தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (முன்னுரை)

இஸ்லாமியக் கடமைகளைக் கூடுதலாக நிறைவேற்ற வேண்டும் என எண்ணி இஸ்லாமியர்கள் சிலர், மார்க்கம் சொல்லித்தராத பல வணக்கங்களைச் செய்து வருகின்றனர். உதாரணமாக பராஅத் நோன்பு, மிஃராஜ் நோன்பு, மௌலூது மற்றும் இன்ன பிற. சிலர் ரமலான் அல்லாத காலத்தில் பொதுவான நோன்பு வைக்க, கடமையான தொழுகைகள் தவிர உபரியான தொழுகைகள் புரிய இருக்கும் அனுமதியை பராஅத், மிஃராஜ் இவற்றுடன் முடிச்சு போட்டு மேற்குறிப்பிட்ட வணக்கங்களுக்கு ஆதாரமாக விவாதிக்கின்றனர்.

இது குறித்து தனி அலசல் தேவைப்படுவதால் இப்போதைக்கு சுருக்கமாக பராஅத் நோன்பு, மிஃராஜ் நோன்பு, மௌலூது போன்றவற்றுக்கு எவ்வித ஆதாரமும் மார்க்கத்தில் கிடையாது என்பதை மட்டும் அறியத் தருகிறோம்.


இதைப் போன்று பலவீனமான இட்டுகட்டப்பட்ட சில செய்திகளை அடிப்படையாகக் கொண்டும் சில வணக்கங்களைச் செய்கின்றனர். அவற்றில் ஒன்று தான் தஸ்பீஹ் தொழுகை. இந்தத் தஸ்பீஹ் தொழுகையைப் பற்றி என்னென்ன செய்திகள் கூறப்படுகின்றன என்ற முழுவிவரத்தையும் நாம் பார்ப்போம்.

இந்தத் தஸ்பீஹ் தொழுகை குறித்த செயல்பாடுகள் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் வசிக்கும் அல்லது இப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட முஸ்லீம்களிடம் மட்டுமே பெருமளவு நாம் காண்கிறோம்.

தஸ்பீஹ் தொழுகை நிறைவேற்றத் தகுந்த நேரம் எனக் கூறப்படும் செய்தி:

இத்தொழுகையை லுஹர் நேரம் வரும் போது தொழ வேண்டும். முடியாதவர்கள் சாத்தியமான நேரத்தில் தொழலாம்.

இத்தொழுகையை எத்தனை முறை நிறைவேற்றுவது எனப் பரப்பப்படும் செய்தி:

இத்தொழுகையை தினமும் தொழ வேண்டும். முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் தொழவேண்டும். அதற்கும் முடியாதவர்கள் மாதத்தில் ஒருநாள் தொழ வேண்டும். அதற்கும் முடியாதவர்கள் வருடத்தில் ஒருநாள் தொழ வேண்டும். அதற்கும் முடியாதவர்கள் வாழ்நாளில் ஒரு நாள் தொழ வேண்டும்.

இத்தொழுகையின் சிறப்புகளாகச் சொல்லப்படும் செய்தி:

இத்தொழுகையைத் தொழுபவரின் பாவங்கள் உலக நாட்கள் அளவிற்கு இருந்தாலும் வானத்தின் நட்சத்திரங்கள் அளவிற்கு இருந்தாலும் மழைத் துளியளவிற்கு இருந்தாலும் மன்னிக்கப்படும்.

இத்தொழுகை தொழும் முறை என நம்பப்படும் செய்தி:

முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்தில் குறிப்பிட்ட முறையில் செய்வதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.

முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும். பின்னர் கிராஅத் ஓதிய பிறகு ருகூவுக்கு முன்னர், நிலையில் 10 தடை மேற்சொன்ன தஸ்பீஹை ஓதவேண்டும். பின்னர் ருகூவில் எப்போதும் ஓதும் தஸ்பீஹுக்குப் பின் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவை ஓதவேண்டும். பின்னர் ருகூவிலிருந்து எழுந்து 10 தடவையும், ஸஜ்தாவில் 10 தடவையும் இரண்டு இருப்பிற்கு இடையில் 10 தடவையும், இரண்டாவது ஸஜ்தாவில் 10 தடவையும் மொத்தம் ஒரு ரக்அத்தில் 75 தடவை ஓத வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதும் போது மொத்தம் நான்கு ரக்அத்தில் 300 தடவை ஏற்படும்.

மேற்கண்டவாறு தஸ்பீஹ் தொழுகையைப் பற்றி சிலர் குறிப்பிடுகின்றனர். இதற்குரிய ஆதாரங்கள் எவை என நாம் அலசி இவற்றின் தரம் என்ன என்பதை நாம் வரும் பகுதிகளில் இன்ஷா அல்லாஹ் ஆய்வு செய்வோம்.


பகுதி 1 படிக்க >