ஒரிஸ்ஸா – மற்றொரு ஹிந்துத்துவ சோதனைக்கூடம்!

ரிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் நிரம்பிய காந்தமால் மாவட்டத்தில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்கள், பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.

காந்தமால் நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. கிறிஸ்துவப் பாதிரியார்களையும் கன்னியாஸ்திரீகளையும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், காட்டுப் பகுதிக்கு விரட்டி அடித்தனர்.

 

இந்தப் போராட்டத்தில் தலைமையேற்று ஈடுபட்டவரும் கிருஸ்துவர்களை இந்து மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி வந்தவருமான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் காந்தமால் மாவட்டத் தலைவர் லட்சுமணானந்தா சரஸ்வதி, கலஹந்திபுல்பானிப் பகுதியிலமைந்த தமது ஜலேஷ்பட்டா ஆசிரமத்தில் இருந்தபோது கடந்த சனிக்கிழமை (23.08.08) இரவு 9 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மக் கும்பலால் சுட்டுக் கொல்லப் பட்டார். அவரோடு இருந்த அவரது சீடர்கள் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு, இக்கொலைகளுக்காகச் செய்ய வேண்டுவது என்ன?

கொலைகாரர்களைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

ஆனால், குஜராத்தைப் பின்பற்றி, ஒரிஸ்ஸாவிலும் சிறுபான்மையினரைப் பழிவாங்குவதற்கு ஆளும் கட்சி இந்தக் கொலைகளைப் பயன் படுத்திக் கொண்டது.

சம்பவம் நடந்த மறுநாளான ஞாயிறன்று (24.08.08) காவிகளின் வன்முறை காந்தமால் மாவட்டம் முழுதும் தலை விரித்தாடியது. ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய வன்முறை திங்கட்கிழமை முழுவதும் தொடர்ந்தது. காந்தமால் மாவட்டத்தில் மட்டுமின்றி ஒரிசா முழுவதும் விஎச்பி, பஜ்ரங்தள் பாஜக குண்டர்கள் கிறிஸ்துவ தேவாலயங்களில் புகுந்து அடித்து நொறுக்கினர். ஏராளமான தேவாலயங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட காவி அமைப்புகள் சார்பாக 25.08.08 அன்று 12 மணி நேரபந்த்என்ற பெயரில் வன்முறை அவிழ்த்து விடப் பட்டது. இதேமுறை குஜராத்திலும் பின்பற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

காந்தமால் மாவட்டத்தில் பலிகுடா, பர்காமா, திஹாபலி, உதயகிரி உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற தேவாலயங்கள், வழி பாட்டுக் கூடங்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன. தலைநகர் புவனேஸ்வரில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.

பெயருக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்த போதிலும் அதையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்ட வி.எச்.பி. குண்டர்கள் ஆயுதங்களுடனும் கொலைவெறியுடனும் அப்பாவி கிறிஸ்துவ மக்களைத் தேடித் தேடித் தாக்கினர்.

சாதாரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில், காவல்துறையின் அனுமதியின்றி எவரும் தெருக்களில் நடமாட இயலாது. ஆனால், இங்கு காவிகளின் வன்முறைகளைக் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

காந்தமால் மாவட்டத்தில் கன்னியாஸ்திரீ ஒருவர் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஒரு பாதிரியார் பலத்த காயமடைந்தார். 20 குழந்தைகள் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.

பார்கார் பகுதியில் ஒரு கிறிஸ்துவ அனாதை ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர்.

இதேபோல ரூபா என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்குத் தீவைக்கப்பட்டது. இதில் ராசானந்த பிரதான் என்பவர் உயிரோடு கருகினார்.

நவுகான், ரைக்கா, உதயகிரி, பிரிஞ்சியா, பலிகுடா போன்ற பகுதிகளில் தேவாலயங்களும், வீடுகளும் தொடர்ச்சியாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ரைக்கியா பகுதியில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பல இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

காந்தமால் மாவட்டத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னரும் காந்தமால் மாவட்டத்தில் பல இடங்களில் கலவரம் நீடிப்பதாகவும் திகாபலி, உதயகிரி மற்றும் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிக்கும்பலின் அராஜக பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் ஒரிஸ்ஸா வன்முறைகள் ஆவணப் படுத்தப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

ஒரிசாவில் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு எதிராக நடக்கும் வன்முறையைக் கண்டித்து நேற்று (29.08.08) நாடு முழுவதும் ஒருநாள் தங்களது நிறுவனங்களை மூடி பந்த் நடத்தி கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இதற்கு நாடுமுழுவதும் முஸ்லிம்களும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துத் தங்களின் கல்வி மற்றும் வியாபார நிறுவனங்களை மூடினர். ஆந்திர மாநிலம் முழுவதும் நேற்றைய தினம்(29-08-2008) இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்களின் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. தவிர இஸ்லாமிய தொழில் துறை நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதில் Muslim Educational Social and Cultural Organization (MESCO), Minority Development Forum, HELP Hyderabad, Tameer-e-Millat, Amarat-e-Millat-e-Islamia ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.

கடந்த 22.01.99இல் பழங்குடி மக்களிடையே சேவையாற்றி வந்த ஆஸ்திரேலிய மருத்துவர் கிரகாம் ஸ்டேன்ஸ் தமது இளம் மகன்கள் பிலிப், திமோத்தி ஆகியோருடன் காவி வெறியர்களால் எரித்து கொல்லப்பட்டது இங்குக் குறிப்பிடத் தக்கது.

சங்கபரிவார பயங்கரவாதிகள் நடத்தி வரும் மிருகத்தனமான தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. முஸ்லிம் தலைவர்கள் உட்பட பல்வேறு சமுதாயத் தலைவர்களும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வெறிச்செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

தமீரே மில்லத்தினைச் சேர்ந்த மவுலானா அப்துல் ரஹீம் குறைஷி அவர்களும், அமராத்தே மில்லத்தே இஸ்லாமியாவினைச் சேர்ந்த மவுலானா ஹமீதுத்தீன் ஹுஸ்ஸாமி ஆகிய தலைவர்கள் தமது கடும் கண்டங்களைப் பதிவு செய்துள்ளனர். “மனித நேயம் தழைக்கவும், மத நல்லிணக்கம் ஓங்கவும் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இந்த அநீதிக்கு எதிராக போராட முன்வர வேண்டும்” என்றும் ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெஸ்க்கோ நிறுவனத்தினைச் சேர்ந்த டாக்டர் ஃபக்ருத்தீன் முஹம்மத் அவர்கள் கூறுகையில், “சிறுபான்மையினருக்கு எதிராக இந்திய அளவில் நடைபெறும் இத்தகைய வன்முறைகளை எதிர்த்துப் போராட மனித நேயமுள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். சிறுபான்மையினர் பாதுகாப்பாக இந்தியாவில் வாழ வேண்டுமெனில் இத்தகைய போராட்டங்கள் தேவை” என்று வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினர் வளர்ச்சிப் பேரவையினைச் சேர்ந்த ஜாஹீருத்தீன் அலி கான் அவர்கள் கூறுகையில் “சங் பரிவார் நாடெங்கிலும் நிகழ்த்தி வரும் இத்தகைய வெறியாட்டத்தினைக் கண்டித்து இன, மத பேதமில்லாமல் அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்த வேண்டும்” என்று சாடியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திரு. திருமா வளவனும் ஹிந்துத்துவ அமைப்பினரின் பயங்கரவாதத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“கடந்த 23ம் தேதி ஒரிஸ்ஸாவின் காந்தமால் மாவட்டத்தில் தொடங்கிய இந்துத்துவ வெறியர்களின் வன்முறை வெறியாட்டம் கடந்த 5 நாட்களில் மாநிலம் முழுவதும் பரவி பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மீதும் கிறிஸ்துவ நிறுவனங்கள் மீதும் ஏவப்பட்டு வருகிறது.

ஒரிஸ்ஸா மாநிலத்திலும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவிய பழங்குடி மக்களை, பொய்யான வாக்குறுதிகளையும் ஆசை வார்த்தைகளையும் சொல்லி மீண்டும் இந்து மதத்தில் சேரவைத்து அப்பழங்குடி மக்களை மீண்டும் அடிமைகளாக மாற்றி கோலோச்ச வேண்டும் என்று மதவெறியுடன் செயல்பட்டு வந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த லட்சுமணானந்த சரஸ்வதி என்பவரை, மாவோயிசப் போராளிகள் சுட்டுக் கொன்றதாக செய்தி வெளியானவுடன் இந்துத்துவ அமைப்பினர் கிறித்துவர்களுக்கு சொந்தமான தேவாலயங்களையும் பாடசாலைகளையும் வீடுகளையும் அலுவலகங்களையும் தாக்கி தீயிட்டு வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இத்தகைய வன்கொடுமைகளை விடுதலைச் சிறுத்தைகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதுடன் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

24ம் தேதி கட்டாக், புவனேஸ்வரம் மறைமாவட்டத்தை சேர்ந்த நவ்கான் என்ற இடத்தில் உள்ள `ஜன்விகாஸ் கேந்திரம்’ என்ற சேவை மையத்தில் பணியாற்றி வந்த ஒரு இளம் கன்னியாஸ்திரியை கூட்டமாய் வந்த இந்துத்துவ வெறியர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இந்த நிகழ்வு 1999ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி பழங்குடி மக்களிடையே சேவையாற்றி வந்த ஆஸ்திரேலிய மருத்துவர் கிரகாம் ஸ்டேன்ஸ் தமது இளம் மகன்கள் பிலிப், திமோத்தி ஆகியோருடன் அவருடைய ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டதை நினைவூட்டுகிறது.

இந்துத்துவ மத வெறியர்களின் இந்த வன்முறை வெறியாட்டத்தை ஒரிஸ்ஸா மாநில அரசும் இந்திய அரசும் கட்டுப்படுத்தி இந்துத்துவ மத வெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதோடு பாதிப்புக்குள்ளான கிறிஸ்தவர் அனைவருக்கும் உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஒரிஸ்ஸாவில் ஹிந்துத்துவ வெறியர்கள் கிறிஸ்தவர்களின் மீது நடத்திய வெறித்தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் சிறுபான்மை சமூகத்தின் மீதும் பாலியல் வன்முறை நிகழ்த்துவதையும் அப்பாவிகளை உயிரோடு எரித்துக் கொலை செய்வதையும் ஹிந்துத்துவ வெறியர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இதற்கு ஏதாவது ஒரு வகையில் அரசுகளும் காவல்துறையும் உதவி புரிவது வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிராகவும் அப்பாவி சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் திட்டமிட்டு வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வஹிந்து பரிசத், பஜ்ரங்தள் போன்ற நாட்டு ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் சர்வதேச அளவில் பங்கம் விளைவிக்கும் தேசவிரோத அமைப்புகளை மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றக் கேள்வியும் மக்களிடையே எழுந்து வருகிறது.