தில்லி போலிமோதல் வழக்கு: போலிசார் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு!

தில்லியில் 1997ஆம் ஆண்டு அப்பாவி வணிகர்கள் இரண்டு பேரை “போலி மோதலில்” சுட்டுக் கொன்ற வழக்கில் உதவி காவல் ஆணையர் உட்பட 10 போலீசாரும் குற்றவாளிகள் என அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
உதவி காவல் ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் மீதான தண்டனை வரும் 24ஆம் நாளன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தில்லியில் 1997ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாளன்று ‘கன்னாட் பிளேஸ்’ பகுதியில் உள்ள ‘ஸ்டேட்ஸ்மேன் ஹவுஸ்’ என்ற கட்டடத்தின் அருகே ஒரு போலி மோதல் (என்கவுன்டர்) சம்பவம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் உதவி காவல் ஆணையர் ரதி, காவல் ஆய்வாளர் அனில் குமார், உதவி ஆய்வாளர் அசோக் ராணா, தலைமைக் காவலர்கள் சிவ்குமார், தேஜ்பால் சிங், மகாவீர் சிங், காவலர்கள் சுமேர் சிங், சுபாஷ் சந்த், சுனில் குமார் மற்றும் கோத்தாரி ராம். 
 
அன்றைய தினம் மாலை செய்தியாளர்களை அழைத்து பிரபலமான தாதாக்கள் இருவரைச் சுட்டுக் கொன்று விட்டதாக இந்த போலீஸ் குழுவினர் பரபரப்பு பேட்டியும் அளித்தனர். 
 
ஆனால், நடந்த விவகாரமே வேறு. போலீஸ் போலி மோதலில் இறந்தது அப்பாவி வணிகர்கள் பிரதீப் கோயல் மற்றும் ஜக்ஜித் சிங் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவரும் தில்லியின் கிழக்குப் பகுதியில் இருந்து ‘கன்னாட் பிளேஸ்’ பகுதிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்து முடிந்தது.
 
கொல்லப்பட்டவர்கள் தாதாக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இறந்தவர்களின் உறவினர்களும், போலி மோதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பத்திரிகையாளரும் உண்மையை வெளிக் கொண்டு வந்தனர். 
 
இந்தியா முழுவதுமுள்ள மனித உரிமை அமைப்புகள் இச்சம்பவத்தைக் கண்டித்தன. மேலும், ஒரு சுயேட்சையான அமைப்பு மூலம் விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோரின. பல்வேறு போராட்டங்கள் நடத்தின.
 
பின்னர் இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை – சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு உதவி காவல் ஆணையர் ரதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 1997ஆம் ஆண்டு ஜூலையில் குற்றமிழைத்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர். 
 
இது தொடர்பாக அப்போதைய தில்லி காவல் ஆணையர் நிகில் குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது பிகாரில் உள்ள அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 
 
குற்றமிழைத்த போலிசார் தரப்பில் `உத்திரப்பிரதேச தாதா யாசீனும், அவரது உதவியாளரும் காரில் வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து செயல்பட்டு அந்த காரைச் சுற்றி வளைத்தோம். ஆனால், காரில் இருப்பவர்கள் எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால், தற்காப்புக்காக நாங்கள் திருப்பிச் சுட நேரிட்டது. அதில் இருவர் இறந்து விட்டனர்' என்று தெரிவிக்கப்பட்டது. 
 
இதற்குத் தோதாக, வணிகர்கள் இருவர் வந்த காரில் ஒரு துப்பாக்கியும், சில தோட்டாக்களும் அவர்களால் போடப்பட்டு இருந்தன. ஆனால், இந்த தகவல் பொய் என்பதை சி.பி.ஐ. நிரூபித்தது. அந்த துப்பாக்கியால் யாரும் சுடவேயில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பதவி உயர்வு வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் அவசரத்தில் செயல்பட்டு அப்பாவிகள் இருவரைச் சுட்டுக் கொன்று விட்டனர் என்று சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 
 
இந்தப் பரபரப்பான வழக்கின் விசாரணை தில்லி அமர்வு நீதீமன்றத்தில் நடைபெற்றது. கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் குமார் விசாரணை செய்தார். இரு தரப்பு வாதங்கள் முடிந்து இந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 8ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 
 
16-10-2007 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றமிழைத்த போலிசார் ஆஜராகி இருந்தனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 10 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி வினோத் குமார் அறிவித்தார். `உங்கள் மீதான குற்றச்சாட்டு அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன' என்று 10 பேரையும் பார்த்து நீதிபதி அறிவித்தார். 
 
இந்திய தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவு (கொலை), 307 (கொலை முயற்சி), 201 (தடயங்களை அழித்தல்), 193 (தவறான சாட்சியங்களை அளித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் 10 போலீசாரும் குற்றம் புரிந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மிக அதிகபட்ச தண்டனை கூட அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 
 
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் ஆணையர் ரதி, காவல் ஆய்வாளர் அனில் குமார் ஆகியோருக்கு வரும் 24ஆம் நாளன்று தண்டனை அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி வினோத் குமார் தெரிவித்தார். 
 
மேலும், துப்பாக்கி தோட்டா குறித்து தவறான தகவலை தந்த தடய அறிவியல் துறை நிபுணர் ரூப் சிங் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார்.
 
பத்து ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது தில்லி போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த தீர்ப்பை பாதிக்கப்பட்ட வணிகர்களின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.

நன்றி: புதுவை கோ.சுகுமாரன்