பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய விமானப்படை பணியாளர் சுனில் குமார் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய விமானப்படை பணியாளர் சுனில் குமார் கைது!
Share this:

ஹரியானா (06 ஜனவரி 2026):  ஹரியானா மாவட்டத்தில் உள்ள அம்பாலா நகரத்தில், இந்திய ராணுவத்தின் விமானப் படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்று, ரகசிய உளவாளியாக செயல்பட்டு வந்த சுனில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், இராணுவ விமானங்களைப் பராமரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை தொடர்பான ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுடன் ஒருவர் பகிர்ந்து வருவதாக உளவுத்துறை அமைப்புகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாலா காவல் துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு (CIA)-II, சுனில் குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. (சத்தியமார்க்கம்.காம்)

அம்பாலா காவல் கண்காணிப்பாளர் (SP) அஜித் சிங் சேகாவத் தெரிவித்ததாவது:

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து சிக்கிய நபர், அம்பாலா மாவட்டம் சப்கா கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமார் ஆவார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை (02 ஜனவரி 2026) கைது செய்யப்பட்டார். சனிக்கிழமை அம்பாலா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலதிக விசாரணைக்காக நான்கு நாட்கள் காவல் துறை காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் இறையாட்சி, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்கள் தொடர்பான BNS பிரிவு 152-ன் கீழ், அம்பாலா கான்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் சுனிலுக்கு எதிராக மாவட்ட காவல் துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துவிட்டு பழியை இந்திய முஸ்லிம்கள் மீது சுமத்துவது, மதக்கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)

SP சேகாவத் மேலும் கூறியதாவது:

“பாகிஸ்தான் உளவாளியான சுனில் குமார், அம்பாலா கான்டோன்மெண்டில் உள்ள பாதுகாப்புப் பகுதியில், தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட கட்டுமான பணியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கட்டுமானப் பகுதியில் பணிபுரிவதற்காக பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைய, இராணுவ அதிகாரிகளால் அவருக்கு அனுமதி அட்டை வழங்கப் பட்டிருந்தது. சமூக ஊடக தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ‘படி’ (Buddy) செயலி மூலமாக, ‘ஹனி டிராப்’ வழக்கில் அவர் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஒரு வலையமைப்புடன் தொடர்பு கொண்டார். சுமார் ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை அவர் அந்த வலையமைப்புடன் தொடர்பில் இருந்தார்.”

மேலும் கேள்விக்கு பதிலளித்த அவர், “சுனில் குமாரின் நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை மூலம் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, அவரது கைப்பேசியைச் சோதனை செய்தபோது திடுக்கிடும் பல்வேறு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்திய இராணுவ அலகுகளின் இயக்கம் தொடர்பான மிக முக்கியமான தகவல்களை சுனில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என்று தெரிவித்தார். – SatyaMargam.com

(சத்தியமார்க்கம்.காம்)

தொடர்புடைய செய்திகள்:

இந்திய கடற்படை ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்த உளவாளிகள் ரோஹித் மற்றும் சந்த்ரி கைது!

 

இந்திய ராணுவ விமானப்படை ரகசியங்களை விற்ற பாக். உளவாளி குலேந்திர ஷர்மா கைது!


Share this: