இஸ்லாம் கட்டமைக்கப்பட்டுள்ள அடித்தளங்களுள் முக்கியமான ஒன்று மறுமை நம்பிக்கை ஆகும். மரணத்திற்குப் பின் மறுமை நாளில் நீதிவிசாரணை நடத்தப்பட்டு இம்மை செயல்களுக்கேற்ப சுவர்க்கம் அல்லது நரகம் மனிதர்களுக்கு வழங்கப்படும் என்பதை மனப்பூர்வமாக நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். ஒரு மனிதன் இஸ்லாத்தை மனதார ஏற்றுக் கொள்கிறான் எனில், அவன் மறுமையில் கிடைக்கும் அந்த நிரந்தர சுவர்க்கத்திற்கான தனது முதல் அடியை எடுத்து வைக்கின்றான் என்று பொருள்.
அவ்வாறு சுவர்க்கத்தைக் குறிக்கோளாக வைத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு, அச்சுவர்க்கம் கிடைப்பதற்குரிய அடிப்படை நிபந்தனையைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் மிக எளிய விளக்கமாகத் தான்,
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
''என்னுடைய சமுதாயத்தினரில் ஏற்க மறுத்தவரைத் தவிர மற்ற அனைவரும் சுவர்க்கத்தில் நுழைவார்கள்". (அதற்கு) "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?" என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். "எனக்குக் கட்டுப்பட்டவர் சுவர்க்கத்தில் நுழைவார். எனக்கு மாறு செய்தவர் நிச்சயமாக (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி (7280).
எனும் இந்நபிமொழி அமைந்துள்ளது.
அதன்படி, சுவர்க்கம் செல்வதன் இரத்தினச் சுருக்கமான நிபந்தனை இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவதாகும். எவர் ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்கின்றாரோ அவர் நரகம் செல்வார்.
இந்நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள், "என்னுடைய சமுதாயத்தினரில்" என குறிப்பிட்டு மனிதர்களில் ஒரு சாராரை குறிப்பது போன்று குறிப்பிடுகின்றார்கள். திருக்குர்ஆனிலிருந்தும் ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்தும், ஒவ்வொரு நபியும் அனுப்பப்பட்ட காலகட்டங்களில் வாழ்ந்த மக்களை அந்நபிமார்களின் சமுதாயத்தினர்கள் என்பதாக அறிந்து கொள்ளமுடிகின்றது. அதன்படி இது நபி(ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்திலிருந்து இவ்வுலக இறுதிநாள் வரை இவ்வுலகில் வாழ்கின்ற ஒவ்வொருவரையும் குறிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்களின் சமுதாயம் இந்த ஹதீஸின் படி இரு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. ஒரு பிரிவு நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்ட, அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வந்த செய்தியை உண்மையாக்கி அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் காண்பித்து தந்த வழிமுறைபடி வாழும் பிரிவினர். இவர்கள் சுவர்க்கத்துக்கு உரியவர்களாவர்.
மற்றொரு பிரிவினர், நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்கின்ற, அவர்களின் தூதுத்துவச் செய்தியை ஏற்காமல் புறக்கணிக்கின்ற அல்லது அவர்கள் காண்பித்துத்தந்த வழிமுறைபடி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத பிரிவினர். இவர்கள் நரகம் செல்லக் கூடியவர்களாவர்.
நாளை மறுமையில் தீர்ப்பளிக்கப்படும் பொழுது, இறுதித்தூதரான முஹம்மது(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர்களில் ஒவ்வொருவரின் செயல்களும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படி அவர்களின் முன்மாதிரி வாழ்வுக்கு கட்டுப்பட்டு அமைந்ததா என்ற உரைகல்லைக் கொண்டே உரசிப்பார்க்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.