வலிப்பு நோய் – ஒரு விளக்கம்

ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" (முஸ்லிம் 4084). 

"அல்லாஹ்வின் தூதரே! (நோயுற்றால்) நாங்கள் மருத்துவம் செய்து கொள்ளலாமா?" என நபித்தோழர்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் அடியார்களே! (நோயுற்றால்) நீங்கள் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்! இறைவன் ஒரேயொரு நோயைத் தவிர அனைத்து நோய்களுக்கும் மருந்தை உருவாக்காமல் இல்லை" என்று கூறினார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! அந்த ஒரு நோய் எது?" என்று நபித்தோழர்கள் கேட்டனர்.

"முதுமை" என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (திர்மிதி, நஸயீ, அஹ்மத், அபூதாவூத்)

மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களில் நோய் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எந்த ஒரு நோயும் அதற்குரிய நிவாரணி இன்றி இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது.

எந்த ஒரு நோய்க்கும் அடிப்படை தூய்மையின்மையாகும். "தூய்மை ஈமானில் பாதி" என இஸ்லாம் கற்றுத் தருகின்றது. முடிந்த மட்டும் தூய்மையைப் பேணினாலே அநேகமான நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பல நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கு, அந்நோயைக் குறித்த போதிய அறிவின்றி தானாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனைக் குறித்த விவரங்கள் அறிந்திருப்பது கட்டாயமாகும். 

மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நோய்களில் வலிப்பு நோயும் ஒன்றாகும். அதனைக் குறித்த விவரங்களை இங்குக் காண்போம்:

* வலிப்பு என்றால் என்ன?

வலிப்பு அல்லது 'காக்கா வலிப்பு' என அறியப்படும் நோய் மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் மூலம் உடலின் பல உறுப்புகளுக்கு நரம்புகள் வழியே வரும் கட்டளைத் தொகுப்புகளில் (நரம்புகளில்) சிறிது நேரம் தடங்கல் ஏற்படுவதையே வலிப்பு எனப் பொதுவழக்கில் அழைக்கிறார்கள்.

* வலிப்பு நோய்க்கான மூல காரணம் என்ன?

  • மைய நரம்பு மண்டலத்திற்கு இழைக்கப்படும் சேதங்களால்,
  • பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள்/சிராய்ப்புகளால்,
  • சிலருக்குப் பிறப்பின்போதே இருக்கும் நரம்புமண்டலக் குறைப்பாட்டினால்,
  • விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்களினால்,
  • மூளையில் ஏற்படும் கட்டிகளால்,
  • ஆல்கஹால், போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் சிதிலத்தால்,
  • மூளைக் காய்ச்சலால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.

* எத்தனை வகை வலிப்புகள் உள்ளன?

மேலோட்டமாக இவற்றை இருவகைப் படுத்தலாம். முதலாவது, பகுதி (Partial) வலிப்பு; இரண்டாவது பொது (General) வலிப்பு.

பகுதி வலிப்பில் மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும். அப்பகுதியினால் இயக்கப்படும் உறுப்புகள் வலிப்புக்கு உள்ளாகும். கை, கால், வாய் இவற்றைக் கட்டுப் படுத்தும் மூளையின் பகுதியில் வலிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்புகள் மட்டும் பாதிக்கப்படும்.

பொதுவலிப்பு மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்படுவதால் உண்டாவதாகும். இதிலும் இருவகைகள் உள்ளன. 'பெடிட்மால்' (Petit Mal), 'கிராண்ட்மால்' (Grand Mal) என இவ்விரு வகைகளும் அழைக்கப்படுகின்றன.

பெடிட்மால் மிகச் சிறிய அளவில் தோன்றி மறையும் ஒரு வலிப்பாகும். சிலசமயம் இது கண்டுகொள்ளப்படாமலேயே வந்து போகலாம். இது ஒரு நொடியிலிருந்து பத்து முதல் இருபது நொடிகள் வரை நீடிக்கலாம். திடீரென விழிகள் செருகிக் கொள்ளுதல், காரணம் ஏதுமில்லாமல் ஓர் அறையினுள் அங்குமிங்கும் அலைதல் போன்றவை இந்நோயின் குறியீடுகளாம்.

கிராண்ட்மால் தாக்கியவர் முதலில் கண் முன் ஒரு பிரகாசமான காட்சி தோன்றுவது போல உணர்வார். கை கால்கள் உதறிக் கொள்ளும். பின், சுய நினைவின்றி மயங்கி விழுவார். மலம், சிறுநீர் போன்றவை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரிய நேரலாம்.

* வலிப்பு நோய் தாக்கியவரைப் பார்க்கும்போது என்ன செய்ய வேண்டும்?

1. வலிப்பு கண்டவர் அருகில் கூரான பொருட்கள் ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேசையின் கூரான முனைகள், சுவர் விளிம்புகள் இவற்றினருகில் அவர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. அமைதியாக அவரை ஓரிடத்தில் அமர வைக்க முயலலாம்; ஆனால் கட்டாயப் படுத்துதல் கூடாது.

3. தரையில் விழ நேரிட்டால் அவரை ஒருக்களித்து இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வலிப்பால் வெளிப்படும் உமிழ்நீர் எச்சில், மூச்சுக் குழலுக்குள் புகுந்து மூச்சுத் திணறலோ மரணமோ ஏற்படுவதைத் தடுக்கலாம்.

4. தலையில் அணைவாக மிருதுவான பொருட்களை வைக்க வேண்டும். இது, தலை வேகமாக தரையோடு முட்டிக் கொள்வதைத் தடுக்கும்.

5. வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது எனச் சரியாகக் கணக்கிட வேண்டும். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் எல்லா வலிப்புகளும் அடங்கி விடும். அவ்வாறு அடங்காவிட்டாலோ, மீண்டும் மீண்டும் வலிப்பு வந்தாலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

* வலிப்பு இருப்பதாக அறியப்பட்டவர்கள் என்னென்ன செய்யக்கூடாது?

வலிப்பு நோய் இருப்பதாக அறியப்பட்டவர் சாதாரணமாகப் பிறரைப் போலவே வாழ்க்கை நடத்தலாம். இருப்பினும் வாகனங்கள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், மரம் ஏறுதல், உயரமான இடங்களுக்குத் துணையின்றிச் செல்லல், கனரக வாகனங்கள், கேட்டர்பில்லர், போக்லைன் போன்ற மலை உடைக்கும் மண் அள்ளும் கருவிகளை இயக்குதல், போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது.

"வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பை அல்லது சாவிக் கொத்தைத் திணித்தால் வலிப்புப் போய் விடும்" என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இது தவறான நம்பிக்கையாகும். வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பைக் கொடுப்பதால் ஒரு பலனும் இல்லை. அதனைக் கொண்டு அவர் தன்னைத் தாக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் சாவிகொத்து, கம்பி, கத்தி போன்ற இரும்பாலான பொருட்களை வலிப்பு வந்தவரின் கையில் கொடுப்பது கூடாது.

வலிப்பும் மற்ற நோய்களைப் போன்ற ஒரு நோயே. சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் அதனைக் குணப்படுத்தி விடவும் முடியும். எனவே இத்தகைய நோய் உள்ளவர்களைக் கண்டு அச்சம் கொள்ளவும் தேவையில்லை. மாறாக, முடிந்தவரையிலும் வலிப்பு நோயுள்ளவர்களைக் கண்காணிப்பதும் வலிப்பு ஏற்பட்டு விட்ட ஒருவருக்கு நம்மாலான தகுந்த உதவிகளைச் செய்வதும் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரது கடமையாகும். வலிப்பு நோயுள்ளவர் அதைப் பொறுத்துக் கொள்வதால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன.

"ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 5640)

ஆக்கம்: அபூஷைமா