அரசியல்வாதிக்கான ஆரவார அடையாளங்கள் ஏதுமின்றி வெகு இயல்பாக, அடுத்த வீட்டு மனிதரைப் போலவே இருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது MLA.
சமீபத்தில் உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியா வந்துள்ள நிலையில், தமது இயக்கம் சார்ந்த நிகழ்வுகளுக்காக இரண்டு நாள் ரியாத்தில் தங்கியிருந்தார்.
அடுக்கடுக்கான நிகழ்வுகளில் அகப்பட்டுக் கிடந்தவரிடம் ஒரு நேர்காணலுக்கு நேரம் கேட்டோம். சமுதாய மக்களுக்கான ஒரு சந்திப்புக்குப் பிறகு, தம் தொண்டர்களின் ஓர் இருப்பிடத்திற்குப் புறப்பட்ட நிலையில் “நீங்களும் வாருங்கள், வண்டியிலேயே செவ்வியை வைத்துக் கொள்ளுங்கள்” என்று மண்டலத் தலைவர் சொல்லவும் அது தான் உகந்த நேரமாகப் பட்டது.
நம் இடக்கு மடக்கான கேள்விகளுக்கும் இன்முகமாகத் தந்த சகோதரர் அப்துஸ் சமது MLA அவர்களின் மறுமொழிகள் இதோ :
கேள்வி : இலஞ்சம் ஊழலைத் தவிர்க்க இயலாமல், சாமானியர்களும் கொள்கை ஜாம்பவான்களும் சறுக்கிவிழுகிற இந்தியச் சூழலில் உங்கள் ஈமானிய கற்பை எவ்விதம் பாதுகாக்கிறீர்கள்?
அப்துஸ் சமது MLA : “நீங்கள் சொல்வது சரியே, இது ஒரு பெரும் போர்க்களம் தான். இந்தியத் தேர்தல் விதிகளில் உள்ள குளறுபடிகளை யோசித்துப் பாருங்கள் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள செலவு தொகை ஒரு சட்டமன்ற வேட்பாளருக்கு ₹25 இலட்சம் மட்டுமே. ஆனால் யதார்த்தத்தில் கோடிகளில் ஒவ்வொருவரும் செலவு செய்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்கத் தான் செய்கிறது
ஆனால் அதற்காக அரசியலை விட்டு ஒதுங்கினால் அதிகாரம் நம்மை ஒதுக்கிவிடும். எங்களைப் பொறுத்த அளவில் எங்கள் அமைப்பு விதிப்படி “வேட்பாளர்கள் தம் சொந்தப் பணத்தைச் செலவு செய்யலாகாது” என்று விதி வைத்திருக்கிறோம். இயக்கம் தான் அவர்களுக்காக தேர்தல் செலவு செய்யும். தம் சொந்தப் பணத்தை இத்தகையத் தேர்தல் செலவுகளில் இழக்காதபோது ஊழலில் இலஞ்சத்தில் ஈடுபடும் தேவையும் இல்லாமல் போகிறது.”
கேள்வி: முஸ்லிம்களின் சிக்கலையும் திராவிடக் கட்சிகள் பேசுகின்றன என்றால் முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியின் தேவை என்ன?
“தீண்டாமையின் கொடுமையை ஒரு தலித்தாக இருக்கும்போது தான் உணர முடியும் என்பது எப்படி உண்மையோ அப்படி வெறுப்பு அரசியலின் பாதிப்பை முஸ்லிம் சிறுபான்மையினரால் தான் முழுமையாக உணர முடியும். அல்லாமல் முஸ்லிம்களின் தனித்துவமான இடர்ப்பாடுகளை பொதுவான கட்சிகளை விட முஸ்லிம்களின் கட்சிகள் தான் சரியான முறையில் பேச முடியும். அந்த வகையில் முஸ்லிம்களுக்கான தனித்த கட்சிகள் தேவை தான். காயிதே மில்லத் கூட சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக் கலைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட போது அதற்கு எந்த வகையிலும் ஏற்பின்றி மறுப்பளித்தார்கள். நாம் கடலில் கரையும் சர்க்கரை ஆகி விட முடியாது “
கேள்வி: ஏற்கனவே முஸ்லீம்லீக் இருக்கும் போது தமுமுக போன்ற புதிய கட்சிகள் தேவையா?
“நிச்சயமாக, காயிதேமில்லத் காலத்தில் எழுச்சி மிக்க அரசியல் கட்சியாக முஸ்லீம் லீக் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சமுதாய களத்தில் இன்னும் வீரியமாக செயல்பட வேண்டிய அமைப்பின் தேவை இருந்ததால் முஸ்லிம் சமுதாயத்தின் குரலை மேலும் அழுத்திப் பிரதிபலிக்க ஓர் அவசியம் ஏற்பட்டது. அதனால் தமுமுக தொடங்கப்பட்டது. அடிமை இந்தியாவில் கொடுக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவில் பிடுங்கப்பட்ட இட ஒதுக்கீடு என்னும் சமுதாயக் கோரிக்கையை வென்றெடுத்த பேரியக்கமாகத் தமுமுக திகழ்கிறது.”
கேள்வி: ‘தமுமுக’ என்கிற இயக்கம் ‘மமக’ என்கிற அதன் தேர்தல் அரசியல் கட்சியால் நீர்த்துப் போய்விட்டதாக ஒரு தோற்றம் உள்ளதே?
“அப்படிச் சொல்ல முடியாது. தமுமுக என்பது உரிமைகளைக் காக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு பேரியக்கம். ஆனால் மமக என்பது தேர்தல் அரசியல் களத்தில் அனைத்துத் தரப்பையும் அரவணைத்துச் செல்லும் ஓர் அமைப்பாகவும், அதே நேரத்தில் உரிமைகளைக் கோரிப் பெறுவதில் சமரசமற்ற வீரியத்துடன் செயலாற்றி வருகிறது. அண்மையில் மதுரையில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியும் மாநாடும் இதற்குச் சான்று.”
கேள்வி: புதிது புதிதாக அரசியல் கட்சிகள் வருவது பற்றி, அதன் நன்மை தீமைகள் பற்றி?
“நிச்சயம் அது ஆரோக்கியமான போக்கு இல்லை தான். எனினும் மக்கள் தெளிவாக அப்படி வருகிற எல்லாக் கட்சிகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. பெரும்பாலானவை தன் முனைப்பாலும் தன் ஆதாய நோக்கிலுமே உள்ளன. தக்கவையே வாழும்.”
கேள்வி: முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சி இருப்பது தவறில்லை என்னும் போது பாஜக போன்ற கட்சிகள் எப்படித் தவறாகும் என்கிற பொதுக் கேள்வி உள்ளதே?
“வகுப்புக்கு ஒரு கட்சி இருப்பதில் தவறில்லை. வகுப்புவாதக் கட்சியாக இருப்பதுதான் தவறு.”
கேள்வி: முஸ்லிம்களின் கூட்டமைப்பு எப்படிச் செயல்படுகிறது?
“பொதுவான அம்சங்களில், CAA போன்ற சிக்கல்களில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகிற போது கூட்டமைப்பாக இணைந்து செயல்பட்டு அரசின் கவனத்தை ஈர்க்கிறோம். எனினும் தேர்தல் அரசியல் என்று வரும்போது எதிரெதிர் முகாம்களில் பயணிக்கும் நிலை வருகிறது. தவறில்லை.”
கேள்வி: பாசிசம் இன்றைக்கு ஜனநாயகத்தின் தூண்களைத் தன்வயப்படுத்தி விட்ட நிலையில் மீட்சிக்கு வழி என்ன?
“உண்மைதான் எனினும் நாம் நம்பிக்கை இழக்கலாகாது. ஜனநாயகத்தின் இந்த அடிப்படைகளில் நமது பங்கை நாம் ஒவ்வொருவரும் முழுமையும் செலுத்தி வலுப்படுத்த வேண்டும். அதற்கு நமது அமைப்புகள், நிதியாளர்கள் தொடர்ந்து உதவ வேண்டும்.”
கேள்வி: வாக்குத் திருட்டு பற்றியும் அதன் மீதான எதிர் நடவடிக்கைகள் பற்றி?
“நிச்சயமாக வாக்குத்திருட்டு என்பது ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்க்கும் ஒரு பேராபத்து ஆகும் என்பதை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். அவருடைய முயற்சிகளுக்கு அனைத்து ஜனநாயகச் சக்திகளும் ஒன்றிணைந்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையும் கூட. நிச்சயமாக மாற்றம் வரும்.”
கேள்வி: மாணவர்களுக்கு அரசியல் தேவையா? அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
“மாணவர்கள் முதலில் கல்வியில் தான் கவனம் செலுத்த வேண்டும் எனினும் அரசியலில் விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும். ஃபாசிச ஒன்றிய அரசு முன்வைக்கிற அரசியல் என்பது குறிப்பிட்ட இனத்திற்கான உயர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மாறாக திராவிட அரசியல் என்பது அனைத்து மக்களுக்குமானது என்பதை வருங்காலத் தலைமுறை உணர்ந்து தெளிய வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை எங்கள் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.”
நாம்: நேரத்தை ஒதுக்கி அழகான நேர்காணல் அளித்தமைக்கு நன்றி.
அப்துஸ் சமது MLA: நன்றி உங்களுக்கும்.
– இப்னு ஹம்தூன்
https://satyamargam.com/author/fakhrudeen/
