டெல்லியின் கரோல்பாக், கன்னாட் ப்ளேஸ், செண்ட்ரல் மார்கெட், க்ரேட்டர் கைலாஷ் மற்றும் பரகம்பா சாலை ஆகிய ஐந்து இடங்களில் 45 நிமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் இதுவரை 20 அப்பாவிகள் பலியாகியுள்ளனர்; 92 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு கரோல்பாகின் கஃப்பார் மார்கெட்டில் முதல் குண்டு வெடித்ததில் 20 அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.
முதலில் கரோல்பாக் மார்க்கெட் பகுதியிலும் இரண்டாவதாக கன்னாட் பிளேசிலும் மூன்றாவதாக கிரேட்டர் கைலாஷ் பகுதியிலும் குண்டுகள் வெடித்துள்ளன.
தொடர்ந்து கன்னாட் ப்ளேஸில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டு வெடிப்புகளில் 20 அப்பாவிகள் படுகாயமடைந்தனர். "படுகாயமடைந்தவர்களை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் தீயணைப்புப் படை வாகனங்களிலும் ஆம்புலன்ஸிலும் ஆட்டோ ரிக்க்ஷாவிலும் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்" என்று நிகழ்வை நேரில் பார்த்தவர்களுள் ஒருவரான ராஜேஷ் என்பவர் கூறினர்.
அடுத்து க்ரேட்டர் கைலாஷ்-1இன் எம் ப்ளாக் மார்கெட்டில் ஒரு குண்டு வெடித்தது.
கஃப்பார் மார்கெட்டில் நிகழ்த்தப் பட்ட குண்டு வெடிப்பு ஒரு மாருதி காரிலும் பரகம்பா சாலையில் வெடித்த குண்டு, நிர்மல் டவருக்கரிலும் சென்ட்ரல் பார்க்கில் வெடித்த இரு குண்டுகளில் ஒன்று ஒரு ஸ்கூட்டரிலும் இன்னொன்று குப்பை ட்ரம்மிலும் வைக்கப் பட்டிருக்கக் கூடும் என்று கருதப் படுகிறது.
ஜாயிண்ட் கமிஷனர் கர்னைல் சிங் உட்பட காவல்துறை மேலதிகாரிகள் குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் நிலைமையை ஆய்வு செய்துள்ளனர்.
அப்பாவிகளைக் கொல்லும் மனித நேயமற்ற இதுபோன்ற குண்டு வெடிப்புகளின் அடிவேரை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி உச்ச பட்ச தண்டனையைப் பொதுமக்கள் முன்னிலையில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன், எதிர்க்கப் படும் அரசியல் மாற்றங்களைத் திசைதிருப்புவதற்கும் மறக்கடிப்பதற்கும் இதுபோன்ற குரூரங்கள் அரங்கேற்றப் படுகின்றனவா? என்பதையும் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப் படவேண்டும்.
இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்குத் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, குண்டு வெடிப்புகளில் பலியான அப்பாவிகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சத்தியமார்க்கம்.காம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது!
தொடர்புடைய பதிவு