அவ்வாறு சிந்தித்தவர்களுள் ஒருவர்தாம் சக்திவேல் நாடார். பல்லாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு, முஸ்லிமாக மாறி, சமூக ரீதியான உயர்வு பெற்ற சாதிக் என்ற முன்னாள் சக்திவேல் நாடார், பல்லவி என்றழைத்துப் பெயரிட்ட தம் மகளையும் பர்சானா என்று மாற்றினார். அந்த மகள் பர்சானா, ஐ ஏ எஸ் தேர்வில் இந்திய அளவில் 30ஆவது தரம் பெற்றதோடு தமிழகத்தின் பெண் ஐ.ஏ.எஸ்-களில் முதலிடமும் பெற்றிருக்கிறார்.
“கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. ஒரு கலெக்டருக்கு சமுதாயத்தில் அளிக்கப்படும் மதிப்பும், மரியாதையுமே நானும் அந்த பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது” என்று கூறிய ‘பர்சானா, ஐ.ஏ.எஸ்’, சென்னை இராயபுரம் கெவின்ஸ் பள்ளியில் ஆரம்பப் படிப்பையும் ஆயிரம் விளக்கு சர்ச் பார்க் கான்வென்டில் மேல்நிலைப் படிப்பையும் முடித்தார். அதன்பின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம். பட்டமும் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் எம்.காம். பட்டமும் பெற்றார்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சாதிக்-பாத்திமா சாதிக் தம்பதியரின் மகளான பர்சானா, 12 வயது இருக்கும்போது தந்தையுடன் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அலுவலகத்திற்கு வந்த கலெக்டருக்கு அளிக்கப்பட்ட மதிப்பு, மரியாதை, கவுரவம், கலெக்டருக்கு வழிவிடுவதற்காக காவலர்கள் கூட்டத்தினரை தடபுடலாக விலக்கிய காட்சி ஆகியவை இவருக்கு கலெக்டர் பதவி மீது ஈர்ப்பு ஏற்படச் செய்தது. படிப்புக்கு இவ்வளவு மதிப்பு இருப்பதை அறிந்த அவர், தானும் இதுபோன்று கலெக்டர் ஆக வேண்டும் என்று விரும்பினார். அவரது ஆசைக்குத் தந்தை சாதிக் தூண்டுகோலாக இருந்தார். பர்சானாவின் சகோதரர் முகமது உசேன் சாதிக்கும் தங்கையின் கனவை நனவாக்க பக்கபலமாக இருந்தார்.
இந்த நிலையில், கலெக்டர் கனவுடன் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக டெல்லி சென்று வாஜிராம் ரவி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திலும் சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திலும் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடவில்லை. முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்தார்.
அடுத்த முறையில் மெயின் தேர்வு வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சியில் இறங்கினார். 3-வது வாய்ப்பில் வெற்றிக்கனி கிடைத்தது. 2007-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். இறுதித் தேர்வில் அகில இந்திய அளவில் 30-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் முதலிடத்தை பிடித்துள்ள செல்வி பர்சானாவுக்கு, சத்தியமார்க்கம்.காம் சார்பாக நமது உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
ஈர்ப்பு விதிகள் பெருகட்டும்; எமது சமுதாயம் நிமிரட்டும்!