ஆண்டு ஒன்று கழிந்திருந்தது; ஹிம்ஸ் பகுதியின் ஆளுநரிடமிருந்து கடிதமே வரவில்லை. அரசின் கருவூலமான பைத்துல்மாலுக்கு வந்து சேரவேண்டிய ஸகாத் வரிகளும் அனுப்பிவைக்கப்படவில்லை; என்னதான் நடக்கிறது ஹிம்ஸில்? மதீனாவிலிருந்த கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவுக்குச் சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது.
‘உலகக் கவர்ச்சிக்கு இரையாகிவிட்டாரா நம் ஆளுநர்?’
‘இருக்க முடியாதே. சிறந்தவரைத்தானே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தோம்.’
‘எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் நபியவர்களைத் தவிர உலகத் தடுமாற்றத்திலிருந்து முழுப் பாதுகாப்புப் பெற்றவர் எவர் இருக்கிறார்?’
மாறி மாறிச் சிந்தனைகள். ஒருமுடிவுடன் தம் உதவியாளரை அழைத்தார். “ஹிம்ஸிலுள்ள நம் ஆளுநருக்குக் கடிதம் எழுதுங்கள். ‘அமீருல் மூஃமினீனின் இக்கடிதம் கிடைத்ததும் உடனே புறப்பட்டு வரவும். வரும்பொழுது முஸ்லிம்களிடமிருந்து திரட்டிய வளவரிப்பணத்தையும் கொண்டு வரவும்’” என்று வாசகத்தையும் விவரித்தார்.
கடிதம் ஆளுநரை அடைந்தது. உடனே மூட்டை, முடிச்சைக்கட்டிக் கொண்டு புறப்பட்டார் ஆளுநரும்.
oOo
வேகவேகமாய் ஓடிவந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன் வந்து நின்றார் அவர். அப்பொழுது மஸ்ஜிதுந் நபவீயில் இருந்தார்கள் நபியவர்கள். வந்து நின்றவர் மிகவும் இளவயதுச் சிறுவர். கண்களில் ஆற்றாமை. பதைப்புடன் நபியவர்களிடம் செய்தி ஒன்றைச் சொன்னார். அங்கிருந்த தோழர்களுக்கு அச்செய்தி அதிர்ச்சி அளித்தது.
நபியவர்கள், “ஜுலாஸ் இப்னு ஸுவைதை இங்கு அழைத்து வாருங்கள்” என்று ஆளனுப்பிவிட்டு, சிறுவர் உமைர் இப்னு ஸஅதைப் பள்ளிவாசலில் அமரச் சொன்னார்கள்.
ஜுலாஸ் என்பவர் வந்து சேரட்டும். அதற்குள் முன் வரலாற்றுச் சுருக்கம் கொஞ்சம்.
ஸஅத் இப்னு உபைத், தோழர்கள் மத்தியில் இறைமறையை ஓதுவதில் தேர்ச்சி பெற்ற காரீ ஆக இருந்தார். “ஸஅத் அல்-காரீ” என்று அழைக்கப்படுமளவு அவருக்கு அதில் சிறப்பு. “ஆகா! பட்டம் கிடைத்துவிட்டது” என்று குர்ஆனை ஓதி மகிழ்ந்து அத்துடன் போதும் என்று அவர் தம்மைச் சுருக்கிக்கொள்ளவில்லை. பத்ரு, உஹது, அகழி யுத்தம் என்று நபியவர்களின் காலத்தில் அனைத்துப் போர்களிலும் அவர் படை வீரர். ‘களம் மஞ்சம், உயிர் துச்சம்’ என்று வாழ்ந்தவருக்கு அவருடைய அறுபத்து நான்காம் வயதில் – கலீஃபா உமரின் காலத்தில் நிகழ்வுற்ற ஃகாதிஸிய்யா போரில் – உயிர்த்தியாகம் வாய்த்தது. அதன் சிறப்பு, பத்திரமாய் வரலாற்றில் குறிக்கப்பட்ட ஆவணம். ஃகாதிஸிய்யா வெற்றியை விவரித்து கலீஃபா உமருக்குக் கடிதம் எழுதியிருந்தார் தளபதி ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு. அதில்,
“நமக்குப் பாரசீகர்கள் மீதான வெற்றியை அல்லாஹ் அருளியுள்ளான். அதற்காக நீண்ட யுத்தம் புரிந்து கடுமையான வேதனைகளைச் சகித்தோம். இறுதியில், அவர்களுக்கு முன் வந்தவர்களுக்கு அளித்த அதே தண்டனையை இறைவன் அவர்களுக்கும் அளித்தான். முஸ்லிம்களுடன் மோதிய அவர்களது படையினரின் எண்ணிக்கை நாம் இதற்குமுன் கண்டிராதது. ஆயினும் அந்த எண்ணிக்கை அவர்களுக்கு உதவி புரியவில்லை. ஆனால் அல்லாஹ்வின் உதவி முஸ்லிம்களுக்குக் கிட்டியது. நம் வீரர்கள் அவர்களை ஆற்றிலும் கரையோரமும் மலைப்பாதைகளிலும் பின்தொடர்ந்து துரத்தினர். முஸ்லிம்களுள் ஸஅத் இப்னு உபைத் அல்-காரீமற்றும் இன்னார் இன்னார் உயிர்த் தியாகிகள் ஆயினர். இவர்களைத் தவிர உயிர்த் தியாகிகளான முஸ்லிம்கள் மேலும் பலர். அவர்களது பெயர்களை நாம் அறியோம். ஆனால் அல்லாஹ் அவர்களைச் சிறப்பாய் அறிந்தவன்.
இரவு நேரம் வந்ததும் அவர்கள் குர்ஆன் ஓதும் ஒலி தேனீக்கள் எழுப்பும் ரீங்காரத்தைப்போன்று இருந்தது. களத்திலோ அவர்கள் சிங்கங்கள். இன்னும் சொல்லப்போனால் சிங்கங்களைக்கூட அவர்களுடன் ஒப்பிட முடியாது. நம்மை விட்டு இவ்வுலகைப் பிரிந்தவர்களுக்கு உயிர்த் தியாகம் எனும் பெருமை கிடைத்துள்ளது. நம்முடன் இருப்பவர்களின் சிறப்பும் இறந்தவர்களுக்கு இணையானதே.”
இக்கடிதமும் இதில் அடங்கியுள்ள ஆச்சரியங்களும் மட்டுமே பல பக்கங்களுக்குக் கட்டுரையாக விரிவடையும் தன்மையுடையவை. நாம் இப்போதைக்கு இங்குச் சுருக்கமாய்த் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள், மிக அழகாய்க் குர்ஆன் ஓதி, ‘காரீ’ எனும் பட்டப் பெயருடன் திகழ்ந்த ஸஅத் இப்னு உபைத் களத்திலும் ஆண் சிங்கம்; அதற்கு அவருக்குக் கிடைத்த பரிசு உயிர்த் தியாகம். இத்தகு நற்பேறு பெற்றவரின் மைந்தர்தாம் உமைர் இப்னு ஸஅத்.
உமைரின் தாய்க்கும் ஸஅத் இப்னு உபைதுக்குமான திருமண உறவு முறிந்ததும் உமைரின் தாய் மறுமணம் புரிந்துகொண்டது ஜுலாஸ் இப்னு ஸுவைத் என்பவரை. இவர், உமைரின் குலமான மதீனாவின் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த செல்வந்தர். நற்குண கணவான். தம் மனைவியின் முந்தைய கணவனுக்குப் பிறந்த பாலகர் உமைரின்மீது இயற்கையான வாஞ்சை, அன்புடன், தம்மகன் போலவே வளர்த்துவந்தார் ஜுலாஸ். உமைருக்கும் தம் வளர்ப்புத் தந்தையிடம் அன்னியோன்யமும் பாசமும் ஏற்பட்டுப்போனது. நேர்மை, நற்குணம், உள்ளார்ந்த அறிவுத்திறன் ஆகியவை உமைரிடம் தாமாய் அமைந்து, ஆளும் வளர அவருடன் சேர்ந்து அவையும் வளமாய் வளர்ந்து வந்தன. அவை ஜுலாஸுக்கு உமைரின் மீதான பிணைப்பை மேலும் வலுப்படுத்தின.
உமைர் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு, தம்முடைய பத்தாவது வயதில், மதீனாவில் இஸ்லாம் அறிமுகமான ஆரம்பத் தருணங்களிலேயே அதை ஏற்றுக்கொண்டவர். புத்திக்கூர்மைமிக்க உமைரின் மனத்தில் ஆழப்பதிந்தது இஸ்லாமிய விதை. பசுமரம் என்பதால் ஆணி செவ்வனே இறங்கியது. மாசு மறுவற்ற வயது. தூய வடிவிலான இஸ்லாம் அவரது வாழ்க்கை நெறியாகிப்போனது. பொறுப்புகள் அழுத்த ஆரம்பிக்காத இளவயது; அன்புடன் கவனித்துக்கொள்ளும் வளர்ப்புத் தந்தை; தேவையான பொருளாதார வசதி அமைந்த வீடு; அனைத்திற்கும் மேலாய், தூய வடிவிலான இஸ்லாமியக் கல்வி நபியவர்களின் வாயிலாய் – தேன் துளிகளாய் உள்ளத்துள் இறங்கும் வாய்ப்பு – இன்னும் என்ன வேண்டும்?
துறுதுறுவெனப் பள்ளிவாசலுக்கு விரைந்து சென்று நபியவர்களின் பின்நின்று தொழுதுவிட்டு ஓடிவருவார் உமைர். அதைப்பார்த்து அவரின் தாய்க்கு அகமெல்லாம் மகிழ்ந்துபோகும்; உவந்து போவார்! இனிமையாய், அமைதியாய்க் கழிந்துவந்தது சிறுவர் உமைரின் பொழுது. ஆனால் அதற்குச் சோதனை வந்து சேர்ந்தது. அவ்வயதில் அவருக்கு அது மிக அதிகம்.
ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு நபியவர்கள் தபூக் நோக்கிப் படையெடுத்தார்கள். தபூக் என்பது ஸிரியாவின் எல்லையில் அமைந்திருந்த பகுதி. மதீனாவிலிருந்து தொலைவு. தொலைவு என்றால் வெகு தொலைவு. அவ்வளவு தொலைவு பயணம் செய்து பைஸாந்தியர்களைக் களத்தில் சந்திப்பது என்று எடுக்கப்பட்ட முடிவு முஸ்லிம்களுக்கு உருவான ஒரு பெரும் சவால். அதற்குப் பல காரணங்கள். அவற்றுள் முக்கியமானவை பொருளாதாரம், தொலை தூரம் மேற்கொள்ள வேண்டிய மிகக் கடுமையான பயணம், சந்திக்கவிருக்கும் எதிரியின் வலிமை. எதிரிகள்மீது திடீரென நிகழ்த்தவிருக்கும் படையெடுப்பாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான தருணங்களில் எங்குச் செல்கிறோம் என்பதை முஸ்லிம்களிடம் நபியவர்கள் அறிவிக்காமல் ரகசியம் காப்பார்கள். ஆனால் இம்முறை முஸ்லிம்கள் எதிர்கொள்ளவிருக்கும் பல கடினங்களைக் கவனத்தில்கொண்டு, தமது படையெடுப்பின் இலக்கைத் தெளிவாக அறிவித்து விட்டார்கள். ‘இந்தப் படையெடுப்பில் கலந்துகொண்டு களம் காணப்போகும் நீங்கள், இதில் அடங்கியுள்ள வழக்கத்திற்கும் மீறிய இடர்களையம் அபாயத்தையும் முற்கூட்டியே முற்றிலுமாய் அறிந்திருப்பதும் அவசியம்’ எனும் முன்னெச்செரிக்கைக் குறிப்பையும் வழங்கினார்கள்.
அப்பொழுது கடுமையான கோடை காலம். பகல் நேரங்களில் அடிக்கும் வெயிலின் கடுமையும் சூடும் மண்டையை உருக்கும். அத்தகு காலங்களில் அரபியர்கள் சற்று ஓய்வை நாடுவது வழக்கம். ஆனால் அதெல்லாம் தோழர்களுக்குப் பொருட்டாய் இல்லை. ‘நபியவர்கள் அழைப்பு விடுத்துவிட்டார்கள்; கிளம்பு களத்துக்கு’. இடர்களையெல்லாம் புத்தியிலிருந்து புறந்தள்ளி மதீனா உற்சாகமானது. தோழர்கள் சுறுசுறுப்பாய்த் தயாராக ஆரம்பித்தார்கள்.
முஹாஜிர், அன்ஸார் பெண்மணிகள் நபியவர்களிடம் வந்தார்கள். தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி அவர்கள் முன் வைத்தார்கள். ‘இந்தாருங்கள். அல்லாஹ்வின் பாதையில் போருக்குச் செல்லும் படையினருக்கு உண்டான தளவாடங்கள் வாங்க இவை உதவட்டும்.’ உதுமான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு, பை நிறையத் தங்க தீனார்கள் அள்ளிவந்து கொட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு அஃவ்ப் ரலியல்லாஹு அன்ஹு இருநூறு வீசம் தங்கத்தைத் தோளில் சுமந்துவந்து வைத்தார். இப்படித் தங்கம், நகை, பொற்காசு என்றால், ஒருவர் தம்மிடமிருந்த மெத்தையை சந்தையில் விற்க வந்துவிட்டார். அதைவிட உருப்படியான பயனுள்ள எதுவும் அவரிடம் விற்பனைக்கு இல்லை.
சரி, மெத்தையை விற்று என்ன செய்ய?
‘நான் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வேண்டும். அதற்கு எனக்கொரு வாள் வேண்டும். அதற்குப் பணம் வேண்டும்.’
கட்டில், மெத்தை, சொத்து, சுகம் என்று அனைத்தையும் எடுத்து வந்து கொட்டிக் களம் கண்டார்கள் தோழர்கள். கட்டிலில் இழுத்துப் போர்த்தி சொகுசாய்ப் படுத்துக்கொண்டு நமது அவலங்களுக்கு விடிவு பிறந்துவிடாதா? என்று விட்டத்தை வெறிக்கப் பார்ப்பதில் முடிந்துவிடுகிறது நமது கவலை.
இவ்விதமாகப் போர்க்கால நடவடிக்கைகள் மஸ்ஜிதுந் நபவீயில் பரபரவென்று நிகழ்வதைப் பார்த்த சிறுவர் உமைருக்குப் பண்டிகைக்கால குதூகலம். வீட்டிற்கு ஓடினார்.
தோழர்கள் இவ்வளவு பரபரப்பு என்றால் மதீனாவில் மற்றொரு குழு இருந்தது. புறத்தில் முஸ்லிம்களாகவும் அகத்தில் நயவஞ்சகர்களாகவும் வலம் வந்த குழு. அவர்களுக்குத் தபூக் படையெடுப்பு என்றதும் ‘கபக்’ என்று தொண்டையை அடைத்தது. ‘வெயில் என்ன கொளுத்து கொளுத்துகிறது. இதில் அவ்வளவு தூரம் சென்றுவர நம்மிடம் என்ன வசதி இருக்கிறது. அதுவும் மோதப்போவது யாரிடம்? வல்லரசனிடம். சென்றால் உயிராவது மிஞ்சுமா?’ என்று ஏக சந்தேகம். ‘இதெல்லாம் சரிவராது’ என்று மக்கள் மத்தியில் மெதுமெதுவே சந்தேக விதையைத் தூவ ஆரம்பித்தனர். நபியவர்களின் முதுகுக்குப் பின்னால் அப்பட்டமாய்ப் புறம் பேசினர். இதன் வீச்சு பலவீன இதயம் கொண்ட நம்பிக்கையாளர்களைப் பதம் பார்த்தது. உமைரின் வீட்டிலும் அது நுழைந்திருந்தது.
வீடு திரும்பிய உமைர், நகரின் கோலாகலத்திற்கும் பரபரப்பிற்கும் எவ்வித சம்பந்தமும் இன்றித் தமது இல்லம் அமைதியாக இருப்பதைப் பார்த்தார். ‘என்ன ஆயிற்று ஜுலாஸுக்கு? ஜுலாஸ் தாம் படையில் செல்வதற்கான முன்னேற்பாடுகள் எதையும் செய்ததாகத் தெரியவில்லையே. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் போருக்காக அவர் எதுவும் ஈந்ததாய்த் தெரியவில்லையே!’ என்று அச்சிறுவரின் முகமெங்கும் குழப்பம். ஒருவேளை ஊரில் நடப்பது வீட்டில் இவருக்குச் சரியாகத் தெரியவில்லை போலும் என்று ஆர்வத்துடனும் உணர்ச்சியுடனும் பள்ளிவாசலில் தாம் கண்ட காட்சிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தார் உமைர்.
‘முஸ்லிம்கள் சிலர் கூட்டமாக வந்தனர். தங்களையும் படையில் சேர்த்துக்கொள்ளும்படி நபியவர்களிடம் ‘கெஞ்சோ கெஞ்சு’ என்று கெஞ்சினர். ஆனால் கைச்சேதம்! அவர்களின் சவாரிக்கு நபியவர்களிடம் குதிரையோ, ஒட்டகமோ எதுவுமே இல்லை. கவலையுடன் திரும்பினார்கள் வந்தவர்கள். போருக்குச் செல்ல முடியவில்லையே, இறைவனின் வழியில் போர் புரிய முடியவில்லையே என்று, பாவம் அவர்கள் கண்களெல்லாம் கண்ணீர்.’
உமைர் இப்னு ஸஅத் கதை கதையாகக் கூற, கேட்டுக்கொண்டேயிருந்த ஜுலாஸ் ஒரு கட்டத்தில் சட்டென்று குறுக்கிட்டார். கோபத்தில் கத்தினார். “தாம் ஒரு நபி என்கிறார் இந்த முஹம்மது. அது மட்டும் உண்மையென்றால் நாமெல்லாம் கழுதைகளைவிட மோசம்”
சிறுவர் உமைர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். காதில் அறைவிழுந்ததைப் போல் சுளீரென்று வலி. ஜுலாஸா இப்படிப் பேசுவது? புத்திசாலி என்று இவரை நினைத்திருந்தோமே. இவரது இந்தப் பேச்சு இவரது இஸ்லாத்தைக் கேள்வி குறியாக்கிவிடுகிறதே! உமைரால் தாங்க முடியவில்லை.
கவலையுடன் யோசித்தது உமைரின் மனம். இதைக் கேட்டுவிட்டு அப்படியே புதைத்துவிட்டு அமைதி காத்தால் அது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இழைக்கும் துரோகமாகும். வெளியில் சொன்னால் அது நம்மைத் தூக்கி வளர்த்தவரின் ‘செய்ந்நன்றி மறத்தல்’ – ஜுலாஸுக்குத் துரோகம். என்ன செய்யலாம்?
அங்கு கைகொடுத்தது அவரது புத்திக்கூர்மை. பாலகர் கற்றிருந்த பாலபாடம் தெளிவு அளித்தது.
“அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். இவ்வுலகில் உம்மைவிட அதிகமாய் யாரையும் நான் நேசிக்கவில்லை, ஒரே ஒருவரைத்தவிர. அவர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ஸல்). நீர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்தாம். உமக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன்தான். ஆனால், நீர் இப்பொழுது ஒன்று சொன்னீரே, அதை நான் திரும்பச் சொல்வதேகூட அவதூறு. அதை நான் மறைத்தல் முஸ்லிம்களுக்கு இழைக்கும் துரோகம்; மார்க்கத்தை மீறும் செயல்; என்னை நரகத்திற்கு இட்டுச் சென்றுவிடும். எனவே, நான் அல்லாஹ்வின் தூதரிடம் செல்லப்போகிறேன். நீர் சொன்னதை அவர்களிடம் தெரிவிக்கப் போகிறேன். அறிந்துகொள்ளவும், இதை நான் மிக மெய்யாகச் சொல்கிறேன்.”
சொல்லிவிட்டு வேகவேகமாய் ஓடிவந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்முன் வந்து நின்றார் உமைர். அப்பொழுது மஸ்ஜிதுந் நபவீயில் இருந்த நபியவர்களிடம் நடந்ததைச் சொன்னார். தோழர்களுக்கு ஏக அதிர்ச்சி. “ஜுலாஸ் இப்னு ஸுவைதை இங்கு அழைத்துவாருங்கள்” என்று ஆளனுப்பிவிட்டு சிறுவர் உமைரைப் பள்ளிவாசலில் அமரச்சொன்னார்கள் நபியவர்கள்.
விரைந்து வந்து சேர்ந்தார் ஜுலாஸ். நபியவர்களுக்கு முகமன் கூறிவிட்டு அவர்கள் எதிரில் அமர்ந்தார்.
“உமைர் இப்னு ஸஅது உம்மைப் பற்றி இப்படிக் கூறுகிறாரே” என்று விசாரித்தார்கள் நபியவர்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! உமைர் பொய் சொல்கிறார். இது நன்றாக இட்டுக்கட்டப்பட்ட கதை. இப்படியொரு அவப்பேச்சை நான் பேசவே இல்லை” என்று அப்படியே முழுப் பூசணிக்காயை ரொட்டிக்குள் சுருட்டி மறைத்தார் ஜுலாஸ்.
உமைரின் முகத்தையும் ஜுலாஸின் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தார்கள் தோழர்கள். யார் முகத்தில் உண்மை தெரிகிறது, பொய் ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கப் பார்த்தார்கள். அவர்களுக்குள் குசுகுசுவென்று பேச்சு எழுந்தது. அவர்கள் மத்தியில் நயவஞ்சகர்கள் சிலரும் கலந்திருந்தனர். அவர்களுள் ஒருவன், “நன்றியற்றவன் இச்சிறுவன். தன்னைப் பராமரித்து வளர்த்தவருக்கு இவன் என்ன கைம்மாறு செய்கிறான் பாருங்கள்” என்றான். தாங்கள் மக்கள் மத்தியில் தூவிய விதை ஜுலாஸ் மனத்தில் வளர ஆரம்பித்த மகிழ்வு அவனுக்கு.
“இல்லை. இச்சிறுவர் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்” என்றார்கள் மற்றவர்கள். “பாருங்கள். அவர் முகத்தில் உண்மை ஒளிர்கிறது.”
நபியவர்கள் உமைரைப் பார்த்தார்கள். முகம் சிவந்து, கண்களில் சுரந்த நீர் கன்னத்தில் உருண்டு நெஞ்சில் வழிந்து கொண்டிருந்தது. உமைரின் வாய் முணுமுணுத்தது. முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. “யா அல்லாஹ்! நான் சொல்வது உண்மை என்பதை உன் தூதருக்கு அறிவி.”
ஜுலாஸ் நபியவர்களைச் சற்று நெருங்கி வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். உமைர் தங்களிடம் கூறியதை நான் சொல்லவே இல்லை. நான் தங்களிடம் உரைப்பதே உண்மை. தாங்கள் விரும்பினால் நாங்கள் இருவரும் தங்களிடம் சத்தியப் பிரமாணம் செய்வோம்.”
அப்பொழுது அது நிகழ்ந்தது. ஜுலாஸ் எதை எதிர்பார்க்கவில்லையோ அது நிகழ்ந்தது. உமைர் எதை வேண்டினாரோ அது பலித்தது. நபியவர்களுக்கு வஹீ வந்தது. அச்சமயம் நபியவர்களுக்கு ஏற்படும் நிலையைத் தோழர்கள் அறிந்திருந்ததால் அதை அவர்கள் உணர்ந்து, அனைவரும் அமைதியுடன் நபியவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஜுலாஸுக்குக் கவலையும் அச்சமும் தோன்றி, உடல் முழுவதும் படர்ந்தது. உமைர் ஆர்வமுடன் அமர்ந்திருந்தார்.
இறைவன் தமக்கு அருளிய வசனத்தை அறிவித்தார்கள் நபியவர்கள்.
இவர்கள் நிச்சயமாக ‘குஃப்ருடைய’ சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
குர்ஆனின் ஒன்பதாவது சூரா அத்-தவ்பாவின் 74ஆவது வசனமாக இடம்பெற்றது அந்த இறைவாக்கியம்.
‘அவ்வளவுதான். தீர்ந்தது விஷயம். இதற்குமேல் மறைப்பதற்கு ஏதுமில்லை. விமோசனம் என்று ஏதும் இருப்பின் அது அப்பட்டமான அடிபணிதல் மட்டுமே’ என்று புரிந்துகொண்டார் ஜுலாஸ். அந்த அளவிற்காவது அவரது அறிவு விழித்துக்கொண்டது அவரது பாக்கியம்.
நபியவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! உளமார வருந்துகிறேன். மனதார மன்னிப்புக் கோருகிறேன். உமைர் தங்களிடம் கூறியது முற்றிலும் உண்மை. நானே பொய்யுரைத்தேன். எனது பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள். எனது உயிர் தங்களுக்கு அர்ப்பணம்.”
நபியவர்கள் இப்பொழுது மீண்டும் உமைரைப் பார்த்தார்கள். மீண்டும் அச்சிறுவர் முகத்தில் கண்ணீர். ஆனால் இம்முறை அதில் ஆனந்தம். முகத்தில் பிரகாசம். உமைரின் காதைச் செல்லமாய்ப் பிடித்த நபியவர்கள், “சிறுவரே! உம் காதுகள் தம் பொறுப்பை நிறைவேற்றின. உம் இறைவன் உமக்கு நியாயம் வழங்கினான்.”
ஜுலாஸின் மன்னிப்பு வெறும் வாய் வார்த்தையாக நின்றுவிடாமல் மனமாற்றம் உண்மையானதாக அமைந்து போனது. நேர்மையானதாக மாறிப்போனது அவரது வாழ்க்கை. தவிரவும் உமைரிடம் மேலும் அதிகமான அன்பைப் பொழிந்தார் அவர். தம்மிடம் யாரேனும் உமைரைப் பற்றிக் குறிப்பிட்டால், “அல்லாஹ் என் பொருட்டு அவருக்கு மேலும் வெகுமதி அளிப்பானாக. என்னை இறை நிராகரிப்பிலிருந்து காப்பாற்றி நரகிலிருந்து விடுவித்தவர் உமைர்” என்று ஜுலாஸின் பதிலில் பெருமிதம்.
பால்ய வாழ்க்கை ஒருவரை இவ்விதம் புடம்போட்டால் பிற்காலத்தில் அவர் எந்நிலை எய்துவார்? அடுத்துப் பார்ப்போம்.
– மீண்டும் வருவார் உமைர் (ரலி), இன்ஷா அல்லாஹ்.