பாபரி மஸ்ஜித் தீர்ப்பு – சட்டம் கண்களைத் திறக்குமா?

Share this:

லக அரங்கில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றி, ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் குழிதோண்டிப் புதைத்த நாள் டிசம்பர் 6, 1992. அதாவது, 400 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச்சின்னம் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹபாத் உயர் நீதிமன்றம் சாவகாசமாக வருகின்ற செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு எழுத இருக்கிறது.

400 ஆண்டு காலமாக, உரிய ஆவணங்களுடன் நிலை பெற்றிருந்த ஒரு சொத்து யாருக்குச் சொந்தம்? என்ற கேள்வியே அபத்தமானது. இதனை உணர்ந்ததால் தானோ என்னமோ, சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்த பாபரி மஸ்ஜிதைத் திட்டமிட்டு தகர்த்து விட்டு, பிரச்சினையை நீதிமன்றம் தீர்க்கும் என வழக்கு தொடுக்க வைத்து விட்டனர்.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க, சிவில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டு, ஆச்சரியமான முறையில் சம்பந்தப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலைகொண்டிருந்த நிலத்தின் கீழே கோயில் இருந்ததா என்பதை ஆராய்ந்து அறிக்கை தரக்கோரி தொல்பொருள் ஆய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

உலகில் எந்த ஒரு இடத்திலும் இன்று நிலைகொண்டிருக்கும் ஒரு கட்டடத்தின் கீழே வேறு ஏதாவது கட்டடமோ குடியிருப்போ இருந்ததா என்றொரு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுமானால் எப்போதோ இருந்த ஏதோ ஒரு கட்டடமோ குடியிருப்போ நாகரீகச் சின்னங்களோ இருந்ததற்கான தடயங்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில், அதனை அடிப்படையாகக் கொண்டு, இன்று சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பவர்களுக்கு அந்த நிலம் சொந்தமல்ல என்று தீர்ப்பு வழங்க முடியுமா? அப்படி வழங்கினால், வெள்ளை மாளிகையிலிருந்து நமது இந்திய நாடாளுமன்ற கட்டடம் வரை பெரும்பாலான இடங்கள் அரசுகளின் கைகளை விட்டுச் செல்ல வேண்டிய அபத்தமான சூழல் உருவாகும். தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் அடிக்கடி நிலத்தடியில் கிடைக்கும் சோழர்காலச் சிலைகளையும் நாணயங்களையும் அதன் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் முடிவு செய்தால் எப்போதோ இறந்துபோன சோழர்குலக் குடிமக்களை தேடிப்பிடிக்க வேண்டிய கேலிக்கூத்து உத்தரவையும் நீதிமன்றம் வெளியிடவேண்டிவரும்.

பாபரி மஸ்ஜித் நிலத்தின் கீழே கோயில் இருந்ததா? என்ற தொல்பொருள் ஆராய்ச்சி குழுவின் ஆய்வு முடிவுகளில், 400 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஒரு ஆலயம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அந்நிலத்தில் மக்கள் வசித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் சில தடய விவரங்களுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் விஜயபாரதம்(10.09.2010) இதழ் மட்டும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இக்கட்டுரையை வாசிக்கும் எவருக்கும் கோயிலின் மீது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. கார்பன் 12, 14 ஆகிய விஞ்ஞான முறைகளில் ஒரு இடத்தை ஆய்வு செய்து, அதில் முன்னர் வாழ்ந்தவர்களின் தடயத்தைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் அந்நிலத்தின் உடமையாளரைத் தீர்மானிக்க ஆரம்பித்தால் என்ன நிலமை ஏற்படும் என்பதைத் தனியாக விளக்க வேண்டியத் தேவையேதும் இல்லை. அத்துடன், 400 ஆண்டுகளுக்கும் 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய நிலை என்ன என்பதை வெறும் தொல்லியல் ஆய்வு கொண்டு 100 சதம் சரியான முடிவுக்கு வருவதும் சாத்தியமற்ற ஒன்று என்பதை அறிவுடையோர் அனைவரும் புரிந்து கொள்வர்.

தொல்பொருள் ஆய்வின் அடிப்படையில் நில உரிமைக்கான தீர்ப்பு வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளதா? இதுவும் விவாதத்துக்குரிய ஒரு விஷயமே.

 

பாப்ரி மஸ்ஜித்:சங்க்பரிவாருக்கு நிலத்தின் மீது உரிமையில்லை-நீதிபதி சச்சார்

டெல்லி,செப்.19:கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார்.

“அது ஒருவேளை நம்பிக்கையின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது ஏமாற்று வித்தையாகவோ இருக்கலாம்.

என்னவாயினும், மஸ்ஜிதின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை கைப்பற்ற அதுவெல்லாம் சட்டரீதியாக இயலாது. மஸ்ஜித் கோயில் சிதிலங்களின் மீதுதான் கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தால் முஸ்லிம்களுக்கு அந்த நிலம் திரும்ப வழங்கப்பட்டு அங்கு மஸ்ஜித் நிர்மாணிப்பது உள்ளிட்ட சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும்.

அல்லது பாப்ரி மஸ்ஜித் இருந்த நிலத்தில் கோயில் இருந்தது என்ற தீர்ப்பு வரலாம். ஆனாலும் கூட வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ்ஸின் உரிமைக்கோரல் எடுபடாது.

1992-ஆம் ஆண்டில் வி.ஹெச்.பி-ஆர்.எஸ்.எஸ் அக்கிரமக்காரர்கள் தகர்க்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 வருடங்களாக அங்கு நிலைப் பெற்றிருந்ததாகும். பாப்ரி மஸ்ஜித் நிர்மாணிக்க கோயிலை இடித்திருந்தால்கூட சட்டரீதியாக சங்க்பரிவாருக்கு அந்த நிலத்தின் மீது எவ்வித உரிமையுமில்லை.” இவ்வாறு சச்சார் கூறியுள்ளார்.

நன்றி: பாலைவனத்தூது / மாத்யமம்

20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிலத்தை உரிய ஆவணங்களுடன் ஒருவர் சொந்தமாகக் கொண்டு அனுபவித்திருந்தால், அது தற்போதைய உரிமையாளருக்கே சொந்தம் என்பதை நீதிபதி சச்சார் அவர்கள் உரியத் தீர்ப்பு ஆதாரத்துடன் விளக்குவதோடு, பாபரி நிலத்தின் உரிமை எவ்வகையில் பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பாபரி நில வழக்கில் எதிர்தரப்பான வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் உட்பட உள்ள சங்கபரிவாரத்தினருக்கு அதனைச் சொந்தம் கொண்டாட எவ்வித உரிமையும் இல்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைப்பதைப் பெட்டிச் செய்தியில் காண்க.

வருகின்ற 24 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்ற பாபரி நிலத் தீர்ப்பு விஷயத்தில், என்ன தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வழக்கின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் மேல்முறையீடு செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது என்றும் அரசுகள் மக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கியக் குற்றவாளியான பாஜக தலைவர் அத்வானியும், “தீர்ப்பு எப்படி அமைந்தாலும் மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் செல்வது உறுதி” என திருவாய் மலர்ந்துள்ளார். இதைவிட ஒருபடி மேலே, ஆர்.எஸ்.எஸ் தலைவர், “தீர்ப்பு எப்படியானாலும் முஸ்லிம்கள் மனமுவந்து நிலத்தை இந்துக்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும். இல்லையேல் அவர்கள் தேசதுரோகிகள் என்றே எண்ணப்படுவர்” என்று பாபரி நில விஷயத்தைத் தேசதுரோகத்துடன் விஷமத்துடன் தொடர்புபடுத்தி விஷயத்தைக் கக்கியுள்ளார்.

அநியாயமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டட விஷயத்தில் தங்கள் தவறை ஒத்துக்கொண்டு, தவறைத் திருத்த முன்வராததோடு அந்த நிலத்தையே தங்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும்; இல்லையேல் முஸ்லிம்கள் தேசத்துரோகிகளாவர் என்று கூறுவது, இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்ந்தால் எங்களின் தயையில் நாங்கள் கூறுவதையும் செய்வதையும் விருப்பமில்லையேனும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக இருந்தாலும் முழு மனதுடன் ஏற்று, அங்கீகரித்தே வாழ வேண்டும், இல்லையேல் தேசத்துரோகிகள் என்ற முத்திரையுடன் முழுமையாக அழித்தொழிக்கத் தயங்கமாட்டோம் என்றே ஆர்.எஸ்.எஸ் தலைவர் அகங்காரத்துடன் இந்திய முஸ்லிம்களை மிரட்டுவதாகத்தான் கருதவேண்டியுள்ளது.

இந்நிலையில், இதுநாள் வரை இந்திய ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கும் என்றும் நம்பிக்கையுடன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு, வர இருக்கின்ற தீர்ப்பு மட்டுமே உரிய நியாயத்தை வழங்கும். இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் ஃபாஸிஸம் தன் வேரைப் பாய்ச்சி வளர்ந்து விட்டச் சூழலில், நீதித்துறையும் தன்னுடைய கண்களைக் கட்டிக்கொண்டால், அது உலக அரங்கில் இந்தியாவை ஒருபோதும் தலைநிமிர வைக்காமல் செய்து விடும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.