பிரிந்த கேரள முஸ்லிம் அமைப்புகள் இணைகின்றன!

ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளத்தில் பிளவுற்ற முஜாஹித் அமைப்புக்கள் தற்போது ஒன்றிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. முஸ்லிம் லீக் தலைவர்களின் தலைமையில் நடக்கின்ற இந்த ஒற்றுமைக்கான முயற்சிகள் வெற்றியை நோக்கி முன்னேறுகின்றன. இதன் முதல் கட்டமாக இரு பிரிவுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்த பள்ளி-மதரஸா பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் எனத் தெரிகிறது. இதில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதற்கும், மனம் திறந்த கருத்துப்பரிமாற்றங்களுக்கும் நேற்று முன்தினம் (13-05-2007) கோழிக்கோடு முஜாஹித் சென்டரில் நடந்த KNM மாநில உயர்மட்டக் குழு தீர்மானித்துள்ளது.

மாவட்ட அளவில் இயக்கப் பிரச்சாரகர்களுக்கிடையில் பரவலாக எழுந்திருக்கும் தர்க்கங்களையும், மனஸ்தாபங்களையும் மனதில் கொண்டே ஒன்றிணைவதற்கான இம்முயற்சியில் முன்செல்ல கேரள நஜ்வத்துல் முஜாஹிதீன் (KNM) தீர்மானித்தது. இதற்காக நஜ்வத்துல் முஜாஹிதீன் பொதுச் செயலாளர் ஹுசைன் மடவூருடன் கலந்து இறுதி முடிவுக்கு வர இக்குழு கேரள நஜ்வத்துல் முஜாஹிதீன் தலைவர் T.P. அப்துல்லா கோயா விற்கு முழு அதிகாரம் அளித்தது.

அதன்படி அடுத்துவரும் தினங்களில் இரு பிரிவுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படும் எல்லா பள்ளிவாசல்-மத்ரஸா பிரச்சனைகளும் தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதே வேளையில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் எல்லா வழக்குகளும் திரும்பப் பெறப்படும். ஒன்றிணைவதற்கு ஆக்கம் கூட்டும் முகமாக இயக்கங்கள் நஜ்வத்துல் முஜாஹிதீனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை வந்தால் அதற்கும் மனதார தயாராக வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட KNM பிரமுகர்கள் கூறினர்.

கடந்த புதன் கிழமை கூடிய KNM உயர்மட்டக் குழுவில் கேரள நஜ்வத்துல் முஜாஹிதீனிலிருந்து பிரிந்து போய் நஜ்வத்துல் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படும் மடவூர் பிரிவினருக்கு கொள்கையில் மாற்றம் உண்டாகி விட்டது என்ற KNM-ன் இளைஞர் அணிகளின் ஐயங்களுக்கு KNM-ன் உயர்மட்டத் தலைவர்கள், “கடந்தவை அனைத்தும் கடந்தவையாய் இருக்கட்டும்; இனி நடக்கப்போகும் காரியங்களைக் குறித்து மட்டும் பேசினால் போதும். கடந்தவைகள் அனைத்தையும் மன்னிக்கவும், மறக்கவும் தயாராக இருக்க வேண்டும்” என்று பதில் கூறினர்.

கோழிக்கோட்டில் நடந்த உயர்மட்ட அமர்வின் தொடர்ச்சியாக கொச்சியில் கடந்த வெள்ளியன்று(11-05-2007) தலைவர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. H.E.பாபு சேட் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஒன்றிணையும் முயற்சிக்கு ஆதரவாகச் செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வரும் நாட்களில் திருவனந்தபுரத்தில் KNM பொதுக்குழுவும் அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட, மண்டல அளவில் பிரச்சாரகர்களைக் கூட்டி முஸ்லிம் சமூகம் ஒன்றிணைதலின் அவசியத்தையும், அதற்காக எடுக்கப்படும் முயற்சிகளையும் விவரித்து அனைவரையும் ஒருமித்த கருத்தில் கொண்டு வந்து முன் செல்ல தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

வேறுபட்ட கருத்துக்களை மறந்து ஓரணியில் இணையும் இவ்விரு முஜாஹித் பிரிவினருக்கு இடையில் ஒன்றிணைதல் என்பது கிட்டத்தட்ட நிச்சயமாகி விட்டது. அவ்வாறு நடைபெற்றால் கருத்து வேறுபாட்டினால் பிளவுற்ற இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றிணையும் இது ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கும்.