குஜராத் சாதனையல்ல… வேதனை!

Share this:

ந்தியாவை இருமுனைப் படுத்தும் திருப்பணியில் உள்ள மோடி என்னையும் சும்மா விடவில்லை. அவரது ஆதரவாளர்களின் கோரல்களை ஏற்கனவே இடதுசாரிகள் பலரும் கிழித்துத் தொங்க வைத்துக் கொண்டிருக்கையில், புதிதாக இப்போது படித்த ஒரு செய்தியும் மிகவும் முக்கியமானதாகப் படவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ரகுராம் ராஜன் இதற்கு முன்பாக தலைமை பொருளாதார ஆலோசகராக மத்திய அரசுக்கு பணிபுரிந்து வந்தார். மே மாதம் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்திருந்தார்.

இந்திய மாநிலங்களின் பின்தங்கிய நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்து பின்தங்கியநிலை சுட்டி (backwardness index) ஒன்றை உருவாக்குவதே ராஜன் தலைமையிலான குழுவின் இலக்கு. பீஹார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்பதால் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்று அதன் முதல்வர் நிதிஷ் குமார் தொடர்ந்து கோரிவந்த நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இப்போது வெளியாகியிருக்கிறது. [https://satyamargam.com/media/Raghuram-Rajan-Panel-Report.pdf] பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து தனிப்பட்ட முறையில் நிதியை அளிக்க இந்தக் குழு பரிந்துரைக்கவில்லை என்பது வேறு விஷயம். ஒரு மாநிலத்தின் வளர்ச்சித் தேவை மற்றும் அந்த மாநில நிர்வாகத்தின் வளர்ச்சிப் பணி நிறைவேற்றத் திறன் ஆகிய இரண்டையும் ஒருசேர கணக்கில் எடு்த்துக் கொண்டே நிதியை ஒதுக்க வேண்டும் என்று சிதம்பரமும் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ராஜன் குழு உருவாக்கியுள்ள பின்தங்கிய நிலை சுட்டியின்படி,

இந்தியாவின் மிகக்குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Least Developed States): ஓரியா (0.798), பிஹார்(0.765), மத்தியப் பிரதேசம் (0.759), சத்தீஸ்கர்(0.752), ஜார்கண்ட்(0.746), அருணாச்சல பிரதேசம்(0.729), அசாம்(0.707), மேகாலயா(0.693), உத்தரப் பிரதேசம்(0.693), ராஜஸ்தான்(0.626).

குறைவான வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Less Developed States): மணிப்பூர் (0.571), மேற்கு வங்கம்(0.551), நாகாலாந்து(0.546), ஆந்திரப் பிரதேசம்(0.521). ஜம்மு காஷ்மீர்(0.504), மிஸோரம் (0.495), குஜராத்(0.491), சி்க்கிம் (0.430), இமாச்சல பிரதேசம்(0.404).

ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்கள் (Relatively Developed States): ஹரியானா (0.395), உத்தராகண்ட் (0.383), மகாராஷ்ட்டிரா (0.352), பஞ்சாப் (0.341), தமிழ்நாடு (0.095), கேரளா (0.095), கோவா (0.045).

{edocs}https://satyamargam.com/media/Raghuram-Rajan-Panel-Report.pdf,100%,950{/edocs}

எந்தெந்தக் காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்தடையப்பட்டன? தேசிய தனிநபர் வருமானத்தில் ஒரு மாநிலத்தின் நடப்பு நிலையும் அதன் மனிதவள மேம்பாட்டு குறியீடுகளையும் கொண்டு இந்த அளவீடு செய்யப் பட்டிருக்கிறது. இவற்றுடன் மாநிலத்தின் புவி ஆதார நிலைகள், மக்கள் தொகை அடர்த்தி, சர்வதேச எல்லையை ஒட்டி அது அமைந்திருக்கிறதா, இருந்தால் எவ்வளவு நீளம் என்பதெல்லாம்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

இந்த பின்தங்கிய நிலைமைச் சுட்டியின் விவரங்களுக்குள் புதைந்திருக்கும், தற்போது விவாதிக்கப்பட வேண்டிய, ஒரு முக்கிய அரசியலை நாம் இப்போது காண்போம்.

குஜராத் முன்மாதிரி என்ற பெயரில் நரேந்திரமோடியின் ஆதரவாளர்கள் ஒரு பெரிய மாயையை நாட்டில் உருவாக்கி வருகிறார்கள். ஆனாலும் இந்தச் சுட்டி குஜராத்தை ஒரு குறைவான வளர்ச்சி கண்ட மாநிலமாகவே காட்டுகிறது. இது காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட சதி என்று கூறுவதற்கில்லை. ஒப்பீட்டளவில் வளர்ச்சி கண்ட மாநிலங்கள் என சுட்டி கூறும் மகாராஷ்ட்டிரா, உத்தராகண்ட், பஞ்சாப் ஆகியவை மாறி மாறி காங்கிரஸிடமோ அல்லது பாஜக கூட்டணிக் கட்சியினரிடமோ இருந்தவைதான். தொடர்ந்து காங்கிரஸிடமிருக்கும் ஆந்திரப் பிரதேசமும் குஜராத் உள்ள பிரிவில்தான் இருக்கிறது.

குஜராத் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சமூகங்களின் – வைசிய சாதிகளின் – கோட்டை என்பதை நாம் அறிவோம். அதைப்போலவே மோடியின் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே மிகவும் முன்னணி மாநிலமாக அது இருந்து வருகிறது என்பதையும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவுக்குள்ளேயே முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் மாநிலங்களில் குஜராத்தின் இடம் பொறாமைப் படக்கூடிய ஒன்றுதான். அதில் எப்போதுமே மோடி கவனமாக இருந்து வந்திருக்கிறார். இப்படி வைசியர்களின் கோட்டையாகவும் முதலீடுகளின் காந்தமாகவும் இருக்கின்ற, இந்திய முதலாளித்துவத்தின் டார்லிங் நரேந்திரா பாயின் மாநிலம் குறைவாக வளர்ச்சி கண்ட மாநிலமாக (அதுவும் ஹரியானா, உத்தராகண்ட் ஆகியவற்றையும்விட!) இருப்பது எப்படி?

ஒரே காரணம்தான். இயற்றலும் ஈட்டலும் மட்டுமே ஒரு பொருளாதாரத்தை காத்துவிடாது. வகுத்தலும் சரியாக இருக்கவேண்டும். ஆயிரம் ஏழைகள் நடுவில் ஒரு கோடீஸ்வரன் வாழ்வதால் அந்த ஆயிரம் ஏழைகள் வளர்ந்து விடமாட்டார்கள். குஜராத் முதலீடுகளை ஈர்த்தது, பணம் பாய்ந்தது என்பதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அது அந்த மாநிலத்துத்தின் தனிநபர் வருமானத்தையும் சமூக-பொருளாதார மேம்பாட்டையும் உறுதிப்படுத்தியதா? இல்லை என்றே வேறு பல புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. (படிக்க: http://www.epw.in/system/files/pdf/2013_48/39/Have_Gujarat_and_Bihar_Outperformed_the_Rest_of_India.pdf )

ஒரு மாநிலம் பணக்காரர்களின் மாநிலமாக இருப்பதற்கும் வளர்ந்த மாநிலமாக இருப்பதற்குமான வித்தியாசத்தை அறிந்தோ அறியாமலோ மோடியின் ஆதரவாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பணம் பாய்ந்த பிறகும் குஜராத் பின்தங்கிய நிலையை விட்டு போதுமான அளவுக்கு வெளிவராமல் இருப்பதற்கான காரணம் அரசியல்தான். அதாவது பாஜகவின் கலாச்சார தேசியத்தின் ஒரு பிரதான பகுதியான சாதிய பொருளாதார அரசியல்தான் அதற்கு காரணம். இந்தியாவின் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பலனளித்த ஐடி துறை வளர்ச்சியைக் கண்டு, “இந்தியா ஒளிர்கிறது” என்று வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் கூச்சலிட்டதற்கும் இப்போது மோடியின் வளர்ச்சியை குஜராத்தின் வளர்ச்சியாக முன்னிறுத்தி இந்தியாவை குஜராத் ஆக்குவோம் என்று இப்போது காவிப்படை கூச்சலிடுவதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வாக்குகளை நோக்கி வீசப்பட்ட இந்த இரு முழக்கங்களுமே ஆதாரமற்ற பொய்க்கூச்சல் என்பதைத்தவிர வேறில்லை.

குஜராத்தை “வளர்த்ததைப் போல” இந்தியாவையும் “வளர்ப்போம்” என்று கூறுவதைக் கேட்டால், நமக்கு நடுக்கமாகத்தான் இருக்கிறது.

மீண்டும் சுட்டியைப் பாருங்கள். ஒப்பீட்டளவில் வளர்ச்சிகண்ட மாநிலங்களில் முதல் இரு இடங்களில் கோவாவும் கேரளாவும் வருகின்றன. கோவா ஒரு குட்டி மாநிலம். சிங்கப்பூரையும் இந்தோனேஷியாவையும் ஒப்பிடமுடியாதது போல, துபாயையும் ஈரானையும் ஒப்பிடமுடியாதது போல, கோவாவை அதன் பக்கத்து மாநிலமான மகாராஷ்ட்டிராவுடனோ பிற பெரிய மாநிலங்களினுடோ ஒப்பிடமுடியாது. அதன் தனித்துவம் கருதி கோவாவை வி்ட்டுவிடலாம். இரண்டாவது இடத்தில் உள்ள கேரளத்தின் வளர்ச்சி சுவாரஸ்யமானது. ஆனால் கேரளத்தின் வளர்ச்சிகூட அடிப்படையில் இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடமுடியாத ஒன்று. ஏனென்றால் அது பிரதானமாக வெளிநாட்டு செலாவணி சார்ந்தது. ஒரு ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர்களை என்ஆர்ஐகள் கேரளாவுக்கு அனுப்புகிறார்கள். உள்ளூரில் உற்பத்திக்கான இடமில்லை, பணம் வெளியிலிருந்து வருகிறது. முதலீடாகக்கூட அல்ல, ஈட்டப்பட்ட பணமாக. அது உள்ளூரில் சேமிப்பையும் செலவையும் அதிகரிக்கிறது. ஆனால் அடிபப்டையில் கேரளம் ஒரு பொருளாதார உற்பத்தி தலம் அல்ல.

இடதுசாரிகளும் காங்கிரசும் மாறி மாறி ஆளும் கேரளத்தில், அதன் புவியியல் மற்றும் மக்களியல் காரணிகளின் காரணமாகவும், குறிப்பாக இடதுசாரிகளின் அதீத தொழிற்சங்கவாதத்தி்ன் காரணமாகவும் தொழிற்துறை வளர்ச்சி சாத்தியமில்லாமல் போனது. ஆனால், கேரளாவிலுள்ள சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டஸீலின் எஸ். இருதய ராஜன், நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த குறிப்பொன்றில் சுட்டிக்காட்டியதுபோல “உலக முதலாளியத்திடம் இருந்துவரும் அந்நியச் செலாவணிதான் ஒட்டுமொத்த கேரளப் பொருளாதாரத்தையும் தாங்கி நிற்கிறது. தொழிலாளர்களின் “புலப்பெயர்ச்சி நடக்காமல் போயிருந்தால் கேரளாவில் பட்டினிச் சாவுகளே நடந்திருக்கும். கேரள முன்மாதிரி என்றால் அதை படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் உலகின் எந்தப் பகுதிக்கும், ஏன் கேரளாவுக்குமேகூட இந்த முறை ஏற்றதல்ல” என்று அவர் கூறியிருந்தார். (சுட்டி: http://www.nytimes.com/2007/09/07/world/asia/07migrate.html?_r=1&pagewanted=1). என்ஆர்ஐ எகானமி, மணி ஆர்டர் எகானமி என்றெல்லாம் கூறப்படும் கேரள வளர்ச்சி மாதிரியை பொருளாதாரவாதிகள் எப்போதோ ஏறக் கட்டிவிட்டார்கள்.

ஆனால் அப்படி வந்த முதலாளித்துவப் பணத்தை சமூகத்துக்காக வகுத்தளித்தில் கேரள இடதுசாரிகளின் பங்கை ஒருபோதும் குறைத்து மதிப்பிடமுடியாது. அந்த விஷயத்தில் அவர்கள் முன்னாள் சீன அதிபர் டெங் ஷியாவ்ப்பிங்குக்கு நிகரானவர்கள்: “பூனை வெள்ளையாக இருந்தால் என்ன, கருப்பாக இருந்தால் என்ன, எலியைப் பிடித்தால் சரி.” ஆக அமெரிக்காவின் அடிப்படையாக இருக்கும் பெட்ரோலிய முதலாளித்துவத்தின்கீழ் வேகாத வெயிலில் வேலை செய்து கேரளியர் அனுப்பும் செல்வமே, நமது தோழர்களின் சாதனையாக, கேரள முன்மாதிரியாக இங்கே முன்வைக்கப்படுகிறது. உங்களில் யாருக்காவது கோபம் வந்தால், முதல் (வேளாண்மை), இரண்டாம் (தொழிலுற்பத்தி) மற்றும் மூன்றாம் (சேவை) துறைகளில் ஆகியவற்றில் கேரளாவின் உற்பத்தி என்ன, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அதன் பங்கு என்ன என யோசித்து்பபாருங்கள். உற்பத்தி சாராது, உலக நாடுகளிலிருந்து வரும் பணத்தை வைத்துக்கொண்டு, இந்தியாவில் ஒரு ஒட்டுண்டுபோல வாழும் மாநிலமே கேரளம் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அதன் சமூக வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் மிகச் செல்வாக்கான மாநிலமாக அது இருக்கிறது.

இந்த இரு மாநிலங்களை அவற்றின் “தனித் தன்மைகளைக்” கருதி விலக்கிவிட்டுப் பார்த்தால், இந்தியாவில் ஒப்பீட்டளவில் வளர்ச்சி கண்ட, இந்தியச் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் முதலிடம் பெறுவது தமிழ்நாடுதான். பிறகு பஞ்சாப், மகாராஷ்ட்டிரா. கேரளா போலவே என்ஆர்ஐ நிதிவரத்து இரு்நதாலும், பஞ்சாப் அடிப்படையில் வேளாண்மைப் பொருளாதாரத்தால்தான் அந்த இடத்தை அடைந்தது. அதற்கு அது தந்த விலையும் அதிகம் என்பதையும் நாம் மறுக்கவில்லை. ஆனால் அதன் வேளாண்மைப் பொருளாதாரமே உள்ளூர் அளவிலான சமூக முன்னேற்றத்தை அங்கே சாதித்தது. ஒரு பக்கம் மும்பை மறுபக்கம் விதர்ப்பா என இரு முனைகளில் தவிக்கும் மகாராஷ்ட்டிராவின் சமூக மேம்பாட்டுக்கு காரணம் வேளாண்மை, தொழி்ல்துறை, சேவைத்துறை ஆகிய மூன்றிலுமே அங்கே முதலீடுகள் பரவியதும் அதற்கான உள்கட்டமைப்பு, சமூக முதலீடுகள் செய்யப்பட்டுவந்ததும் காரணம்.

சரி. தமிழ்நாடு எப்படி முதலிடத்தை வகிக்கிறது? மகாராஷ்ட்டிரா, குஜராத் போல பெரு வைசிய சமூகங்களின் மையமாக இல்லாத, கேரளா போல மணி ஆர்டர்களைச் சார்ந்திராத, பஞ்சாப் போல இயற்கையின் வரம் பெறாத, சுமார் நாற்பதாண்டுகாலம் எந்த அனைத்திந்திய கட்சியாலும் ஆளப்படாத, டிப்பிக்கலான இந்திய மாநிலமாக இல்லாத, இந்தி படிக்காத, பாலிவுட் படம் பார்க்காத தமிழ்நாடு எப்படி இந்த இடத்தை அடைந்தது? காரணங்கள் பலவாக இருந்தாலும் அதை மூன்றே விஷயங்களில் அடக்கலாம்:

1. மனிதவளத்தில் முதலீடு: மனிதவள மேம்பாட்டை வளர்ப்பதன்மூலம் முதலீடுகளை ஈர்க்கும் முறையே தமிழகத்தின் தனிசிறப்பு முறையாக இருந்தது. நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது அதன் மிகப்பெரிய மனித வளத்துக்காகவே. அதாவது திராவிட இயக்கங்களின் மிகப்பெரிய சாதனையான இடஒதுக்கீடு தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து உருவாக்கிய லட்சக்கணக்கான பட்டதாரிகளே தமிழ்நாட்டில் பொருளாதாரத்தின் பிரதான எந்திரமாக இருக்கிறார்கள்.

2. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி: சிலக் குறிப்பிட்ட இடங்களில் வளர்ச்சி பின்தங்கியிருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக மாநிலம் தழுவியதாக இருந்தது. அதனால்தான் மும்பை-விதர்பா என்கிற எதிர் முரண்கள் இங்கே இல்லை. எல்லா மட்டங்களிலும் ஏற்பட்ட உள்கட்டமைப்பு வசதி மற்றும் படிப்பறிவு – வேலை சார்ந்த புலம்பெயர்தல் ஆகியவற்றால் நகர்மயமாதல் தவிர்க்க இயலாமல் நகர்மயமாதலில் இந்தியாவிலேயே முதலிடத்துக்கு தமிழகம் வந்தது. இது எல்லாவிதமான சமூக, பொருளாதார காரணிகளும் பரவுவதற்கு காரணமாக இருந்தது. இடப்பெயர்ச்சி என்பது ஒரு சமூக மேம்பாட்டுக்கான கருவி என்றால், இடஒதுக்கீடு அதை சாதித்துத்தந்தது.

3. சமூக நல திட்டங்கள்: காமராசர் காலத்து மத்திய உணவில் தொடங்கி, எம்ஜிஆர் காலத்து சத்துணவில் போஷாக்கு பெற்று, பிறகு கருணாநிதி, ஜெயலலிதா இருவராலும் அறிமுகப்படுத்தப்பட்ட ஏகப்பட்ட சமூக நலன் மற்றும் “கைதூக்கிவிடும்” திட்டங்கள் காரணமாக, ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மிக்க, ஸ்திரமான சமூக நிலைகொண்ட மாநிலமாக தமிழகம் உருவானது. இது மக்களின் உபரியை கல்விக்காவும் தனிநபர் வளர்ச்சிக்காவும் செலவிடுவதற்கு உதவியது. இது இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லாமல், தமிழகமெங்கும் மூன்று தலைமுறைகளாக நடந்துவடுகிறது. இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற கேலிக்கூத்துகள் சில நடந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் – கொள்கை கருதியோ கொள்ளை கருதியோ – நடைமுறைப்படுத்திவந்த பல திட்டங்கள் தனிநபர் வருமானத்தின் உபரியின் அளவை அதிகரித்து அதை அபிலாஷைகளின் பக்கமாக மடைமாற்றிவிட்டது. எங்கே அடிப்படைத்தேவைகளைவிட அபிலாஷைக்கான தேவைகள் வளரத்தொடங்குகின்றனவோ அங்கே பின்தங்கிய நிலை உடைபட ஆரம்பிக்கிறது. பொருளாதார வளர்ச்சியுடன் சமூக-கலாச்சார வளர்ச்சிக்கான அஸ்திவாரம் விழுகிறது. (நாம் இப்போது இந்தக்கட்டத்தில்தான் இருக்கிறோம். இது ஒரு இடைமாறுதல் கட்டும்)

இந்த மூன்றுமே பல்வேறு ஓட்டை உடைசல்களைக் கொண்ட, விமர்சனத்துக்கு தப்பாத, பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்பட்ட (சமூக அல்லது புவியியல் ரீதியில்) அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இவை நடைமுறைப் படுத்தப்பட்டன என்பதே மிகவும் முக்கியமானதாகும். இடைநிலைச் சாதிகள் முன்னேறி விட்டன, ஆனால் தலித்துகள் முன்னேற வில்லை என்று ஒரு முழக்கம் ஏற்படுகிறதென்றால், நாம் பாதித் தொலைவைக் கடந்திருக்கிறோம் என்று அர்த்தம். பாதி கடந்திருக்கிறோம், பாதி கடக்க வேண்டியுள்ளது. ஆனால் நாம் பயணம் எப்போதோ தொடங்கிவிட்டது.

அதாவது மோடியின் குஜராத் “ஈட்டலுக்கு” முக்கியத்துவம் கொடுக்கிறது. கேரளா எங்கேயோ சம்பாதித்தை இங்கே “வகுத்துக் கொடுக்கிறது”. ஆனால் இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் ஆகிய எல்லாத்துறைகளுக்கும் முக்கியம்தரும் மாநிலங்களாக தமிழகமும் மகாராஷ்ட்டிரமும் பஞ்சாபும் இருக்கின்றன. இதில் இந்தியா மட்டுமல்ல, பல மூன்றாம் உலக நாடுகள்கூட கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் தமிழகத்தில் உண்டு. (அதைப்போல தமிழகம் பிற மாநிலங்களிலிருந்து நாடுகளிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்களும் நிறைய). கடந்த இருபதாண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் தனித்தன்மைகள் குறித்துபல நிபுணர்கள் (சமீபத்தில் அமர்த்தியாசென் உள்பட) கூறிவந்த கருத்துக்களையும் புள்ளிவிவரங்களையும் பார்த்துவருகிறேன். இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாடு கண்டது, ஒரு சாதனையேதான். (ஆனால் அது வேறுகட்டத்துக்கு மாறவேண்டிய காலமும் எப்போதோ வந்துவிட்டது. அதை மாற்று்மபணியில்தான் தமிழகம் இப்போது பின்தங்கியிருக்கிறது).

நேரு பாணி கலப்புப் பொருளாதாரம் அதிகாரவர்க்க நிறுவனங்களில் முதலீடு செய்து வளர்ச்சியை எதிர்ப்பார்த்தது. அது வேலைக்கு ஆகவில்லை. அதிகாரிகளின் பிள்ளைகள் ஐஐடியில் படித்து அமெரிக்க பொருளாதாரத்தை வளர்க்கச் சென்றுவிட்டார்கள். இந்துத்துவ அல்லது பிற்போக்கு பொருளாதாரவாதிகள் சாதிய பொருளாதாரத்தை கட்டிக்காப்பாற்றி இந்தியாவை சப்-சஹாரா ஆப்பிரிக்காவுக்கு கீழே கொண்டுசெல்வதில் எப்போதுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவின் காவி மற்றும் சிவப்பு பழமைவாதிகளின் பொருளாதாரக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள, நீங்கள் தந்தைப் பெரியாரின் கிராமச் சீர்திருத்தம் என்கிற சின்னஞ்சிறு நூலை படிக்கவேண்டும்.

சில நவீன இந்துத்துவவாதிகள் பில்லியன் டாலர் முதலீடுகளும் பளபளா சாலைகளும் வந்துவி்ட்டால் நாடு முன்னேறிவிடும் என்கிறார்கள்.

சமூகக் காரணிகளில் முதலீடு செய்தால் பில்லியன் டாலர் முதலீடுகளையும் ஈர்க்கலாம்; சாப்ட்வேர் பார்க்குகளையும் கட்டலாம். அதே சமயம் விதர்பா, தெலுங்கானாக்களையும் தவிர்க்கலாம் என்பதற்கு தமிழகமே சிறந்த எடுத்துக்காட்டு. எவ்வளவோ குறைகள், குற்றங்கள், ஓட்டைகள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு, இதுவே உண்மை. இன்னும் மாறவேண்டிய திசை, போகவேண்டிய தொலைவு, ஆகவேண்டிய காரியங்கள் என நிறைய இருந்தாலும், இதுவே உண்மை. எனவே இந்திய வரைபடத்தை தலைகீழாக மாற்றி வைத்துப் பாருங்கள், யார் மேலே இருக்கிறார்கள் என்பது தெரியும்.

இந்த அழகில் ஒப்பீட்டளவில் வளர்ந்த ஒரு மாநிலத்திடம் பின்தங்கிய ஒரு மாநிலத்தின் “சாதனையை” கொண்டு வந்து வைத்துக் கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும் மோடி ஆதரவாளர்களைப் பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அபாயத்தை பார்க்கையில் அந்த சிரிப்பு அடங்கி, சினம் எழுகிறது.

கடைசியில் ஒரு நிஜக்கதை: என் பள்ளிப்பருவத்தில் ஓர் ஆசிரியையிடம் நான் ட்யூஷன் போய்க்கொண்டிருந்தேன். அவர், பானுமதி டீச்சர், இன்றைய எனது வளர்ச்சிக்கு அஸ்திவாரங்களில் ஒருவர். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன், நெசவாளர் குடும்பம் ஒன்றைச்சேர்ந்த பையன் ஒருவன் ஆறாம் வகுப்பு டியூஷனுக்கு புதிதாகச் சேர்ந்திருந்தான். சில மாதங்கள் கழித்து, ஒருநாள், அந்த பையனின் அப்பா வேகவேகமாக ட்யூஷன் நடக்குமிடத்துக்கு வந்து, பானுமதி டீச்சரைப் பார்த்து சத்தம்போட ஆரம்பித்தார். ட்யூஷன் சேருவதற்கு முன்பு நல்ல மதிப்பெண் வாங்கிவந்த பையன், இப்போது குறைவாக வாங்குகிறான் என்று கத்தினார். அதிர்ந்து போன டீச்சர் அவரிடம் தீவிரமாக விசாரிக்க, அவர் தன் மகனின் புராகிரஸ் ரிப்போர்ட்டை எடுத்துக்காண்பித்தார். “முன்னாடி 45, 45 வாங்கிட்டு இருந்தான், இப்போ 15,16 வாங்கிறான்” என்று சுட்டிக்காட்டிப்பேச, ரிப்போர்ட்டைப் பார்த்த பானுமதி டீச்சருக்கு மயக்கம்வராத குறை. அந்த தகப்பனார் காட்டியது மாணவனின் ரேங்க் மதிப்பை!

நன்றி: செ.ச. செந்தில்நாதன்

தொடர்புடைய சத்தியமார்க்கம்.காம் தளத்தின் பதிவுகள்:

குஜராத்தில் வளர்ச்சி எனும் கோயபல்ஸ்தனம்

குஜராத் : உடைந்து நொறுங்கும் வளர்ச்சி பிம்பம்

இந்தியாவின் “NUMBER 1” மாநிலம்!

நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது! – அமர்த்தியா சென்

மோடி: நாடாளத் துடிக்கும் நாய்களின் நாயகன்

மாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய் – குமுதம்!

மோடி பலூனை ஊதுவது யார்?

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி – குமுதம்

நோய்க் கிருமிகளும் வெறி நாய்களும்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.