அறிந்ததும் அறியாததும்! (சிறுவர் பகுதி!)

மொராக்கோ பள்ளிவாசல்
Share this:

இஸ்லாத்தின் அடிப்படையான சில விஷயங்கள்,  உலக அதிசயங்கள் சில இங்கே சிறார்களின் அறிதலுக்காக வேண்டி பதிக்கப்படுகிறது.

1. திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்கள் யாவர்?
ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத்(ஸல்), துல்கிப்லு ஆகியோர்.
2. இஸ்லாத்தின் வழிகாட்டிகள் எவை?
இஸ்லாத்தின் வழிகாட்டிகள் இரண்டு.

ஒன்று திருக்குர் ஆன். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய திருமறைதான் திருக்குர்ஆன்.

இஸ்லாத்தின் இரண்டாவது வழிகாட்டி, ஹதீஸ். நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், தம்முன் நடந்தவற்றைத் தடுக்காமல் அங்கீகரித்தது அனைத்துமே ‘ஹதீஸ்’ என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் வழிகாட்டுதலின் பெயரிலேயே ஹதீஸ் அமைந்துள்ளதால், திருக்குர்ஆனோடு, ஹதீஸ்களையும் பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.

3. நபிகள் நாயகம் பெயருடன் (ஸல்) என்று இணைத்து எழுதுவது ஏன் தெரியுமா?

நபியவர்களின் பெயரை எழுதும்போது “ஸல்” என்று சேர்த்து எழுதுவது வழக்கம். “ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்பதன் சுருக்கமே ‘ஸல்’ என்பது. “நாயகம் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக” என்பது அதன் பொருள்.

4. நாயகம் தந்தத் திருமணப்பரிசு எது?
தன் மகள் ஃபாத்திமாவின் திருமணத்தின்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தத் திருமணப்பரிசு, தண்ணீர் எடுத்து வரும் தோல்பை, ஒரு குவளை, ஈச்சப்பாயால் பின்னப்பட்ட ஒரு கட்டில், இரண்டு தலையணை, வெள்ளி வளையல், ஒரு மாவரைக்கும் திருகை.

5. உலகின் உயரமான பள்ளிவாசல் எது?
மொராக்கோ நாட்டில், காஸாபிளாங்கா என்ற இடத்தில் ‘கிரேமஹசன்’ என்னும் மசூதி உள்ளது. உலகில் உள்ள மசூதிகளிலேயே மிகவும் உயரமானது இதுதான். சுமார் 700 கோடி செலவில் கட்டப்பட்டது. மினாராவின் உயரம் 576 அடி. இது 1993-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அநேகமாக இதுதான் உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும்.

6. தானாகப் பக்கங்களைப் புரட்டிக் கொள்ளும் குர்ஆன் எங்கேயுள்ளது?
இது 700 ஆண்டுகளுக்கு முந்தைய குர்ஆன். கை விரல்கள் பட்டதும் தானாக பக்கங்கள் புரளக்கூடிய அளவிற்கு இதை வடிவமைத்து இருக்கிறார்கள். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இந்த நவீன தொழில்நுட்பக் குர்ஆன் வைக்கப்பட்டுள்ளது.

7. மிகச்சிறிய திருக்குர்ஆன் யாரிடமுள்ளது?
குன்னூரில் வசிக்கும் டாக்ஸி டிரைவர் சிராஜுத்தீன் என்பவரிடம் 40 ஆண்டுகளுக்குமுன் தயார் செய்யப்பட்ட மிகச்சிறிய குர்ஆன் உள்ளது. இக் குர்ஆனை சிராஜுதீன் பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறார். இதன் உயரம் கால் செ.மீ மீட்டர், அகலம் 2 செ.மீ., நீளம் 2 3/4 செ.மீ. இதில் மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 428 எழுத்துக்கள் உள்ளன. ‘பே’ என்ற அரபு மொழிச்சொல் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 428 முறை உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 86 ஆயிரத்து 430 வார்த்தைகள் உள்ளன. இறைக் கோட்பாடுகள் மட்டும் 6 ஆயிரத்து 666 உள்ளன. இதில் பதிவாகியுள்ள எழுத்துக்களை வாசிக்க லென்ஸ் தேவைப்படும்.

8. அழிவைத் தரும் 7 பாவங்கள் எவை?
1.அல்லாஹ்விற்கு இணை வைப்பது.

2.சூனியம் செய்வது.

3.அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றிக் கொலைசெய்வது.

4.வட்டியை உண்பது.

5.அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது.

6. போர் நடந்து கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு காட்டுதல்.

7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.

9. நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய மூன்று முக்கிய பண்புகள் எவை?
1.தூய்மை, அவர்களின் தூய உள்ளத்தை உலகுக்குக் காட்டியது.
2.எளிமை, அவர்களின் ஏழ்மை வாழ்வை அகிலத்தாருக்கு அறிவித்தது.
3.பொறுமை, எத்தகைய இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் இனிய முகத்தோடு ஏற்று, ஈடு இணையற்ற இஸ்லாத்தை உலகிற்குக் காட்டியது.

இம்மூன்றும் நாயகம்(ஸல்) அவர்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தன. அதிலும் பொறுமை அவர்களின் ஒப்பற்ற வாழ்விற்குப் பெரிதும்
அணிகலனாக விளங்கியது.

10. சுவனம் செல்ல தகுதியானவர்கள் யார் தெரியுமா?

1. “எவர் மூன்று பெண் மக்களையோ அல்லது மூன்று சகோதரிகளையோ அல்லது இரண்டு பெண் மக்களையோ வளர்த்து (அறிவையும்)
நல்லொழுக்கத்தையும் கற்பித்து அவர்களுடன் அழகிய முறையில் நடந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனரோ அவர்களுக்கு
சுவனம் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி:அபுஸஈத்(ரலி) ஆதாரம் : திர்மிதீ

2. “பெருமை, மோசம், கடன் ஆகிய இம்மூன்றை விட்டும் எவர் அப்பாற்பட்டு இருக்கும் நிலையில் இறந்து விடுகின்றாரோ அவர்கள் சொர்க்கம் செல்வார்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார். அறி :ஸவ்பான் (ரலி) ஆதாரம் : திர்மிதீ

11. மறுமை நாளில் அல்லாஹ் நோக்காதவர்கள் எவர் தெரியுமா?
“மூன்று விதமான நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் பக்கம் அல்லாஹ் மறுமை நாளில் நோக்க மாட்டான்” என்று அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
1. பெற்றோருக்கு மாறு செய்பவன்.
2. ஆண் உடையை அணியும் பெண்.
3. ரோஷமும், சொரணையும் அற்றவன். அறிவிப்பாளர் :இப்னு உமர் (ரலி) ஆதாரம்: நஸாயி.

12. பெண்கள் பின்பற்ற வேண்டிய 8 கடமைகள் எவை?
1. திருக்குர் ஆனில் கூறப்பட்ட அல்லாஹ்வை மட்டுமே வணங்கிக் கொள்ளுங்கள்.
2. அல்லாஹ்வை இணை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இணை வைப்பதை அல்லாஹ் ஒருக்காலும் மன்னிக்க மாட்டான் என்பதை நினைவு கூருங்கள்.
3. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதியதாக ஒன்றை உண்டாக்கப்பட்டால் அது பித்அத் ஆகும். அதனால் அதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
4. ஐந்துநேர தொழுகையை முழுமையாக பேணிக் கொள்ளுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை தவிர்த்து விடாதீர்கள்.
5. ஹிஜாபினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
6. பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்களை நல்ல முறையில் பரிபாலித்து நல்லதைச் செய்யுங்கள். அவர்களுக்குச் சொல்லாலும், செயலாலும் துன்பம் கொடுக்காதீர்கள்.
7. கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கூற்றினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
8. அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள்.

13. நரகவாசிகள் யார்?
“தொழுகையை வீணடிப்பவர்களுக்கு நரகம்தான் என்று அல்லாஹ் கூறுகின்றான். உங்களை “ஸகர்” என்னும் நரகத்தில் புகுத்தியது எது? என்று கேட்பார்கள்” (அதற்கு)தொழுபவர்களில்(உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று அவர்கள் கூறுவார்கள். அல்குர் ஆன் 74;42,43.

எனவே “உங்கள் குழந்தைகள் ஏழு வயது அடைந்துவிட்டால் தொழச் சொல்லுங்கள். பத்து வயது அடைந்ததும் (அவர்கள் தொழாமல் இருந்தால்) அவர்களை அடியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அம்ருபின் ஷீஐபு(ரலி). ஆதாரம்: அஹமத், அபுதாவூத்.

14. ஆஷுரா நாளின் நன்மைகளில் இன்னும் ஒன்று!
“எவர் ஆஷுரா நாள் அன்று தம் குடும்பத்தாருக்குத் தாராளமாக செலவு செய்கின்றாரோ அவருக்கு இறைவன் அந்த ஆண்டு முழுவதும் அளவின்றி (வருமானம்) அளிக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் (ரலி).

15. திருக்குர் ஆன் படம் பிடுத்துக்காட்டும் மனிதர்களின் தீய குணங்கள் எவை?
1. தற்பெருமை கொள்ளுதல். 2. பிறரை கொடுமை செய்தல். 3. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல். 4. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல். 5. பொய் பேசுதல். 6. கெட்ட சொற்களைப் பேசுதல். 6. நல்லவர்களைப் போல் நடித்தல். 7. புறம் பேசுதல். 8. பாரபட்சமாக நடத்துதல். 9. தகாதவர்களுடன் சேருதல், அவர்களுக்கு ஆதரவு கொடுத்தல். 10. வாக்குறுதியை மீறல். 11. பொய் சாட்சி கூறுதல். 12. பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல். 13. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல். 14. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல். 15. குறை கூறுதல். 16. வதந்தி பரப்புதல். 17. கோள் சொல்லுதல். 18. பொறாமைப்படுதல் 20. பெண்களைத் தீய நோக்குடன் பார்த்தல். 21. கோபப்படுதல்.

தொகுப்பு: சகோதரி. ஆர். நூர்ஜஹான் ரஹிம். (கல்லை)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.