இஸ்லாமிய வரலாற்றில் புதுத் திருப்பம்!

இஸ்லாம் எனும் இறைமார்க்கத்தில் எந்தப் பிரிவும் இல்லவே இல்லை. ஆயினும், இறுதி நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் தலைமை ஆதரவு/எதிர்ப்பு, விருப்பு/வெறுப்புகள் எனும் அரசியல் கருத்து வேறுபாடுகளை முன்வைத்து, சிலர் ஏற்படுத்திய குழப்பங்களின் விளைவாகத் தோன்றிய, ஸுன்னீ/ஷியா என்ற இரு பிரிவுகள், “இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை” (6:153) என்ற இறைகட்டளையை மறந்து, கடந்த 1400 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் கொள்கையளவிலும் எதிர்த்துக் கொண்டு, தனிப் பள்ளி, தனி வழிபாடுமுறை என்று பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.


ஸுன்னீ முஸ்லிம்: ஸுன்னத் ( நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் வழியினர்) என்பது பின்னர் ஸுன்னீ என்றானது.

ஷியா முஸ்லிம்: ஷியாத்தே அலீ (நபிகளாரின் மருமகனார்) அலீ(ரழி) அவர்களின் ஆதரவாளர்கள், பின்னர் காலப்போக்கில் ஷியா பிரிவினர் என்று அறியப் பட்டனர்.

காலங் காலமாக மனிதகுலத்தின் எதிரியாகிய ஷைத்தானும் அவனுடைய வலையில் சிக்கிய சில இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் இரு பிரிவினரிடையேயும் வேற்றுமைகளை வளர்த்து, அவை மேலும் மேலும் உறுதியாகி,  ‘இஸ்லாத்திலும் பிரிவுகள் உள்ளன’ என்ற தவறான ஒரு கருத்துருவாக்கம் ஏற்பட்டு, அது உலகம் முழுதும் ஆழப் பதிந்து பரவலானது என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும்.

இறைவனால் வகுத்தளிக்கப்பட்ட வாழ்க்கைத் திட்டத்தினை உலக மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டிய முஸ்லிம்கள், சின்னஞ்சிறு விஷயங்களிலிருந்து இறைவனுக்கு மாறு செய்யாத – ஆனால் மார்க்க அடிப்படையில் வலியுறுத்தப்பட்ட பல பெரிய விஷயங்கள்வரை தங்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் கொண்டு பல அணிகளாக, ஒற்றுமையின்றி பிரிந்து கிடப்பதே உலக ‘முஸ்லிம் வரலாறாகும்’.

இதுவே நரேந்திரமோடி போன்ற சமூக விரோதிகளுக்கும் மதத் தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் RSS போன்ற அமைப்பாகச் செயல்படும் இரத்தவெறி கொண்ட ஹிந்துத்துவ வெறியர்களுக்கும் ஷாரோன், புஷ் போன்ற மனித விரோத சக்திகளுக்கும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்துத் தங்களின் எல்லாவிதச் சோதனைகளையும் முஸ்லிம்கள் மீது செய்து பார்ப்பதற்கு வழிகோலுவதாக அமைந்தது.

இதனைக் காலம் கடந்தெனினும் இதோ முஸ்லிம் சமுதாயம் உணரத் துவங்கி விட்டது என்பதற்கான அடையாளம் காண ஆரம்பித்து விட்டது.

ஆம், இந்திய இஸ்லாமிய வரலாற்றில்… இல்லையில்லை உலக இஸ்லாமிய வரலாற்றில் முதன் முறையாக இஸ்லாமியர்களில் இரு பெரும்பான்மையினராகப் பிரிந்து செயல்பட்டு வந்த ஸுன்னீக்களும் ஷியாக்களும் தங்களுக்குள் ஒன்றிணைந்து ஆன்மீகச் செயல்பாடுகளைச் செய்ய முன்வந்து விட்டனர்.

அதன் முன்னோடியாக, ‘ஷியா’ மற்றும் ‘ஸுன்னீ’ எனும் “இரு (அரசியல் அடிப்படையில் பிரிந்த) பிரிவினர்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்திடும் முயற்சியாக இவ்விரு பிரிவின் அங்கத்தினர்கள் இணைந்து உத்திரப்பிரதேசத்தில் உள்ள லக்னவ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றினர்” என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய (All India Muslim Personal law board-AIMPLB) உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இந்தக் கோரிக்கையை ஷியாப் பிரிவினைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் முன் வைத்தனர். மேலும் இது இரு சாராருக்கும் பலனளிக்கும் (ஒற்றுமை முயற்சி) என்பதால் நாங்கள் இதற்கு இசைந்து குழுவாக (ஷியாச் சகோதரர்களும் ஸுன்னீ சகோதரர்களும்) ஒன்றிணைந்து வெள்ளி்கிழமையின் விசேஷ ஜும்ஆத் தொழுகையை ஷியாக்களுக்குச் சொந்தமான அஃபிஸி பள்ளியில் நிறைவேற்றினோம்” என்று ஸுன்னீத் தலைவர்களுள் ஒருவரும் (AIMPLB) நிர்வாகியுமான மௌலானா ராஷித் ஃபிரன்கி மஹல்லீ அவர்கள் IANS செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

“இந்த முன் முயற்சி இரு சாராருக்கு மத்தியில் நெருக்கம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் மலர உதவும்” என்றும் அவர் கூறினார்,

“இரு சாராருடைய உறவையும் உறுதியாக்கிடும் வகையில் இரு சாராரின் மார்க்க அறிஞர்களும் இது போன்று கூட்டுத் தொழுகைகளைப் பல பள்ளிகளில் இணைந்து நிறைவேற்றுவார்கள்” என்றும் ஒரு ஷியா மார்க்க அறிஞர் தெரிவித்தார்.

மேலும், “விரைவில் நாங்கள் எமது ஸுன்னீச் சகோதரர்களுடன் அவர்களுடைய ஆயிஷாபாக் எனும் இடத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் கூட்டாகத் தொழுகையை நிறைவேற்றுவோம்” என்றும் அவர் உறுதி கூறினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரு சாராரின் தலைவர்களும், “தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டும், ஏனெனில் இது இரு பிரிவினர் மத்தியில் உள்ள தூரத்தை அகற்றிட உதவும் ஒரு மிகச் சிறந்த பாலமாகும்” என்று கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதற்கு முன்னர் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியத்தின் தலைவர் ஷாயிஸ்தா அம்பர் இது போன்ற ஒரு கூட்டுத் தொழுகையை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இரு சாராருடைய ஆண்களும் பெண்களும் அம்பர் எனும் இடத்தில் ஒரு குழுவாகக் கலந்து கொண்டு, தொழுகையை நிறைவேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏக இறைவனால் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட தூய்மையான ஏக இறைமார்க்கமாகிய இஸ்லாத்தினைத் தானும் உணர்ந்து, பிற சமுதாயத்தினருக்கும் உணர்த்தி, நேர்வழியும் ஈடேற்றமும் பெற வழி வகுக்க வேண்டிய முஸ்லிம்கள், தங்களிடையே நிலவும் ஷிர்க் அல்லாத மற்ற கருத்து வேறுபாடுகளைத் தள்ளி வைத்து, சமூகத்தில் இருக்கும் பிளவுகளையும் குழப்பங்களையும் நீக்க உதவும் இதுபோன்ற முயற்சிகள்தாம் முஸ்லிம்கள் மட்டுமின்றி முழு மனித சமுதாயமும் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து ஈடேற்றம் பெற வழிவகுக்கும்.

ஒரே சமுதாயத்தின் இருபெரும் பிரிவுத் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையே இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இப்புதிய மாற்றம், உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்களிடையே பரவுவதற்கும் அதுவே உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்குத் துவக்கமாக அமைவதற்கும் அருளாளன் அல்லாஹ் அருள் புரியட்டும்.

அதற்கான முயற்சிகளில் இறங்கித் துவக்கி வைத்துள்ள இரு பிரிவு அறிஞர்களுக்கும் தலைவர்களுக்கும் சத்தியமார்க்கம் தளக்குழு மனமார்ந்த உள்ளங்கனிந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகின்றது.!

வல்ல இறைவன் உதவி புரிவானாக!