ஒப்புதல் வாக்குமூலங்களின் உண்மை நிலை!

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே, பெங்களூரு, அஹ்மதாபாத், டெல்லி ஆகிய பெருநகர்களில் வெடிகுண்டுகள் வெடித்து நாட்டை உலுக்கி எடுத்தன. அம்மூன்று குண்டு வெடிப்புகளுக்கும் இந்தியக் காவல்துறை ‘Operation BAD’ என்ற பெயரை அறிமுகப் படுத்தியது.



மூன்று குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்திய உண்மையான குற்றவாளிகள் யாரென்று இதுநாள்வரை கண்டு பிடிக்க முடியாத காவல்துறை டெல்லியில் ஒரு என்கவுண்ட்டரை நடத்தி, இருவரைக் கொன்று மூவரைக் கைது செய்து, அவர்கள்தாம் குண்டு வைத்தவர்கள் என்று வழக்கை இறுதிப் படுத்த முயன்று வருகிறது. டெல்லி என்கவுண்டரில் மோகன் சந்த் ஷர்மா என்ற என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டே என்கவுண்டர் செய்யப் பட்டார்.

இந்நிலையில், “டெல்லியில் குண்டு வைத்தது நாங்கள் தான்!” என்று கைது செய்யப்பட்டு காவல்துறை கஸ்டடியில் இருந்து வரும் மூவரும் ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்ததாக இந்தியாடுடே மூன்று பக்கங்களுக்குக் கதை சொல்லி இருந்தது.

டெல்லி குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் குற்றம் சுமத்தப் பட்டுக் கைது செய்யப் பட்டுள்ள ஜியாவுர் ரஹ்மான், ஷக்கீல் மற்றும் சகிப் நிஸார் ஆகிய மூவரும் காவல்துறையில் சிறைக்காவலில் வைத்து விசாரிக்கப் படும்போது,  மேற்கண்ட அவர்களது வாய்வழி ஒப்புதல்(?) வாக்குமூலத்தினைத் தனது நிருபர் மிஹிர் ஸ்ரீவத்ஸவ் என்பவர் காதால் கேட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டது.


ஜாமிஆ மில்லியாப் பல்கலைக் கழகத்தின் சில அப்பாவி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்துப் படுகொலை நடத்தியது ஏன்?

– அருந்ததிராய்

ஆனால், “அவர்களது ஒப்புதல் வாக்கு மூலம் என்பது, காவல்துறை மூலம் இழைக்கப்பட்ட கடுமையான சித்திரவதைகளின் மூலம் பெறப் பட்டவையாகும்”  என்ற அதிர்ச்சித் தகவலைக் கடந்த ஞாயிறன்று (12-10-2008) ஜாமியா நகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரபல எழுத்தாளரும் உலகளாவிய மிகச் சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசான புக்கர் (1997) வெற்றியாளருமான அருந்ததிராய் பகிரங்கப் படுத்தியுள்ளார். மேலும், “கைதிகளைச் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது சட்டத்தை மீறிய செயலாகும்” என்றும் அவர் தெளிவு படுத்தினார்.

“காவல்துறை சந்தேகிக்கும் சிலரைப் பிடித்து, அடித்துத் துன்புறுத்தி, அவர்களிடமிருந்து வாங்கிய ஓர் ஒப்புதல்(?) வாக்குமூலத்தினைக் காவல்துறையினர் வெளியிடும் முன் ஒரு பத்திரிகை ஊடகம் எப்படி வெளியிடலாம்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அருந்ததி ராய், “இந்தியா டுடே பத்திரிகையின் மீது இதுநாள் வரை இந்திய மக்கள் வைத்திருந்த நம்பிக்கையில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியா டுடேவிற்கும் டெல்லி காவல்துறைக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய சந்தேகங்கள் எழுந்தவண்ணம் உள்ளன” என்று தெரிவித்தார்.

உலகத்தை உலுக்கிய பட்லா ஹவுஸ் போலி என்கவுண்ட்டர் விவகாரத்தினையும் மிகக் கடுமையாகச் சாடியுள்ள அருந்ததிராய், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் பட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் பற்றி முன்னுக்குப் பின் முரணாகக் கூறிய அனைத்துக் கூற்றுக்களையும் ஆய்வு செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முஹம்மத் சைஃப் மற்றும் ஆத்திஃப் என்ற ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே!

கடந்த செப்டம்பர் 13,2008இல் நடந்த குண்டுவெடிப்புக்களில் தொடர்புடையவர்களைப் பிடிக்கப் போகிறோம் என்ற பெயரில் கடந்த வாரங்களில் செப்டம்பர் 19, 2008இல் நடந்த பட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் வழக்கினையும் அதில் கொல்லப்பட்டக் காவல்துறை அதிகாரி மோகன் சந்த் ஷர்மா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி பற்றியும் முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமர் சிங் மற்றும் கபில் சிபல் போன்ற அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

“காவல்துறையினர், ஜாமிஆ மில்லியாப் பல்கலைக் கழகத்தின் சில அப்பாவி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்துப் படுகொலை நடத்தியது ஏன் என்ற உண்மை உலகிற்கு வர வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் நோக்கம்” என்று அருந்ததிராய் தெரிவித்துள்ளார்.

ஜாமியா மில்லியா ஆசிரியர்கள் ஒருமைப்பாட்டுக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் ஸ்வாமி அக்னிவேஷ், ஜான் தயால் மற்றும் போலி என்கவுண்டரில் பலியான மாணவர் சகிப் நிஸாரின் தந்தையான நிஸார் அஹ்மத் ஆஜ்மி ஆகியோர் பங்குபெற்றனர்.

பட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் விவகாரம் குறித்து ஒரு முழு அளவிலான புலன் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஜாமியா ஆசிரியர்கள் ஒருமைப்பாட்டுக் குழு போராடி வருவதும் முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் முடிவுக்கு வரவேண்டும் என்று இந்தியா டுடேயைக் குறித்து சத்தியமார்க்கம்.காம் செய்தி வெளியிட்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.