மிருகங்களால் கொல்லப் பட்ட மனிதர்கள்

நேற்று (26.11.2008) இரவு 9.45 மணியளவில் இந்தியாவின் வணிக நகரமான மும்பையின் சி.எஸ்.டி என்று சொல்லப் படும் நகரின் தலையாய இரயில் நிலையத்தில் சில பயங்கரவாத மிருகங்களின் நடவடிக்கை ஆரம்பம் ஆனது. ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டி-சர்ட், வலக்கையில் கட்டப் பட்ட சிவப்புக் கயிறு, தோளில் ஒரு பை என்ற கோலத்தில் இரயில் நிலையத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள், முதலில் பைகளில் வைத்திருந்த கையெறி குண்டு(கிரணைட்)களைக் கண்டபடி வீசினர். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த அப்பாவிகளைத் தானியங்கித் துப்பாக்கிகளால் இலக்கின்றிச் சுட்டனர்.அதேவேளை பயங்கரவாதிகளின் இன்னொரு குழு மும்பையின் உல்லாச விடுதியான கஃபே லியோபோல்டிலும் காமா மருத்துவ மனையிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இராணுவத்தினர் பயன் படுத்தும் ஏகே-47 ரக துப்பாக்கிகளையே பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.


பின்னர் மும்பையின் புகழ்மிக்க தாஜ்மஹால், ஓபராய் டிரைடன்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்று, அங்குத் தங்கியிருந்த பலரையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர். சில அப்பாவிகளைத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர்.


மேலும் கொலாபா, மெட்ரோ சினிமா, நாரிமன் ஹவுஸ், ஆகிய இடங்களில் பயங்கரவாதக் குழுவினர் தாக்குதல்களை நடத்தினர். பயங்கரவாதிகள் தொடங்கிய தாக்குதல்களின் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை அப்பாவிப் பொதுமக்கள் 101 பேர் கொல்லப்பட்டனர்; 187 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


செய்தியறிந்து மும்பைக் காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் ஹோட்டல்களுக்கு விரைந்தனர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமானது.


ஓபாராய் ஹோட்டலில் 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். பயங்கரவாதிகள் பிடியில் உள்ள வெளிநாட்டினர் உள்ளிட்டோரை மீட்க ஓபராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களை தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 200 பேர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


இந்தத் துப்பாக்கிச் சண்டையில் தாஜ் ஹோட்டலின் ஒரு பகுதி தீப்பிடித்துக் கொண்டது.


பயங்கரவாதிகளில் மூவர் தாஜ் ஹோட்டலிலும் இருவர் ஓபராய் ஹோட்டல் சண்டையிலும் கொல்லப் பட்டனர்.


காமா மருத்துவமனையில் நடந்த அதிரடி நடவடிக்கையின்போது மும்பைக் கூடுதல் ஆணையர் அசோக் காம்தே கொல்லப் பட்டார். அதேபோல், ஓபராய் டிரைடண்ட் ஹோட்டல் அதிரடி நடவடிக்கையின்போது என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கரும் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)யின் மகாராஷ்டிரத் தலைவர் ஹேமந்த் கர்கரேவும் கொல்லப் பட்டனர். இம்மூவரும் கொல்லப் பட்ட விதம் இன்னும் தெளிவாகவில்லை. இம்மூவர் தவிர இதுவரை மேலும் 8 காவல்துறையினர் சுட்டுக் கொல்லப் பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மும்பை தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் நேர்மையான நடவடிக்கைகளைப் பற்றி சத்தியமார்க்கம்.காம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.


இன்று தட்ஸ்தமிழ்.காம் தளமும் அவரைப் பற்றிக் கூடுதல் விபரம் வெளியிட்டுள்ளது:


மிக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மிகத் திறமையாக விசாரித்து வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே (54), நேற்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திற்குப் பலியாகி விட்டார்.


தாஜ்மஹால் போட்டலில் புகுந்த தீவிரவாதிகளை அடக்கும் முயற்சியில் போலீஸ் படை இறங்கியபோது, தலையில் ஹெல்மட், மார்பில் புல்லட் புரூப் ஜாக்கெட்டுடன் நேரடியாக களம் இறங்கினார் ஹேமந்த் கர்கரே.

அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 3 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.


கர்கரேவின் பெயர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானது. அனைவருமே முஸ்லீம் தீவிரவாதிகள்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, இதில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற பயங்கர உண்மையை வெளிக்கொணர்ந்தது கர்கரே தலைமையிலான ஏ.டி.எஸ் குழு.


அதன்பின்னர் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் என அடுத்தடுத்து அதிரடியான கைதுகள் நடந்தன.


மாலேகான் குண்டுவெடிப்புத் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்களையும் ஏ.டி.எஸ். வெளியிட்டு வந்தது.


நேற்றுக் காலையில்கூட பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரை, போலீஸ் காவலில் அனுமதிக்க மும்பை கோர்ட் அனுமதிக்க மறுத்தது குறித்துக் கவலை தெரிவித்திருந்தார் கர்கரே.

பிரக்யா சிங்கை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மையான தகவல்கள் கிடைக்கும்; விசாரணையும் விரைவாக நடக்கும் என அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று இரவே அவரது மூச்சை நிறுத்தி விட்டனர் தீவிரவாதிகள்.


1982ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் கர்கரே. இந்திய அரசின் உளவுப் பிரிவான ‘ரா’ வில் முன்பு இருந்தவர். அப்போது ஆஸ்திரியாவில் 9 ஆண்டுகள் பணியாற்றினார்.

மிகவும் நேர்மையான, கட்டுப்பாடான, ஸ்ட்ரிக்ட்டான அதிகாரி எனப் பெயரெடுத்தவர் கர்கரே.

இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அவர் தனது ரா பணியை முடித்து விட்டு மகாராஷ்டிரா திரும்பினார். உடனடியாக அவரை மகாராஷ்டிர அரசு ஏ.டி.எஸ். தலைவராக நியமித்தது. இதைத் தொடர்ந்தே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.


தானேவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கர்கரேதான் தீவிரமாகச் செயல்பட்டு துப்பு துலக்கினார். அதேபோல பான்வேல், வாஷி குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் கர்கரே தலைமையிலான டீம்தான் துப்பு துலக்கியது.


ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்தான் கர்கரேவின் திறமை முழுமையாக வெளிப்பட்டது.

தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம், “நாம் போலியான சாட்சியங்களை, ஆதாரங்களை உருவாக்கக் கூடாது. நமது கடமையை நாம் செய்வோம். நீதிமன்றம் மற்றதை முடிவு செய்யட்டும்” என்பாராம்.

கடைசியாக அவர் என்டிடிவிக்கு அவர் பேட்டியளித்தார். நேற்று அவர் அளித்த பேட்டியின்போது பிரக்யா சிங்கைத் துன்புறுத்தியதாக அத்வானி குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது, “எங்கள் மீது புகார் கூறப்படும்போது அதைக் கேட்டு நாங்கள் வேதனைப் படுகிறோம். ஆனால், சாத்வி பிரக்யா சிங் எந்த வகையிலும் துன்புறுத்தப் படவில்லை. சட்டவிதிப்படியே நாங்கள் செயல்படுகிறோம். கோர்ட் எப்போதெல்லாம் உத்தரவிடுகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் குற்றவாளிகளை முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம். துன்புறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.


கர்கரேவின் மரணம், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கு நிச்சயம் மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.


அதேபோல 75 கிரிமினல்களை சுட்டு வீழ்த்தி என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயரெடுத்தவரான விஜய் சலேஸ்கரும் நேற்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

மும்பையை நடுங்க வைத்த பல குற்றவாளிகளையும் கிரிமினல்களையும் போட்டுத் தள்ளியவர் சலேஸ்கர். சில காலம் அமைதியாக இருந்துவந்த இவரது காவல்துறை வாழ்க்கை, சமீபத்தில் மீண்டும் சூடு பிடித்தது.

சமீபத்தில்தான் குற்றப் பிரிவு, கடத்தல் தடுப்புப் பிரிவில் இவர் பணியில் சேர்ந்தார்.

அதேபோல கூடுதல் காவல்துறை ஆணையரான அசோக் காம்தேவும் நேற்று உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர காவல்துறையில் முக்கியமான அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

ஒரே நாளில் மூன்று முக்கியமான காவல்துறை அதிகாரிகளை பறி கொடுத்து விட்டு மகாராஷ்டிர அரசும் காவல்துறையும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன.


நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
நேற்றைய தாக்குதலில் பாதுகாப்பு நடவடிக்கையில் கார்கரே ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இடையே அவர் புல்லட் புரூப் ஆடை அணிவிக்கப்படுவது தொலைகாட்சிகளில் செய்தியினூடே காட்டப்பட்டது. அவ்வாறெனில், புல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல்லியமாக நெஞ்சில் குறிவைத்துச் சுடப்பட்டது எப்படி? என்பது கேள்விக்குறி. மாலேகோன் போலி என்கவுண்டரின்போது, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் சந்த் ஷர்மா கொல்லப் பட்டதுபோல், காவல்துறையின் சில கறுப்பாடுகளையும் இந்த அதிரடி நடவடிக்கை நிகழ்வையும் பயன்படுத்திக் கொண்ட – கர்கரேயின் எதிரிகள் அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.


{youtube}tw12bMwLOc4{/youtube}


என்.டி டிவி 24/7 ஒளிபரப்புச்செய்திகள்


தட்ஸ்தமிழ்.காம் வெளியிட்டிருக்கும் ஒரு படத்தில் பயங்கரவாதிகளுள் ஒருவனின் வலக்கையில் இந்துத்துவாத் தொண்டர்கள் வழக்கமாகக் கட்டிக் கொள்ளும் சிவப்புக் கயிறு [படம்] தென்படுவதால் பயங்கரவாதிகள் இந்துத்துவாவின் கூலிகளாக இருப்பதற்கும் பால் தாக்கரேயும் அவரோடு பல்லாண்டுகள் பிணங்கியிருந்த ராஜ் தாக்கரேயும் இரு தினங்களுக்கு முன்னர் திடீரெனச் சந்தித்துப் பேசிய பின்னர் சிவசேனா அறிவித்துள்ள பந்த் தொடர்பான திட்டமிட்ட தாக்குதலாக இது இருப்பதற்கும் அபினவ் பாரத் தீவிரவாத இயக்கத்தின் மீது நெருக்கப்பட்டுள்ள விசாரணையைத் திசை திருப்புவதற்காக நடத்தப்பட்டத் தாக்குதலாக இது இருப்பதற்கும் சாத்தியங்கள் இருப்பதாகக் காவல்துறை கருதுகின்றது.


ஆனால், பத்திரிகையாளர்களுக்குச் செய்தி கொடுக்கும்போது, “பிரேசிலிலிருந்து டெக்கான் முஜாஹிதீன் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக பத்திரிக்கை அலுவலகத்துக்கு மின்மடல் கிடைத்துள்ளதாக” காவல்துறை தெரிவித்துள்ளது. டெக்கான் முஜாஹிதீன் சிமியின் மற்றொரு முகமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த இ-மெயில் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளது என்றும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்தான் இதை அனுப்பியுள்ளதாகவும் இன்டலிஜென்ஸ் பீரோ அடித்துக் கூறுகிறது.


தம் இன்னுயிரைப் பறிகொடுத்த அப்பாவிகளான பொதுமக்களின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்!


பயங்கரவாதிகளான கொலைகாரர்கள் யாவர் என விரைவில் தெரிய வரும்.


யாரால் கொலை செய்யப் பட்டிருந்தாலும் பாதுகாப்புப் பணியில் உயிர் நீத்தக் கடமை தவறாத காவலர்களுக்கு நமது சல்யூட் உரித்தாகட்டும்.