வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது …!

Share this:

2014இல் மஹாராஷ்டிராவில் பிவண்டியில் தேர்தல் பேரணி ஒன்றில் ராகுல் காந்தி பேசும்போது –

“காந்தியை கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர்கள்தான். அன்று, காந்திஜியைத் துப்பாக்கியால் சுட்டவர்கள், இன்று காந்தியைப் பற்றி பேசுகிறார்கள்”… என்று சொன்னார்.

இந்தப் பேச்சையடுத்து, ராகுல் மீது, ராஜேஷ் குண்டே என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் 2016-ஆம் ஆண்டு வழக்கொன்றைத் தொடுத்தார், இந்த வழக்கில் ராகுல் காந்தி கைது செய்யப்படாமல் இருப்பதற்கு பிவண்டி நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 2018 ஜூன் 12ஆம் தேதியன்று பிவண்டி நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறினார். (தன் பேச்சுக்கு மன்னிப்பு கோரவில்லை… தன் பேச்சை மறுக்கவும் இல்லை…!!!)

எனவே, ராகுலுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடரும் என நீதிபதி அறிவித்தார்.

முதலில், பிவண்டி நீதிமன்றத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை அணுகிய ராகுல் காந்தி, பின்னர் ஆர்.எஸ்.எஸ்ஸை நீதிமன்றத்தில் தான் எதிர்கொள்வதாக கூறிவிட்டார்.

ராகுல் காந்தி, தான் தெரிவித்த கருத்துக்குப் பொதுமன்னிப்பு கோரினால் வழக்கைத் திரும்பப் பெறுவதாக ஆர்எஸ்எஸ் கூறியது.

இது சித்தாந்தத்தின் மீதான மோதல்; எனவே, இதிலிருந்து விலகப்போவதில்லை, வழக்கை எதிர்கொள்வேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். தனது கருத்துகள் சரியானவையே, அதில் தவறேதும் இல்லை என்று ராகுல் காந்தி உறுதியாக நிற்கிறார்.

இந்த வழக்குக் குறித்த பின்னணிகளை பிபிசி செய்தித்தளம் விவரமாக தந்திருக்கிறது (https://www.bbc.com/tamil/india-44550922). அந்த விவரங்கள் கீழே தரப்பட்டிருக்கின்றன… சுவாரஸ்யம் கருதி கட்டுரை ஓரளவு சுருக்கப்பட்டிருக்கிறது.
oOo

(புகைப்படத்தில், செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 1948 மே 27 அன்று நதுராம் விநாயக் கோட்ஸே, நாராயண் ஆப்தே, விஷ்ணு ராமகிருஷ்ண கர்கரே ஆகியோர் )

காந்தியைக் கொன்றவர்கள் யார் என்பதில் எந்தவித ரகசியமும் இல்லை. ஆனால் கொலைகாரர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் எந்தத் தொடர்பும் இல்லையா? என்பது தான் இப்போது முன் இருக்கும் கேள்வி.

காந்தியைக் கொலை செய்தது யார்?

1948 ஜனவரி 30ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி சென்றபோது, துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில், காந்தி படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க டெல்லி செங்கோட்டையில் தனி விசாரணை அரங்கு கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.

காந்தி கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு பேரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நதுராம் கோட்ஸே மற்றும் கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட நாராயண் ஆப்தே இருவருக்கும் 1949, நவம்பர் 15-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கோட்ஸே காந்தியை கொன்றதற்கு காரணம் என்ன?

“காந்தி கொலைசெய்யப்பட்டது ஏன்?” என்ற புத்தகத்தை நதுராம் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸே எழுதியுள்ளார். அதில் நதுராம் கூறியதாக அவர் எழுதியிருப்பது –

“தேசபக்தி பாவம் என்றால், நான் பாவம் செய்ததாக ஒத்துக்கொள்கிறேன்.

அது பாராட்டுக்கு உரியது என்றால், அந்தப் புகழுக்கு உரியவன் நான் என்று நம்புகிறேன். மனிதர்களுக்கான நீதிமன்றம் இருந்தால், நான் செய்தது குற்றமாகக் கருதப்படாது என்று நம்புகிறேன். நமது நாட்டிற்கும், மதத்திற்கும் நன்மை செய்யும் செயலையே நான் செய்தேன்.

இந்துக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய, பெருமளவிலான இந்துக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான கொள்கைக்கு சொந்தக்காரரை நான் துப்பாக்கியால் சுட்டேன்.”

ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்த நதுராம் கோட்ஸே, பிறகு இந்து மகாசபைக்குச் சென்றுவிட்டார். இருந்தபோதிலும் 2016 செப்டம்பர் எட்டாம் தேதியன்று எகனாமிக் டைம்ஸிற்கு பேட்டியளித்த கோட்ஸேவின் குடும்ப உறுப்பினர்கள், “கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு ஒருபோதும் விலகவுமில்லை அல்லது அவர் அங்கிருந்து வெளியேற்றப்படவும் இல்லை” என்று கூறினார்கள்.

நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் தாமோதர் சவர்க்கர் ஆகியோரின் வழிவந்த சத்யாகி கோட்ஸே, எகனாமிக் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் “சங்லியில் நதுராம் இருந்தபோது, 1932ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதும், அவர் சங்கத்தின் அறிவார்ந்த செயல்பாட்டாளராக இருந்தார். அவர் அமைப்பில் இருந்து வெளியேறவோ, வெளியேற்றப்படவோ இல்லை” என்று கூறினார்.

மகாத்மா காந்தியின் கொலையையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் ஏதோ ஒரு கண்ணி இணைக்கிறது. காந்தியின் இறுதிக் காலத்தில் அவருடைய தனிச் செயலாளராக பணிபுரிந்த ப்யாரேலால் நையர், தான் எழுதிய “மகாத்மா காந்தி: கடைசி கட்டம்” (பக்கம் எண் 70) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும், எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கனவே கூறியிருந்தார்கள். அதுமட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்துக் கொண்டாடினார்கள்.”

காந்தி படுகொலை செய்யப்பட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ 1970 ஜனவரி 11ஆம் தேதி எழுதிய தலையங்கத்தில் –
“நேரு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதும், காந்தியின் உண்ணாவிரதமும் மக்களிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

அத்தகைய சூழ்நிலையில், மக்களின் சீற்றத்தை பிரதிபலிக்கும்வகையில் நதுராம் கோட்ஸே செயல்பட்டார். காந்தியின் படுகொலை என்பது பொது மக்களின் வெறுப்பின் வெளிப்பாடு” என்று கூறப்பட்டிருந்தது.

காந்தி படுகொலை தொடர்பான வேறு சில உண்மைகளும் வெளியான பிறகு, 1965 மார்ச் 22இல் அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். கபூர் நியமிக்கப்பட்டார்.

‘காந்தி படுகொலைக்கு எந்தவொரு தனி மனிதரும் பொறுப்பு அல்ல, ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய சதியும், ஒரு அமைப்பும் உள்ளது’ என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா மற்றும் கம்லாதேவி சோட்டோபாத்யா ஆகியோர் குறிப்பிட்டதை கபூர் ஆணையம் சுட்டிக்காட்டியது. ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா மற்றும் முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகளின் பெயர்களை அவர் குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்.

காந்தியின் இறுதிச் சடங்குகள் முடிந்தபிறகு ஜனவரி 31ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபையைத் தடை செய்யும் முடிவு அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

‘லெட்ஸ் கில் காந்தி’ என்ற தனது புத்தகத்தில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
” படேலின் மகள் மணிபென் படேல், கபூர் ஆணையத்திடம் – இந்த அமைப்புகளுக்கு தடை விதித்த அடுத்த நாள் காலையில் தனது தந்தையும், உள்துறை அமைச்சருமான சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர்களைச் சந்தித்ததாக தெரிவித்தார். அதுமட்டுமல்ல, 1948 பிப்ரவரி முதல் நாளன்றும் தனது தந்தையை சந்திக்க வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர், தங்கள் அமைப்பு காந்தி படுகொலையைச் செய்யவில்லை என்று கூறியதாகவும் மணிபெண் படேல் விசாரணை ஆணையத்திடம் கூறினார்”.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்யலாம் என்ற அமைச்சரவை முடிவு வெளியே கசிந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ் மீதான தடை அதன் தலைவர்களை நிலைகுலைய வைத்துவிட்டதாக கபூர் விசாரணை ஆணையத்திடம் வழங்கப்பட்ட சாட்சியங்களை, துஷார் காந்தி தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் மீதான தடை 1948 பிப்ரவரி முதல் 1949 ஜூலை வரை நீடித்தது.

அப்போது உள்துறை அமைச்சராக சர்தார் படேல் பதவிவகித்தார். படேலின் மகள் மணிபென் படேல் சாட்சி எண் 79ஆக முன்நிறுத்தப்பட்டார். “காந்தியின் படுகொலைக்கு என் தந்தையே காரணம் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒரு பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அப்போது அந்த இடத்தில் இருந்த மெளலானா ஆசாத் இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது அப்பாவுக்கு மிக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று அவர் கபூர் விசாரணை ஆணையத்திடம் கூறினார்.

மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பாக, போலிஸ் அதிகாரி பி.பி.எஸ் ஜேட்லியிடம் கபூர் ஆணையம் பல கேள்விகளை எழுப்பியது.

காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு எதுபோன்ற பாதுகாப்பு வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பி.பி.எச் ஜேட்லி, “காந்தியின் பாதுகாப்புப் பணியில் உள்ளூர் போலிசார் சேர்க்கப்படவில்லை, சீருடை அணியாத போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மூலோபாய முறையில் பயன்படுத்தப்பட்டனர்” என்று கூறினார்.

“ஆர்.எஸ்,எஸ் அமைப்பிடம் இருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களை மகாத்மா காந்தியிடம் காண்பித்தேன். அதோடு, ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து சில தீவிரமான சம்பவங்கள் நடக்கக்கூடும் என்று உள்துறை அமைச்சரிடமும் தெரிவித்தேன்” என்று கபூர் ஆணையத்திடம் ஜேட்லி கூறினார்.

கபூர் ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், அல்வர் நகரில் இருந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் நடவடிக்கைகளின் விவரம் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சாமியார் வேடத்தில் அல்வர் இந்து மகாசபையின் செயலாளர் கிரிதார் சித்தாவுடன் தங்கியிருந்தது பற்றிய குறிப்புகள் அதில் உள்ளது.

கபூர் ஆணையத்திடம் அந்த வெளிநாட்டு நபர் கூறிய தகவல்களின்படி –
‘காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் மாலை மூன்று மணிக்கே அல்வரில் அச்சடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கொலை நடந்தது மாலை 5.00 மணி 17 நிமிடத்தில்தான். காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அல்வரில் இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மகிழ்ச்சியுடன் இனிப்புகளை விநியோகித்தனர். (துஷார் காந்தி, பக்க எண்.770)

காந்தி கொலை வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த டாக்டர் தத்தத்ரேயா சதாசிவ் பர்சுரே, 15 பக்கம் கொண்ட உரையை நீதிமன்றத்தில் வாசித்தார். அதில், “நதுராம் கோட்ஸேவை எனக்கு நன்றாக தெரியும். ஆர்.எஸ்.எஸ்ஸில் முக்கிய அமைப்பாளரான அவர் ‘இந்து ராஷ்ட்ர’ என்ற பத்திரிகையை நடத்திவந்தார்”.

1994 ஜனவரி 28ஆம் தேதி, பிரண்ட்லைன் பத்திரிகைக்கு பேட்டியளித்த நதுராம் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸே, “சகோதரர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்ஸில் இருந்தோம். நதுராம், தத்தத்ரேயா, நான், கோவிந்த் அனைவரும் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல, ஆர்.எஸ்.எஸ்ஸில் தான். எங்கள் குடும்பமே ஆர்.எஸ்.எஸ். தான்.

ஆர்.எஸ்.எஸ்ஸில் அறிவார்ந்த ஆர்வலராக நதுராம் இருந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுவதாக தனது அறிக்கையில் நதுராம் கூறியிருந்தார்.”

“ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, கோல்வல்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு சிக்கல்கள் ஏற்பட்டதால், அவர்களை காப்பாற்றுவதற்காக நதுராம் இப்படி அறிவித்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் அவரை வெளியேற்றவில்லை” என்று கூறியிருந்தார்.

கோபால் கோட்ஸே, ஒரு பேட்டியில் – ” நதுராமுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் எதவித தொடர்பும் இல்லை என்று மறுத்துவிட முடியாது. ஆனால் இந்து மகாசபை நதுராமுடனான தொடர்பை மறுக்கவில்லை. நதுராம் 1944-ஆம் ஆண்டிலேயே இந்து மகாசபைக்கு வேலை செய்ய தொடங்கிவிட்டார் ” என்று கூறினார்.

இந்து மகாசபையின் தற்போதைய பொதுச் செயலாளரான முன்ன குமார் ஷர்மா, பிபிசியிடம் பேசுகையில் –
“ஆர்.எஸ்.எஸ் இப்போது காந்தியவாதியாகிவிட்டது” என்று கூறினார்……

இப்போது அவர்களுக்கு கோட்ஸேவால் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் உண்மையாகவே கோட்ஸே எங்களை சார்ந்தவர், அதோடு அவர் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். இப்போது அவர்கள் அதை மறுத்தாலும், அந்தக் காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து மகாசபையும் வெவ்வேறு அமைப்புகளாக இருக்கவில்லை” என்று ஷர்மா கூறுகிறார்.

காந்தியின் படுகொலைக்குப் பிறகு, தன்னை ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்று கூறிக்கொண்ட ஒரு இளைஞன் படேலுக்கு எழுதிய கடிதத்தில், சங்கத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.
“வெள்ளிக்கிழமையன்று வானொலியைக் கண்டிப்பாக கேளுங்கள், நல்ல செய்தி வரப்போகிறது என்று காந்தி கொல்லப்படுவதற்கு முன்னரே ஆர்எஸ்எஸ் சில இடங்களில் அறிவித்திருக்கிறது. காந்தி படுகொலை செய்தி வெளியானதும், ஆர்.எஸ்.எஸ் கிளை அலுவலகங்களில் இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. (துஷார் காந்தி, லெட்ஸ் கில் காந்தி, பக்கம் 138)

1948 செப்டம்பர் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மாதவ் சதாசிவ் கோல்வல்கர் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதற்கு எதிராக கடிதம் ஒன்றை எழுதினார்.

1948 செப்டம்பர் 11ஆம் தேதியன்று கோல்வல்கருக்கு பதிலளித்த சர்தார் படேல்,
“ஆர்.எஸ்.எஸ் இந்து சமுதாயத்திற்கு சேவை புரிந்துள்ளது. ஆனால் அதன் பழிவாங்கும் உணர்வு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுகிறது. உங்களுடைய ஒவ்வொரு உரையிலும் இனவாத நச்சு நிறைந்துள்ளது. இதற்கான விலையாக நம் நாடு காந்தியை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. காந்தி கொல்லப்பட்டதும் ஆர்எஸ்எஸ் மக்கள் இனிப்பு வழங்கி அதை கொண்டாடினார்கள். இதனால்தான் ஆர்.எஸ்.எஸ்ஸை தடை செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.”

1949 ஆகஸ்ட் 16 தேதியன்று, கோல்வல்கர் படேலை சந்தித்தார். அதற்குப் பிறகு படேல் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், “அவர்கள் செய்த, ஆனால் தவிர்த்திருக்கப்பட வேண்டிய தவறைப் பற்றி கோல்வல்கரிடம் நான் எடுத்துச் சொன்னேன். நாசகார செயல்களை கைவிட்டு, ஆக்கபூர்வமாக செயலாற்ற வேண்டும் என்று நான் அவரிடம் தெளிவாகக் கூறிவிட்டேன்.”

அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கடுமையாகத் தாக்கி பேசிய படேல், “ஆர்.எஸ்.எஸ் அல்லது வேறு வகுப்புவாத அமைப்பு, நாட்டை பின்தள்ளிவிட அனுமதிக்க மாட்டோம். நான் ஒரு படைவீரன், பிளவு சக்திகளுக்கு எதிராக போராடுவேன். அந்த காரியத்தை செய்வது என் சொந்த மகனாக இருந்தாலும் அவனை விடமாட்டேன்.”

இதேபோல், 1948 ஜனவரி 6ஆம் தேதியன்று லக்னௌவில் முஸ்லிம்களிடையே உரையாற்றிய சர்தார் படேல், காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது ஏன் கண்டணம் தெரிவிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். நீங்கள் இரண்டு படகுகளில் பயணம் செய்ய முடியாது. எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்புபவர்கள் அங்கு செல்லலாம், நிம்மதியாக வாழலாம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

காந்தி படுகொலையில் சர்தார் படேல் பல சந்தர்ப்பங்களில், பல தரப்பினருடைய கேள்விகளை எதிர்க்கொண்டார். நாடாளுமன்றத்திலும் அவர் மீது கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன. மற்றொருபுறம், காந்தி கொலை வழக்குத் தொடர்பான நீதிமன்ற விசாரணையையும் படேல் எதிர்கொண்டார்.

1948 நவம்பர் 8ஆம் தேதியன்று செங்கோட்டையில் சிறப்பு நீதிமன்றத்தில், தலைமை வழக்கறிஞர் சந்திர கிஷான் டஃப்தரி, வேறு எந்த சாட்சியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விரும்பவில்லை என்று கூறினார். அதற்குப் பிறகு, நதுராம் கோட்ஸே ஏதாவது சொல்ல விரும்புகிறாரா? என நீதிமன்றம் அவரிடம் கேட்டது.

93 பக்க பக்க அறிக்கையைப் படிக்க விரும்புவதாக நதுராம் பதிலளித்தார். நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்க, காலையில் பத்து மணிக்குத் தனது அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார்.

6 பாகங்களாக அறிக்கையை வாசிப்பதாக நதுராம் கூறினார். தனது அறிக்கையின் கடைசி பாகம், தேச விரோதக் கொள்கையைப் பற்றியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், நதுராமின் அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்யக்கூடாது என்று தலைமை வழக்கறிஞர் சந்திர கிஷான் டஃப்தரி வலியுறுத்தினார். (துஷார் காந்தி, ‘லெட்ஸ் கில் காந்தி’ பக்கம் 607)

துஷார் காந்தி இதையும் குறிப்பிடுகிறார், “சவர்க்கருக்கு தண்டனை வழங்கப்பட்டால், தீவிரவாத இந்துக்களின் எதிர்வினை மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதை படேல் நம்பினார். இந்த அச்சம் காங்கிரசுக்கும் இருந்தது. காந்தி படுகொலை வழக்கில் சவர்கருக்கு சம்பந்தம் இல்லை என்பதை, அந்த வழக்கின் விசாரணை அதிகாரி நாகர்வாலாவே மறுத்துவிட்டார்.”

oOo

இந்த விவரங்களை எல்லாம் ராகுல் காந்தி எந்த அளவுக்கு, எப்படி – பயன்படுத்திக் கொள்வார் என்பதும், நீதிமன்ற விசாரணையில் எந்தக் கோணம் எடுக்கப்படும் என்பதும் இப்போதைக்கு தெரியவில்லை.

ஆனால், ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். ராஜேஷ் குண்டே தொடுத்திருக்கும் இந்த வழக்கு விசாரணை பரபரப்பூட்டும் வகையில் பல பழைய சமாசாரங்களையெல்லாம் தோண்டியெடுத்து, விவாதத்திற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய தலைமுறை அறியாத பல விஷயங்கள், பல விவரங்கள் வெளி வரும்…..!!!

oOo

{youtube}b9G0vx8tjdg{/youtube}

பின் குறிப்பு – சட்ட நுணுக்கங்களில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு ஒரு கேள்வி…
நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரரா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இந்த வழக்கில் யாருடையது….?

வழக்கைத் தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் குண்டே-வுடையதா…? அல்லது வழக்கை எதிர்நோக்கும் ராகுல் காந்தியுடையதா…?

நன்றி : விமர்சனம் & நக்கீரன்

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.