நேர்மைக்கு இன்னொரு பெயர் ஷேக் லத்தீப் அலீ!

ஹைதராபாத் சஞ்சீவ் ரெட்டி நகரில் வசித்து வரும் ஷேக் லத்தீப் அலீ, B.Tech (Electrical) படித்து வருகிறார். நேற்று காலை லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்முக்கு ரூ. 200 பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது தனது ATM அட்டையை இயந்திரத்தில் செருகிய பின்னர், பாஸ் வேர்டை அழுத்தி உள்ளார். அப்போது திடீரென அந்த ATM இயந்திரத்தின் பாகங்கள் திறந்து கொண்டு அதிலிருந்த ரூ. 26 லட்சம் வெளியே வந்து கொட்டியுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லத்தீப், உடனடியாக ஏடிஎம்மில் இருந்த கட்டணமில்லா தொலைபேசி எண் 100 ஐத் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை தெரிவித்துள்ளார். அத்துடன், வேறு யாரும் பணத்தைத் திருடிச் செல்லாதபடி தனது நண்பரைக் காவலுக்கு நிறுத்தி வைத்து விட்டு அருகிலிருந்த எஸ்.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் லத்தீப். விரைந்து வந்த வங்கி அதிகாரிகள், இயந்திரத்தை சரி செய்தனர்.

இந்த ஏடிஎம் மையத்தில் கண்காணிப்புக் கேமராவோ பாதுகாவலரோ இல்லை என்பதால், வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தை போலீஸார் கண்டித்தனர்.

வேலையில்லாத வறுமை, ஏடிஎம்முக்கு அருகில் எந்த ஒரு CCTV கேமரோவோ பாதுகாவலரோ இல்லாத சூழல் மற்றும் தனது வங்கிக் கணக்கில் வெறும் 500 ரூபாய்களே உள்ள நிலையிலும் நேர்மையாக நடந்து கொண்ட மாணவர் ஷேக் லத்தீப் அலீயின் நேர்மையையும், அவர் எடுத்த முயற்சிகளையும் போலீஸார் வெகுவாக பாராட்டினர். போலீஸ் கமிஷனர் மஹேந்திர ரெட்டி லத்தீஃபை பாராட்டி சான்றிதழையும் பரிசுத் தொகையையையும் நேற்று (20-09-2014) கொடுத்து கெளரவித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

– அபூ ஸாலிஹா