தஸ்பீஹ் தொழுகை – ஓர் ஆய்வு (பகுதி 6)

Share this:

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக காட்டப்படும் ஹதீஸ்களில் முக்கியமான ஒன்று நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களில் ஒருவரான உம்மு ஸலமா(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியாகும். தற்போது இச்செய்தியையும் அதனைக் குறித்த ஹதீஸ்களையும், அறிஞர்களின் கூற்றையும் ஆராய்வோம்.


நபி (ஸல்) அவர்கள் எனக்குரிய நாளில் இருந்த போது நண்பகலில் அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது, ”யார் இவர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்” என்று தோழர்கள் கூறினார்கள். ”அல்லாஹ் மிகப் பெரியவன். இந்த நேரத்தில் அவர் வந்ததற்கான காரணம் என்ன?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (உள்ளே)நுழைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ”எனது தந்தையின் உடன் பிறந்தவரே! இந்த நேரத்தில் என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்? என்று (தஸ்பீஹ் தொழுகையில் வந்துள்ளதைப் போன்று) கூறினார்கள்” என உம்மு ஸலமா (ரலி) அறிவித்த செய்தியை அபூ நுஅய்ம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

(நூல்: மவ்ஸஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1, பக்கம்: 643 )

இச்செய்தியின் தரத்தினைக் குறித்து ஆய்வு செய்யும் பொழுது தனது நூலில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்கள்.  

“இந்தச் செய்தி கரீப் என்ற வகையைச் சார்ந்ததாகும். இதில் இடம்பெறும் அம்ர் பின் ஜமீஃ என்பவர் பலவீனமானவராவார். மேலும் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் என்பவர் உம்மு ஸலமா (ரலி) அவர்களை சந்தித்துள்ளாரா என்பதில் ஆட்சேபணை உள்ளது.”

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பலவீனமானவர் எனக் குறிப்பிடும் அம்ர் பின் ஜமீஃ என்பவரைப் பற்றி மேலும் பல ஹதீஸ்கலை அறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

“அம்ர் பின் ஜமீஃ என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர்” என்று இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 79)  

“அம்ர் பின் ஜமீஃ என்பவர் உறுதியானவர் இல்லை, நம்பகமானவரும் இல்லை” என்று யஹ்யா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம்: 5, பக்கம்
: 111)

மேலும்,

“அம்ர் பின் ஜமீஃ என்பவர் பெரும் பொய்யர், மோசமானவர்” என்று யஹ்யா அவர்கள் லுஅஃபாவுல் உகைலீ என்ற நூலில் 3 ஆம் பாகம், 264 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.  

“அம்ர் பின் ஜமீஃ என்பவர் ஹிஷாம் பின் உர்வா மற்றும் அவரல்லாத பிறர்களிடம் இருந்தும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர்” என்று இமாம் ஹாகிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.  

(நூல்: அல்மத்கல் இலஸ் ஸஹீஹ், பாகம்: 1, பக்கம்: 159)  

“அம்ர் பின் ஜமீஃ என்பவர் நம்பகமானவர்களிடமிருந்து இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் பிரபலமானவர்களிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகளையும் அறிவிப்பவர்களில் உள்ளவர். படிப்பினைக்காகவே தவிர இவருடைய செய்திகளை எழுதுவதற்கும் குறிப்பிடுவதற்கும் அனுமதியில்லை” என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 78)

எனவே தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் குறிப்பிடப்படும் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தியில் அம்ர் பின் ஜமீஃ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுவதால் இச்செய்தியை ஆதாரமாக வைத்து தஸ்பீஹ் தொழுகை தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

இன்னும் வரும், இன்ஷா அல்லாஹ்.

< பகுதி-5 | பகுதி-7 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.