விசாரணைக் கைதிகளுக்கு நஷ்டஈடு – கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தண்டனைக் காலத்தை விட கூடுதல் நாட்கள் விசாரணைக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக 109 பேரை அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை விட அதிக நாட்கள் விசாரணைக் கைதியாகவே சிறையில் கழித்துள்ளனர் என்ற காரணத்திற்காக விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு தண்டனைக் காலத்தை விட அதிக நாட்கள் சிறையில் இருந்தவர்கள் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்க தலைமை நீதிபதி வி.கே.பாலி மற்றும் நீதிபதி எஸ்.ராமச்சந்திரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

பீஹார் மாநிலத்தில் இதே சூழ்நிலையில் சிறைவாசிகளுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்ற தீர்ப்பை, வாதப் பிரதிவாதத்திற்கிடையில் டிவிஷன் பெஞ்ச் பரிசீலனையில் எடுத்து ஆராய்ந்திருந்தது. இவ்வுத்தரவுப்படி நியாயமான நஷ்டஈட்டுத் தொகையை அரசு சிறைவாசிகளுக்கு வழங்கவேண்டும் எனவும், அதிகபட்சம் எவ்வளவு தொகை ஒரு சிறைவாசிக்கு வழங்க முடியும் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படியும், அரசுக்கு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் வியாழக்கிழமைக்குள்(11/01/2007) இவ்விஷயத்தில் தன் நிலைபாட்டை தெளிபடுத்தவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சாதாரணமாக எந்த ஒரு வழக்கை எடுத்துக் கொண்டாலும் அவ்வழக்கின் தன்மைக்கேற்ப வழக்கின் ஆரம்ப கட்டத்திலிருந்து தீர்ப்பு வரும் வரை விசாரணை என்ற பெயரில் குற்றம் சுமத்தப்பட்டவர் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டவர் மீது ஜாமீன் வர முடியாத பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தால் அவர் அவ்வழக்கின் தீர்ப்பு வரும்வரை சிறையிலேயே இருந்தாக வேண்டும். ஒருவேளை தீர்ப்பு குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சாதகமாக வந்தாலோ அதாவது அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டாலோ, அல்லது அவர் விசாரணைக் காலத்தில் சிறையில் இருந்த நாட்களுக்கும் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டு, அவர் விசாரணைக் காலத்தில் சிறையில் இருந்த நாட்களையே தண்டனை காலமாக கருதி விடுதலை செய்யப்பட்டாலோ, அவ்வழக்கின் மூலம் பாதிக்கப்பட்ட குற்றவாளிக்கு அல்லது குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அவ்வழக்கின் மூலம் இழந்த எதற்கும் எவ்வித பரிகாரமும் இதுவரை வழங்கப்படாமல் இருந்தது.

பலர் மீதும் தகுந்த காரணமின்றி குற்றம் சுமத்தி அவர்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கும் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு இந்நீதிமன்ற உத்தரவு சரியான பாடமாக இருக்கும். தண்டனைக் காலத்தைவிட அதிகம் நாள் சிறையில் இருந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றங்கள், முஸ்லிம்கள் சம்பந்தபட்ட வழக்குகளில் விசாரணையே ஆரம்பிக்கபடாமலும், இன்னும் நடந்து கொண்டிருக்கும் விசாரணைகள் காரணமே இல்லாமல் தள்ளி போய் தீர்ப்புகள் தாமதமாவதை தடுக்க ஆவண செய்யவேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.