துஆ (பிரார்த்தனை) செய்ய சிறந்த நேரங்கள்!

Share this:

துஆ (பிரார்த்தனை) செய்ய சிறந்த நேரங்கள்!

"என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்." (அல்குர்ஆன் 040:060)

என்று இறைவன் தனது திருமறையில் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தினைக் குறித்து கூறுகின்றான்.

நபி (ஸல்) அவர்களும் கூட, "பிரார்த்தனையே வணக்கமாகும்" எனக் கூறியுள்ளார்கள்.

இறைவனை வணங்கும் வணக்கத்திற்கு நிகராகக் கருதப்படும் "பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட குறிப்பிட்ட சில நேரங்கள் உள்ளன" என்று நபி(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் சில கீழே:

இரவின் மூன்றாவது பகுதி.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வோர் இரவின் இறுதியில் மூன்றாம் பகுதியில் நமது இரட்சகனும் ரப்புமாகிய அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான். மேலும், 'என்னை அழைப்பவர் உண்டா?, நான் அவருக்கு பதிலளிப்பேன். என்னிடம் தமது தேவைகளை கேட்பவர் உண்டா? நான் அவருக்கு வழங்கக் கூடும். என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் உண்டா? நான் அவர்களை மன்னிக்கக்கூடும்' என்று கூறுகின்றான்" (ஸஹீஹ் புகாரி : ஹதீஸ் குத்ஸி)

அம்ரு இப்னு அபஷ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் தமது வணக்கத்தின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்க வாய்ப்புள்ள நேரம் இரவின் இறுதி பகுதி நேரம் ஆகும். ஆகையால் உங்களால் அந்நேரத்தில் இறைவனை நினைவுகூர்ந்து வணங்குபவர்களில் ஒருவராக இருக்க இயன்றால் அதை செய்யுங்கள். (அத் திர்மிதி, அந் நஸாயீ, அல் ஹாக்கீம் ஸஹீ)

மக்கள் உறக்கத்திலும் உலக இன்பங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறான் அல்லது ஒரு பதிலளிக்கும் நேரம் ஏற்படுத்தி தூக்கத்தை வென்று அவனிடம் தமது எல்லாவித தேவைகளை கேட்பவர்களுக்கு அருளுகின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." (முஸ்லிம் : 757)

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், "பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துவாக்கள் நிராகரிக்கப்படுவது இல்லை." (அஹ்மத், அபு தாவூத் # 521, அத்திர்மிதி # 212, ஸஹீஹ் அல் ஜாமி # 3408, அந்நஸாயி மேலும் இப்னு ஹிப்பான் ஸஹீஹ்)

வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம்.

அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி பேசும் போது கூறினார்கள், "வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உள்ளது; அதை ஒரு முஸ்லிம் தனது பிராத்தனையில் பெற்றுக்கொண்டு ஏதேனும் அல்லாஹ்விடம் கேட்டால், அல்லாஹ் அந்த பிராத்தனையை நிச்சயமாக ஏற்றுக்கொள்வான். மேலும் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளினால் அதன் சிறிய அளவு நேரத்தை சைகை மூலம் காட்டினார்கள்." (ஸஹீஹுல் புகாரி)

ஜம் ஜம் நீர் குடிக்கும் போது.

ஜாபர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஜம் ஜம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது." (அஹ்மத்:357, இப்னு மாஜா:3062)

இதன் பொருள் ஜம் ஜம் நீர் குடிக்கும் போது ஒருவர் மனதில் என்ன எண்ணத்தோடு அதனை குடிக்கின்றாரோ அதனை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வார் என்பதாகும்.

ஸஜ்தாவில் இருக்கும் போது.

அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துவா செய்து தமது தேவைகளை கேளுங்கள். (முஸ்லிம், அபு தாவுத், அந்நஸாயி மற்றும் ஸஹீஹ் அல் ஜமீ # 1175).

இரவில் விழித்தெழும் போது.

உபைதா பின் அஸ் ஸமித்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவர் ஒருவர் இரவில் விழித்து எழுந்து லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீக லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷைய்யின் கதிர். அல்ஹம்துலில்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வலா இலாஹா இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

(இதன் பொருள்: வணக்கத்திற்குரிய தகுதி எவருக்கும் இல்லை அல்லாஹ்வைத்தவிர. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணைகள் எவரும் இல்லை. ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவனுக்கே உரியது. மேலும் அவனுக்கே எல்லாப்புகழும். எல்லா கண்ணியமும் அவனுக்கே . மேலும் அவனைத் தவிர எவரும் வணக்கத்திற்குரிய தகுதியுடையவர்கள் இல்லை. மேலும் அல்லாஹ் மிகப் பெரியவன். மேலும் எவ்வித வல்லமையும் சக்தியும் அல்லாஹ்வையன்றி இல்லை)


இதைக் கூறிய பிறகு அல்லாஹும்மக்பிர்லி (எனது இறைவனாகிய அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக) என்று கூறி அல்லாஹ்வை அழைத்துப் பிராத்தித்தால் அல்லாஹ் பதிலளிப்பான். அவன் உளுச் செய்து தொழுதால் அவனது தொழுகையும் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும். (ஸஹீஹுல் புகாரி)

நோன்பாளியின் துவா அவன் நோன்பை விடும் வரை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மூவரின் துவா அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துவா; நோன்பாளியின் துவா; பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துவா." (அல் பைஹகி, அத் திர்மிதி – ஸஹீஹ்)

நோன்பாளி நோன்பு துறக்கும் வேளை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள கூறினார்கள், "மூவரின் துவாக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளர்; (அநியாயமாக)பாதிக்கப்பட்டவர்." (அஹமத், அத்திர்மிதி)

இன்ஷா அல்லாஹ் தொடரும்…


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.