தோழர்கள் – 35 – அம்ரிப்னுல் ஜமூஹ் – عمرو بن الجموح

Share this:

அம்ரிப்னுல் ஜமூஹ்

عمرو بن الجموح

பூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு வெகுகாலம் முன்பே அதைப்போன்ற நிகழ்வொன்று உஹதுப் போரின் போது மதீனாவில் நிகழ்ந்தது. கச்சைக் கட்டிக்கொண்டு போருக்கு விரைய தயாராக இருந்தவர் அம்ரிப்னுல் ஜமூஹ் ரலியல்லாஹு அன்ஹு. அபூதல்ஹாவை முதுமை சூழ்ந்திருந்தது என்றால், இந்தத் தோழருக்கு முதுமையும் உடல் ஊனமும்.

தம் தந்தை போருக்குத் தயாராவதைக் கண்ட அவரின் மகன்கள் பதற்றமடைந்தனர். முதுமை, வலுவற்ற உடல்வாகு, கால் ஊனம் போன்ற நிலையில் உள்ள தங்களின் தந்தை ஜிஹாதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்தது. ஆயினும் அவரது உள்ள உறுதியும் துணிவும் அவர்களுக்குக் கலக்கம் அளித்தன. எப்படியும் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. தந்தையை அணுகி,

“அன்பிற்குரிய தந்தையே! தங்களைப் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் விலகிக்கொள்ள அல்லாஹ் தனது இறைமறையில் தெளிவாக விலக்கு அளித்துவிட்டானே. பிறகு ஏன் இந்தச் சிரமம், பிரயாசை?”

அனுசரணையான தம் மகன்களின் பேச்சு ஆறுதலுக்குப் பதிலாய் அவருக்குக் கடும் சீற்றத்தைத்தான் உண்டாக்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க விந்தி விந்தி விரைய ஆரம்பித்தார் அவர்.

இறைவனுக்காக தனது உயிரை மாய்த்துத் தீருவேன் என்று அடம்பிடித்து விரையும் அளவிற்கு ஒருவர் இருந்தால் அவர் எத்தனை ஆண்டு காலம் இஸ்லாத்தில் மூழ்கித் தோய்ந்து போய்க் கிடந்தார்? எந்தளவு இராப் பகலாய் நுணுகி நுணுகிப் பயின்றார்? அதெல்லாம் எதுவும் இல்லை. கடுமையான சந்தர்ப்பத்தில் தெளிவான சிந்தனை. அதைத் தொடர்ந்து இறை உவப்பும் சொர்க்கமும் மட்டுமே இலக்கு என்ற குறிக்கோள். தீர்ந்தது விஷயம்.

oOo

மதீனாவில் இருந்த முக்கியக் கோத்திரங்களுள் ஒன்றாக விளங்கிய பனூ ஸலமாவின் தலைவர்களுள் ஒருவர் அம்ரிப்னுல் ஜமூஹ். அக்காலத்தில் அவரைப் போன்ற மேல்குடி வகுப்பினர் தத்தமது வீடுகளில் தங்களுக்கே என தனித்துவமான கடவுள் சிலை ஒன்றைத் தங்களது சிறப்பு வழிபாட்டிற்காக வைத்திருப்பார்கள். அபூதர்தா ரலியல்லாஹு இவ்விதம் தமக்கென ஒரு சிலை வைத்திருந்தார் என்பதை அவரது வரலாற்றில் படித்தது நினைவிருக்கலாம். அதைப்போல் அம்ரிப்னுல் ஜமூஹ்விடமும் ஒரு சிலை இருந்தது. அதன் பெயர் மனாத். உயர்ரக மரத்தினால் செய்யப்பட்டிருந்த சிலை அது. வெகு சிரத்தையாக தனது கடவுளைப் பாதுகாத்து பராமாரித்து வந்தார் அவர். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் அதற்கு நறுமணத் தைலங்கள் பூசுவது, பட்டாடை அணிவிப்பது என்று சிறப்பான கவனிப்பு நடைபெறும். பண்டிகைக் காலம், விசேஷ நிகழ்வுகள் என்றாலோ மிருகங்களைப் பலி கொடுத்துச் சிறப்பு வழிபாடு. எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் அந்தச் சிலையுடன்தான் ஆலோசனை.

இவ்விதம் தானுண்டு, தன் சிலை உண்டு என்று அம்ரிப்னுல் ஜமூஹ் வாழ்ந்து கொண்டிருந்தபோது மதீனாவினுள் இஸ்லாமிய மீளெழுச்சி நிகழ ஆரம்பித்தது. அப்போதே அவருக்கு உத்தேசம் அறுபது வயதிருக்கும்.

முஸ்அப் இப்னு உமைர் எனும் இளைஞர் ஒருவர் மக்காவிலிருந்து வந்து, தம் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு புதிய மதம் பற்றிப் பிரச்சாரம் புரிவதையும், அதை ஏற்றுக்கொண்ட சில மக்கள் அந்த மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்து இருப்பதையும் அரசல் புரசலாக அறிந்திருந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். ஆரம்பத்தில் அதைக்கேட்டு அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மெதுமெதுவே வீடு வீடாக, தெருத் தெருவாக, கோத்திரம் கோத்திரமாக மதீனாவில் மாற்றமொன்று வேகமாய் நிகழ ஆரம்பித்து, அது அவரது வீட்டின் கதவையும் வந்து தட்டியபோதுதான் சத்தியம் அவரை எட்டியது.

அம்ரிப்னுல் ஜமூஹ்வுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் முஅவ்வத், முஆத், கல்லாத். இந்த மூன்று மகன்களுக்கும் அணுக்கத் தோழர் ஒருவர் இருந்தார் – முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு. மதீனத்தின் இந்த நான்கு இளைஞர்களும் முஸ்அப் இப்னு உமைரின் ஏகத்துவப் பிரச்சாரத்தினால் கவரப்பட்டு, உண்மையுணர்ந்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டனர். முஆத் இப்னு அம்ரு இரண்டாம் அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டு நபியவர்களுக்குப் பிரமாணம் அளித்த எழுபது பேரில் ஒருவர்.

அம்ரிப்னுல் ஜமூஹ்வுக்கும் அணுக்கத் தோழர் ஒருவர் இருந்தார் – அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹரம். இவரின் சகோதரி ஹிந்தை மணமுடித்திருந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். ஹிந்தும் தம் மகன்களுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார். தம் வீட்டினுள்ளேயே நிகழ்ந்துவிட்ட இந்த மாற்றங்கள் எதுவும் அறியாமல் அம்ரு மட்டும் தம் பணி, தம் கடவுள் என்று தம் சோலியில் மும்முரமாய் இருந்து கொண்டிருந்தார்.

‘நம் கணவரையொத்த முக்கியஸ்தர்கள், தலைவர்கள், மிட்டா மிராசுகள் எல்லாம் ஒவ்வொருவராய் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஏகத்துவப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டிருக்க, நம் கணவர் மட்டும் உருவ வழிபாட்டிலேயே நீடித்துக்கொண்டிருக்கிறாரே?’ என்று பெரும் கவலையாக இருந்தது ஹிந்துக்கு. அம்ருவின் மீது ஏகப்பட்ட அன்பு, மரியாதை, பாசம் எல்லாம் அவருக்கு இருந்ததால் தம் கணவர் நிரந்தர நஷ்டவாளியாகி விடுவாரோ என்று புழுங்கிக் கொண்டிருந்தார்.

நிகழ்காலப் பெண்களுக்கு இதில் ஒளிந்திருக்கும் உண்மை புரிவது நல்லது. நிலம்-நீச்சு, கார்-பங்களா என்று கணவனின் இகலோக வெற்றிக்கும் அந்தஸ்திற்கும் கவலைப்படும் குறுகிய கண்ணோட்டம் அக்காலப் பெண்களிடம் இல்லை. மாறாக மறுமையின் வெற்றியே வெற்றி என்ற தெளிவு அவர்களிடம் இருந்தது. அதை நோக்கி குடும்பத்தைக் கட்டி இழுத்தார்கள். அதனால்தான் போரில் தங்கள் வீட்டு ஆண்களை இழந்து துக்கம் சூழ்ந்தபோதும் அதையும் மீறி அவர்களால் துணிவுடன் நிமிர்ந்து நிற்க முடிந்தது. வெற்றி வீரர்களால் அந்தச் சமுதாயம் பெருகி வழிந்தது.

அதே நேரத்தில் அம்ருவுக்கும் கவலை உருவாகிக் கொண்டிருந்தது. மக்காவிலிருந்து கிளம்பிவந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இளைஞன் முஸ்அபின் சொல்பேச்சுக் கேட்டு, ஏற்கெனவே மதீனாவில் பலர் தங்களின் பண்டைய வழக்கமான உருவ வழிபாட்டிலிருந்து மாறிப்போய்விட்டனர். அதைப்போல் தம் மகன்களும் கெட்டுப்போய், அந்த முஹம்மதின் மார்க்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு.

ஒருநாள் தம் மனைவி ஹிந்தை அழைத்தார். “நீ மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் ஹிந்த். பிரச்சாரகர் முஸ்அபை நம் மகன்கள் சந்திக்காமல் பார்த்துக்கொள். நான் அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை இவர்கள் தன்னிஷ்டத்திற்கு எந்த முடிவும் எடுப்பதை நான் விரும்பவில்லை”

“அப்படியே ஆகட்டும்!” என்றார் ஹிந்த்.

பிறகு மெதுவாய், “முஸ்அபிடமிருந்து நம் மகன் முஆத் அறிந்து வந்திருக்கும் செய்தியைக் கேட்க விரும்புகிறீர்களா?”

“நீ நாசமாய்ப் போக!” என்று அலறினார் அம்ரு. “எனக்குத் தெரியாமல் நம் மகன் நம் பண்டைய வழக்கங்களை மறந்துவிட ஆரம்பித்து விட்டானோ? அவ்வளவு தைரியமா அவனுக்கு?”

தான் நினைத்ததைப்போல் தம் கணவர் கோபமடைவதைக் கண்டவர், அதை மட்டுப்படுத்த முயன்றார். “அப்படியெல்லாம் எதுவும் இல்லை. முஸ்அபின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றிரண்டில் கலந்து கொண்டிருந்திருப்பான் போலிருக்கிறது. அப்பொழுது அவர் சொல்வதை மனனம் செய்திருக்கிறான்”

“அவன் வீட்டுக்கு வந்ததும் அவனை என்னிடம் அனுப்பு”

முஆத் வீடு திரும்பியதும் அவரின் தாய் நடந்ததை விவரிக்க, தந்தையைச் சென்று சந்தித்தார் அவர். “அந்தப் பிரச்சாரகர் சொன்னதை ஏதோ நீ கேட்டு வைத்திருக்கிறாயாம். அது என்னவென்று சொல்; நானும் கேட்கிறேன்”

சுற்றி வளைத்து ஏதும் சொல்லாமல், நேரடியாக ஆரம்பித்தார் முஆத்:

“அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தின் இறைவன் அல்லாஹ்வுக்கே

(அவன்)அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன்.

(அவன்தான் நியாயத்)தீர்ப்பு நாளின் அதிபதி.

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உதவிகள் அனைத்தையும் உன்னிடமே வேண்டி நிற்கிறோம்.

நீதான் எங்களை நேர்வழியில் நடத்த வேண்டும் –

நீ அருள் புரிந்தோரின் அறவழியில்.(அன்றி உன்) கோபத்திற்கு ஆளானோர் வழியிலன்று; நெறி தவறியோர் வழியிலுமன்று”

குர்ஆனின் முதல் அத்தியாயமான ஃபாத்திஹாவை முழுவதும் ஓதி முடித்தார்; ஆவலுடன் தந்தையைப் பார்த்தார்.

‘நியாயமான வார்த்தைகளாய் இருக்கிறதே!’ என்று வியந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். “பிரமாதமான வார்த்தைகள். அவருடைய பிரச்சாரம் எல்லாம் இதைப்போன்றவை தாமா?”

“இதைப்போன்றே சிறப்பானவை தந்தையே! நம் குல மக்கள் அவரிடம் சென்று பிரமாணம் செய்து கொண்டதைப்போல் தாங்களும் அவரைச் சந்தித்து ஏற்றுக் கொள்வீர்களா?” என்று உற்சாகமாகக் கேட்டார் முஆத்.

சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார் அம்ரு. பிறகு, “நான் எனது கடவுள் மனாத்திடம் ஆலோசனை பெறவேண்டும். அதன் அனுமதியில்லாமல் நான் எதுவும் செய்ய முடியாது”

விசித்திரமாயில்லை? உருவமற்ற ஏக இறைவன் ஒருவன் என்பதை ஏற்றுக்கொண்டு அவனை வணங்க, உருவச்சிலையிடம் ஆலோசனை புரியவேண்டும் என்று சொல்லுமளவிற்கு அவர்களது அஞ்ஞான வழக்கம் அவருள் வேரூன்றிப் போயிருந்தது.

“தந்தையே! சிந்திக்கவோ, பேசவோ இயலாத ஒரு துண்டு மரக்கட்டை இவ்விஷயத்தில் என்ன முடிவு சொல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார் முஆத்.

“நான்தான் சொன்னேனே. அதனிடம் ஆலோசிக்காமல் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவ்வளவுதான்”

சிலைகள் வாய்திறந்து பேச இயலாதவை என்பதை அறிந்திருந்த அவர்கள் அவற்றிடம் ஆலோசனை கேட்க ஒரு யுக்தி கையாள்வார்கள். கிழவி ஒருத்தியை அழைத்துவந்து சிலைக்குப் பின்னால் நிற்கச் செய்துவிட்டு, சிலையிடம் கேள்வி கேட்க, கிழவி பதில் அளிப்பார். அந்தப் பதில்கள் அந்தக் கடவுளர் பதிலாகக் கருதப்படும். அம்ரிப்னுல் ஜமூஹ் தம் வீட்டிற்கு ஒரு கிழவியை அழைத்து வந்து, தம் மனாத் சிலையின் பின்னால் நிற்க வைத்தார். ஊனமுற்ற காலின் குறையைப் புறக்கணித்து மற்றொரு காலால் நிமிர்ந்து நின்றுகொண்டு சிலையிடம் பேச ஆரம்பித்தார்.

“மனாத்! மக்காவிலிருந்து கிளம்பி வந்து இங்குப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருப்பவரைப் பற்றி நீ நன்கு அறிவாய். அதில் எனக்குச் சந்தேகமில்லை. அவரது பிரச்சாரத்தின் நோக்கம் உனக்குத் தீங்கு புரிவதாய் உள்ளது. நாங்களெல்லாம் உன்னை வழிபடுவதை நிறுத்த வேண்டுமாம். நான் அவர் சொன்ன செய்திகளைக் கேட்க நேர்ந்தது. அவை பிரமாதமாகத்தான் உள்ளன. ஆனால் உன்னைக் கலக்காமல் அவரிடம் நான் பிரமாணம் அளிக்க விரும்பவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்”

சிலையிடமிருந்து ஏதும் பதில் இல்லை. சிலைக்குப் பின்னாலிருந்த கிழவி உறங்கிவிட்டாளோ? சற்று ஏமாற்றமுற்றாலும், “நீ கோபமாக இருப்பதாய்த் தோன்றுகிறது மனாத். உனக்குத் தீங்கு ஏற்படுத்தும் எதையும் நான் இதுவரை செய்ததில்லை. உனது சீற்றம் தணியும்வரை நான் காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டார் அம்ரு.

அவரின் மகன்களுக்குத் தங்கள் தந்தை அவரது சிறப்புச் சிலையின்மேல் எத்தகைய அபரிமிதமான பக்தி கொண்டுள்ளார், ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பதெல்லாம் நன்கு தெரியும். அந்தச் சிலை அவரது வாழ்வுடன் இரண்டறக் கலந்த ஒன்று. அதன்மீது அவருக்கு இருக்கும் பாசத்தை நீக்கினாலன்றி அவரை நேர்வழியை நோக்கி சிந்திக்க வைக்க இயலாது என்பது உறுதியாகத் தெரிந்தது. மகன்கள் மூவரும் தங்களின் தோழர் முஆத் பின் ஜபலோடு அமர்ந்து பேசித் திட்டம் தீட்டினர்; உற்சாகமுடன் கலைந்தனர்.

ஒருநாள் இரவு அந்த மனாத் சிலையை கடத்திச்சென்று பனூ ஸலமா குடியிருப்புப் பகுதிக்குப் பின்னாலிருந்த ஒரு குழியில் வீசிவிட்டனர் அந்த இளைஞர் குழுவினர். காலையில் எழுந்த அம்ருவுக்குச் சிலையைக் காணாமல் பலத்த அதிர்ச்சி! பல இடங்களில் தேடிப் பார்த்ததில் அது ஒரு குப்பையில் கிடந்தது. பலமான கோபம் ஏற்பட, ஆத்திரம் தீரக் கத்திவிட்டு, அந்தச் சிலையை மீண்டும் வீட்டிற்கு எடுத்துவந்து, கழுவி, குளிப்பாட்டி, நறுமணம் தடவி, பழைய இடத்தில் கொண்டு சென்று நட்டு வைத்தார். “ஓ மனாத்! சத்தியமாகச் சொல்கிறேன், உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவேன்”

அன்றிரவு மீண்டும் அது நடந்தது. ஒரே வித்தியாசம். மனாத்தை, வேறொரு குழியில் எறிந்திருந்தனர் அந்த இளைஞர்கள். காலையில் எழுந்து, மீண்டும் கூச்சலிட்டு, அரற்றி, அதை எடுத்து வந்து கழுவி, குளிப்பாட்டி அதன் இடத்தில் வைத்தார் அந்த முதியவர்.

மூன்றாவது இரவும் அந்தச் செயல் தொடர்ந்தது. இம்முறை அந்தச் சிலையைத் தேடிக்கொண்டு வந்து வைத்தவர், வாளொன்றை எடுத்து வந்து, அந்தச் சிலையில் கட்டிவிட்டுக் கூறினார், “சத்தியமாகச் சொல்கிறேன். யார் இதைச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் இம்முறை அவர்கள் உன்னைக் களவாட வரும்பொழுது, நீ இந்த வாளைக் கொண்டு உன்னைத் தற்காத்துக் கொள், எனக்குத் தூக்கம் வருகிறது” என்று நிம்மதியாகத் தூங்கச் சென்று விட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ்.

மீண்டும் வந்து சேர்ந்தது அந்த இளைஞர் படை. சிலையையும் அந்த வாளையும் ஒருங்கே தூக்கிக் கொண்டு சென்று அந்தச் சிலையை, செத்துப்போன ஒரு நாயின் கழுத்துடன் கட்டி வேறொரு குழியில் தள்ளிவிட்டனர்.

காலையில் கண்விழித்த முதியவருக்கு, ‘அட என்னடா இது தலைவேதனை, வாளிருந்தும் பிரயோசனமில்லையா?’ என்று அதிர்ச்சி. இம்முறை பல இடங்களிலும் அதைத் தேட வேண்டியதாகி விட்டது. இறுதியில் அது கிடந்த குப்பை மேட்டை அணுகி அந்தச் சிலை கிடந்த கோலத்தைப் பார்த்தார். சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர், “நீ மட்டும் உண்மையான ஒரு கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் இங்கு வந்து கிடந்திருக்க மாட்டாயே!”

இளைஞர்கள் அந்த முதியவருக்குத் தெரிவிக்க விரும்பிய செய்தி சரியானபடி அவரை எட்டியது. இஷ்ட தெய்வம் தன்னைக் கைவிட்டு மரணித்துப்போன அந்தக் கடுமையான சந்தர்ப்பத்தில் தெளிவான சிந்தனை உதிக்க வெகுவிரைவில் இஸ்லாத்தினுள் நுழைந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ் ரலியல்லாஹு அன்ஹு.

அதுவரை உருவ வழிபாட்டில் மூழ்கிக் கிடந்த அவரது மனது, அதன்பின் ஏகத்துவ ஒளியில் மிளர ஆரம்பித்தது. சம்பிரதாயமான மாறுதல் என்பதெல்லாம் இல்லாமல் இஸ்லாம் அவரது வாழ்வின் அங்கமாகிப் போனது. எந்த அளவு? இஸ்லாத்திற்காக இந்த உயிர் துச்சம் என்று கருதுமளவு!

உஹதுப் போர் மேகம் மதீனாவைச் சூழ்ந்தபோது, களத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த முஸ்லிம்களில் அம்ரிப்னுல் ஜமூஹ்வின் மகன்களும் முக்கியமானவர்கள். வீட்டிற்கு வருவதும் ஆயுதங்கள் தயார் செய்வதும் செல்வதும் என்று பரபரவென இயங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தாமும் கவசம் தரிக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்துத்தான் திகைத்துப் போனார்கள் புதல்வர்கள்.

“அன்பிற்குரிய தந்தையே! தங்களைப் போன்றவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் விலகிக்கொள்ள அல்லாஹ் தனது இறைமறையில் தெளிவாக விலக்கு அளித்துவிட்டான். பிறகு ஏன் இந்தச் சிரமம், பிரயாசை?”

‘அதானே? சலுகைதான் இருக்கிறதே’ என்று அமர்ந்திருக்கலாமில்லையா வயது முதிர்ந்த அம்ரிப்னுல் ஜமூஹ்? மாறாய், ‘எனக்குக் கிடைக்கக்கூடிய நற்கூலி கைநழுவிப் போவதாவது? சொர்க்க வாசலை விரைந்து காண என் ஊனம் ஒரு தடைக்கல்லா?’ என்று நபியவர்களைச் சந்தித்து நியாயம் கேட்க விந்தி விந்தி விரைந்தார் அவர். எத்தகைய இறை பக்தியும் மனோதிடமும் இருந்திருந்தால் தம் உயிரை இழக்க அடம்பிடித்து ஓடியிருப்பார் அவர்?

“அல்லாஹ்வின் தூதரே! என் கால் ஊனத்தைக் காரணமாக்கி நான் நல்லறம் புரிவதை என் மகன்கள் தடுக்கப் பார்க்கின்றனர். நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன். விந்திக்கொண்டே சொர்க்கம் சென்றடைவதே என் ஆசையாக இருக்கிறது”

அவரது உறுதியை உணர்ந்த நபியவர்கள் கூறினார்கள், “இவரையும் படையில் இணைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு வீர மரணம் நிகழவேண்டும் என்று அல்லாஹ் நிர்ணயித்து இருக்கலாம்”

இறைத் தூதரின் அனுமதி அமல்படுத்தப்பட்டது. ஏதோ அமைச்சரவையில் மாபெரும் பதவி வந்து வாய்த்ததைப்போல் பேருவகையுடன் வீட்டிற்கு விரைந்தார் அம்ரிப்னுல் ஜமூஹ். திரும்பி வரப்போகும் உத்தரவாதம் ஏதும் இல்லை என்ற நிச்சய உணர்வுடன் தம் மனைவியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டவர், கஅபாவை நோக்கித் திரும்பிக் கையேந்தினார்.

“யா அல்லாஹ்! எனக்கு வீர மரணத்தை அளித்தருள்வாயாக. நான் ஏமாற்றமுடன் வீடு திரும்ப வைத்துவிடாதே!”

சற்று யோசித்துப் பாருங்கள். நமது பிரார்த்தனையும் வேண்டுதலும் எல்லாம் இவ்வுலக நன்மை, மேன்மை, உயர்வுக்காகத்தானே அமைகின்றன? நீண்ட ஆயுளுக்குத்தானே நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம்? ஆனால் இவர்?

தம் மகன்கள், தம் பனூ ஸலமா குலத்து வீரர்கள் என்று பெரும் அணி புடைசூழ, உஹது நோக்கிப் புறப்பட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ்.

துவங்கியது போர்.

உக்கிரமான ஒரு தருணத்தில் நபியவர்களைச் சுற்றி வெகு சில முஸ்லிம் வீரர்கள் மட்டுமே சூழ்ந்து நின்று காத்து, போர் புரியும் கடின சூழல் ஒன்று உருவானது என்று முன்னர் பார்த்திருந்தோம் இல்லையா? அந்தச் சிலருள் முன்வரிசையில் தம் ஒற்றைக் காலில் நின்று கொண்டு வீராவேசமாய் வாள் சுழற்ற ஆரம்பித்தார் அம்ரு.

“நான் சொர்க்கம் புக வேண்டும்; நான் சொர்க்கம் புக வேண்டும்” என்ற வார்த்தைகள் மட்டும் மந்திர உச்சாடமாய் அவரது வாயிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தன. அவரை அடுத்து அவரின் மகன் கல்லாத் நின்று கொண்டிருந்தார். இருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காத்து வெகு தீவிரமாய்ப் போரிட அரம்பித்தனர். அசராமல் சுழன்று கொண்டிருந்த அவர்களது வாள்கள் இறுதியில் அவர்கள் இருவரும் வெட்டப்பட்டு தரையில் சாய்ந்ததும்தான் ஓய்ந்தன.

போர் ஓய்ந்தபின் களத்தில் உயிர் நீத்துக் கிடந்த முஸ்லிம் வீரர்களைப் பார்வையிட்டுக் கொண்டே வந்த நபியவர்கள், “இவர்களைக் கழுவ வேண்டாம். இவர்களது காயமும் இரத்தமும் அப்படியே இருக்கட்டும். மறுமை நாளிலே இவர்களின் மரணத்திற்கு நான் சாட்சி பகர்வேன். இறைவனுக்காகக் காயம் பட்டவர், அன்றைய நாள் தம் இரத்தம் அழகிய நிறமாக மாறிப் போயிருக்க, மிகச் சிறந்த நறுமணத்துடன் மீண்டும் எழுந்து வருவார். அம்ரிப்னுல் ஜமூஹ்வையும் அவரின் நண்பர் அப்துல்லாஹ் இப்னு அம்ருவையும் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள். அவ்விருவரும் இவ்வுலகில் மிகுந்த நட்புடன் திகழ்ந்தனர்”

உதிர்ந்த உதிரம் உலர்ந்தும் உலராமலும் உஹதுக் களத்தில் அடக்கம் செய்யப்பட்டார் அம்ரிப்னுல் ஜமூஹ். அவர் வேண்டி நின்ற சொர்க்கம் அவர் வசப்பட்டது.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-34 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.