இஸ்லாமிய சமூகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனையும் தீர்வும்

Share this:

ளர்ந்து வரும் அல்லது வளர்ச்சியின் எல்லையைத் தொட்டு கொண்டிருக்கும் நவீன உலகத்தின் கட்டமைப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமுதாயமான முஸ்லிம்களின் பங்கு என்ன? இக்கேள்வி முஸ்லிம் உலகை நோக்கி தொடுக்கப்படுமாயின், முஸ்லிம் சமூகத்தின் இதற்குண்டான பதில் என்னவாக இருக்கும் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

இதற்கான பதிலைக் கொடுக்கும் நிலையில் அல்லது இதனைக் குறித்து சிந்திக்கும் நிலையில் முஸ்லிம் சமூகம் தற்போது இல்லை என்பது மிகவும் கேலிக்குரிய, பரிதாபத்திற்குரிய நிலையாகும். அதனைவிட இன்றைய நவீன உலகின் பிரச்சனைகளுக்கு மூலக் காரணமே முஸ்லிம்கள் தான் என்ற ஒரு மாயை சாதாரண மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

படைத்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட/சரியான வழியாக அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் சமூகம் இவ்வுலகின் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் என்று கூறினால் அதனை நம்ப முடிகிறதா? மனதால் நினைத்தே பார்க்க முடியாத விஷயமாகும் இது. ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன? மேற்கூறப்பட்ட விஷயம் தான் யதார்த்தம் என்று சாதாரண மக்கள் நம்பும் அளவிற்கு காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் முஸ்லிம் சமூகத்தின் நிலைநிற்பு கேள்விக்குள்ளாக்கப்படலாம். அதன் ஒரு சில அடையாளங்கள் தான் தற்போதைய ஆப்கன், பலஸ்தீன், காஷ்மீர், ஈராக், செச்னியா, ஈரான், சிரியா போன்றவை. படைத்த இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தையுடையவர்கள் ஏன் இந்நிலை என்று ஆய்ந்து பார்க்க வேண்டாமா? சமூகத்தின் இந்நிலையினைக் குறித்து கவலைக் கொள்ள வேண்டாமா?

“சமுதாயத்தைக் குறித்து கவலைக் கொள்ளாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்” என்பது நபிமொழி.

சமூகத்தின் இன்றைய நிலையினைக் குறித்து கவலை கொள்ளவும், அதற்கான காரணத்தினைக் குறித்து ஆய்ந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதற்கும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கடமைப் பட்டுள்ளார்கள்.

இன்று முஸ்லிம் சமூகத்தை ஒட்டு மொத்தமாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலை, இவர்கள் இவ்வுலகத்திற்கே தேவையற்றவர்கள்-பிரச்சனைக்குரியவர்கள் என்று மற்ற மக்களால் பார்க்கப்படும் நிலை ஏதோ இன்றோ நேற்றோ அல்லது ஒரு சில நாட்களிலோ உருவானது அல்ல.இஸ்லாத்தை என்று முஹம்மது(ஸல்) அவர்கள் புனரமைத்தார்களோ அன்று முதல் இஸ்லாத்தினை அழிக்க இஸ்லாத்தின் பரம வைரிகளால் பல்வேறு சதிவலைகள் பின்னப்பட்டு கொண்டிருக்கிறன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அக்காலச் சூழலுக்கேற்ப தங்களது திட்டங்களை இஸ்லாத்தின் எதிரிகள்புனரமைத்துக் கொண்டுள்ளார்கள்.

இவ்விடத்தில் முஸ்லிம்கள் ஒரு விடயத்தை நினைவு கூர வேண்டும். ஏதோ எதிரிகளின் கூட்டு சதியின் மூலம் மட்டுமே முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதுமட்டுமின்றிஎதிரிகளின் காலச்சூழலுக்கேற்ற திட்டங்களை அந்தந்த காலகட்டங்களில் இந்த முஸ்லிம் சமூகம் தெளிவாக கண்டுணர்ந்து அதனை எதிர்கொள்ள தகுந்த எதிர்/தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்காததும் மிக முக்கிய காரணமாகும்.அ தன் விளைவைத் தான் இன்று சமூகம் அறுவடை செய்து கொண்டிருக்கிறது. இன்று முஸ்லிம்கள் என்றாலே அப்பாவி மக்களுக்கு எதிரானவர்கள்/பயங்கரவாதிகள்/தீவிரவாதிகள் என்ற தோற்றம் மக்கள் மத்தியில் ஆழமாக நிலை கொண்டு விட்டதை காண்கிறோம்.

இந்நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிய கடந்த 20 வருட கால அளவில் உலகில் நிகழ்ந்த மாற்றங்களையும், அதில் சமூகம் பங்கு கொண்ட அளவினையும் நுட்பமாக ஆய்ந்தாலே தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.வளர்ச்சியடந்த உலகில் “ஊடகம்” என்பது மக்களை ஒருங்கிணைக்கும் மிகமுக்கிய காரணியாகும். அதனை மிகப் பெரிய ஆயுதம் என்றாலும் அது மிகையன்று. கடந்த இருபது வருட காலஅளவில் இஸ்லாத்தின் எதிரிகள் இவ்வதிமுக்கிய ஆயுதத்தினை மிகச்சரியான முறையில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதற்கு முன்பே இவ்வாயுதத்தினை – எதிர்காலம் ஊடகங்களால் நிச்சயிக்கப்படும் என்பதை சரியான தருணத்தில் கண்டுணர்ந்த இஸ்லாத்தின் எதிரிகள் அதனை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டிருந்தார்கள்.

இத்தருணத்தில், அந்தந்த காலகட்டங்களில் எதிரிகளின் திட்டங்களை கண்டுணர்ந்து அதற்கு தக்க மாற்று செயல் திட்டங்களை /தற்காப்பு நடவடிக்கைகளை வடிவமைக்க வேண்டிய இச்சமூகம் அந்நேரம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதை நினைத்துப் பார்த்தால், தற்போதைய கையறு நிலையை எண்ணி பரிதாபப் பட மட்டுமே முடிகிறது.

இக்கால கட்டங்களில் நன்றாக உண்டு உறங்கி, எவ்வித தூர நோக்குப் பார்வையும் இன்றி முடிந்த அளவு சகோதரர்களுக்கிடையில் சிறிய, சிறிய பிரச்சினைகளுக்கும் முட்டி மோதிக் கொண்டு எவ்வித சமூக பிரக்ஞையுமற்று இருந்து கொண்டுள்ளது.இதே காலகட்டத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் உலகளாவிய அளவில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சதிவலைகளை மிக சாதுரியமாகப் பின்னிக் கொண்டிருந்தார்கள். முடிந்த அளவு தாங்கள் கையகப் படுத்திய ஊடகத்தின் மூலம் இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டுள்ளார்கள்.

இதோ அவர்கள் எதிர்பார்த்த அறுவடைக் காலம் இத்தனை எளிதில் வரும் என அவர்களே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். முஸ்லிம்களுக்கு மூச்சு விடக் கூட முடியவில்லை. தும்மினால் குற்றம், இருமினால் குற்றம். உலகின் எந்த மூலையில் ஒரு குண்டு வெடித்தாலும் அதனை முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்ற மாயை எல்லோருடைய மனதிலும் தோன்ற ஆரம்பித்து விட்டது. இச்சதிவலையில் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதி கூட விழுந்து விட்டது என்பது தான் மிகப் பெரிய வேடிக்கை.

ஆனால் இப்பொழும் முஸ்லிம் சமூகம் இதற்கு எதிராக இக்கேடுகெட்ட நிலையினை மாற்ற மாற்று நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதா என்றால் அது தான் இல்லை. மாறாக இது ஒரு மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக முஸ்லிம் சமுதாய தலைவர்கள் எனக் கருதப்படுபவர்களால் முன்னிறுத்தப்படவோ, சமூகத்திலும் மற்றவர்களிலும் விழிப்புணர்வை உண்டாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவோ செய்யப்படவில்லை.

இப்பொழுதும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் எனக் கருதப்படுபவர்கள் தங்களால் பிரிக்கப்படும் காசிற்கு கணக்கு பார்ப்பதும், அதில் ஒரு ரூபாவில் சந்தேகம் எழுந்தால் அதனை மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக சமூகத்தின் முன் கொண்டு வந்து சகோதரர்களையே சமுதாய எதிரிகளாக, இஸ்லாமிய விரோதிகளாக சித்தரிப்பதிலும் தான் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ஆனால் உண்மையான எதிரிகளோ மிக அழகாக இது போன்று முஸ்லிம் சமூகத்தின் உள் எழும் பிரச்சினைகளையும் கூட தங்களுக்கு சாதகமாக, இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக திருப்பப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு அறிந்தோ அறியாமலோ இச்சமுதாய தலைவர்களும் துணை/விலை போய் விடுகின்றனர்.

ஒரு உதாரணத்திற்கு தமிழகத்தை எடுத்துக் கொள்ளலாம். உலகளாவிய அளவில் ஊடகங்களின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்த இஸ்லாமிய விரோதிகளுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்களல்லர் என்கிற ரீதியில் அதற்கு சரிசமமாக, தமிழக முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று தனது குடும்ப ஊடகத்தின் மூலம் திரும்பத் திரும்பக் கூறி இந்த சமூகத்தை தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை தமிழகத்தில் வேரூன்றச் செய்து இச்சமூக மக்களை வெளியில் தலைக் காட்ட விடாமல் செய்தவர், காலம் காலமாக இச்சமூகத்தின் ஓட்டுக்களைத் தின்று கொழுத்து, சமூகத்திடம் வருடம்தவறாமல் நோன்பு கஞ்சி வாங்கி குடித்துக் கொண்டு தெளிவாக தொடர்ந்து சமூகத்துக்கு அல்வா கொடுத்துக் கொண்டிருந்த நம்பிக்கை துரோகி, நமது சகோதரர்களில் ஒரு சாராரின் நம்பிக்கைக்குரிய நமது சமுதாயத்திற்கு விடிவுகாலம் தரப் போகிற நண்பராம்.  

இதுஒருபுறமிருக்க, மற்றொரு புறத்திலோகுஜராத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கடித்துக் குதறி நர வேட்டையாடிய ரத்தக் காட்டேறி மோடி மீண்டும் அராஜகத்தால் ஆட்சியைக் கைப்பற்றிய போது, தனது கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியைவெளிப்படுத்த அழைப்பில்லாமலேயே நேரடியாக சென்று வாழ்த்திய இந்தியாவிலுள்ள ஒரே முதல்வர், ஆந்திராவில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு அம்மாநில அரசு இடஒதுக்கீடு வழங்கிய போது-முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்கள் நன்றாக இருப்பதை-முன்னேறுவதை சிறிதும் மனதால் விரும்பாமல்- உடனடியாக அதனை எதிர்த்தவர், முஸ்லிம்களுக்கு ஏற்கெனவே இரு வாக்குறுதிகளை நேரடியாக வழங்கி பகிரங்கமாக அதனை மீறியவர், பாபர் மசூதி இடிப்பதற்கு கரசேவைக்கு ஆள் அனுப்பியவர் – இன்னும் பல வழிகளில் நான் முஸ்லிம்களுக்கு எப்பொழுதும் எதிரியே என்று அப்பட்டமாக தனது செயல்களின் மூலம் நிரூபித்துக் கொண்டிருப்பவர் நமது சகோதரர்களில் மற்றொரு சாராரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்.

ஆனால் இந்த இரு சகோதரர்களுக்கிடையிலோ எந்த நம்பிக்கையுமில்லை. குறைந்த பட்சம் சமூக நலனைக் கருதி மற்றெல்லாக் கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஓரணியில் நிற்கவும் தயாரில்லை. காரணம் பிரித்த காசில் கணக்கு பார்த்த போது எழுந்த ஊழல் பிரச்சினையாம். இதனை காரணம் காட்டி ஒரு சாரார் பிரிந்து இணைந்திருக்கும் இடமோ ஊழல்ராணியின் பக்கம். நகைப்பிற்கிடமாக இல்லை? இது தற்காலத்திய ஓர் உதாரணம் மட்டுமே!

இந்நிலை தான் இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிறது. தங்களுக்கிடையில் அடித்துப் பிரிந்து கொண்டு தன்னை அழிக்க விரும்புபவர்களோடு இணங்கி சேர்ந்து கோமாளித்தனம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒரு புறம் இஸ்லாமிய சமூகத்தின் எதிரி எல்லா வழிகளிலும் இச்சமூகத்தை அழிப்பதற்கு வியூகம் அமைத்துக் கொண்டிருக்க, அதனை எதிர் கொள்வதற்கு தயாராக வேண்டிய இச்சமூகமோ தம்மில் அடித்துக் கொண்டு பிரிந்து சின்னாபின்னமாகி எதிரியின் பாதையை இலகுவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலை மாற இஸ்லாமிய சமூகம் ஒருங்கிணைந்து முயற்சிகள் மேற்கொள்வது இக்காலத்தின் கட்டாயமாகும். இனியும் எவ்வளவு காலம் தான் சில்லறை பிரச்சினைகளுக்கு தம்மிடையே அடித்துக் கொண்டு பிரிந்து சென்று கொண்டே இருப்பது? இஸ்லாத்தின் எதிரிகள் தமக்குள் ஆயிரம் பிணக்குகள் இருப்பினும், இஸ்லாமிய எதிர்ப்பு என்று வருகிறபோது ஓரணியில் திரண்டு இஸ்லாத்தை, முஸ்லிம்களைக் கருவறுக்க முனைவதில் இருந்தாவது இந்தச் சமுதாயம் படிப்பினை பெறவேண்டாமா?

இஸ்லாத்தின் விஷயத்தில் வரும் பொழுது உலகளாவிய அளவில் பல்வேறு விஷயங்களுக்காக எதிர் எதிர் கொள்கைகளில் இருப்பவர்கள் கூட ஓர் அணியில் சேர்ந்து ஒரே சக்தியாக நின்று கொண்டிருப்பதை இன்று நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். நிராகரிப்பாளர்களில் ஒவ்வொரு கூட்டத்தினரும் இஸ்லாத்தின் விஷயத்தில் ஏனைய கூட்டத்தினருடன் நட்புடனும், விசுவாசமாகவும் செயல் படும் பொழுது நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் விரோத மனப்பான்மையுடன் மோதிக் கொள்வது மிகப் பெரும் அநீதீயாகும்.

இது குறித்து இறைவன் தனது திருமறையில் எச்சரிக்கிறான்:“நிராகரிப்பவர்களில் சிலருக்கு சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; நீங்கள் இதனைச் செய்யாவிட்டால், அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்”(அல் குர்ஆன் 8:73)

எனவே உடனடியாக முஸ்லிம் சமூகத்திற்குச் சமூக ஒற்றுமையும், பரஸ்பர பாதுகாப்பும் மிக இன்றியமையாததாகும்.

இதையே இறைவன்,“… விசுவாசிகளே! நீங்கள் ஒருவரையொருவர் பலப் படுத்திக் கொள்ளுங்கள்….”(அல் குரான் 3:200) “நீங்கள் பிரிந்து விடாதீர்கள்”(அல் குர்ஆன் 3:103) என்று தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

மேலும்,“நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்கள்; ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்;”(அல் குர்ஆன் 49:10)“நிச்சயமாக இது உங்கள் சமுதாயம்(உம்மத்). (வேற்றுமையில்லா) ஒரே சமுதாயம் தான். மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையினால் என்னையே நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.”என்றும் கூறுகிறான்.

மேலும் நபி(ஸல்) அவர்கள், “முஃமின் மற்றைய முஃமினுக்கு கட்டடத்தைப் போன்றவன். அக்கட்டடத்தின் சில பகுதிகள் வேறு சில பகுதிகளுக்கு உறுதுணையாக அமைந்திருக்கும் என்று கூறி விட்டு தனது இரு கைகளையும் கோர்த்துக் காட்டினார்கள்”(புகாரி, முஸ்லிம்)”

“முஃமின்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதிலும், இரக்கம் கொள்வதிலும், ஒருவருக்கொருவர் கருணை காட்டுவதிலும் ஓர் உடம்பைப் போன்றவர்களாக இருக்க வேண்டும். அந்த உடம்பின் ஓர் உறுப்பு நோயால் அவதிப் பட்டால் ஏனைய உறுப்புக்கள் காய்ச்சல், விழித்திருத்தல் என்பனவற்றின் மூலம் அந்நோயில் பங்கு கொள்கின்றன.”(புகாரி, முஸ்லிம்)

“முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவன் அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். அவனை அவன் கைவிடவும் மட்டான்.”(புகாரி, முஸ்லிம்)

“ஒருவருக்கொருவர் நீங்கள் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் உறவுகளை துண்டித்து நடக்காதீர்கள். ஒருவருக்கொருவர் நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இட்டிருப்பது போல் அல்லாஹ்வின் அடியார்களாக – சகோதரர்களாக இருங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் (பகைத்து) ஒதுக்கி வாழலாகாது.”(புகாரி, முஸ்லிம்)

“கருத்து முரண்பாடு கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் கருத்து முரண்பட்டு கொண்டார்கள். அதனால் அழிந்து போனார்கள்.” (புகாரி)

என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபி மொழிகளிலிருந்து சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் பேணுவது முஸ்லிம்கள் ஒவ்வொருவருவர் மீதும் கடமை என்பதை அறிந்திட இயலும். தற்போதைய காலத்தின் அவசியமும் அதுதான்.

சமூக ஒற்றுமையின் அவசியத்தினை உணர்ந்த முஸ்லிம் சமூகத்திற்கு அதனைக் கொண்டு வருவதன் வழியைக் குறித்து சிந்திப்பதில் தான் குழப்பம்/பிரச்சனை ஏற்படுகிறது.

முஸ்லிம் சமூகத்திற்கிடையில் ஒற்றுமை ஏற்படாததன் மிக முக்கிய காரணம் என்ன?முதல் காரணம் – முஸ்லிம்களில் நாங்கள் மட்டுமே சரியான வழியில் இருக்கிறோம்; மற்றவர்கள் அனைவரும் வழிகேட்டில்/தவறான வழியில் இருக்கின்றனர் என்ற இறுமாப்பும், கர்வமும் அல்லது அந்த நினைப்பில் மற்ற முஸ்லிம்களை முஸ்லிமாக கருதாமை. அதன் மூலம் (கலிமா கூறிய) மற்றவர்கள் அனைவரையும் வழிகேடர்கள் என சமூகத்தின் முன் சித்தரிக்க முயல்வது.

உதாரணமாக, தங்களைத் தௌஹீத்வாதிகள் என்று குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வழிமுறையையும் மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம்களில் ஒரு சாரார், நபி(ஸல்) அவர்கள் தன்னையும், தன்னைப் பின்பற்றிய சஹாபாக்களையும் மற்றவர்களிலிருந்து பிரித்துக் காண்பிக்க உபயோகப்படுத்தாத வார்த்தையை தங்கள் அடையாளமாக ஆக்கி நபி வழியில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கி, இவ்வுலகத்திற்கு ஒரே இறைவன் அல்லாஹ் தான், முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனின் திருத்தூதராவார்கள் என சான்று பகர்கின்ற, தௌஹீத் என்ற பதத்தின் அர்த்தத்தினை முழுமையாக மனதில் ஏற்ற மற்ற முஸ்லிம்கள் அனைவரையும், இச்சாட்சி கூறிய பின்னரும் தௌஹீத்வாதிகள் அல்ல என்பது போல் சமூகத்தில் ஒரு மாயையைத் தோற்றுவித்து சமூகம் பிரிந்திருக்க வழிகோலியிருப்பது. இது சமூகத்தில் பாரிய விளைவினை, மிகப் பெரிய பிளவினைத் தோற்றுவித்திருக்கிறது.

இரண்டாவது காரணம் – இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும்மிகப் பெரிய சமூகப் பிரச்சினைகளில் எவ்வித பிரக்ஞையுமற்று இருத்தல். கடந்த இருபது வருட காலயளவில் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக இஸ்லாமிய எதிரிகள் மிகப் பெரிய அளவில் சதிவலைகளைப் பின்னிக் கொண்டிருந்த பொழுது முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்திய பிரச்சினை அல்லது சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினையாக சமூகத் தலைவர்களால் கருதப்பட்ட விஷயத்தை கவனித்துப் பார்த்தால் இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

கடந்த 20 வருடத்திற்குள் இந்தியாவில் பாபரி மஸ்ஜித், குஜராத், பம்பாய், கோயம்புத்தூர் என்று சமூகம் மிகப் பெரிய பிரச்சினைகளை சந்தித்த பிறகும், உலக அளவில் கஷ்மீர், ஆப்கானிஸ்தான், பலஸ்தீன், ஈராக், செச்னியா என இன்னும் பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற போதும், முக்கியமாக இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கிய அடையாளமான இறைவனின் இல்லம் பைத்துல் முகத்தஸ் யூதர்களின் பிடியில் இன்று சிக்கி படாதபாடு படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்ற போதும் இவற்றில் எதுவுமே சமூகம் எதிர் கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினையாக சமூகத்தில் எடுத்துச் செல்லப்படாமை அல்லது அதனை மட்டும் மிகப்பெரிய காரணமாக எடுத்துச்சென்று சமூகத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு தலைமையை ஏற்படுத்த முயலாமல், பிரித்த பணத்திற்கு கணக்கு பார்ப்பதிலும், கேட்பதிலும் அதில் ஏதாவது சந்தேகம் ஏற்படின் அதனை மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக சமூகத்தில் சித்தரித்து சமூகத்தை மேலும் மேலும் பிளவு படுத்திக் கொண்டிருப்பதும், அதனை எதிரிகளுக்கும் தெரியப் படுத்தி சமூகத்தினை/சகோதரர்களை அவமானத்திற்குள்ளாக்குவதும்.உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிடலாம்.

கடந்த 90 வருட காலமாக இந்தியாவில் சங்பரிவார் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதும், அவர்கள் தங்களுடைய பெண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வெளிப்படையாகவே மனரீதியாகவும், உடம்பு ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக தயார் செய்வதும், அவ்வாறு இராணுவத்துக்கு ஒப்பான ஆயுத பயிற்சி கொடுத்து நன்கு தேர்ந்த இலட்சக்கணக்கானவர்களை முஸ்லிம்களை அழிப்பதற்காகவே தயார் செய்து விட்ட பிறகும், இவர்கள் எதற்காக இப்படி ஆயுத பயிற்சி கொடுத்து பாசிஸ்டுகளை உருவாக்குகிறார்கள் என சாதாரண ஒரு கேள்வி கேட்க கூட முஸ்லிம் சமுதாய தலைவர்கள் என மார்தட்டிக் கொண்டிருப்பவர்கள் முன்வராததும் இதனைக் குறித்த சரியான அறிவை முஸ்லிம் சமுதாய மக்களுக்குப் பகர்ந்து அவர்களை இப்பிரச்சினையை நேரிட தயார் செய்யாமை.ஆனால் இது போன்று தன்னை அழிக்க சமயம் பார்த்திருக்கும் எதிரிகளை எதிர்கொள்ளச் சிறந்த வழியாக இறைவன் தனது திருமறையில் என்ன கூறுகிறான்:

“அவர்களை எதிர்ப்பதற்குரிய உங்களால் இயன்ற அளவுபலத்தையும், போதுமான குதிரைப்படைகளையும் திரட்டிக்கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்கள் எதிரிகளையும் பயமுறச்செய்யலாம். இதல்லாத எதிரிகளையும் பயமுறுத்தலாம்.ஆனால் நீங்கள் இதனை அறியமாட்டீர்கள். அல்லாஹ்வே அறிந்தவன். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதனைச் செலவு செய்தாலும் உங்களுக்குப் பரிபூரணமாக கூலிவழங்கப்படும். ஒருசிறிதும் அநீதம் இழைக்கப்படமாட்டாது.”(அத்.8 வசனம்.60)

இந்த சமூகத்தினை நரவேட்டையாடவும், இந்த சமூகத்தின் பெண்டிரை மானபங்கபடுத்தவும்(பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்துவாக பிறக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் உடைய சுற்றறிக்கையில் கண்ட தீர்மானத்தை கவனத்தில் கொள்ளவும்) லட்சக்கணக்கானவர்களை கடந்த 90 வருடங்களாக ஆயுத பயிற்சி கொடுத்து தயார் படுத்தி விட்ட பிறகும், அதனை எதிர்கொள்ளவோ அல்லது அதற்கு எதிராக மாற்று நடவடிக்கை எடுப்பது பற்றி எந்த எண்ணமுமற்று, இதனைக் கூறி சமூகத்தை விழிப்புணர்வடையச் செய்து அதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த முயலாமல், முடிந்த அளவு மற்றவர்களைத் தோண்டி துருவி ஆராய்ந்து குறை கண்டு அதனை பகிரங்கப்படுத்தி சமுதாயத்தை மேலும் மேலும் பிளவுபடுத்திக் கொண்டிருப்பவர்களை இனியேனும் முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அது போல் இச்சமுதாயத் தலைவர்கள் இனியேனும் இவ்விஷயத்தை முன்னிறுத்தி ஒன்றிணைய முயற்சி செய்ய வேண்டும்.

எனவே தற்போதைய மற்றும் எதிர்கால சமூகத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றும் மிகப் பெரிய பங்கு இவ்விரு பிரச்சினைகளையும் முதலில் சரி செய்வது மட்டுமேயாகும். அதற்காக முஸ்லிம்கள் உடனடியாக ஒருங்கிணைதலைக் குறித்தும் அதற்கான வழிகளைக் குறித்தும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர். ஆகவே இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளை முஸ்லிம்கள் மத்தியில் வைத்து அவர்களது கவனத்தையும், சிந்தனையையும், உள்ளத்தையும் அவற்றின் பால் திருப்பி விட முனைவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமையாகும்.

முஸ்லிம்கள் தமக்கிடையிலுள்ள பிரச்சினைகளுக்காக அந்நியப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை பல்வேறு கொள்கை முரண்பாடு கொண்டவர்கள், முஸ்லிம்களுக்கெதிராக தங்களது கொள்கை முரண்பாடுகளை மறந்து ஓரணியில் திரண்டு கொண்டிருப்பதை இச்சமூகம் உடனடியாக கண்டு கொண்டு விழித்துக் கொள்ள வேண்டும்.

எதிரெதிர் கொள்கை கொண்ட அமெரிக்காவும், ரஷ்யாவும் இன்று ஓரணியில்; போர்களினால் சிதறுண்ட ஐரோப்பிய நாடுகள் இன்று யூரோவின் மூலம் ஓரணியில்; ஏன் பரம எதிரிகளான கிறிஸ்தவர்களும், யூதர்களும் கூட முஸ்லிம்கள் என வரும் பொழுது ஓரணியில். கவனியுங்கள், தங்களது இறைவனைக்(!?) கொன்ற யூதர்களோடு அதனை மறந்து முஸ்லிம் சமூகத்திற்கெதிராக கிறிஸ்தவர்கள் ஒன்றிணைகின்றனர் எனும் போது ஒரே இறைவனையும், அவன் தூதரையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒரே கிப்லாவை முன்னோக்கும், ஒரு வேதத்தையும், ஒரே மார்க்கத்தையும் பின்பற்றும் முஸ்லிம்கள், தங்களுடைய சமுதாய நிலைநிற்பிற்காக, தம் சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக, பணம் போன்ற சாதாரண பிரச்சினைகளைப் பெரிய பிரச்சனைகளாக ஆக்கி சமுதாயத்தை, அது தற்பொழுது எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பாமல், விட்டுக் கொடுத்து ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க இயலாதா அல்லாஹ்விற்காக மட்டும்?

நிச்சயமாக முடியும்! இந்தச் சமூகம் நாளை இறைவன் முன் பதில் கூற கடமைப்பட்டுள்ளது என்பதையும், அப்பொழுது ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் போன்ற நிராகரிப்பாளர்கள்(கடைசி வரை நம்பிக்கை கொள்ள வில்லையெனில்) இச்சமூகத்திற்கும் இறைவனுக்கும் இடையில் சாட்சி பகரவோ முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்து மன்னிப்பு கேட்பதற்கோ அல்லது முஸ்லிம் சமூகத்தைப் போல் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை காலம் தாழ்த்தப்பட மாட்டார்கள் என்பதையோ மனதில் உறுதியாகப் புரிந்து உணர்ந்து கொண்டால் நிச்சயம் இச்சமூகம் ஓரணியில் திரளும் – இன்ஷா அல்லாஹ்.

பின் குறிப்பு: எந்த இயக்கத்தையும் சாராத சமூக அக்கறை கொண்ட ஒருமுஸ்லிமின் கருத்துக்களே இவை. இக்கட்டுரை யாரையும் குறை கூறவோ, இவரை விட அவர் பரவாயில்லை எனக் கூறி யாரையும் நியாயப் படுத்தவோ எழுதியதன்று. எனவே இதனைப் படிக்கும் சகோதரர்கள் தயவு செய்து இதற்கு இயக்க சாயம் பூச முயலவேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதனையும் மீறி யாராவது இதற்கு இயக்க சாயம் பூசி, என்னையும் ஏதாவது ஓர் இயக்கத்தோடு தொடர்பு படுத்தி அவதூறு பரப்புவதன்மூலம், இதில் நான் கூற வந்த கருத்தை சமூகத்திடமிருந்து திசை திருப்புவார்கள் அல்லது நீர்த்துப் போகச்செய்வார்கள் எனில் அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக நாளை மறுமையில் இதனைக் குறித்து எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிடுபவனாக என்னைக் காண்பீர்கள் – இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,

அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.