பரவும் கிருமிகள்

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவி ஏற்கும் வேளையில், “குஜராத்தை மாதிரியாகக் கொண்டு செயல் படுவோம்” என்று எடியூரப்பா வாக்குறுதி அளித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்டத்தில் பேயாட்டம் ஆடி, அப்பாவிகளை பலிகொண்ட, இந்திய நாட்டின் வைரஸ், கர்நாடகாவிலும் கேரளத்திலும் இப்போது பரவ ஆரம்பித்து விட்டது.

கடந்த 15.09.2008இல் மங்களூர், உடுப்பி, சிக்மகளூர் ஆகிய கர்நாடகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள 14 கிருஸ்துவ தேவாலயங்கள் மீது ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள் குண்டர்களால் திட்டமிட்டு ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப் பட்டது.

உடுப்பி மாவட்டத்தில் மட்டும் மூன்று தேவாலயங்கள் தாக்கப் பட்டன. KSRTC பேருந்து நிலயத்தின் அருகிலுள்ள ஒரு தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 15 பஜ்ரங்தள் குண்டர்கள், பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களைக் கண்மூடித் தனமாகத் தாக்கினர். இசைக் கருவிகள், ப்ராஜக்டெர் போன்ற விலையுயர்ந்த சாதனங்களையும் மேஜை, ஜன்னல் என ஒன்று விடாமல் அனைத்தையும் கும்பல் வெறித்தனமாக அடித்து நொறுக்கியது.

பைண்டூருக்கு அருகில் உள்ள ஷிரூரிலும் கொல்லூருக்கு அருகில் உள்ள முடூரிலும் உள்ள தேவாலயங்களும் தாக்குதலுக்குள்ளாயின. ஒரு போதகரும் தாக்கப் பட்டார்.

கோப்பா தாலுக்காவின் ஜயபுராவுக்கு அருகிலுள்ள மக்கிகோப்பா தேவாலயத்தின் போதகர் கடுமையாகத் தாக்கப் பட்டார்; தேவாலயம் சேதப் படுத்தப் பட்டது.

அனைத்து வன்முறை நிகழ்வுகளுக்கும் பஜ்ரங்தள் பொறுப்பேற்றுக் கொண்டதோடு மேலும் தாக்குதலைத் தொடர்வோம் என்றும் பயமுறுத்தியுள்ளது.

“தாக்குதலை நடத்தியவர்கள் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள்” என்று உடுப்பி மாவட்டத்தின் காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் பர்வீன் பவார் கூறினார். “சம்பவத்தைக் குறித்துக் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது” என்று பவார் கூறினாலும் வன்முறையில் ஈடுபட்ட பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கைது செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால், அமைதியாகத் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்த கிறிஸ்துவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பலர் பலத்த காயம் அடைந்தனர். காவல்துறையினர் தாங்களாகவே தங்களது வாகனங்களுக்குத் தீவைத்துக் கொண்ட சூழ்ச்சியைக் கண்ட பொதுமக்கள், கோபமடைந்து காவல்துறையினர் மீது கல்வீசினர்.

நெருங்கும் தேர்தலை மனதில் கொண்டு சங்கபரிவார அமைப்புகள், பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். வன்முறை செய்பவர்கள் சங்பரிவார்கள் என்பதால், அரசு யந்திரங்களும் அதிகார அமைப்புகளும் வன்முறைகளைக் கண்டு கொள்ளாததோடு ஜனநாயக வழியில் எதிர்ப்பைக் காட்டும் சிறுபான்மையினர் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றன.

“வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெகு சுதந்திரமாக நடமாடுகின்றனர். குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய பாஜக அரசு, அதை விடுத்துக் குறுக்கு வழிகளில் அவர்களைத் தப்பிக்க வைப்பதில் கவனம் செலுத்துகிறது” என்று காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி தன் அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறார். “நடந்து முடிந்த வன்முறைகளுக்கு ஆளும் பாஜக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநில அரசின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நடுவண் அரசை நாங்கள் வற்புறுத்துவோம்” என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் மிருகத்தனமான தாக்குதல் இதுவரை முடிவுக்கு வராத நிலையில் பாஜக ஆளும் கர்நாடகாவிலும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான தாக்குதலைத் துவங்கியிருப்பதை சமூகநல ஆர்வலர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ஒரிஸ்ஸாவில் மீண்டும் பல கிறிஸ்துவ தேவாலயங்களின் மீதும் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் மீதும் சங்கபரிவாரத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிறுபான்மை கிருத்துவர்கள் மீதான தாக்குதல் தற்போது கேரளாவுக்கும் பரவி விட்டது. கடந்த 15.09.2008இல் காசர்கோட்டில் அமைந்துள்ள ஒரு மிஷனரிப் பள்ளிக்கூடத்தின் மீது இரவு நேரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏனெனில் இந்தப் பள்ளிக்கூடம் ஒரு தற்காலிக தேவாலயமாக இருப்பதாலும் அங்குக் கிருஸ்துவப் பிரார்த்தனைகள் நடப்பதாலும்தான்.

“இந்தத் தாக்குதல் சில விஷமிகளால் திசைதிருப்பும் முயற்சியாகக்கூடச் செய்யப் பட்டிருக்கலாம்” என்று காசர்கோடு மாவட்ட காவல்துறை ஆணையர் ராம்தாஸ் போத்தன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்குக் குறிப்பாக சிறுபான்மையினருக்கு அச்சமற்ற, பாதுகாப்பான வாழ்க்கைக்கான உத்தரவாதம் வழங்குவதும் அதற்கான தகுந்த நடவடிக்கைகளில் கவனமாக செயல்படுவதும் ஜனநாயக அரசின் தலையாய கடமையாகும். அதனைக் கவனிப்பதற்கு முன்வராமல், அரசும் அதிகார அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக சங்கபரிவார் நிகழ்த்தும் அக்கிரமங்களைக் கைகட்டி வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கும் எனில், தங்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்காக சங்கபரிவாரத்தால் அநியாயத்திற்குள்ளாக்கப்படும் சிறுபான்மையினரும் தற்காப்புக்கென ஆயுதங்கள் ஏந்த வேண்டிய நிர்ப்பந்த நிலை வரும் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் இறையாண்மைக்கும் நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் அமைதியான அச்சமற்ற வாழ்விற்கும் மிகப் பெரும் சவாலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சங்கபரிவார அமைப்புகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டியது கட்டாயமாகும்.