லக்ஷ்மணானந்தா கொலை – வி.ஹெச்.பியைச் சுட்டும் விரல்!

புவனேஸ்வர்: வி.ஹெச்.பியின் செயல்பாட்டு கமாண்டர் லக்ஷ்மணானந்தா சரஸ்வதியைக் கொலை செய்தது யார் என்பதில் இன்றுவரை சந்தேகம் நிலவுகிறது. சுவாமியை ஆகஸ்ட் 23 அன்று ஜலாஸ்பேட்டையிலுள்ள ஆசிரமத்தில் வைத்து மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றதாகக் காவல்துறை கூறியிருந்தது. கிறிஸ்துவர்கள்தான் கொலைக்குப் பின்னணியில் செயல்பட்டவர்கள் என வி.ஹெச்.பி கூறிக் கொண்டிருக்கின்றது. என்றாலும், சந்தேகத்தின் கூர்முனை தற்பொழுது வி.ஹெச்.பிக்கு நேராகவே திரும்பி இருக்கின்றது.

 

 

மாவோயிஸ்டுகள் வி.ஹெச்.பிக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், "சுவாமியைத் தாங்கள் கொலை செய்யவில்லை" எனக் கூறுகின்றனர். சுவாமி கொலை செய்யப்படுவதற்குத் தமது கட்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதக் கட்டளையும் இடவில்லை. ஏனெனில், அவ்வாறான எவ்விதத் திட்டமும் தங்களுக்குக் கிடையாது என சிபிஐ(எம்.எல்) கோட்டைக்கடைப் பிரிவு கூறுகின்றது.

 

ஆனால், கோட்டைக்கடை, துமுடிபந்த் ஆகிய யூனிட்டுகளில் உள்ள தனியார் சிலருக்கு இக்கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அது உண்மையெனில் தாங்கள் வருந்துவதாகவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு நக்ஸல்களின் தீர்மானத்தின் படியே சுவாமி கொல்லப்பட்டார் என்ற காவல்துறையின் வாதம் சீட்டுக் கோபுரம் போன்று தகர்கிறது.

 

சுவாமி கொலை செய்யப்படுவதற்கு ஏ.கெ.47 மற்றும் எஸ்.எல்.ஆர் துப்பாகிகள் உபயோகிக்கப்பட்டன என்ற ஒரே ஒரு காரணத்தினாலேயே கொலைக்குப் பின்னணியில் நக்ஸல்கள் என்ற முடிவுக்குக் காவல்துறை வந்திருந்தது.

 

சுவாமியின் கொலையில் காவல்துறையின் கண்டுபிடிப்பு(!) புஸ்வாணமானதோடு, சுவாமியின் கொலைக்குப் பின்னணியில் வி.ஹெச்.பியினர் தான் செயல்பட்டுள்ளனர் என்ற வாதம் பலமுனைகளிலிருந்து எழத் துவங்கியுள்ளது. இச்சந்தேகத்தை முன் வைப்பவர்கள் கூறும் ஏழு காரணங்கள்:

 

1. கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்குத் தீயிட்டு முஸ்லிம் இனப்படுகொலைக்கு களம் தயார் செய்தவர்கள் சங்கபரிவாரத்தினர் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. முஸ்லிம்களின் மீது ஒரு இனப்படுகொலைக்கு அனைத்தையும் தயார் செய்து வைத்து விட்டு, அதற்கான களமாக சபர்மதி ரயில் எரிப்பைத் திட்டமிட்டு நடத்தி விட்டு, சம்பவம் நடந்த நிமிடத்திலேயே முஸ்லிம்கள் மீது அதைத் திருப்பி விட்டதும் அவர்களின் திட்டமாக இருந்தது.

 

2. ஹிந்து உணர்வினைத் தட்டி எழுப்புவதற்கு உதவும் வகையில் ஜன்ம அஷ்டமி தினத்தில் சுவாமி கொல்லப்பட்டார்.

 

3. சுவாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னரும் அவர் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை. பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்தது சந்தேகத்தைக் கிளப்புகின்றது. உடலை எரிக்காமல் அடக்கம் செய்த பிறகும் அஸ்திகலச யாத்திரை நடத்துவோம் என தொகாடியா கூறுவது மீண்டும் குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை அவிழ்த்து விடுவதற்குத்தான்.

 

4. இரண்டு நாட்கள் முழுவதும் கந்தமால் மாவட்டத்திலுள்ள முக்கியமான கிறிஸ்துவ பகுதிகளில் புகுந்து அப்பகுதியிலுள்ள எல்லா கிறிஸ்துவ வீடுகளையும் ஸ்தாபனங்களையும் வி.ஹெச்.பி வன்முறையாளர்கள் எரித்துச் சாம்பலாக்கினர்.

 

5. கொலைகாரர்கள் மாவோயிஸ்டுகள் எனக் கொலை நடந்த அரை மணி நேரத்திலேயே காவல்துறை தெரிவித்தச் சந்தேகத்தைக் கடுமையாக விமர்சித்த வி.ஹெச்.பி தலைமை, சுவாமியைக் கொன்றவர்கள் கிறிஸ்துவர்கள் தான் என மைக் மூலமாக பிரச்சாரம் செய்ததோடல்லாமல் கிறிஸ்துவ நிறுவனங்கள் அனைத்தையும் அழிப்பதற்கு வெளிப்படையாக அழைப்பும் விடுத்தனர்.

 

6. ஆசிரமத்தினுள் சுவாமியின் வாரிசு யாராக இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் தர்க்கம் பல காலங்களாக நிலுவையில் நின்றிருந்தது. பல கோடி சொத்துகள் கொண்ட ஆசிரமத்தைக் கையகப்படுத்தச் சிலர் முயன்று கொண்டிருந்ததாக ஆசிரமவாசிகளே தற்பொழுது ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

7. ஒரு துக்க யாத்திரையுடன் மட்டும் மதவெறி வன்முறை விளையாட்டை நிறுத்துவதற்குச் சங்கபரிவாரம் தயாரல்ல என்பதை, ஏழாம் தேதி நடத்துவதாக அறிவித்த சுவாமியின் அஸ்தி கலச யாத்திரை தெரிவிக்கிறது. சுவாமியின் நஷ்டத்தை ஒரு அரசியல் இலாபமாக மாற்றுவதே சங்கபரிவாரத்தின் செயல்பாடுகளின் நோக்கம்.

 

மேற்கண்டவை, சம்பவத்தின் பின்னணியில் வி.ஹெ.பிதான் செயல்பட்டுள்ளது என்றச் சந்தேகம் வலுவடைவதற்கும் சம்பவத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழும்புவதற்கும் காரணமாக உள்ளன

 

நன்றி:  வி.பி. பரமேஸ்வரன் – தேசாபிமானி.