ரமளானும் நாமும்….

Share this:

புனித ரமளான் எனும் அல்லாஹ்வின் அருள்மிகு மாதத்தை மீண்டும் ஒருமுறை நமக்களித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இவ்வரிய மாதத்தினை அடைவதற்கு முஸ்லிம்களில் பலர் அன்று முதல் இன்று வரை அல்லாஹ்விடம் கண்ணீர் மல்க துஆ செய்து இதை அடைகின்றனர் என்பது நம்மில் பலருக்குப் புதியதாக இருக்கலாம். சற்று சிந்தித்துப் பார்த்தால் இதற்கு முன் சென்ற ரமளானில் இருந்து இந்த ரமளான் வரையுள்ள இடைப்பட்ட ஓராண்டில் நமது உறவினர்கள், தோழர்கள், சுற்றத்தினர், நமது நாட்டினர், ஊரினர் என்று எத்தனையோ பேர் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துள்ளனர்.

அவர்கள் தமது வாழ்க்கையின் இன்னுமொரு ரமளானை அதன் நன்மைகளை அதன் நிகரற்ற சிறப்புகளைப் பெறாமல் இவ்வுலகை விட்டுச் செல்ல நேர்ந்த நிலையில் இந்த ரமளானைச் சந்திக்க கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. அதற்கு அவனுக்கு நாம் நன்றி செலுத்திடக் கடமைப் பட்டுள்ளோம்.

 

இந்த ரமளானை நாம் அடைந்திருக்கும் நிலையில் ஒரு சில வினாக்களை நாம் நம்மையே கேட்டு இதனைப் பெற்ற நாம் நம்மை சுய ஆய்வுகளைச் செய்ய வேண்டும். அதன் மூலமே நாம் ரமளானின் உண்மையான நோக்கத்தையும் நன்மைகளையும் பெற்றுள்ளோமா? பெற முயலுகின்றோமா? அல்லது நாமும் இந்த மாதத்தை இதர மாதங்களைப் போல் அடைந்து இதனை ஒரு சில மாறுதலான செயல்பாடுகள், சடங்குகள், வணக்க வழிபாடுகள் என்று கழித்து அடுத்த மாதத்தை அடைகிறோமா? என்பது தெளிவாகும்.

 

அவற்றில் முக்கியமான சில கேள்விகள்:

இந்த ரமளானின் கடமையாகி இருக்கும் நோன்பின் நோக்கம் என்ன?

அதை நாம் ஏன் நோற்க வேண்டும்?

அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் பலன்களும் என்ன?

நமது நோன்பு அல்லாஹ்வின் அங்கீகாரம் பெறும் தகுதியில் உள்ளதா?

இந்த நோன்பின் பலன்களினை நாம் அடைந்துள்ளோமா?

இந்த பலன்களை அடைய நாம் எவ்வாறு செயல்படவேண்டும்? போன்றவை.

 

இந்த ரமளானின் நோன்பின் நோக்கம் என்ன?

இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில்

இறைநம்பிக்கையாளர்களே உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தினர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் இறையச்சம் (தக்வா) உள்ளவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)

என்று கூறுகிறான்.

 

நோன்பைப் பற்றி விவரிக்கக்கூடிய அவற்றின் நோக்கம் நன்மைகள் பற்றிக் கூறப்பட்டுள்ள பல நபிமொழிகளும் நாம் அனைவரும் நன்கறிவோம், அவற்றினைப் பெறுவதற்காக நாம் அனைவரும் இயன்ற வரை அதிகமாக முயன்றுள்ளோம், முயன்றும் வருகிறோம். அதில் எத்தனை நோன்புகள் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதியில் இருந்தன, நாம் எவ்வளவு நன்மைகளைப் பெற்றோம் என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் இதன் நோக்கத்தைப் பற்றிக் கூறும் போது இறையச்சம் பெறும் ஒரு வழியாக அல்லாஹ் இங்கு சிலாகித்துக் கூறியுள்ளதைக் கவனிக்கவேண்டும்.

 

இதன் மூலம் இறையச்சம் பெற்று அதன் துணையுடன் நமது அன்றாட அலுவல்களையும், வணக்க வழிபாடுகளையும் நாம் அமைத்துக் கொள்வதன் அவசியம் இங்கு அல்லாஹ்வினால் உணர்த்தப்படுகிறது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

 

அல்லாஹ் குர்ஆனில் இறையச்சம் (அல்லாஹ்வை அஞ்சி வாழ்ந்து வரும் சீரான அவனுக்கு முழுமையாக கட்டுப்பட்ட வாழ்க்கை) உள்ளவர்களே உங்களில் சிறந்தவர்கள் என்று 49 : 13 போன்று பல இடங்களில் திருமறையில் கூறியுள்ளான் என்பதை நாம் காணலாம்.

 

ஆக இந்த ரமளானின் நோன்புகள் மற்றும் இதர அமல்கள் வணக்கங்கள் நமக்கு பெற்றுத்தர வல்ல ஏனைய நாட்களினை விட பன்மடங்கு அதிகமான நன்மைகள்,மேலும் இந்த மாதத்தில் உம்ரா போன்ற வணக்கத்தின் மூலம் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தது போன்ற நன்மைகள், அவற்றை போல் லைலத்துல் கத்ர் எனும் ஒரு இரவின் மூலம் ஆயிரம் மாதங்களின் அதாவது சராசரி 83 ஆண்டுகளின் வணக்கத்தின் நன்மையை பெறும் பாக்கியம். இதை ஒவ்வொரு ஆண்டும் பெற்றால் நமக்கு முன் வாழந்த சமுதாயத்தினர்கள் போன்று நீண்ட ஆயுள்கள் செய்த வணக்கங்களின் நன்மைகள் என்பதை விட இறையச்சம் உடையவர்களாக மனிதர்கள் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த வெகுமதிகள் என்று இது நமக்கு சிறப்பித்துக் கூறுகின்றது.

 

நமது வாழ்க்கையில் இதற்கு முன்னர் நாம் பெற்ற ரமளான்களின் மூலம் நமது வாழ்க்கையில் நாம் இந்த இறையச்சம் தக்வா எனும் அருளை பெற்றுள்ளோமா? இந்தத் தக்வாவை வழங்க வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? அதன் மூலம் நமது வாழ்க்கையில் ஒளி மிளிரும் விதமாக அமைத்துள்ளோமா? அல்லது ரமளான் எனும் அருள்மிகு மாதத்தின் முழுமையான நன்மைகளையும் பலன்களையும் இழந்துவிடும் விதததில் இந்த மாதம் நம்மைக் கடந்து நமக்கு தக்வா எனும் அருளையும் அளிக்கப்பெறாமல் இருக்கிறோமா? என்று நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.

 

தக்வா என்பது உள்ளத்தில் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் தமது நெஞ்சத்தைச் சுட்டிக்காட்டி மூன்று முறை கூறினார்கள். ஒருவருடைய தக்வா வெளிப்படையாக செய்யும் செயல்களின் மூலமாக மட்டும் முழுமையாக வெளிப்படாது. உளத்தூய்மையுடன் அல்லாஹ் ஒருவனை மட்டுமே அஞ்சி நமது வாழ்க்கையயும் வணக்கங்களையும் அமைத்துக் கொள்வதன் மூலமே நாம் இதை உறுதி படுத்த இயலும்.

அதற்காகவே நாம் இது போன்ற சில கேள்விகளை கேட்டுக் கொள்ளவேண்டும்.

 

ரமளான் எனும் மாதத்தில் நாம் ஏன் நோன்பு நோற்க வேண்டும்?

இதற்கு இது அல்லாஹ்வின் கட்டளை, இது நபி( ஸல்) அவர்கள் வழிமுறை என்று ஒரு வார்த்தையில் பதிலளித்து விடலாம். ஆனாலும் இது இறைவனால் மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தி தீமையான பாவமான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக வழங்கியுள்ள ஒரு பயிற்சியாகும் என்பதே உண்மை.

 

இப்பயிற்சி இம்மாதத்தில் பெற்று இதனை இதர மாதங்களில் கடைப்பிடித்து மனிதன் தானும் தனது சமூகமும் சீரான சிறப்பான ஒழுக்கமான முறையில் உன்னத சமுதாயமாக மாறவேண்டும் அதற்கு வழிவகுக்கும் ஒரு செயல்திட்டமே இந்த நோன்பு எனும் பயிற்சி.

 

அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் பலன்களும் என்ன?

சாதாரண பள்ளி மாணவன் முதல் பல்வேறு துறை வல்லுனர்கள் வரை, ஏன் வீட்டில் மட்டுமே இருந்து குடும்பத்தை அதன் தேவைகளில் தமது பங்கை முறையாக அளிக்கும் பெண்கள் வரை அனைவருமே ஒரு செயல் திட்டம் உருவாக்கி செயல்பட்டாலே ஒழிய வெற்றி பெற இயலாது. ஒருவர் வெற்றி பெறும் விதத்தில் திட்டம் தீட்டவில்லையெனில் அவர் தோல்வி பெறத் திட்டம் தீட்டியவரைப் போலாவார். (One who fails to plan is like the one who plans to fail).

 

நமது நோன்பு அல்லாஹ்வின் அங்கீகாரம் பெறும் தகுதியில்  மற்றும் நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் உள்ளதா?

நாம் ரமளானின் முழுப்பலனை அடையும் விதத்தில் திட்டங்களைத் தீட்ட வேண்டும். எதைச் செய்ய ஏவப்பட்டுள்ளோமோ, அதைச் செய்யும் வகையிலும், எவற்றை விட்டு விலகக் கட்டளையிடப் பட்டுள்ளோமோ அவற்றை விட்டு முழுமையாக விலக வேண்டும் எனும் வகையிலும் நமது திட்டங்கள் அமைய வேண்டும். எவர் இந்த ரமளான் எனும் மாதத்தில் நோன்பு இருந்து கொண்டு வீணான பேச்சுகளையும் பாவமான காரியங்களிலிருந்தும் விலக வில்லையோ அவர் பசியையும் தாகத்தையும் தவிர ஏதும் பெற மாட்டார் என்ற நபிமொழியை உணர்ந்து நமது அன்றாட செயல்பாடுகளில் புறம் பேசுதல், அவதூறுகள், பொய் போன்றவை தவிர்க்கப்பட்டு, நேர்மை, நாணயம், உண்மை, நன்மைகள் விளைவிக்கும் செயல்கள் இறைச்சிந்தனைகள், குர்ஆன் ஓதுதல் மார்க்க நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் என்று தக்வாவை வளர்க்கும் காரியங்களில் அதிகமாக ஈடுபட வேண்டும்.

 

டீ.வி சீரியல்கள், சினிமாக்கள், தீயன பேசல், தீயன பார்த்தல், தீயன கேட்டல், தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகேட்டில் இட்டுச் செல்லும் விதமான இதர செயல்பாடுகள், அல்லாஹ்வின் வரம்புகளுக்கு மாற்றமான மஹ்ரமற்ற தடுக்கப்பட்டுள்ள உறவு முறைகளான ஆண்கள் பெண்கள் கலந்துவிடும் கூட்டங்கள், விருந்துக்கள், தனிமையை ஏற்படுத்தும் நிலையில் ஆன இதர போன், சாட்டிங் போன்ற பேச்சுக்கள் மெயில்கள் என்று இன்று வளர்ந்துள்ள ஏனைய வழிகேட்டின் வலைகளில் விழுந்து தக்வாவை இழந்து விடும் நிலையைக் கைவிடவேண்டும். சுருக்கமாக அல்லாஹ்வின் திருப்தியை இழக்கச்செய்யும் இறையச்சத்தை மறக்கடிக்கச் செய்யும் ஷைத்தானைத் திருப்திபடுத்தும் செயல்களை முழுமையாக கைவிடவேண்டும்

 

இவை போன்றவற்றை விட்டு உள்ளத்தை தூய்மைப்படுத்தாமல் இப்படி நோன்பு இருப்பது அந்த நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியை இழப்பதையும் விட நாம் சுவர்க்கம் செல்லும் தகுதியையும் இழக்க வைத்து விடும் என்பதை ரமளானில் மட்டுமன்றி என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல் பகட்டு, ரியா எனும் சிறிய இணைவைப்பாகிய புகழை விரும்பச் செய்யப்படும் செயல்கள், வீண்விரயம் போன்றவற்றில் இருந்தும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் முதல் இதர குடும்ப நிகழ்ச்சிகளிலும் இதில் கவனமாக இருத்தல் வேண்டும். அல்லாஹ் நமக்கு இக்லாஸ் எனும் உளத்தூய்மையை நமது அனைத்து காரியங்களிலும் வழங்குவானாக. பகட்டையும் புகழையும் விரும்பாமல் நமது அமல்கள் அமைய நமக்கு தவ்பீக் செய்தருள்வானாக.

 

இந்த நோன்பின் பலன்களினை நாம் அடைந்துள்ளோமா?

இந்த கேள்விக்கு பதில் தேவையெனில் நாம் நம்மை சுய ஆய்வு செய்தால் உணர முடியும். நிகழ்ந்து சென்ற சிறிய பெரிய தீமைகள் பாவங்கள் போன்றது பாவமன்னிப்பு கோரப்பட்டு, அவற்றினை மீண்டும் தொடராமல் அவற்றின் தீமைகள் இருக்கும் நிலையில் நோன்பு நோற்பது மேலும் இது போன்றவற்றில் ஈடுபடுவது அசுத்தமான பாத்திரத்தினைக் கழுவாமல் அதில் தூய்மையான உணவை சமைப்பதற்கு சமம். அசுத்தததின் அளவு எவ்வளவு அதிகமோ உணவு அவ்வளவு அதிமாக கேடானதாக அமையும் என்பதைப் போல் இந்த தீயகாரியங்கள் நமது அமல்களை கலப்படமான ஒரு தீமையாக மாற்றிவிடலாம். அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.

 

ஒரு ரமளான் நம்மை கடந்து சென்ற பின்னரும் இது போன்ற மேற்கூறப்பட்ட நிலை நம்மில் தொடர்ந்தால் நாம் நோன்பு நோற்பது வெறும் பட்டினி கிடப்பது தான் என்பதும், நமது குர்ஆன் ஓதுதல் வெறும் அரபி எழுத்துக்களை வாசித்து மறத்தல் என்பது போன்ற ஒரு நிலையாகிவிடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். குர்ஆன் மூலம் அல்லாஹ் விதித்துள்ள வரம்புகள் பேணப்பட்டு அவன் கட்டளைகளுக்கு உட்பட்டு நாம் இம்மாதத்தில் செயல்படப் பயின்று அதை இறுதிமூச்சிருக்கும் வரை தொடர்ந்து வருவது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட்டு நாம் நோன்பின் பலனை அடைந்துள்ளோமா என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

 

நோன்பின் நன்மைகள் மற்றும் அவற்றின் அந்தஸ்துகளில் சிறிதும் சந்தேகம் கொள்ளவேண்டியது இல்லை. எனினும் நாம் நமது ரமளான் அமல்களாகிய நோன்பு, குர்ஆன், தொழுகை, திக்ரு, ஸதகா போன்ற அனைத்திலும் இந்த அந்தஸ்தைப் பெறும் தகுதியில் உள்ளவர்களாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் நமது செயல்களை அமைக்க வேண்டும்.

 

இந்த ரமளானின் பலன்களை முழுமையாக அடைய நாம் எவ்வாறு செயல்படவேண்டும்?

ரமளான் மாதம் வரும் முன்னரே நாம் இதற்கான முழுமையான வியூகமான திட்டங்களில் ஈடுபட்டு திட்டமிட்டு அதன் அடிப்படையில் செயல்படுதல் மிகவும் அவசியம்.

 

ரமளான் எனும் இந்த அருள்நிறை மாதம் நோன்பு எனும் பயிற்சி என்பதை உணர்ந்து இதை நமது அமல்களில் கொண்டு வர வேண்டும். அதிகமான நேரம் சமையல் அறைகளிலும் படுக்கையறையில் ஓய்விலும், இதர விதத்திலும் கழிந்து விடாமல் அதை முறையாக குர்ஆன் ஓதுதல், தொழுகைகள் முறையாக ஜமாத்தாக தொழல், கவனமின்றி இருந்த ஸுன்னத்தான நபிலான தொழுகைகளை நிறைவேற்றல், இஸ்லாமிய நிகழ்சிகள் பயான்கள், இறைவழியில் பொருளை ஸதகா எனும் தர்மம் செய்தல் போன்றவற்றில் பேணுதலை அதிகரிக்கவேண்டும்.

வீண்விரயமாக அதிகமாக சமைத்து அதிகமாக சாப்பிட்டு வயிற்றையும் உடலையும் நோன்பையும் கெடுத்து சோம்பல், உடல் பருமன் போன்ற இதர நோய்கள் கஷ்டங்கள் ஏற்படுத்தாமல் அளவாக உட்கொண்டு நபி(ஸல்) அவர்கள் வழியில் இதனைக் கடைபிடித்தல் வேண்டும். ரமளான் எனும் இந்த வணக்கம் இறைத்திருப்தியைப் பெறச்செய்கின்றோம் என்பதை ஒருக்காலும் மறக்கலாகாது. இது நோன்பு நமது உடலையும் உள்ளத்தையும் கட்டுபடுத்தவல்ல பயிற்சி வணக்க வழிபாடுகள் அதிகாகவேண்டிய மாதம் என்பதற்கு மாற்றமாக இதை விருந்துகளும் உணவுகளும் அதிமாகவும் அதை சமைப்பதிலும் அதற்காக கடைத்தெருக்களில் ஷாப்பிங் எனும் பெயரில் நேரத்தைப் பாழ்படுத்தாமலும் இருத்தல் வேண்டும். நோன்பிற்குத் தேவையான இதர பொருட்களை இயன்ற வரை நோன்புக்கு முன்னரே வாங்கிவிட வேண்டும், இதர அவசர காரியங்களில் இருந்து சீக்கிரம் வீடுகளில் திரும்பி இதர வணக்கங்களிலோ, பள்ளியிலோ நேரத்தை பயனாகக் கழிக்க வேண்டும். குர்ஆனை அதிகமாகவும் பொருள் உணர்ந்தும் ஓத வேண்டும், அதை வாழ்க்கையில் முழுமையாகச் செயல்படுத்த உறுதியாக இருக்கவும் செயல்படவும் வேண்டும்.

 

இயன்றால் உம்ரா செல்ல வேண்டும், அதிகமாக மார்க்கக் காரியங்களில் தான தர்மங்களில் ஈடுபட வேண்டும். ரமளானின் இரவுகளை அதிகமான வணக்கங்களாலும், துவாக்களாலும் அலங்கரிக்க வேண்டும். இறுதிப் பத்தில் உள்ள லைலத்துல் கத்ர் எனும் இரவை அடைய பத்து இரவுகளிலும் அதிகமாக வணக்கங்களில் ஈடுபட்டு இதைப் பெற முயலவேண்டும். இதற்கு வழி வகுக்கும் விதமாக பெருநாளுக்கு என்று கடைவீதிகளில் இரவில் அலைந்து துணிமணிகள் போன்றவற்றை வாங்குவதை தவிர்த்து முன்னரே வாங்கி விடுவதன் மூலம் அசதியும் களைப்புமின்றி நமது வணக்கங்களை அமைத்து அதன் மூலம் முழுமையான பலன்களையும் அதன்மூலம் அல்லாஹ் வலியுறுத்தியுள்ள இறையச்சம் எனும் தக்வாவும் இன்ஷா அல்லாஹ் பெற இயலும்.

 

அல்லாஹ் நமது ரமளான் காரியங்களைச் சீராக்கவும், அதன் மூலம் நமது வாழ்க்கையில் இறையச்சம் ஏற்படவும், நமது அமல்கள் அல்லாஹ்வின் அங்கீகாரம் பெறவல்லதாக மாறி நாம் உண்மையான ரமளானின் பலனைப் பெற்று இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் பெற அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக. ஆமீன்.

 

ஆக்கம்: இப்னு அப்துல்லாஹ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.