அந்த 20 நிமிட நேரம் …

20 நிமிடம் முடங்கிய பிரதமர் மோடி கார்..
யார் செய்த தவறு?
உளவுத்துறை சொதப்பியது எப்படி?
என்ன நடந்தது?
By Shyamsundar

டெல்லி: இந்தியப் பிரதமர் மோடியின் கான்வாய் பஞ்சாப்பில் நடைபெற்ற போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

பஞ்சாப்பிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்த போராட்டம் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் அதிகப் பாதுகாப்பு கொண்ட பிரதமர் என்றால் அது மோடிதான். அதி நவீன Mercedes-Maybach S650 கார் தொடங்கி, சிறப்பு எஸ்பிஜி பாதுகாப்பு வரை பிரதமர் மோடிக்கு உயர் ரக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று அவரின் பாதுகாப்பில் பெரிய குறைபாடு ஏற்பட்டு அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியே கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

பஞ்சாப்பில் இருக்கும் ஹுசைன்வாலா பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள இருந்தார். அதற்காக அங்குப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

என்ன நடந்தது?

இதற்காக பஞ்சாப்பில் பதிண்டா விமான நிலையத்திற்கு இன்று காலை டெல்லியில் இருந்து சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைன்வாலா செல்வதே பிரதமர் மோடியின் பிளான். ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. 20 நிமிடம் காத்து இருந்தும் வானிலை சரியாகவில்லை. இதனால் கடைசி நேரத்தில் இந்த ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு காரில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மோடி கூட்டம் ரத்து

இந்த நிலையில் காரில் பயணம் மேற்கொள்வது குறித்து உடனே பஞ்சாப் போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆனால் தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் இருந்து 30 கிமீ தூரம் முன்பு இருந்த போது பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது.

காரணம் பாலத்திற்குக் கீழ் இன்னொரு பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இது விவசாயிகளின் போராட்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த போராட்டம் யார் மூலம் நடத்தப்பட்டது என்ற குழப்பமும் நிலவி வருகிறது.

இதனால் அங்கு மோடியின் கார் முடங்கியது. அந்தப் பாலத்தில் மோடியின் கார் நகர முற்பட்ட போது அவரின் காரை நோக்கி மஞ்சள் நிற பஸ் ஒன்றும் வந்து இருக்கிறது. இதன் உள்ளே போராட்டக்காரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அங்குப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எஸ்பிஜி படையினர் உடனே மோடி காரைச் சுற்றி நின்று தீவிரமாகப் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அதன்பின் அங்குப் போராட்டம் தணியாமல் நீடித்து வந்தது. கடைசியில் வேறு வழியின்றி பிரதமர் மோடி திரும்பி வந்தார். பாதுகாப்பு குறைபாடுகளால் மோடியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

உள்துறை

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தின் பயணத் திட்டம் கடைசி நேரத்தில் மாறியதால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்தப் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது எப்படி?, உளவுத்துறை மற்றும் மத்திய உள்துறை முன்கூட்டியே போராட்டத்தை கணிக்காமல் சறுக்கியது எப்படி? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், பிரதமர் மோடியின் கார் அந்தப் பாலத்தில் 15-20 நிமிடம் முடங்கியது.

படைகள் குவிக்கப்படவில்லை

அவரின் பாதுகாப்பில் பெரிய குறைபாடு உள்ளது. கடந்த சில வருடங்களில் பிரதமர் மோடியின் கான்வாய் ஒன்றுக்குக் கொடுக்கப்பட்ட மோசமான பாதுகாப்பு இதுதான்.

ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என்றதும்.. பிரதமர் மோடி சாலை வழியாக வருகிறோம்.. உடனே பஞ்சாப் போலீசாரிடம் பாதுகாப்பை அதிகரிக்கும்படி கூறினோம். 2 மணி நேர சாலை பயணம் மேற்கொள்ள வேண்டும். அதனால் கூடுதல் படையைக் குவிக்கும்படி கூறினோம். ஆனால் பஞ்சாப் அரசு மாற்று பிளான்படி கூடுதல் படைகளை குவிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டி உள்ளது.

அரசுத் தரப்புக் கோபம்

பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்பை எஸ்பிஜி படைதான் உறுதி செய்ய வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் சாலை போக்குவரத்தின் போது அந்தப் பாதையில் பாதுகாப்பை மாநில போலீஸ்தான் உறுதி செய்ய வேண்டும். இந்த விவசாயிகள் போராட்டம் கூட எதிர்பார்க்காத ஒன்று கிடையாது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பிரதமர் மோடி செல்லும் பாதையில் நடக்க இருந்த போராட்டத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று மத்திய உள்துறை அதிருப்தியில் இருக்கிறது.

முதல்வர் விளக்கம்

அதோடு பிரதமர் மோடி இந்தப் பாதையை பயன்படுத்த போவது மாநில அரசுக்கு மட்டுமே தெரியும். அது எப்படி போராட்டக்கார்களுக்குத் தெரிந்தது? என்றும் மத்திய உள்துறை அமைச்சகத் தரப்புக் கேள்வி எழுப்பி உள்ளது. மாநில அரசின் மீது மத்திய உள்துறை அமைச்சகம் புகார் வைத்துள்ளது. அதே சமயம் முதல்வர் சன்னி அளித்துள்ள விளக்கத்தில், “எந்த விதமான பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவே இருந்தது. ஆனால் அவர் கடைசியில் எங்களிடம் சொல்லாமல் கார் மூலம் வந்துவிட்டார்”.

மோடி கார் பயணம்

“பாஜக கூட்டத்திற்கு 7000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 700 பேர் மட்டுமே வந்தனர். எனவே இதை மறைக்க தற்போது ஏதேதோ விஷயங்களை அவர்கள் காரணமாகச் சொல்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் இதில் உளவுத்துறை சொதப்பியது எப்படி என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அந்தச் சாலையில் போராட்டம் நடத்துவதை உளவுத்துறைதான் எஸ்பிஜிக்கு தெரிவித்து இருக்க வேண்டும். அவர்கள் இந்த எச்சரிக்கையை கொடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி : ஒன் இண்டியா