முஸ்லிம்கள் எவ்வளவு காலம் இங்கே வாழ முடியும் – அசோக் சிங்கால் மதவெறி பேச்சு

விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் – 88 வயது நிறைந்த முதியவர். புதுடில்லியில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. அன்னிய சக்திகளும் பிளவு சக்திகளும் நமது அடையாளத்தை அழிப்பதற்காக முஸ்லிம் அரசியலை பயன்படுத்தினர். ஆனால் இந்தத் தேர்தலில் முஸ்லிம் அரசியலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.

பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் பொது பிரஜைகளாக நடத்தப்படுவார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் முஸ்லிம்கள் இந்துமத உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் இந்துக்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எவ்வளவு காலம் அவர்களால் இங்கு வாழ முடியும்?முஸ்லிம்கள் அயோத்தி கோவில் மற்றும் காசி, மதுரா கோவில்கள் ஆகியவற்றின் மீதான உரிமை கோரலை கைவிட வேண்டும். மேலும் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தையும் ஏற்க வேண்டும். நாங்கள் முஸ்லிம்களுடன் அன்பாக நடந்து கொள்வோம், மேலும் மற்ற எந்த ஒரு மசூதி வளாகத்தின் மீதும் (ஆயிரக்கணக்கான மசூதிகள் பழைய கோவில் களின் இடிபாடுகளின் மேல் கட்டப்பட்டிருந்தாலும்) நாங்கள் உரிமை கோர மாட்டோம். ஆனால், முஸ்லிம்கள் இதனை ஒத்துக் கொள்ளா விட்டால், மேலும் ஏற்படவுள்ள இந்து ஒருமைப்பாட்டை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

 

தற்போது இது மத்திய அரசில் நிகழ்ந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது நிகழும். தற்போதைய பா.ஜ.க. அரசு பின்வாங்காது. மேலும் பின்வாங்கவும் தேவையில்லை. ஏனெனில் மக்களவையில் பா.ஜ.க.வுக் குப் பெரும்பான்மை உள்ளது. மேலும் நாங்கள் எதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதனை அரசியல் சட்ட ரீதியாக செய்யவே விரும்புகிறோம்.

ராமர் கோவில் மற்றும் கோத்ரா விவகாரங்கள், தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை சாத்தியமாக்கின. பா.ஜ.க.வின் வெற்றிக்கு இந்த விவகாரங்கள் அடித்தளமாக இருந்தன. அத்துடன் வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விஷயங்களும் இளைஞர்களைக் கவர்ந்தன – இவ்வாறு சிங்கால் கூறியுள்ளார்.

இதுதான் சங்பரிவார்களின் – அதன் அரசியல் வடிவமான பிஜேபியின் கோட்பாடும் – சிந்தனையும் ஆகும். இந்த விசுவ ஹிந்து பரிஷத்துதான் பொது மக்கள் மத்தியில் திரிசூலங்களை வழங்கி வருபவர்கள்! திரிசூலத்தில் ஒரு முனை முஸ்லீம்களையும், ஒரு சூலம் கிறித்தவர்களையும், இன்னொரு சூலம் மதச் சார்பின்மைப்பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்று வெளிப்படையாகப் பேசி வந்தவர்கள் தான்.

இந்தக் காரணத்தால்தான் பிகாருக்கு வி.எச்.பி.யின் பொதுச் செயலாளரான தொகாடியா வரக் கூடாது என்று திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வாக்கரால் எழுதப்பட்ட வரையறுக்கப்பட்ட நமது தேசியம்  (We or our Nation hood Defined) என்ற நூல் என்ன சொல்லுகிறது தெரியுமா?

இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது. அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரிக்க வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல் எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடி மக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனப்பான்மை தானே அசோக் சிங்கால் களுக்கு இருக்க முடியும். இதே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவரான மறைந்து குப்பஹள்ளி சீத்தாராமய்யா சுதர்ஸன் (கே.எஸ். சுதர்ஸன்) என்ன சொன்னார்?

கிருத்தவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும்; முஸ்லீம்கள் ராமனைத் தொழ வேண்டும் என்றெல்லாம் சொன்ன துண்டு.

இப்படி ஒரு பாசிச அமைப்பு இந்தியாவில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட்டது. இந்த நிலையில் இந்தப் பாசிசக் கும்பல் பந்தயக் குதிரை வேகத்தில்தான் நடந்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.

இந்துத்துவ சக்திகள் ஆட்சியில் வந்தால் இந்து முஸ்லீம் ஒற்றுமை சீர்குலையும் என்று அரக்கோணம் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் (14.3.2014) கூறியதை நினைவு கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலொழிய இதற்கு வேறு மார்க்கம் கிடையாது.

குறிப்பாக தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் சிந்தனைகள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மக்கள் சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நொண்டி அடித்துக் கொண்டாவது அரசு பின்னால் வந்து சேரும் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பது நல்லது.

அரசியல் கட்சிகள் – அவற்றின் தலைவர்கள் சங்பரிவாரை (பிஜேபி உட்பட) எவரும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதைவிட – மிகப் பெரிய தவறு வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

தெரிந்தோ தெரியாமலோ நம் நாட்டு சில அரசியல் கட்சிகள் இந்தத் தவறைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன என்பது வெட்கப்படத்தக்க பிற்போக் கான நிலையாகும்.
அசோக் சிங்கால் பேட்டியைப் படித்த பிறகாவது திருந்துவார்களா?

– விடுதலை (ஜுலை 18, 2014)