உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் எப்போதுமே சரியாக இருக்கமுடியாது – தலைமை நீதிபதி

{mosimage}உச்சநீதிமன்றம் குழந்தைகள் தினத்தை ஒட்டி பள்ளிக் குழந்தைகளை இன்று (14/11/2006) தனது வளாகத்தினுள் அனுமதித்தது. அப்போது பள்ளிக் குழந்தைகளின் கேள்விகளுக்கு இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையில் பல நீதிபதிகள் பதில் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எப்போதுமே சரியாக இருக்கும் என கூற முடியாது என்று தலைமை நீதிபதி Y.K. சபர்வால் கூறியுள்ளார்.

அப்போது பேசிய நீதிபதி சபர்வால், தவறு செய்யாதவர்கள் என எந்த ஒரு நிறுவனமோ அல்லது தனி நபரோ இருக்க முடியாது. ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு தனி மனிதனும் தவறுகள் புரிய வாய்ப்புள்ளது. இருப்பினும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதியானது என்றார்.

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எப்போதுமே சரியாக இருக்கும் என்று கூற முடியாது. எனினும் இதன் தீர்ப்பு தான் இறுதியானது. அதனால்தான் இதை உச்ச நீதிமன்றம் என அழைக்கிறோம் என நீதிபதி சபர்வால் மேலும் கூறினார்.

திரு. சபர்வால் ஒரு நீதிபதி என்ற அளவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இக்கருத்தைக் கூறியுள்ளார். எனினும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் தவறாக இருந்து அதன் மூலம் அநீதி இழைக்கப்பட வாய்ப்புள்ளது என்றே இக்கருத்திலிருந்து உய்த்துணர வேண்டியுள்ளது.

இதே நிகழ்ச்சியில் அரசு எந்திரமும் நீதித்துறையும் எவ்வாறு தத்தம் வரம்புகளைக் கடக்காமல் செயல்படுவது என ஒரு மாணவனின் கேள்விக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை.

இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பள்ளியில் பயிலும் சிறார்களிடையே நீதித்துறை மற்றும் குழந்தைகள் உரிமை பற்றிய விழிப்புணர்வு வரும் என திரு சபர்வால் கருத்துத் தெரிவித்தார்.

நீதிமன்றங்களின் அதிகார வரம்புகள் குறித்து அரசியல் கட்சிகள் சர்ச்சை எழுப்பி வரும் நிலையில் இந்தியத் தலைமை நீதிபதியின் இந்த பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.