அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203!

Share this:

க்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய மக்களுக்காக ஒரு பெரிய கல்வித் திட்டத்தை உருவாக்கினார்.

உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் அமைந்திருப்பது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். கடந்த 1875ஆம் ஆண்டில் ஒரு கல்லூரியாக இதை நிறுவியபோது, சர். சையது அகமது கானை முஸ்லிம்கள் ’காஃபிர்’# என அழைத்தனர். இதற்கு ‘முஸ்லிம் அல்லாதவர்’ என்பது பொருள். மதரஸா கல்வியை மட்டுமே கற்றுக் கொண்டிருந்த இஸ்லாமியர்கள் இடையே சர். சையது, ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தினார். இதற்காக அவரை ஒரு ‘கிறிஸ்தவன்’ எனவும் இஸ்லாமியப் பழைமைவாதிகள் அழைத்தனர்.

ஆனால், இஸ்லாமியர்களுக்கு இடையே அறிவு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த ஒரு முன்னோடி என அறிவாளிகளால் சர். சையது அகமது கான் போற்றப்பட்டார். கடந்த 1817ஆம் ஆண்டு டெல்லியில் அக்டோபர் 17ஆம் தேதி பிறந்தவருக்கு 17.10.2020 இன்று 203 ஆவது பிறந்தநாள்.

இவரைப் பற்றி நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில், “சர். சையது மேற்கத்தியக் கல்வியில் செலுத்திய நாட்டம் இஸ்லாமியர்களுக்கு சந்தேகமின்றி ஒரு சரியான பாதையைக் காட்டி உள்ளது. இல்லையெனில், இஸ்லாமியர்கள் தங்களின் சக இந்துக்களுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இந்திய சுதந்திரத்திற்கும் இணைந்து பணியாற்றி இருக்க இயலாது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் இஸ்லாமியர்கள் பின்தங்கியே இருப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

19ஆம் நூற்றாண்டில், முகலாயப் பேரரசு அழிவுற்று, கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியர்கள் விரக்தியடைந்தனர். மீரட்டின் 1857 சிப்பாய் கலகத்திற்குப் பின் பெரிதும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் இடையே மிகக் கொடுமையான பஞ்சம் நிலவியது. இதன் காரணமாக வட இந்தியாவில் இஸ்லாமியர் உள்ளிட்டோர் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் இருந்து மக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய மக்களுக்காக ஒரு பெரிய கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதுதான், இஸ்லாமியர்களின் கல்வியில் ஒரு பெரிய சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்தியது. இதைத்தான் நாம் படித்த வரலாற்றுப் பாடங்களில் ‘அலிகர் இயக்கம்’ எனக் குறிப்பிடுகிறோம்.

மேற்கத்தியக் கல்வியைக் கற்பதுடன் இந்து – இஸ்லாமியர் சுமுகமான உறவு முறையை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம் என சர். சையது மக்களுக்கு போதித்தார். காரணம், இதுதான் நாளைய இந்திய சமுதாயத்திற்கு அனைத்து வகையான முன்னேற்றத்தையும் தரும் என அவர் கருதினார். இந்தக் கருத்துக்களை மனத்தில் கொண்டு 1875 ஆம் ஆண்டில் முகம்மதியன் ஆங்கிலோ ஓரியண்டல் (எம்.ஏ.ஓ) கல்லூரியைத் துவக்கினார். இதுதான் இந்தியாவில் இஸ்லாமியர்களின் முதல் கல்வி நிறுவனமும் ஆகும்.

எம்.ஏ.ஒ, வெறுமனே கல்லூரியாக இல்லாமல், இந்தியருக்கு இடையே அறிவுப்பூர்வமான மற்றும் கலாசார இயக்கங்களின் மையமாக விளங்கியது. 1864ஆம் ஆண்டின் பிளாசிப் போருக்கு பின் சர். சையது, அறிவியல் இயக்கம் ஒன்றைத் துவக்கினார். ஆங்கிலம் மற்றும் இதர ஐரோப்பிய மொழிகளில் இருக்கும் கலை மற்றும் அறிவியல் நூல்களை, பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியை இவ்வமைப்புச் செய்தது. ‘இந்த கல்வி நிறுவனத்தில் மதச் சார்புள்ள எந்தவிதமான பணியும் மேற்கொள்ளப்பட மாட்டாது’ என சர். சையது முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று எம்.ஏ.ஓ கல்லூரியானது இஸ்லாமியர்களுக்கு என மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினருக்கும் தன் கல்விக் கதவுகளைத் திறந்து விட்டது. இந்தக் கல்லூரி ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு இனத்திற்கு என அமைந்து விடக்கூடாது என்பதில் ஆழ்ந்த கருத்தோடு இயங்கினார் சர். சையது அகமது கான். இந்தக் கல்லூரியின் முதல் பட்டதாரி, புகழ் பெற்ற வரலாற்றாளராக பிற்காலத்தில் அறியப்பட்ட ஈஸ்வரி பிரசாத் எனும் ஓர் இந்து மாணவர். கடந்த 1920ஆம் ஆண்டில் இந்த எம்.ஏ.ஒ கல்லூரி, ஒரு பல்கலைக்கழகமாக மாறி, இந்த வருடம் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் கல்விக் குழுவின் தலைவராக இருந்த வில்லியம் ஹன்டர் கூறும்போது, “இந்த இஸ்லாமியக் கல்லூரி மத, இன வேறுபாடு இன்றி எல்லா இளைஞர்களுக்கும் தனது கதவைத் திறந்து விட்டுள்ளது. இதில் பயிலும் 755 மொத்த மாணவர்களின் நான்கில் ஒரு பங்கினர் இந்துக்கள். இந்நிறுவனத்தின் கிறித்தவ மற்றும் பார்ஸி இன மக்களும் கல்வி பயில்கின்றனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கிறது” என அவர் பாராட்டியுள்ளார்.

சர். சையது அகமது கான், 1884ஆம் ஆண்டில் லாகூரில் ஒரு கூட்டத்தில் ஆற்றிய உரையில், “இந்த எம்.ஏ.ஓ கல்லூரி என்பது இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிப்பது அல்ல. அப்படி எண்ணுபவர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதைத் தொடங்குவதற்கு முக்கிய காரணம் என்னவெனில், இஸ்லாமியர்களின் ஆதரவற்ற தன்மையினாலும், இவர்களின் பிற்பட்ட மனநிலையினாலும் இந்திய அரசாங்கத்தின் பள்ளி மற்றும் கல்லூரி சென்று கல்வி பயிலாமல் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவர்களின் கல்விக்கு என ஒரு தனி ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு ஆணித்தரமாக சர். சையது கூறிய பிறகும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது என இன்றும் பலர் தவறாக எண்ணுகிறார்கள். இன்னும் ஒரு முக்கியத் தகவல் என்னவெனில், சர். சையது துவக்கிய அறிவியல் இயக்கத்தின் பல மாநாடுகளில் சென்னை மாகாணத்திலிருந்து அக்காலத்திலேயே பல இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். அலிகர் பல்கலைகழகத்தின் எதிரொலியாகவே சென்னை மாகாணத்திலும் பல இஸ்லாமியக் கல்வி நிறுவனங்கள் தோன்றின.

இப்பட்டியலில், திருச்சியின் ஜமால் முகமது கல்லூரி, வாணியம்பாடியின் இஸ்லாமியா கல்லூரி, திருநெல்வேலியின் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, சென்னையின் புதுக்கல்லூரி, உத்தமபாளையத்தின் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, அதிராம்பட்டினத்தின் காதர் மொய்தீன் கல்லூரி, மதுரையின் வஃக்பு வாரியக் கல்லூரி, கேரளாவின் பரூக் கல்லூரி மற்றும் சர். சையது கல்லூரி என நீள்வது தமிழர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

– முனைவர்.எஸ்.சாந்தினிபீ

– தமிழரான இக்கட்டுரையின் ஆசிரியர், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறையில் இணைப்பேராசிரியாக உள்ளார்.

நன்றி : விகடன்.காம்

#‘காஃபிர்’ என்றால் கடவுள் மறுப்பாளர் என்று பொருள்.

oOo

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

#MyVikatan
விகடன் வாசகி


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.