இந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி!

Share this:

குஜராத் மாநிலத்திலுள்ள வதோத்ரா நகரத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் கெஸ்ரானி தேசிய அளவிலான நீட் தேர்வில் (NEET-PG), நாட்டிலேயே முதலிடத்தை வென்றுள்ளார். இந்த முஸ்லிம் இளைஞர், எந்த ஒரு நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்திலும் இணைந்து பயிலாமல், வீட்டிலிருந்தபடியே தயார் செய்து, நீட் தேர்வின் உயர் சிறப்புத் தகுதியான All India Rank-1 (AIR-1)யுடன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்தியாவின் 165 நகரங்களில் இருந்து மொத்தம் 1,48,000 மாணவர்கள் கலந்து கொண்டு, கடந்த ஜனவரி 6ஆம் தேதி எழுதிய தேர்வில், 78,660 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

பரோடா மருத்துவக் கல்லூரியில் MBBS தேர்ச்சி பெற்றுள்ள மாணவரான டாக்டர். அஷ்ரஃப், NEET-PGக்கான நீட் தேர்வில் 1,006/1,200 மதிப்பெண்களைப் பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். MD/MS மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளை நடத்திவரும் தேசியக் கல்வி வாரியம் (National Board of Education) கடந்த 31-01-2019 அன்று இதனை அறிவித்துள்ளது.

அஷ்ரஃப் பற்றி சில தகவல்கள்:

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதான அஷ்ரஃப், மருத்துவக் கல்லூரிகள் கேட்கும் தொகைகளைச் செலுத்த வசதியில்லாதவர். இவருடைய தந்தை முஹம்மத் ஹுஸைன் ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.

மேல் நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் சமயத்திலேயே 90%க்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகித்தவர் அஷ்ரஃப்.

கடுமையான உழைப்பிற்குப் பின், கடந்த 2013இல் குஜராத்தில் நடந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, பரோடா மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பைத் தேர்வு செய்தார்.

“இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயிலவேண்டும் என்பதே எனது இலட்சியக் கனவு. அதை மெய்ப்பித்த இறைவனுக்கு நன்றி!” என அஷ்ரஃப் குறிப்பிட்டுள்ளார். இவரது குடும்ப உறவினர்களுள் முதல் மருத்துவரும் இவரே. மேலும், டெல்லியில் உள்ள மெளலானா ஆஸாத் மருத்துவக் கல்லூரியில் இணைந்து MD மருத்துவப் படிப்பைப் பயில இருப்பதாகவும் அஷ்ரஃப் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவராகத் திகழ்கின்றீர்கள்! உங்களுக்கான மிகச் சிறந்த வாழ்க்கையைத் தருவதற்குப் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் காத்திருக்கும் வேளையில் உங்களுக்கான எதிர்காலத் திட்டம் என்ன?” – என்ற ஊடகங்களின் கேள்விக்கு …

மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்கும்போதே, இத்துறையில் வல்லுனராகி இந்தியாவிற்கு சேவை புரிவதே என் இலட்சியம் என்பதை முடிவு செய்திருக்கின்றேன். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து அழைப்புகள் வந்தபோதிலும் மறுத்துள்ளேன். இறைவனின் கிருபையால், என் நாட்டுக்குத் தொண்டு புரிவதே என் எதிர்காலத் திட்டம்!” என்று பதில் அளித்துள்ளார் அஷ்ரஃப்.

சர்வதேச அளவில், குஜராத் மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ள மாணவர், டாக்டர் அஷ்ரஃபை வாழ்த்துவோம்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.