பல்கீஸ் வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

குஜராத்தில் நரேந்திர மோடியின் அரசின் துணையோடு கடந்த 2002 பிப்ரவரியில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர். இந்தக் கலவரங்களில் கர்ப்பிணியான பல்கீஸ் பானு என்பவரைக் காவி வெறியர்கள் கூட்டமாக மானபங்கம் செய்ததுடன், அவரது குழந்தையையும், குடும்பத்தாரையும் அவரது கண்முன் கொன்றனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிற பெண்களையும் மானபங்கம் செய்துக் கொலை செய்தனர்.

இச்சம்பவத்தில் கடும் காயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்த பல்கீஸ், கொலையாளிகளின் கண்ணிலிருந்து தப்பி, சில நல்ல மனிதர்கள் துணையுடன் அருகிலிருந்த நிவாரண முகாம் அடைந்தார். இவர் சார்பாக சில மனித உரிமை அமைப்புகள் வழக்குத் தொடுத்திருந்தன. இவ்வழக்கு நியாயமாக விசாரிக்கப்படமாட்டாது எனக் கருதிய உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மும்பை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.

கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 நபர்களில் பொதுமக்களைக் காப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்ட காவல் துறை அலுவலர்களும் அடங்குவர். இவர்களில் 13 பேர் குற்றவாளிகள் தாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பல்கீஸ் பானு, இன்னும் தான் அந்தக் கொடூர நிகழ்வின் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை என்றும், மீண்டும் குஜராத்தில் சென்று வாழ்க்கையைத் தொடர அச்சமாக இருப்பதாகவும் மிரட்சியுடன் கூறினார்.