தியாகப் பெருநாள் சிந்தனை

Share this:

பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத படிப்பினையாகவும் அம்மூவரது செயல்பாடுகளில் சில முஸ்லிம்களின் கடமையான வழிபாடுகளாகவும் மாறிப் போயின.

 

ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் – எண்ணியெண்ணி வியக்கும் அந்த வரலாறு,

“எங்கள் இறைவா! விவசாயமற்ற இப்பள்ளத்தாக்கில், மாண்புமிகு உன் இல்லத்தை அடுத்து என் வழித்தோன்றலை (குடும்பத்தாரை) வசிக்க விட்டிருக்கிறேன். தொழுகையை நிலைபெறச் செய்வதற்காகக் குடியேற்றி இருக்கிறேன். எனவே, எங்கள் இறைவா! ஆதரவுள்ளம் கொண்ட மக்களை இவர்களுக்கு ஏற்படுத்துவாயாக! இவர்கள் உனக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, கனிகளைக் கொண்டு இவர்களுக்கு உணவளிப்பாயாக!” (அல்-குர்ஆன் 14:37) என்று தொடங்குகிறது.

தன் வாழ்க்கைத் துணைவியையும் வயோதிக காலத்தில் தனக்கு வாரிசாகப் பிறந்த பால்குடி மாறாப் பாலகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்ல அண்ணல் இபுறாஹீம் நபி (அலை) எப்படித் துணிந்தார்கள்?

அதுதான் தியாகம்! அல்லாஹ்வின் கட்டளைக்காக அனைத்தையும் துறக்கத் துணிந்த தியாகம்!

“இறைவன்தான் இந்தப் பாலைவனத்தில் எங்களை விட்டுச் செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டான் எனில், அவனே எங்களைப் பாதுகாப்பான் என்று உறுதியோடு உரைக்க அன்னை ஹாஜராவுக்கு எப்படி மனம் வந்தது?

அல்லாஹ்வின் மீதுள்ள அளவு கடந்த நம்பிக்கையில், வானமே கூரையாக சுட்டெரிக்கும் பாலையிலும் வாழ்ந்திடத் துணிந்த தியாகம்!

மகன் மட்டும் தியாகத்தில் சளைத்தவரா?

“… என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உன் கருத்து என்ன என்பதை யோசித்துச் சொல்”

“என்னருமைத் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப் பட்டதோ அதையே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால், (எதையும்) சகித்துக் கொள்ளக் கூடியவர்களுள் ஒருவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்” (அல்-குர்ஆன் 37:102).

இங்குக் கொடுத்திருக்கும் இஸ்லாத்துக்கே சொந்தமான தியாக வரலாற்றின் மிகச் சில வரிகள் வாசிப்பதற்கு மட்டுமா? என்ற கேள்வியை நாம் நம்மையே கேட்டுக் கொள்ள இந்நாளில் கடமைப் பட்டிருக்கிறோம்.

தியாகத்திருநாளை இரு ரக்அத் சிறப்புத் தொழுகையுடனும் நபி இபுறாஹீம் குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுபடுத்தும் ஒரு குத்பா கொண்டாடுவதோடு நம் தியாகங்களும் முடிந்து விட்டன என்ற தவறான எண்ணத்திலிருந்து விடுபட்டு… இத்தியாகத் திருநாளில் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.

தியாகம் நினைவுபடுத்துவதற்கோ நினைவுகூர்வதற்கோ மட்டும் அல்ல; ஒவ்வொருவரின் வாழ்விலும் செயல்படுத்துவதற்கும் சேர்த்தேதான்!

உலகம் முழுதும் இஸ்லாத்துக்கு எதிரான திட்டமிட்ட, பல்முனைத் தாக்குதல்கள் பெருகி வரும் காலமிது. குறிப்பாக ஊடகத்துறையில் இஸ்லாத்தைப் பற்றிய பொய்களும் பூஞ்சைத் தனமான குற்றச்சாட்டுகளும் தற்போது தமிழ் இணையத்திலும் பெருகி வருகின்றன. தடுத்துச் சற்றே கையை உயர்த்தினாலே பொடியாகிப் பறந்து விடும் என்ற கருத்தில்தான் ‘பூஞ்சைத் தனமான’ குற்றச் சாட்டுகள் என்று இங்குக் குறிப்பிடப் படுகிறது.

கை உயர்த்துவதற்குத்தான் ஆட்கள் தேவை. வெறும் கையைன்று; எழுதுகோல் எனும் ஆயுதம் ஏந்திய கைகள்!

அண்ணல் இபுறாஹீம் எதிர் கொண்ட சோதனைகள் இன்று நமக்கில்லை. அன்னை ஹாஜரா தாங்கிக் கொண்ட வேதனைகள் நமக்கில்லை. அண்ணல் இஸ்மாயீல் ஏற்றுக் கொண்ட ‘சுயபலி’யும் நமக்கில்லை. நமக்குள்ள நேரத்தைக் கொஞ்சம்போல் தியாகம் செய்தால் போதும். எழுத்துலகுக்கு இன்னும் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் வேண்டும்.

கையை உயர்த்துங்கள் – எழுதுகோல் ஆயுதத்தோடு!

சகோதர, சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காமின் நெஞ்சம் நிறைந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.