அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) புதிய தொடர் அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களுள் ஒருவரான ரஹ்மான் சாதிக் அவர்களை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம்

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால் …!

“…இன்னும் மனிதனுக்கு, அவன் அறியாததை எல்லாம் அவனே கற்றுக் கொடுத்தான் …” எனும் அல்குர்ஆனின் (96:5) அழகிய வார்த்தைகளுடன் ஆரம்பம் செய்கின்றேன் ….

இஸ்லாமிய வரலாறுகளைப் படிக்கும்போது நமது சிந்தனையும் அறிவும் வளர்வது மட்டுமல்லாமல், இறைவனின் திருப்திக்காக நமது வாழ்வை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு மேலோங்குவதை உணர்கிறோம்.

அப்படிப்பட்ட வரலாறுகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுக்குத் தனி இடம் உண்டு. அவர்கள் சுவைத்த அந்த ஈமானின் வெளிப்பாடான தியாகங்கள், செயல்களின் அடிப்படையில் பத்துப் பேருக்கு அண்ணலார் சுவனத்தை உறுதியளித்தார்கள்.

அதில் முதலாமவர் நமது வரலாற்று நாயகரான அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) பற்றி நான் அறிந்துகொண்ட வரலாற்றுத் தகவல்களை சத்தியமார்க்கம்.காம் தள வாசகர்களோடு அடுத்து வரும் நாட்களில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து ‘அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)‘ என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாசலிலிருந்தும், ‘அர்ரய்யான்’ என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார்’ என்று கூறினார்கள். உடனே அபூபக்ரு(ரலி), ‘இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது’ (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.) என்று கூறிவிட்டு, ‘அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன், அபூபக்ரே’ என்று கூறினார்கள் (புகாரீ 3666).

சுவனத்திற்குப் பல வாசல்கள் உண்டு; அதில் ஒவ்வொரு வாசல் வழியாகவும் மனிதர்கள், தாம் செய்த ஒவ்வொரு சிறப்பான அமல்களின் அடிப்படையில் நுழைவார்கள் …ஆனால் நமது வரலாற்று நாயகரோ அதன் எல்லா வாசல் வழியாகவும் நுழையத் தகுதி பெற்றவராக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விரும்பப்பட்டவராவார்.

அப்படி என்றால் தமது வாழ்வில் ஒவ்வொரு செயலையும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் வண்ணமாக அமைத்துக் கொண்டவரின் வரலாற்றை நாமறிவதுதானே உண்மையான கல்வி ?

அதன் முயற்சியே இந்தச் சிறு பணி! அடுத்தடுத்த நாட்களில் அபூபக்ரு (ரலி) எனும் நபித் தோழமையின் பேராளுமையைத் தொடர்ந்து சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்!

நிறைந்த அன்போடு,
ரஹ்மான் சாதிக்
tbmsathik@gmail.com