உலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையும் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக நேர்வழியினையும் கற்றுக் கொடுத்தான். இதற்காக மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை பல தூதர்களை இறைவன் இவ்வுலகுக்கு அனுப்பியுள்ளான்.
“எமது நேர்வழியும் தூதரும் வராத சமுதாயமே இவ்வுலகில் இல்லை“ என்பது திருமறையின் கூற்றாகும். எல்லா சமுதாயத்துக்கும் நேர்வழி(வேதம்)யினை காண்பித்துக் கொடுப்பது இறைவனின் கடமையின் பாற்பட்டதாகும். அந்த வகையில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் வேதத்தை அருளும் போது அதனை விளக்கி வாழ்ந்து காண்பிக்க அந்த சமுதாயத்திலிருந்தே தூதர்களையும் இறைவன் தேர்ந்தெடுக்கிறான்.
ஒரு சமுதாயத்துக்கு நேர்வழியினை விளக்கிக் கொடுக்க ஒரு தூதரை தேர்ந்தெடுக்கும் போது அத்தூதர் அறிந்த மொழியில் வேதம் இருந்தால் தான் அவருக்கு செவ்வனே அதனை விளக்கி அதன்படி வாழ்ந்து காண்பிக்க இயலும். அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபி(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசுபவர்கள் கேட்காமல் இருக்கமாட்டார்கள்.
“எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.” (குர்ஆன் 14:4)
இந்த அடிப்படையிலேயே கடைசியாக இவ்வுலகம் முழுமைக்குமான தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பேசத் தெரிந்த அரபி மொழியில் இவ்வுலக மக்களுக்கு நேர்வழியில் வாழ்ந்து காண்பிக்க திருக்குர்ஆனை இறக்கினான்.
இதனால் தான் திருக்குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. இதன் மூலம் இறுதி வேதம் அரபி மொழியில் உள்ளது என்ற சிறப்பு மட்டும் அரபி மொழிக்கு உள்ளதே தவிர வேறு எந்த தனிச்சிறப்பும் இஸ்லாத்தின் பார்வையில் அதற்கு கிடையாது.
“அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் (நூல்: அஹ்மத் 22391)”
என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும்.
இறைவன் மிக்க அறிந்தவன்.
(இது தொடர்பான தொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்? என்ற ஐயத்திற்கான விளக்கத்தையும் காண்க.)