குர்ஆனை மனனம் செய்யும் ஹிந்து சிறுமி!

பிஹார் மாநிலம் ககோல் என்னும் ஊரைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான திலீப் குமார் சௌத்திரி என்பவரின் மகளான ஹேமலதா என்னும் 9 வயதாகும் சிறுமி தன் வீட்டின் அருகிருக்கும் ஜாமிஆ மஸ்ஜிதில் அமைந்துள்ள மதரஸா மதீனத்துல் உலூமில் மாணவியாகச் சேர்ந்து முஸ்லிம்கள் இறைவனின் வார்த்தை என நம்பும் புனித நூலான குர்ஆனைப் படித்து வருகிறார்.

திலீப் குமார் தம்பதியினர் தம் மகள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாஃபிஸ் பட்டம் பெற வேண்டும் என விரும்புவதாகக் கூறினார். அவர்களின் 7 வயது மகன் ஆஷிஷ் வித்யார்த்தியும் தன் சகோதரியின் இந்த முயற்சியினால் ஆர்வம் உண்டாகித் தானும் இந்த முயற்சியில் ஈடுபட்டு தற்போது உருதுவும் அரபியும் கற்க முனைந்துள்ளார்.

இது குறித்து கருத்துக் கூறிய திரு திலீப் குமார், நான்காம் வகுப்புப் படிக்கும் தனது மகள் உருதுவையும் அரபியையும் கற்று நிபுணத்துவம் பெற வேண்டும் என விரும்பியதாகவும், அரபி கற்றபின் அரபியில் இருக்கும் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனையும் மனனம் செய்யும் ஆவல் மேலிட்டதால் தனது மகளை மதரஸாவுக்கு அனுப்பி குர்ஆனை மனனம் செய்யும் பயிற்சியில் ஈடுபடவைத்துள்ளதாகப் பெருமையாகக் கூறினார். தற்போது திருமறையின் தோற்றுவாயான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை அழகாக ஹேமலதா ஓதிக் காட்டுகிறார்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா 18 ஜூன், 2007, பெங்களூர் பதிப்பு

மனித குலம் அனைத்திற்கும் வழிகாட்டியாக அருளப் பெற்ற இறைவனின் அருட்கொடையான புனித குர்ஆன் ஒரு வாழும் அற்புதம். அதனை எவர் படித்திடவும் விளங்கவும் தடையில்லை; நாடியவர்களுக்கு அவனே நேர்வழி காட்டுகிறான். – சத்தியமார்க்கம்.காம்