உண்மையில் நடந்ததை முழுமையா எழுதுங்க! – மதானி உணர்ச்சிப்பூர்வ பேட்டி

Share this:

{mosimage}கேரளத்தில் உள்ள அனைத்து சேனல்களும் அன்றாடம் காட்சிப்படுத்தும் நபராக மாறியிருக்கிறார். 'குண்டு வெடிப்பு வழக்கில் இவர் எப்படி விடுவிக்கப்பட்டார்?' என்று தமிழக மக்கள் புருவம் உயர்த்திப் பார்க்கும் அந்த மனிதர் மீது, கேரள மக்களுக்கு ஓர் அனுதாப உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. அவர்தான் அப்துல் நாசர் மதானி.

இவரது சொந்த ஊர் கொல்லம் பக்கமுள்ள மைனாகப்பள்ளி கிராமம். என்றாலும் 'எர்ணாகுளத்திலும் அவருக்கு ஒரு வீடு இருந்தது. அதை தன் வழக்குச் செலவுக்காக விற்று விட்டார். இப்போது அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்க அதுவே காரணம்!' என்கிறார்கள், அவர் நிறுவியுள்ள 'கேரள மக்கள் ஜனநாயக முன்னணி' (People Democratic Party)தோழர்கள்.

சிறப்பு பேட்டிக்காக நாம் அவரைச் சந்திக்க எர்ணாகுளம் சென்றோம். அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகையின் அறைக்குள் சென்றபோது, தொப்பியில்லாமல் அமர்ந்திருந்த அவரை நம் புகைப்படக்காரர் படம் எடுக்கத் தொடங்கி விட்டார். அதைப் பார்த்து சற்றும் பதற்றமில்லாமல், 'என்னைத் தொப்பியில்லாமல் புகைப்படம் எடுத்த முதல் நபர் நீங்கள்தான்!' என்கிறார். அழகாக மலையாளம் கலந்த தமிழ் பேசுகிறார். 'குமுதம் ரிப்போர்ட்டரி'ல் சென்ற வாரம் வெளியான அவரைப் பற்றிய செய்தியை ஆர்வமுடன் எழுத்துக்கூட்டிப் படிக்கிறார். 'தமிழ் எனக்கு சிறை வாழ்க்கை தந்த பரிசு' என்று சிரிக்கிறார். 'எனக்கான முகத்தை அடையாளப்படுத்திய முதல் பத்திரிகை உங்கள் 'குமுதம் ரிப்போர்ட்டர்'தான்!' என்று நாம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட அவரது பேட்டியை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கிறார்.

மனைவி சோபியா ஓர் ஓரமாய் அமர்ந்திருக்க, தன் மகன்கள் உமர் முக்தார், சலாம் உப்தீன் அயூப் ஆகியோரைக் கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சுகிறார். 'நான் சிறைக்குப் போகும் போது, இந்த கடைக்குட்டியின் வயசு வெறும் 4 மாசம்!' என்று சொல்லும் போது அவர் கண்களில் நீர்.

சம்பிரதாயக் கேள்விகளுடன் பேட்டியை ஆரம்பித்தோம்.

நீண்ட பிரிவுக்குப்பின் குடும்ப வாழ்க்கை எப்படியிருக்கிறது?

"ஒன்பதரை வருஷ இடைவெளிக்குப்பின் வந்த வாழ்க்கை. சந்தோஷமாக இருக்கிறது. என் குடும்பத்தைவிட எங்களுடைய பி.டி.பி கட்சியின் உறுப்பினர்களும், கேரளத்தில் உள்ள மக்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நான் எதிர்பார்த்ததை விட ஜனங்களுக்கு என் மேல் பிரியம் கூடியிருக்கிறது. நான் சிறைக்குப் போவதற்கு முன்பு, பல நேரங்களில் பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். கூட்டங்கள் நடத்தும்போது திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு பகுதிகளிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான வாகனங்களும், பல்லாயிரக்கணக்கான மக்களும் வந்து கலந்து கொள்வார்கள். இப்போது நான் போகிற இடங்களில் மக்கள் அதைவிட பத்து மடங்கு, பதினைந்து மடங்கு கூடியிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் பெரும்பான்மையாய் முஸ்லிம் சகோதரர்களைத்தான் என் கூட்டங்களில் பார்ப்பேன். இப்போது ஆயிரக்கணக்கான இந்து சகோதரர்களும், சகோதரிகளும் இரவு ஒரு மணி, இரண்டு மணிக்கெல்லாம் என்னை எதிர்பார்த்துச் சாலையோரம் நின்றிருந்ததைப் பார்த்து நெகிழ்ந்து போகிறேன்.''

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, 'உள்ளே' சென்றீர்கள். அதே கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில்தான் உங்களை வெளியே கொண்டு வரவும் அவர்கள் பல முயற்சிகள் செய்தனர். இது என்ன அரசியல் முரண்பாடு?

"ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நான் சிறைக்குப் போவதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தனர்… யாரெல்லாம் என்னவெல்லாம் செஞ்சாங்க… அதையெல்லாம் நான் மறந்தாச்சு. எனக்கு யார் மேலேயும் பகை இல்லை. ஜெயலலிதா மேலும் பகையில்லை. அவர் ஆட்சியில்தான் நான் அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளானேன். அப்போது அனைத்து மனித உரிமைகளும் எனக்கு மறுக்கப்பட்டு விட்டன. உங்களுக்கே தெரியும். எனக்கு வலது கால் இல்லை (1992_ல் இந்துத்வா நபர் ஒருவர், இவர் வீட்டில் வெடிகுண்டு வீசியதில் ஏற்பட்ட ஊனம்). சர்க்கரை, பி.பி எல்லாம் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் எனக்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கச் சொல்லி, டைரக்ஷனும் கொடுத்தது. ஆனால் 50 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பாட்டிலில் எண்ணெயைக் கொடுத்து, 'அதை நீங்களே கையில் எடுத்து உடம்புல தடவிக்குங்க'ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க சிறை அதிகாரிகள்.

அப்போதே கோயமுத்தூர் ஆயுர்வேத வைத்திய சாலையில் கிடைக்க வேண்டிய சிகிச்சையைத் தடுத்து, கொடுமைகள் செய்தனர். ஜெயலலிதா பீரியடில் இப்படி நடந்திருந்தாலும், அவர் மீது எனக்கு எந்தப் பகையுமில்லை. அதுபோல, இங்கே (கேரளா) சி.பி.எம் பீரியடில்தான் கைது செய்யப்பட்டேன் என்பதாலோ, அல்லது நான் உள்ளே இருக்கும் போது சங் பரிவார் அமைப்புகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை மனித உரிமைகளைத் தடுத்ததாலோ, யார் மேலேயும் எனக்குப் பகையில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். ஃபாஸ்ட் ஈஸ் ஃபாஸ்ட். என் மீது குண்டு வீசி கொல்லப் பார்த்தவனையே மன்னித்ததாக அறிவித்து விட்டேன். இப்போதைக்கு ஒட்டுமொத்த கேரள மக்களுடைய நன்மைக்காகவும் என்னால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்ய முடிவு செஞ்சிருக்கேன்!''

கேரளாவில் வலுவான மூன்றாவது அணி அமைக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறதே? அது உங்களுக்குச் சிறையில் இருந்தபோது உதவி செய்த இடதுசாரிகளையும், காங்கிரஸ் தலைவர்களின் ஓட்டு வங்கியையும் பாதிக்குமே? அது அவர்களுக்குச் சவாலாகவும் அமையுமே?

"இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்காகவும், பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் ஒற்றுமையாக நின்று போராடவும் அனைத்துக் கட்சிகளிடையிலும் ஓர் ஒற்றுமையை உருவாக்கவும்தான் 1993 ம் ஆண்டில் நான் (People Democratic Party) கட்சியை ஆரம்பித்தேன். அதை முழுமையாக்கக் கூடிய சூழ்நிலை இப்போது கனிந்து வருகிறது. அந்தச் சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான தீவிரமான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். ஆனால், அதை வேறு யாருக்கும், எந்தக் கட்சிக்கும் சவால் விடற மாதிரி உருவாக்க நினைக்கவில்லை. அந்த இயக்கத்தை வலிமைப்படுத்துவேன். அது, எல்.டி.எஃப்க்கு பாதகமாகுமா, யு.டி.எஃப்.புக்கு தொந்தரவாக அமையுமா என்பதெல்லாம் ஒரு பிரச்னையேயில்லை.''

நீங்களும், கேரளாவைச் சேர்ந்த இன்னும் சில கைதிகளும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். அதே சமயம், 158 பேர் வெடிகுண்டு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்ட சில கைதிகள் உங்கள் மீது வருத்தத்திலும், கோபத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்களே?

"அப்படியிருக்க சாத்தியமேயில்லை. அவர்கள் எல்லோரைப் பற்றியும் எனக்குத் தெரியும். அவர்கள் எல்லோருமே 'எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை. ரொம்ப நோயாளி. மிகவும் கஷ்டப்படுகிறார். எப்படியாவது நம்மில் இவராவது விடுதலையாகிச் செல்லணும்!' என்றுதான் ஒவ்வொரு நாளும் ஆசைப்பட்டார்கள். அதேபோல், வெளியே வரும்போதும் எல்லோரும் சந்தோஷமாகத்தான் வழியனுப்பி வைத்தார்கள். அப்படியிருக்கும்போது, இந்த விஷயத்தில் என்மீது எப்படி கோபமோ, வருத்தமோ அவர்களுக்கு வரும்?''

நீங்கள் சிறையில் இருந்தபோது நிறைய அரசியல் சர்ச்சைகள் வந்தன. உதாரணமாக அப்போது உங்களுக்கு தமிழக உள்துறைச் செயலாளர் முனீர் கோடா உதவியதாகச் சொன்னார்கள்! அதேபோல், காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்ட போது, கடத்தல்காரர்களால் கேட்கப்பட்ட பிணையக் கைதிகளில் நீங்களும் ஒருவர் என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் சொன்னதாகவும் நினைவு…

"பின்லேடனோடு என்னை ஒப்பிட்டவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், முனீர் கோடா விஷயம் ரொம்பவும் முக்கியம். அவர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக, எனக்குப் பாதகமே செய்தார். முனீர் கோடா மேல் வேறு என்னவோ பகையை வச்சுக்கிட்டு, அந்தப் பதவியிலிருந்து அவரை மாற்றுவதற்காக 'மதானிக்கு உதவினார். தீவிரவாதிக்கு உதவினார்!' என்று ஜெயலலிதா செய்த காரியம் அது. இந்த விஷயத்தில் உண்மையில் நடந்ததை முழுமையா எழுதுங்க!'' என்றவர், ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு, தன் படுக்கைக்கு அருகே கழற்றி வைக்கப்பட்டிருந்த செயற்கைக் கால் கட்டையை எடுத்துக் காண்பித்தார். கால்முட்டி மாட்டப்படும் இடத்தில் பல இடங்களில் அது உடைந்திருக்க, அதை முழுக்க முழுக்க ஜெயில் ஆஸ்பத்திரியில் கொடுத்த பிளாஸ்திரியைப் போட்டு ஒட்டியே அவரால் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. காலை மாட்டும் பகுதியில் காய்ந்த ரத்தத்துளிகள்… அதைக் காட்டிவிட்டுப் பேசினார்.

"முதலில் 160க்கும் மேற்பட்ட கைதிகளை வெளியே கொண்டு போகக்கூடாதுன்னு அத்தனை பேர் மீதும் ஒரு தடை உத்தரவு இருந்தது. ஹைகோர்ட்ல போய் அத்தனை பேரும் அதைத் தள்ளுபடி செய்ய வச்சோம். அதன் பிறகு, எனக்கு மட்டும் 'மதானியை கோயமுத்தூர் ஜெயிலுக்கு வெளியே கொண்டு போகக்கூடாது!' என்று ஜெயலலிதா அரசு தடையுத்தரவு போட்டிருந்தது.

அந்தத் தடைக்கு எதிராகவும் ஹைகோர்ட்டுக்குப் போனோம். அங்கே எனக்குச் சாதகமான உத்தரவு வரலை. அதன்பிறகு கொஞ்ச நாள் கழிச்சு, 'என்னோட செயற்கைக் கால் பழுதடைஞ்சு கிடப்பதால், அதை கேரளா போய் மாற்றி வர ஒரு பெட்டிஷன் போட்டோம். அப்ப கோர்ட், 'கேரளாவுக்குப் போய் செயற்கைக் கால் மாட்டறதுல என்ன சிக்கல் வந்துடுது? ஏற்பாடு செய்யலாமே!' என்று 'கமெண்ட்' சொல்லிவிட்டது. அதனால், 'இவரைக் கேரளாவுக்குக் கொண்டு போவதற்கு கோர்ட் ஆர்டர் போட சான்ஸ் இருக்கு!' என்று பயந்து போய் அப்போதைய உள்துறைச் செயலாளர், 'மதானியை எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரளாவுக்குக் கொண்டு போகக் கூடாது. தமிழ்நாட்டிலுள்ள ஏதோ ஒரு இன்ஸ்டிடியூட்டில் செயற்கைக் கால் மாற்றி வைக்கலாம்!' என்று சொல்லிவிட்டார்.

அதனால் தமிழ்நாட்டில் உள்ள ஓர் அரசு ஆஸ்பத்திரியில்தான் இந்த செயற்கைக் கால் மாட்ட உத்தரவு கிடைத்தது. அதை வைத்து கே.கே. நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். அங்கிருந்த ஆட்கள் நான்கைந்து முறை வந்து அளவெடுத்துச் செய்துதான் எனக்கு செயற்கைக் காலை மாட்டினார்கள். ஆனால், அது சரியா பொருந்தலை. காலை அதில் மாட்டினால் ரத்தம் கசியும். அதே நேரத்துல நான் கேட்ட ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தால் எனக்கு இந்தத் துன்பம் வந்திருக்காது. ஏனென்றால், அவர்கள் இதில் எக்ஸ்பர்ட். இப்படியெல்லாம் நான் கொடுமைப்பட்டிருக்கேன். இப்படி ஒரு பயனில்லாத பொய்க்காலை மாட்டத்தான் நான் வெளியே செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை சில நாட்கள் மட்டும் வாபஸ் வாங்கினார் முனீர்கோடா. அவர் செய்தது நூறு சதவிகிதம் அரசுக்குச் சாதகமான, எனக்குப் பாதகமான காரியம். அப்படி பாதகமான காரியத்தைச் செய்தவரை எனக்கு உதவி செய்தார் என்று சொல்வதை அறிவுள்ள யாருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!''

நீதிமன்றம்தான் உங்களை விடுவித்தது. ஆனால், நீங்களோ கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கும், தமிழக முதல்வர் கலைஞருக்கும் நன்றி என்று சொல்லியிருக்கிறீர்களே? இப்படிச் சொல்லும்போது, நீங்கள் அரசியல் பின்னணியில் விடுவிக்கப்பட்டது போல் ஒரு கருத்து வந்து விடுகிறதே?

"என் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அதனால் என்னை விடுவிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. அதற்கு நன்றி சொல்வது சரியாகாது. ஆனால், சிறையிலிருந்தபோது எனக்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி சொல்வது என் தார்மீகக் கடமையல்லவா? அச்சுதானந்தனுக்கு நன்றி சொன்னது அவர் எனக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்ததற்காக. அதேபோல், கருணாநிதி மேலே எனக்கு மரியாதை இருக்கு. அதுக்குத்தான் நன்றி சொன்னேன். மற்றபடி என்னை விடுவித்தது முழுக்க முழுக்க கோர்ட்டுதான். சட்டப்படிதான்.

இதில் இன்னொன்றையும் பதிவு செய்யுங்கள். இங்கே ஒரு பி.ஜே.பி தலைவர் சொன்னார். 'கேரளாவில் உள்ள எல்.டி.எஃப் அரசும், தமிழ்நாட்டில் தி.மு.க அரசும் எனக்குச் சாதகமான ஒரு சூழ்நிலையை அமைத்ததனால், அரசுத் தரப்பு வக்கீல்கள் வழக்கை நன்றாக நடத்தாமல் மதானியை விடுதலை செய்ய வைத்திருக்கிறார்கள்!' என்று. அது ரொம்பத் தப்பு. காரணம், கேரளத்தில் அச்சுதானந்தன் அரசு வருவதற்கு முன்பும், தமிழ்நாட்டில் ஜெயலலிதா அரசு இருக்கும் போதும்தான் இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளையும் வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்திருக்கிறார்கள். சாட்சி மொழியைத்தானே கோர்ட் ஏற்கும்! ஜெயலலிதா யாருன்னு எல்லோருக்கும் தெரியும். அவருக்கு வீரப்பனை விட என் மேல கோபம் அதிகம் இருக்கிறது. நீங்க சொன்ன மாதிரி ஒரு மாநிலத்தினுடைய உள்துறைச் செயலாளரையே என் பேரைச் சொல்லி சஸ்பெண்ட் செய்திருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியின்போது முதல் மூணு வருஷம் அத்வானிதான் மத்திய உள்துறை அமைச்சர். அவருக்கு என் மீது எப்படிப்பட்ட கோபம் என்பதும் உங்களுக்குத் தெரியும். அந்த அத்வானி பீரியடில்தான் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்திருக்கிறார்கள். அதுக்கு கோர்ட்ல எல்லா சாட்சியமும் இருக்கு! அப்படியிருக்கும்போது, இந்தப் பேச்சு எப்படி சரியாகும்?''

'முன்பு நான் ஏதாவது தவறு செய்திருந்தால் இனி திருத்திக் கொள்வேன்!' என்று மீடியா பேட்டிகளில் சொல்லியிருக்கிறீர்கள். அப்படி என்ன தவறு செய்ததாக நீங்கள் உணர்கிறீர்கள்?'

"எல்லா மனிதர்களும் தவறு செய்கிறார்கள். நான் என் தவறுன்னு சொல்வது நிறைய கொலைகள் செய்து, கொள்ளையடித்தது அல்ல. நான் கேரளாவில் பெரிய கூட்டங்களில் பேசும் போது, பல பிரச்னைகள் வந்திருக்கிறது. உதாரணமாக, இங்கே (கேரளத்தில்) ஒரு மாஃபியா செய்தி வந்தது. அதில் முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி மீதும் குற்றம் சாட்டப்பட்டு பரபரப்பாகியிருந்தது. அந்த நேரத்தில், அதை அரசியல் ரீதியாக எட்டுத்திக்கும் எடுத்துப் பேசிய ஒரே ஆள் நான்தான். இப்படி நான் பேசும் போது, அந்த குஞ்ஞாலிக்குட்டிக்கு எதிராக ரொம்ப அழுத்தமான, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறேன். அதேபோல், பாப்ரி மஸ்ஜித் பிரச்னையிலும் எல்லை கடந்து பலபேர் மனம் புண்ணாகும்படி வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தியிருக்கேன். இனி அது மாதிரி கடுமையான வார்த்தைகளைப் பேசமாட்டேன். ஒன்பதரை ஆண்டு சிறை வாழ்க்கை என்னை அப்படி பக்குவப்படுத்தியிருக்கிறது. அதுதான் இதற்கு அர்த்தம்!''

கடைசியாக ஒரு கேள்வி: உங்களை கேரள சமூக விமர்சகர்கள் ஒரு பக்கம் 'கேரளத்து நெல்சன் மண்டேலா' என்றும் 'கேரளத்து பிந்தரன்வாலே' என்றும் நேர் எதிர்மறையாய் விமர்சிக்கிறார்களே?

''உண்மையாகவா? உங்ககிட்ட அப்படிச் சொல்லியிருக்கிறார்களா? ஆச்சர்யமாயிருக்கு. யார் எப்படிச் சொன்னாலும் அதை அவர்கள் சொல்ல உரிமையிருக்கு. காலம் அதற்குப் பதில் சொல்லும்!'' என்று புன்முறுவலோடு முடித்துக் கொண்டார் மதானி.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (16/08/07)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.