மோடியின் அரசில் ராமனுக்கு நேர்ந்த கதி!

ஹைதராபாத்திற்கு செல்லும் வழியில் தீவிரவாத தடுப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சொக்ராபுத்தீன், அவர் மனைவி மற்றும் அவர்களுடன் பயணம் செய்திருந்த துளசிராம் ப்ரஜாபதியையும் வன்சாராவின் தலைமையில் உள்ள காவல்துறை மற்றொரு போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றதாக இவ்வழக்கை விசாரணை செய்யும் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றவியல் பிரிவின் அறிக்கைகள் முழுவதும் முழு நீள த்ரில்லர் திரைப்படத்தையும் விஞ்சும் விதத்தில் ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இவ்வாறும் செயல்படுமா என்று ஆச்சரியப்படும் அளவில் பல அதிர்ச்சிகளை தாங்கிய வண்ணம் உள்ளன.

தீவிரவாத தடுப்புப்படைக்கு தலைமை வகித்திருந்த வன்சாராவின் தலைமையிலான காவல்துறையினரால் 2006 டிசம்பர் 28 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார், துளசிராம் ப்ரஜாபதி. இவர் கொல்லப்படுவதற்கு காவல்துறை கொடுத்த விளக்கத்தை புரிந்து கொள்வதற்கு முன் இது தொடர்பான சம்பவங்களை காவல்துறை எவ்வாறு பதிவு செய்திருந்தது என்பதையும் அறிந்திருத்தல் அவசியமாகும்.

 

நரேந்திர மோடியைக் கொலை செய்ய முனைந்த லஷ்கரே தொய்பா தீவிரவாதி எனக் கூறி சொக்ராபுத்தீனை சுட்டுக் கொன்றதோடு அவரை கடத்தும் பொழுது அவருடன் இருந்த நண்பன் துளசிராம் பிரஜாபதி மீதும் ஒரு பொய் வழக்கு தொடுத்து வன்சாரா சிறையில் அடைத்து வைத்திருந்தார்.

 

காவலில் இருந்த துளசிராம் காவல்துறையினரால் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது எப்படி?

 

இவ்வழக்கில் ஆரம்பத்தில் காவல்துறை பதிவு செய்த தகவல்கள்:

 

– உதய்பூர் மத்தியச்சிறையில் இருந்த துளசிராமை நீதிமன்றத்தில் ஆஜராக்க டிசம்பர் 26 ஆம் தேதி சிறையிலிருந்து போலீசார் வெளிக்கொண்டு வந்தனர்.

 

– அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மறுநாள் டிசம்பர் 27 ஆம் தேதி சிறைக்கு திரும்ப கொண்டு வரும் வழியில் இரயிலில் வைத்து இரண்டு பேர் துளசிராமை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றிருந்த போலீசாரின் கண்ணில் மிளகுப்பொடி தூவி விட்டு துளசிராமை போலிசாரிடமிருந்து மீட்டுக்கொண்டு சென்றனர்.

 

– அதற்கு மறுநாள் டிசம்பர் 28 ஆம் தேதி பௌஸ்கந்தா ஜில்லாவில் அதிகாலை 5 மணியளவில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை துளசிராம் தடுத்து நிறுத்த முயன்றார். அப்பொழுது ஜீப்பினுள் அமர்ந்திருந்த ஒரு கான்ஸ்டபிள் அவரை அடையாளம் கண்டதையடுத்து துளசிராம் தப்பியோட முனைந்ததாகவும், அப்பொழுது அவர்களுக்கு இடையில் நடந்த தாக்குதலில் துளசிராம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் கூறியது.

 

இனி இவ்வழக்கின் பின்னணியில் நடந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் சி.ஐ.டி யின் விசாரணை அறிக்கையிலிருந்து:

 

ஹைதராபாத்திற்கு மனைவியுடன் சென்ற தனது சகோதரன் நரேந்திரமோடியை கொலை செய்ய முயன்ற லஷ்கரே தொய்பா தீவிரவாதி என்ற பெயரில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட செய்தியை பத்திரிக்கைகளின் மூலமாக அறிந்து அதிர்ச்சியடைந்த சொக்ராபுத்தீனின் சகோதரன் ருப்பாபுத்தீன் தனது சகோதரனின் மனைவி என்னவானார் என்பது புரியாமல் ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி புகார் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

இதற்கிடையில் தனது சகோதரனுடன் பயணித்திருந்த நண்பன் துளசிராம் பிரஜாபதி சிறையில் இருக்கும் செய்தி அறிந்து ருப்பாபுத்தீன் அவரை சிறையில் சென்று சந்தித்து என்ன நடந்தது என வினவியுள்ளார்.

 

அப்பொழுது தான் வன்சாரா தலைமையிலான தீவிரவாத தடுப்புப் படையினர் தாங்கள் பயணித்திருந்த பேருந்திலிருந்து தன்னையும், சொக்ராபுத்தீனையும் அவர் மனைவியையும் வலுக்கட்டாயமாக இறக்கி ஒரு பங்களாவில் அடைத்து வைத்திருந்ததாகவும் மறுநாள் தன்னை சிறையில் அடைத்ததாகவும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும் பிரஜாபதி, ருப்பாபுத்தீனிடம் கூறியிருக்கின்றார்.

 

இதனைக் கேட்டதைத் தொடர்ந்து அதுவரை என்ன நடந்தது எனத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த ருப்பாபுத்தீன் தனது சகோதரனுக்கும் அவர் மனைவிக்கும் காவல்துறையினரால் ஏதோ விபரீதம் நடத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு உடனடியாக இது தொடர்பாக விசாரணை கோருவதோடு மட்டுமின்றி தன் சகோதரனின் மனைவியின் நிலையையும் கண்டறிந்து தரும்படியும் கோரி உச்சநீதி மன்றத்தில் புகார் அளித்தார்.

 

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் குஜராத் அரசிற்கு அதற்கு விளக்கம் கோரி சம்மன் அனுப்பியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் குறுக்குக் கேள்வியிலிருந்து தப்பிக்க ஒரு கண்துடைப்பு என்ற ரீதியில் குஜராத் அரசு சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு அத்தகவலை உச்சநீதிமன்றத்திற்கு கொடுத்துவிட்டு அப்போதைக்கு தப்பித்துக் கொண்டது.

 

ஆனல் அதேசமயம் இவ்வழக்கை விசாரிக்க குஜராத் அரசு நியமித்த விசாரணைக்குழுவின் தலைவர் கீதா ஜொஹ்ரி, வெறும் கண்துடைப்பாக இல்லாமல் நேர்மையான முறையில் அந்த விசாரணையைத் துவக்கினார்.

 

அவரின் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே குஜராத் அரசின் துணையோடு சொக்ராபுத்தீனை வன்சாரா கொலை செய்ததை கீதா ஜொஹ்ரி கண்டறிந்தார். இதற்கு முதல் இவ்வழக்கின் முதல் சாட்சியாக சொக்ராபுத்தீனுடன் பயணம் செய்திருந்த அவர் நண்பர் துளசிராம் ப்ரஜாபதியை சேர்த்திருந்தார்.

 

இதனை வன்சாரா மற்றும் காவல்துறையில் பணியாற்றி அரசின் "விசுவாசமான" மற்ற அதிகாரிகளின் மூலம் அறிந்து உஷாரான குஜராத் அரசு, இவ்விசாரணையை முறையாக நடத்திக் கொண்டிருந்த கீதா ஜொஹ்ரியை வழக்கிலிருந்து மாற்றிவிட்டு, உடனடியாக இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குஜராத் அரசே கைப்பற்றியது. இச்சம்பவம் நடந்தது 2006 டிசம்பர் 18 ஆம் தேதி. (அதாவது சிறையில் இருந்த இவ்வழக்கின் போலிசாருக்கு எதிரான வலுவான முதல் சாட்சியாக கீதா ஜொஹ்ரியால் சேர்க்கப்பட்டிருந்த அதே துளசிராம் பிரஜாபதி, வன்சாராவின் தலைமையில் உள்ள போலீசாரால் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட டிசம்பர் 26 க்கும் பத்து தினங்களுக்கு முன்)

தெளிவாகக் கூறவேண்டுமென்றால், கீதா ஜொஹ்ரியின் தலைமையிலான குற்றவியல் பிரிவினர் பல உண்மைகளை கண்டறிந்துள்ளனர் என்ற தகவலை வன்சாரா மற்றும் விசுவாசமான காவல்துறை கறுப்பு ஆடுகள் மூலம் பெற்ற உடனேயே வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த கீதா ஜொஹ்ரியை அப்பொறுப்பிலிருந்து நீக்கம் செய்துவிட்டு உடனடியாக வழக்கு குறித்த தகவல்களை அரசிடம் சமர்பிக்க அரசு உத்தரவிட்டது.

கீதா ஜொஹ்ரியிடமிருந்து பெற்றுக் கொண்ட விசாரணை அறிக்கையில் முதல் சாட்சியாக ப்ரஜாபதி சேர்க்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ந்த போலீசார், இனி ப்ரஜாபதி உயிருடன் இருந்தால் இதுவரை நடத்திய நாடகங்களின் பின்புலத்தில் நடந்த அனைத்து உண்மைகளும் வெளிவந்து விடும் என்பதை உணர்ந்து அவரையும் கொலை செய்ய அப்பொழுதே திட்டம் தீட்டியுள்ளனர்.

கீதா ஜொஹ்ரியிடமிருந்து நேர்மையான அறிக்கை பெற்ற சரியாக 10 ஆம் நாள், அதாவது 2006 டிசம்பர் 28 ஆம் தேதி சொக்ராபுத்தீன் வழக்கின் முதல் சாட்சியான துளசிராம் ப்ரஜாபதி திட்டமிட்டு வன்சாரா குழுவினரால் தீர்த்துக் கட்டப்பட்டார். பின்னர் வழக்கம்போல் அதற்கும் ஒரு கதை புனைந்து தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த ப்ரஜாபதி காவல்துறையினருடனான மோதலில் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்ற காவல்துறையினரால் காரணம் கூறப்பட்டது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் குஜராத் அரசிடம், "இவ்வழக்கு விசாரணை தலைமையிலிருந்து கீதா ஜொஹ்ரியை நீக்கம் செய்ததற்கான காரணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது". இவ்வுத்தரவைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக மோடி அரசு கீதா ஜொஹ்ரியை இவழக்கு விசாரணை குழுவிற்கு தலைவராக மீண்டும் நியமித்தது.

அதனைத் தொடர்ந்து விடாக்கண்டனாக கீதா ஜொஹ்ரி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில்தான் த்ரில்லர் திரைப்படத்தை மிஞ்சும் விதமாக இவ்வழக்கின் பின்னணியில் மோடி அரசு விளையாடிய மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் வெளியாகின.

இவ்வழக்கின் ஆரம்ப கட்டத்திலிருந்தே, ஐ.பி.எஸ் அதிகாரிகள் கைது, கீதா ஜொஹ்ரி பணி நியமனம் போன்று உச்சநீதிமன்றத்தின் விமர்சனமும் உத்தரவும் கிடைக்கும் பொழுதெல்லாம் மோடி அரசு அவசரம் அவசரமாக பல உத்தரவுகளை பிறப்பிப்பது இவ்வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு செல்வதை தடுக்கும் எண்ணத்திலாகும்.

சி.ஐ.டி குற்றவியல் பிரிவு மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழும், சி.பி.ஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழும் இருப்பதே இதற்குக் காரணமாகும். ஒருவேளை இவ்வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு செல்லுமாயின் இதற்கு முன்னர் குஜராத்தில் மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் என்ற பேரில் என்கவுண்டர் மூலம் தீர்த்துக்கட்டப்பட்ட அனைத்து விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிடும் என்று மோடி அரசு பயப்படுவதே இதற்குக் காரணமாகும். இதற்கிடையில் ஏற்கெனவே இதற்கு முன்னர் என்கவுண்டர் மூலம் தீர்த்துக்கட்டப்பட்ட பலர் இவ்வழக்கு விசாரணையின் மூலம் உண்மைகள் வெளிவர துவங்கிய உடனேயே அவற்றிற்கும் நீதி விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அணுகத் துவங்கியுள்ளது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

எது எப்படி இருந்தாலும், ஹிந்துத்துவத்தின் கதாநாயகனாக குஜராத் வாழ் முஸ்லீம்களின் இனசுத்திகரிப்பிற்குப் பின் இந்துக்களின் முன்னிலையில் சங்க்பரிவாரத்தினால் எடுத்துக்காட்டப்பட்ட அதே மோடியின் மூலமாகவே ஹிந்துத்துவத்தின் யதார்த்த முகம் வெளிப்பட துவங்கியுள்ளது. இந்துக்களைப் பாதுகாக்க நவீன ராமனாக RSS ஆல் முன்னிலைப்படுத்தப்பட்ட மோடி, ராமனாக இருந்தாலும் ரஹீமாக இருந்தாலும் தங்களின் நிலைநிற்பிற்கு பிரச்சினையாக வரும் பட்சத்தில் தங்களின் எதார்த்த முகத்தை அவர்களுக்கு காட்டத் தயங்கமாட்டோம் என்பதை துளசிராம் ப்ரஜாபதி என்ற ஓர் இந்துவையும் அநியாயமாக தீர்த்துக் கட்டியதன் மூலம் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் சொக்ராபுத்தீன், துளசிராம் ப்ரஜாபதி போன்று எண்ணற்ற இந்துக்களும் முஸ்லிம்களும் நண்பர்களாகவும், சகோதரர்களாகவும், உறவினர்களாகவும் சொந்தம் கொண்டாடி மகிழ்ச்சியோடும், அமைதியாகவும் வாழவே விரும்புகின்றனர் என்பதையும் இந்த சொக்ராபுத்தீன் என்கவுண்டர் வழக்கு, தெளிவாக காண்பித்து நிற்கின்றது. இந்த ஒற்றுமைக்கு ஊறுவிளைப்பது யார் என்பதை மக்கள் பிரித்தறிந்து அவர்களை ஜாதி, மத, இன வேறுபாடின்றி புறக்கணிக்க முன் வரவேண்டும்.

 

செய்திக்கட்டுரை: முன்னா