“அறிவு தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை” என்ற நபிமொழியை, நமது சத்தியமார்க்கம்.காம் தள வாசகர் சஃபி என்பார் நமது சென்றமாத ஆக்கமான “கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்” பின்னூட்டத்தில் எடுத்தெழுதி இருந்தார்.
பிறவியிலேயே பேச்சுத் திறனையும் செவிப்புலனையும் இழந்திருந்தபோதிலும் கல்வி கற்க வேண்டும் என்ற விடாப்பிடியான முயற்சியில், சகோதரி ஃபாத்திமா பானு +2 தேர்வு எழுதி, தமிழில் 177, பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குப்பதிவியலில் 189, பிசினஸ் மேக்ஸில் 193 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 953/1000 மதிப்பெண்களோடு பள்ளியிலேயே முதல் மாணவியாக வென்றிருந்தார்.
சகோதரி ஃபாத்திமா பானுவின் சாதனையைப் பற்றிய நமது ஆக்கத்தோடு அவரது புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அது தவறானது என்ற எண்ணத்தில், “பெண்களின் புகைப்படத்தை வெளியிடுவது கூடாது” என்று நமது வாசகர் ஷாஹுல் ஹமீது பின்னூட்டம் இட்டிருந்தார். ரபிக் எனும் வாசகர் இன்னும் ஒருபடி மேலேபோய், “பெண்களைக் கல்வி கற்கப் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது” என்ற மிகத் தவறான கருத்தை எடுத்து வைத்திருந்தார். பெண்கள் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் சட்டமேதும் இல்லை. “பெண்களின் கூடுதல் ஆடையான முன்றானை என்பது மார்பை மறைத்துக் கொள்வதற்கு உரியதாகும்” என்று அல்குர்ஆன் (24:31) கூறுகிறது. ஸஹீஹுல் புகாரீயின் 4759ஆவது நபிமொழிப் பதிவும் அந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்துள்ளது. ஆனால், இறைமறையும் நபிவழியும் கூறும் அறிவுரைகள், சட்ட-திட்டங்கள் பற்றிய தெளிவான பார்வையில்லாத பலரும், “முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடிக் கொள்வது கடமை” என்பது போன்ற தவறான சிந்தனையைக் கொண்டுள்ளனர். “தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி, பெண்கள் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல் என்ற பாரதியின் பாடல் வரிகள் நமக்கு வேதவரிகள் போலாகிவிட்டன” என்பதாக சகோதரி ஜஸீலா நமது கட்டுரைப் போட்டியில் பங்குபெற்று எழுதிய “எது பெண்ணுரிமை?” எனும் ஆக்கத்தில் வருந்தியது இங்குக் குறிப்பிடத் தக்கது. அறிவுத் தேடல் என்பது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
“அறிந்தவர்களும் அறியாதோரும் சரிசமமா?” (39:9) என்று அல்லாஹ் கேட்கிறான்
-o-
அறிவு தேடும் கல்விப் போட்டியில் கடந்த மாதம் வெளியான எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வில் தமிழக முஸ்லிம் மாணவ-மாணவியர் வரலாற்றில் சாதனை படைத்து, மாநிலத்தின் முதலிடத்தைப் பிடித்துள்ளார் நெல்லைச் செல்வி யாஸ்மின்.
கடந்த 26.05.2010 அன்று வெளியான எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வை, தமிழகத்தைச் சேர்ந்த 4,34,223 மாணவியரும் 4,22,523 மாணவர்களும் எழுதியிருந்தனர். மொத்தம் 8,56,745 (எட்டு லட்சத்து, ஐம்பத்தாறாயிரத்து, எழுநூற்று நாற்பத்தைந்து) மாணவ-மாணவியரைப் பின்னுக்குத் தள்ளி 495/500 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கும் ஜாஸ்மின் பயில்வது நெல்லை மாநகராட்சியின் கல்லணை பெண்கள் மேநிலைப் பள்ளியில்!
செல்வி ஜாஸ்மின் பெற்ற மதிப்பெண்கள் |
|
தமிழ் |
98/100 |
ஆங்கிலம் |
99/100 |
கணிதம் |
100/100 |
அறிவியல் |
100/100 |
சமூக அறிவியல் |
98/100 |
மொத்தம் |
495/500 |
பள்ளிக்கு மட்டும் மாதம் ஒன்றுக்கு ஆயிரங்களை அள்ளிக் கொடுத்து, அதற்குமேல் சீருடைமுதல் சிறப்புப் பயிற்சிவரை பெருங்காசு செலவு செய்து கான்வெண்டில் படிக்க வைக்கும் பல மாணவ-மாணவியர், அவர்தம் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியாமல், படிப்பில் ‘சுமாராக’வே திகழ்வதைப் பார்க்கிறோம். விதிவிலக்காகக் கல்வியில் ஒளிர்பவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில், ஒரு மாநகராட்சிப் பள்ளியில் பயின்று மாநிலத்தில் முதலிடம் பிடித்திருக்கும் செல்வி ஜாஸ்மின், கல்வியில் வெல்லும் சில பொதுஉத்திகளைக் கடைப்பிடித்திருக்கிறார். அவை நம் அனைவரின் மீள்சிந்தனைக்கும் உரியவை:
- கல்வியில் கூடுதல் ஆர்வம் காட்டுவது,
- விடாமுயற்சி
- ஒவ்வொரு வகுப்பிலும் கல்வியில் முதலாவதாக வருவதற்கு முனைப்பு,
- பள்ளியில் நடக்கும் பாடங்களை ஒத்திப் போடாமல் அன்றே வீட்டிலும் படித்துக் கொள்வது,
- வெளியில் சென்று ட்யூஷன் படித்து நேரத்தை வீணாக்காதது,
- தொலைக்காட்சி பார்க்காமல் தவிர்த்தது
கடந்த ஆண்டுகளில் நடந்தேறிய எஸ்.எஸ்.எல்.ஸி, +2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்த மாணவ-மாணவியர், தாம் வெற்றிபெற்றதற்குக் கூறிய தலையாய காரணமாகக் குறிப்பிட்டது “நிஜ வாழ்க்கையைத் தொலைக்கத் தூண்டும் தொலைக்காட்சிகளை பார்க்காமல்” தொலைத்துக் கட்டியதைத்தான் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
அது, வெறும் தகவல் மட்டுமன்று; மற்றெவரைக் காட்டிலும் கல்வியில் மிகப் பின்தங்கிவிட்டவர்களான முஸ்லிம் சமுதாய மாணவ-மாணவியரும் அவர்தம் பெற்றோரும் கட்டாயம் நினைவில் கொள்ளத் தக்க அறிவுரையாகும்.
மிகச்சிறு வியாபாரியாகவே 17 ஆண்டுகள் ஜவுளி வியாபாரம் செய்துவரும் தந்தை ஷேக்தாவூதுக்கு மகளாக, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, இந்த ஆண்டின் எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற செல்வி ஜாஸ்மினை சத்தியமார்க்கம்.காம் உளம் நிறைந்து வாழ்த்துகிறது!
கல்லணை மகளிர் மேநிலைப் பள்ளியின் ஆசிரியர்களைப்போல் தங்கள் பள்ளி மாணவர்களின் வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபடும் ஆசிரியர்கள் எல்லாப் பள்ளிகளும் நிறைய வேண்டும்.
செல்வி ஜாஸ்மினைப்போல், ஷா ஃபைஸலைப்போல் பல்லாயிரம்பேர் நம் சமுதாயத்தில் உருவாக வேண்டும்; கல்வியில் முஸ்லிம் சமுதாயம் மிக்குயர்ந்து நிற்க வேண்டும்!
அல்லாஹ், தன் பேரருளைப் பொழிய வேண்டும்!