மே 26-ம் தேதி ஒரு டி.வி விவாதத்தில் நுபுர் ஷர்மா அந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னார். நவீன்குமார் ஜிண்டால் அதே நாளில் ட்விட்டரில் அப்படி ஒரு கருத்தைப் பதிவிட்டார்.
“உலகத்துக்கே வழிகாட்டும் விஸ்வகுருவாக இந்தியா இருக்கிறது…’’ ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும், அங்கிருக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும்போது, பெருமிதமாக இப்படிச் சொல்வார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த விஸ்வகுரு அந்தஸ்துக்கு பா.ஜ.க நிர்வாகிகள் இருவரால் இப்போது சோதனை வந்திருக்கிறது!
பா.ஜ.க தேசியச் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, டெல்லி பா.ஜ.க நிர்வாகி நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரே அந்த இரண்டு பேர். நபிகள் நாயகம் பற்றி அவர்கள் தெரிவித்த கருத்துக்கு இதுவரை 14 இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார், இரான், குவைத் போன்ற நாடுகள், அங்கிருக்கும் நம் இந்தியத் தூதரை நேரில் அழைத்து எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளன. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. கத்தார் நாடு ஒருபடி மேலே போய், ‘இந்திய அரசு பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது.
இஸ்லாமிய நாடுகளில் கிளர்ந்திருக்கும் எதிர்ப்புத் தீயை அணைக்க, மத்திய அரசு தொடர் முயற்சிகள் எடுத்துவருகிறது. என்றாலும், சமூக ஊடக விவாதங்களில் இந்த விவகாரத்தை உயிர்ப்புடன்வைத்திருக்க இரண்டு தரப்பிலிருந்தும் பிரயத்தனங்கள் நடக்கின்றன. இதனால் தேச உறவில் விரிசல் ஏற்படுமா… இந்தியப் பொருள்களைப் புறக்கணிப்பது போன்றவை நமக்கு பாதிப்பு ஏற்படுத்துமா… வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் நிலை என்னவாகும்?
சர்ச்சைக்குரிய கருத்து… பாடம் எடுத்த வெளியுறவுத்துறை!
ஹிஜாப் விவகாரம், அதையொட்டி கர்நாடகாவில் இஸ்லாமிய வணிகர்களின் நிறுவனங்களைப் புறக்கணிக்கச் சொல்லி சில அமைப்புகள் வெளியிட்ட அறிவிப்பு, கர்நாடக அமைச்சர்களே இதை நியாயப்படுத்திப் பேசியது, ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி விழாக்கள் நடைபெற்றபோது நாட்டின் சில மாநிலங்களில் நிகழ்ந்த கலவரங்கள், அந்தக் கலவரங்களுக்குக் காரணமாக இருந்தவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் அரசால் இடிக்கப்பட்டது என்று பல சம்பவங்களின்போது வளைகுடா நாடுகள் அமைதியாகவே இருந்தன. வழக்கம்போல பாகிஸ்தானும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் இவற்றை விமர்சனம் செய்தபோது, ‘அது இந்தியாவின் உள் விவகாரம்’ என்று வாயை அடைத்துவிட்டது இந்திய அரசு. அப்படி இந்தியாவின் ‘உள் விவகாரமாக’ இல்லாத நபிகள் நாயகம் சர்ச்சை எழுந்தபோது, எல்லா நாடுகளும் உள்ளே வந்துவிட்டன.
மே 26-ம் தேதி ஒரு டி.வி விவாதத்தில் நுபுர் ஷர்மா அந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னார். நவீன்குமார் ஜிண்டால் அதே நாளில் ட்விட்டரில் அப்படி ஒரு கருத்தைப் பதிவிட்டார். சிவபெருமானை இழிவுபடுத்தியதால், அதற்கு எதிர்வினையாகவே இப்படிச் செய்ததாக இருவரும் சொன்னார்கள். பிரச்னை தீவிரமடைந்ததும் இருவருமே வருத்தம் தெரிவித்தார்கள். ஆனால், எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்தது. எல்லா விவகாரங்களிலும் மௌனம் காத்த மத்திய அரசு, இம்முறையும் அப்படியே இருந்தது. வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்த பிறகே, பத்து நாள்கள் கழித்து ஜூன் 5-ம் தேதி, இருவர் மீதும் பா.ஜ.க நடவடிக்கை எடுத்தது. ‘எல்லா மதங்களையும் எங்கள் கட்சி மதிக்கிறது. இறைவனையும் வழிபாடுகளையும் இழிவுபடுத்துவதை ஆதரிக்க மாட்டோம்’ என்று பா.ஜ.க அறிவித்தது.
சர்ச்சைக்குரிய பா.ஜ.க நிர்வாகிகள் இருவரையும் ‘உதிரி சக்திகள்’ என்று குறிப்பிட்டு, ‘இது அவர்கள் கருத்து, இந்திய அரசின் கருத்தை இது பிரதிபலிக்கவில்லை’ என்று கத்தாருக்கான இந்திய தூதரகம் விளக்கமளித்தது. பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதர்களுக்கு, இந்த விவகாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று வெளியுறவுத்துறை பாடம் எடுத்திருக்கிறது. “பல்வேறு நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் நல்லுறவு இதனால் பாதிக்கப்படாது’’ என்று மத்திய அரசு கூறுகிறது. “வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு எதுவும் பிரச்னை வராது’’ என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் கூறியிருக்கிறார்.
வர்த்தக உறவு எனும் தவிர்க்க முடியாத புள்ளி!
சமூக வலைதளங்களில் உண்மைகளைவிட அதிகமாக வதந்திகள் பரவ, எப்படியாவது இந்த விவகாரத்திலிருந்து மீண்டுவரப் பார்க்கிறது மத்திய அரசு. பாகிஸ்தான் ஏதாவது சொன்னால் அலட்சியப்படுத்தும் இந்தியா, வளைகுடா நாடுகளை அப்படிச் செய்ய முடியாது. காரணம், அவர்களுடன் நடைபெறும் பிசினஸ்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய ஆறு நாடுகள் இணைந்து ‘வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்’ என்ற அமைப்பை வைத்துள்ளன. இந்த ஆறு நாடுகள் மற்றும் இரான், இராக், ஜோர்டான் ஆகிய வளைகுடா நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் வர்த்தக உறவுக்குப் பல நூற்றாண்டுகள் பாரம்பர்யம் உண்டு. சீனாவின் சூழ்ச்சி வலையில் சிக்க விரும்பாததாலும், உய்குர் முஸ்லிம்களை சீனா கடுமையாக ஒடுக்குவதாலும், அரபு நாடுகள் இயல்பாகவே இந்தியாவின் வர்த்தக உறவை விரும்புகின்றன. அதனால், சமீப ஆண்டுகளில் இரு தரப்பு வர்த்தகம் பெரிதும் வளர்ந்திருக்கிறது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய ஆறு நாடுகளுக்கு மட்டுமே கடந்த ஓராண்டில் இந்தியா 3,41,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. 8 , 60,000 கோடி ரூபாய் பொருள்களை இறக்குமதி செய்திருக்கிறது. இந்தியாவின் பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதியில் 60 சதவிகிதம் வளைகுடா நாடுகள் தருவதே. இதைத் தாண்டி பாலிமர், வைரங்கள் மற்றும் தங்கமும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து கார்கள், நகைகள், ஜவுளி, அரிசி, உணவுப்பொருள்கள், வாசனைத் திரவியங்கள், எருமை இறைச்சி, கடல் உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகம் இந்த நாடுகள் வாங்குகின்றன. ஆயிரக்கணக்கான இந்தியச் சிறு உற்பத்தியாளர்கள் இதனால் பலன் பெறுகிறார்கள்.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாவுடன் அதிகம் பிசினஸ் செய்யும் மூன்றாவது பெரிய நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ். தனது எதிர்கால பிசினஸ் பங்குதாரராக இந்தியாவைக் கருதுகிறது அந்த நாடு. இந்த மே முதல் தேதியில்தான் இந்தியாவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் இந்தியர்கள் இனி அதிகம் அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இதைத் தாண்டி இந்தியாவில் உற்பத்தி மற்றும் கட்டமைப்புத் துறையில் 7, 77,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது எமிரேட்ஸ். பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் முதலீடு இது.
இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை அதிகம் தரும் நாடு கத்தார். அந்த அரசின் கத்தார் இன்வென்ஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, அதானி எலெக்ட்ரிசிட்டி நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்திருக்கிறது. இந்தியாவைப் பல்வேறு முதலீடுகளுக்கு ஏற்ற பாதுகாப்பான தேசமாக வளைகுடா நாடுகள் பார்க்கின்றன. அதனால், சமீப ஆண்டுகளில் அங்கிருந்து இந்தியாவுக்குப் பணம் வருவது அதிகரித்துள்ளது. எதிர்காலத் தொழில் வளர்ச்சிக்கு இது உதவும்.
இன்னொரு பக்கம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பையும் அவை அதிகம் தருகின்றன. சுமார் 89 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள். ‘வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்’ நாடுகள் ஆறிலும் பணிபுரியும் இந்தியர்கள் மட்டுமே கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை ரூ.1,63,123 கோடி. இது அவர்களின் குடும்பங்களையும் வளமாக்குகிறது; இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பையும் வலிமையாக்கு கிறது. (சமீபத்தில் பொருளாதார நெருக்கடியில் தவித்த இலங்கை, ‘வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் பணம் அனுப்புங்கள்’ என்று கெஞ்சியது நினைவிருக்கலாம்!) அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளுக்குப் போகும் பலரும், அங்கேயே செட்டிலாகும் எண்ணத்துடன் சொத்துகள் வாங்குகிறார்கள். அங்கேயே சம்பாதித்து, அங்கேயே செலவழிக்கிறார்கள். வளைகுடா இந்தியர்கள் சேமித்து இந்தியாவுக்குத்தான் பணம் அனுப்புகிறார்கள்.
ஐடி துறை, எண்ணெய் சுத்திகரிப்பு என அதிகாரிகளாகவும், அடித்தட்டுத் தொழிலாளர்களாகவும் இந்தியர்கள் உழைப்பு அங்கு பெரிது. அதைத் தாண்டி உணவகங்கள், சிறு வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் பலவற்றை இந்தியர்கள் வைத்துள்ளனர். முன்பு கேரளா, தமிழகம் என்று தென்னிந்திய மாநிலங்களிலிருந்து அதிகம் பேர் அங்கு பிழைப்பு தேடிப் போவார்கள். இப்போது டெல்லி, உ.பி., பீகாரிலிருந்து அதிகம் பேர் போகிறார்கள்.
வெறுப்பு அரசியல் சரியா?
எல்லோரும் எல்லோரையும் சார்ந்திருக்க வேண்டிய அளவுக்கு உலகம் மாறியிருக்கிறது. யாரையும் புறக்கணித்துவிட்டு நாம் வாழ முடியாது என்பதுதான் யதார்த்தம். ‘இந்தியப் பொருள்களைப் புறக்கணிப்போம்’ என்ற முழக்கம் இப்போது குவைத்தைத் தாண்டி வேறு எங்கும் பெரிதாகக் கேட்கவில்லை. ஆனால், இது ஒருவித வெறுப்பு நெருப்பின் ஆரம்பப்புள்ளி. எப்படி வளைகுடா பெட்ரோலைப் புறக்கணித்துவிட்டு நாம் வாழ முடியாதோ, அப்படி இந்திய உணவுப் பொருள்களையும், இந்தியர்களின் உழைப்பையும் புறக்கணித்துவிட்டு அவர்களும் வாழ முடியாது. ஆனால், தொடர்ச்சியாக ஒரு வெறுப்புப் பிரசாரம் செய்யப்படும்போது, அவர்கள் மாற்றுவழிகளைத் தேட ஆரம்பிக்கலாம். வளைகுடா நாடுகளில் முன்பு இந்தியர்கள் மட்டுமே பார்த்த வேலைகளைப் பங்குபோட இப்போது பிலிப்பைன்ஸ் போன்ற தேசங்களிலிருந்து நிறைய பேர் வந்துவிட்டார்கள். இந்த உலகம் எல்லாவற்றுக்குமே ஒரு மாற்றைத் தயாராக வைத்திருக்கிறது.
வெறுப்பு அரசியல் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் ஆதாயம் தரலாம். ஆனால், அது தொடர்ச்சியாகப் பகைமை உணர்வையும் வளர்த்துக் கொண்டேயிருக்கிறது. அது எப்போதும் இரை கேட்கிறது. வெறுப்பு அரசியல் செய்பவர்கள் தொடர்ச்சியாகப் பதவிகளையும் உயரங்களையும் அடைவதைப் பார்த்து, இன்னும் வெறுப்பாகப் பேச பலர் உருவாகிறார்கள். அவர்கள் இப்படித்தான் எல்லைக்கோடு தெரியாமல் வரம்பு மீறுகிறார்கள். நுபுர் ஷர்மாவை பா.ஜ.க சஸ்பெண்ட் செய்ததும், இதுவரை மோடியை ஆதரித்த பலரே அவரைத் திட்டினார்கள். அவர்கள் நுபுர் ஷர்மாவை நேசித்து, மோடியையே வெறுக்க ஆரம்பித்தார்கள். வெறுப்பு அரசியலின் தன்மை அதுதான். அது எல்லாப் பக்கமும் கூர்மையாக இருக்கும் கத்தி, யாரையும் குத்தும்.
இந்தியா வலிமையான தேசமாக இருக்கலாம். ஆனால், நாம் தனியாக வாழ முடியாது. நம் வாழ்க்கைக்கும் வளமைக்கும் பல நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. பக்கத்து வீட்டில் இருப்பவரை எதிரியாக மாற்றிவிட்டு, நாம் அமைதியாக வாழ்ந்துவிட முடியாது!
நன்றி: ஜுனியர் விகடன் (15-06-2022)