ஓர் ஆலிம் ( I.A.S ) ஐ. ஏ. எஸ் ஆகிறார்.

{mosimage}மதரஸாக்களில் அளிக்கப்படும் உயர்ந்த கல்வித்தரம் குறித்து பலரது விழிப்புருவங்கள் வில்லாய் மாறியுள்ள இன்றைய சூழ்நிலையில், உ.பி.யில் உள்ள புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா மாணவர் வஸீமுர் ரஹ்மான் நாட்டின் உயர்நிலைத் தேர்வான I.A.S.தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

புது தில்லியில் உள்ள பாஹர் கன்ச்சில் R.S.S. அமைப்பினரால் நடத்தப்படும் I.A.S பயிற்சிப் பள்ளியில் மௌலானா ஒருவர் பயிற்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது இன்னும் வியப்பைத் தருகிறது.

மொத்தம் வெற்றி பெற்ற 734 பேரில் இவர் 404வது இடத்தைப் பெற்றுள்ளார். வரலாறு மற்றும் பாரசீகத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு உருது மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். கடந்த மூன்று முறை தேர்வு எழுதி தோல்வியைத் தழுவிய இவர் நான்காவது முறையாக கடினமாக முயன்று இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.

மதரஸாவில் படித்த மாணவர் ஒருவர் I.A.S தேர்வில் வெற்றி பெற்று இருப்பது நாட்டிலேயே முதன் முறையாகும். மௌலானா வஸீமுர் ரஹ்மான் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். தேவ்பந்தில் திருக்குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஷரீஅத் சட்டப் பாடங்களைக் கொண்ட மூன்றாண்டு வகுப்பு படித்துள்ளார். தேவ்பந்த் மதரஸாவின் சான்றிதழ், பட்டப் படிப்புக்குச் சமம். பின்னர் அலிகரில் உள்ள ஜாமியா ஹம்தர்தில் சேர்ந்து யுனானி மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை பட்டத்தையும், அதே பிரிவில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாட புத்தகங்களைப் பல இடங்களில் அலைந்து திரிந்து பெற்று, பகலில் முதுகலை வகுப்புக்குச் சென்று கொண்டே இரவிலும் அதிகாலையிலும் படித்துள்ளார் வஸீம். “மதரஸா மாணவர்கள் பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கலந்து கொள்வதில்லை. நாம் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என சிந்தித்தேன். எனது ஆசிரியர்களுடனும் நண்பர்களுடனும் கலந்து ஆலோசித்து இதில் பங்கேற்றேன். மதரஸாவில் பயின்றதால் எனக்குத் தன்னம்பிக்கையும் ஊக்கமும் பிறந்தது” என்கிறார் மகிழ்சியோடு, மௌலானா வஸீமுர் ரஹ்மான் I.A.S.

நன்றி : சமரசம்.