய்யாக இருந்துவிட்டால்? அவரது இவ்வுலக பாவங்கள் மறுமையில் மூட்டையாகத் தங்கள் முதுகில் ஏற்றப்படும் என்பதை புறம் பேசுபவர்கள் உணர வேண்டும்.  இறைக் கட்டளைகளை செயல்படுத்தி வரும்போதே, இறுதி நிலையில் முஸ்லிமாக மரணிப்போமா காஃபிராக மரணிப்போமா –  மறுமையில் தங்களுக்கு கிடைக்கவிருப்பது சுவர்க்கமா? அல்லது நரகமா? என்று உறுதியாகத் தெரியாத நிலையில் இறைவனிடத்தில் பிரார்த்தனைகளுடன் வாழ்கிறோம். இதில், இறந்து போன இன்னொருவரின் மறுமை நிலை பற்றி விவாதம். வேடிக்கை தான் இல்லையா?

என்னை நேர்வழிப்படுத்தியது குர் ஆன் தான் – டாக்டர் அப்துல் கலாம்

இந்திய முஸ்லிம்கள் பல்வேறு நிலைகளில் ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் சூழ்நிலையில் ராக்கெட், அணு ஆயுதம், வல்லரசு என்று உச்ச நிலையில் இந்தியாவைக் கொண்டு சென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு முஸ்லிமைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்போம்.  மனம் போன போக்கில் எவரையும் முஷ்ரிக்காகவோ காஃபிராகவோ ஆக்கி அழகு பார்க்கும் விஷமக் கிருமிகளை அடையாளம் கண்டு தூர விலகி இருப்போம். இத்தகையோரிடம், இவர்களால் அநியாயமாக முஷ்ரிக் / காஃபீர் என இவ்வுலகில் அறிவிக்கப்பட்டவர்கள் மறுமையில் இறைவனிடம் முறையிட்டு தம் கணக்கைத் தீர்த்துக் கொள்வர்.

முஸ்லிமாகப் பிறந்து வாழ்ந்து மறைந்த ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்போம். இறைவனுக்கு அஞ்சுவோம். இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி அவனே! அவன் ஒருவனே!

– அபூ ஸாலிஹா