தோழர்கள் – 20 – முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ – مجزأة بن ثور السدوسي

Share this:

முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ
مجزأة بن ثور السدوسي

சென்ற அத்தியாயத்தில் ஸுராக்கா பின் மாலிக் வரலாற்றைப் பார்த்துக் கொண்டே பாரசீகத்தின் காதிஸிய்யா வரை வந்துவிட்டோம். இவ்வளவு தூரம் வந்துவிட்டதால் அப்படியே அதற்கடுத்து நிகழ்ந்த இன்னொரு முக்கியப் போரையும் ஓர் எட்டு எட்டிப் பார்த்துவிடுவோம்.

 

காதிஸ்ஸியாப் போரில் பாரசீகப் படைகளின் தளபதி ருஸ்தம் கொல்லப்பட்டதும் அந்தப் போர் ஒரு முடிவிற்கு வந்தது. அந்தப் போரில் பாரசீகப் படைப்பிரிவிற்கு ஜாலினுஸ் (Jalinus), ஹுர்முஸான் (Hormuzan) என்ற இரு முக்கியத் தலைவர்கள் இருந்தனர். போரின் இறுதியில் தப்பித்து ஆற்றைக் கடந்து ஓடிய ஜாலினுஸை, ஸுஹ்ரா இப்னுல்-ஹாவிய்யா (Zuhrah ibn al-Hawiyah) என்பவர் துரத்திச் சென்று பிடித்து, கொன்றொழித்தார். ஆனால், ஹுர்முஸான் மட்டும் தப்பித்துவிட்டான். முஸ்லிம் படைகள் பாரசீகத்திற்குள் முன்னேறிச் சென்று கொண்டேயிருக்க, இதர சிலப் போர்கள் நிகழ்ந்தன. ஓயாத ஒழியாத போர்க்காலம் அது. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்கள் அவை.  இங்கு நாம் சுருக்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியது – அதிலெல்லாம் பாரசீகர்கள் தோல்வியைத் தழுவ, அந்தந்தப் பகுதிகளும் முஸ்லிம்கள் வசமாகிக் கொண்டேயிருந்தன என்பதை மட்டுமே.

முஸ்லிம் படைகள் முன்னேற முன்னேற, ஹுர்முஸான் மட்டும் ஒவ்வொரு போரிலும் ஓடினான் ஓடினான், தப்பித்து ஓடிக்கொண்டேயிருந்தான். ஒருவழியாய் ரம்ஹொர்முஸ் (Ramhormuz) என்ற நகரை வந்தடைந்து அவன் மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, வேறொரு முனையில் பாரசீகப் பேரரசன் யஸ்தகிர்தை (Yezdagird) அமைச்சர் பிரதானிகளெல்லாம் தவிர பெருங்கவலையொன்று சூழ்ந்திருந்தது. முன்னேறி வரும் முஸ்லிம் படைகளை எப்படியும் தடுத்து நிறுத்திவிட வேண்டும், அவர்களை வென்று பாரசீகத்திலிருந்து விரட்டிவிட வேண்டும், என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டேயிருந்தவன், “அடுத்தக்கட்டப் போருக்குத் தயாராகுங்கள்!” என்று அறிவித்து விட்டான். ரம்ஹொர்முஸுக்கு அப்போதுதான் வந்து சேர்ந்த ஹுர்முஸான் தலைமையில் பாரசீகப் படைகள் தயாராயின. இதையெல்லாம் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா உமருக்குத் தகவல் தெரிவிக்க, மதீனாவிலிருந்து போர்க் கட்டளைகள் விரைந்து வந்தன.

பஸ்ரா நகரிலிருந்து ஸஹ்லிப்னு அதிய்யி தலைமையில் ஒரு படையை அனுப்பி வைக்கும்படி அபூமூஸா அல் அஷஅரீக்குக் கட்டளையிடப்பட்டது. அதே நேரத்தில் கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படை புறப்பட வேண்டும். இந்த இருபடைகளும் ரம்ஹொர்முஸ் நோக்கி முன்னேற வேண்டும். இருபடைகளும் ஓர் இடத்தில் இணைந்து, அந்த ஒருங்கிணைந்த படைக்கு அபூஸப்ரா இப்னு அபி ருஹ்ம் (Abu Sabrah ibn Abi Ruhm) தலைமை ஏற்க வேண்டும். இரண்டு படைவீரர்கள் அணி புறப்பட வேண்டிய அளவிற்குப் போரின் ஏற்பாடுகள் இருந்ததென்றால் அதன் தீவிரத்தை நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். 

அதன்படி கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் தனது படையுடன் ரம்ஹொர்முஸ் நோக்கிப் புறப்பட்டார்.

இந்தச் செய்திகளையெல்லாம் அறிந்த ஹுர்முஸான் திட்டம் தீட்டினான். பஸ்ரா நகரிலிருந்தும் வரும் படை நுஃமானின் படையுடன் ஒன்றிணைந்துவிட்டால் முஸ்லிம்களது பலம் அதிகமாகிவிடுமே என்று அவனுக்குக் கவலை. நுஃமானின் படையை வழியிலேயே சந்தித்து முறியடித்துவிட்டால்? காரியம் எளிதாகிவிடும்! எனவே அவன் தனது படைகளுடன் நுஃமானின் படையை எதிர்கொள்ளக் கிளம்பிச் சென்றான். அர்பக் (Arbak) எனும் பகுதியில் இரு படைகளும் மூர்க்கமாய் முட்டிக்கொண்டன. கடுமையான யுத்தம் மூண்டது. அந்தப் போரில் நுஃமான் ஹுர்முஸானை வென்றார். போர் தோல்வியில் முடிந்ததும் அங்கிருந்து தப்பித்த ஹுர்முஸான் ரம்ஹொர்முஸுக்குத் திரும்பாமல் தஸ்தர் எனும் நகருக்கு ஓடினான். பின்தொடர்ந்தது நுஃமானின் படை.

இதனிடையே பஸ்ராவிலிருந்து புறப்பட்டு வந்ததே ஸஹ்லிப்னு அதிய்யி தலைமையிலான படை, அது அல்-அஹ்வாஸ் பகுதியை அடைந்தது. அப்பொழுதுதான் அவர்களுக்கு நடந்து முடிந்த போர் நிகழ்வுகள் தெரியவந்தன. ஹுர்முஸான் நுஃமானை எதிர்கொள்ளக் கிளம்பிச் சென்றது தோற்றுப்போய் அவன் தஸ்தருக்கு ஓடியது, தஸ்தரை நோக்கி நுஃமானின் படை பின் தொடர்வது – இவையெல்லாம் அறிந்ததும், “திரும்பு தஸ்தர் நோக்கி” என்று இப்பொழுது இந்தப் படையும் தஸ்தருக்குப் பின்தொடர்ந்தது.

oOo

தஸ்தர்!

பாரசீகப் பேரரசின் மகுடத்தில் இரத்தினக் கல் அந்நகரம்! அருமையான தட்பவெப்ப நிலையும் வலுவான கோட்டைகளும் கொண்ட மிக அழகிய நகரம். பண்டைய காலத்திலேயே கட்டப்பட்ட இந்நகரத்தில் தொன்று தொட்டு மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. நாகரீகத்தின் மையமாய் அந்நகரம் அமைந்து இருந்திருக்கிறது. குதிரையின் உடல்போல் அமைந்திருந்த நீண்ட குறுகிய சிறுமலை. அதில் அந்நகரம் கட்டப்பட்டிருந்தது. மலையின் அடிவாரத்தில் துஜயால் (Dujayal) எனும் பள்ளத்தாக்கு. அதுதான் தஸ்தர் நகருக்குத் தண்ணீர் கேந்திரம். அங்கிருந்து நகரிலுள்ள நீர்த்தேக்கத்திற்குக் குழாய் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் வசதி வடிவமைக்கப்பட்டிருந்தது. கற்கள் நெருக்கமாய் வைத்துக் கட்டப்பட்ட சுவர், வலுவான இரும்புத் தூண்களாலான சுவர்தாங்கி, அதில் காரீயத்தால் பூசப்பட்ட குழாய்கள் என்று வடிவமைக்ப்பட்டிருந்தன. எல்லாம் சபூர் பேரரசனின் கட்டுமான சாமர்த்தியம். தஸ்தர் நகரைச் சுற்றிலும் உயரமான பருமனான சுவர் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு நகரைச் சுற்றி அமைக்கப்பட்ட சுவர்களிலேயே இதுதான் முதல் விசாலமான சுவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த தஸ்தர் நகருக்குள் சென்று பாதுகாப்பாக ஒளிந்து கொண்டான் ஹுர்முஸான். வலுவான தடுப்புச் சுவர் உள்ள நகர்தான். அதற்காக அப்படியே இருந்துவிட முடியுமா? நகரின் சுவருக்கு வெளியே ஆழமான அகழியொன்று வெட்ட ஏற்பாடு செய்து, முஸ்லிம்கள் எளிதில் கடக்க இயலாத வகையில் பக்காவாய் அரண் உருவானது. அகழிக்கு அடுத்தத் தடுப்பாகப் பாரசீகத்தின் மிகச் சிறந்த படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

இவ்விதம் இங்குத் தற்காப்பு தயாராகி முடிந்த வேளையில் வந்து சேர்ந்தன முஸ்லிம்களின் இரு படைகளும். ஒன்றிணைந்த முஸ்லிம் படைகளுக்கு, கலீஃபாவின் கட்டளைப்படி அபூஸப்ரா இப்னு அபி ருஹ்ம் தலைமை ஏற்றுக்கொண்டார். நிலைமையை ஆராய்ந்தவர் எதிரியின் தற்காப்பையும் அரணையும் வலுவையும் கவனித்து கலீஃபா உமருக்குத் தகவல் அனுப்பினார். “கூடுதல் படை வேண்டும்!”

கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவிடமிருந்து பஸ்ராவிலிருந்து அபூமூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவுக்குத் தகவல் பறந்தது. “தாங்கள் ஒரு படை திரட்டிக் கிளம்பிச் சென்று தஸ்தரில் தங்கியுள்ள படையுடன் இணைந்து கொள்ளுங்கள். பஸ்ராவின் வீரர்களுக்கு நீங்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அபூஸப்ரா அனைத்துப் படைகளுக்கும் தலைமை வகிக்கட்டும்.”

அதனுடன் சேர்த்து மற்றொரு முக்கியத் தகவலும் இருந்தது. “முக்கியமாய் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ தங்களது படையில் இடம்பெற வேண்டும்”

தன் ஆளுநர்களை எப்படி தேடித் தேடி நிர்ணயிப்பதில் திறமை இருந்ததோ அதைப்போல் ஒவ்வொரு படைக்கும் தலைமையையும் தகுந்த வீரர்களையும் நிர்ணயிப்பதிலும் உமருக்கு அசாத்தியத் திறமை இருந்தது. அந்த திறன்தான் இந்தப் போரில் முஜ்ஸாவை முக்கிய வீரராய் இணைத்துக் கொள்ள உமரின் உள்ளுணர்வைத் தூண்டியது. அது முற்றிலும் சரியே என்பதை நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்துவது பெரும் ஆச்சரியம்! பார்ப்போம்.

முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ ரலியல்லாஹு அன்ஹு, பக்ரு கோத்திரத்தைச் சேர்ந்தவர். நிகரற்ற படைத் தலைவர்; படு துணிவான வீரர்.

கலீஃபா உமரின் கட்டளைப்படி அபூமூஸாவின் படையில் முஜ்ஸா இடப்புறமுள்ள அணியில் இடம்பெற, கிளம்பியது படை.

தஸ்தர் நகரைச் சுற்றிவளைத்த முஸ்லிம் படைகளை அகழியும் வீரர்களின் அரணும் கோட்டையும் படுபாதுகாப்பாய் ஹுர்முஸானை உள்ளே வைத்துப் பொத்திக்கொண்டு வரவேற்றன. நேரடிப் போருக்கு ஏதும் வழியில்லை என்று தெரிந்தது முஸ்லிம்களுக்கு. “கூடாரம் அமையுங்கள். முற்றுகை தொடங்கட்டும்!” என்று கட்டளையிடப்பட, தொடங்கியது முற்றுகை.

ஒருநாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஏறக்குறைய பதினெட்டு மாதங்கள் நீடித்தது இந்த முற்றுகை. முஸ்லிம்களின் பொறுமைக்கும் வீரத்திற்கும் பெரியதொரு சவால் அது!

இந்தப் பதினெட்டு மாதகாலமும் அமைதியாய் ஏதும் கழியவில்லை. பாரசீகப் படைக் குழுக்களுடன் எண்பது சிறு சிறு யுத்தங்கள் நிகழ்ந்தன. இந்தச் சிறுயுத்தம் எப்படி நிகழும் என்றால் ஆரம்பத்தில் “ஒத்தைக்கு ஒத்தை வர்ரியா?“ என்று சண்டை ஆரம்பிக்கும். இரு தரப்பிலிருந்தும் ஒரு முக்கிய வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள். அதில் ஒருவர் கொல்லப்பட, அதற்கு அடுத்து இருதரப்பிற்கும் இடையே கடுமையான சண்டை நிகழ்வுறும்.

இத்தகைய ஒத்தைக்கு ஒத்தை சண்டைகளில் முஸ்லிம்கள் தரப்பில் களமிறங்கியவர் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ. மட்டை ஆட்டத்தில் நூறு ஓட்டம் எடுப்பதுபோல் நூறு எதிரி வீரர்களை அவர் சர்வசாதாரணமாய்க் கொன்று தள்ள – அதகளம்! முஜ்ஸாவின் பலமும் பராக்கிரமும் எதிரிகளைத் திகைப்படையச் செய்தன. “முஜ்ஸா“ என்ற பெயரே பாரசீகர்கள் மத்தியில் பயத்தைத் தோற்றுவிக்க ஆரம்பித்தது. அதே பெயர் முஸ்லிம்கள் மத்தியில் பெருமையையும் மரியாதையையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்தியது. ரலியல்லாஹு அன்ஹு.

இந்தப் போருக்குமுன் முஜ்ஸாவை அதிகம்பேர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்பொழுது அவரது வீரத்தைக் கண்டபிறகுதான் முஸ்லிம்களுக்கு அது புரிந்தது, கலீஃபா உமர் ஏன் மிகக் குறிப்பாய் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ரைப் போரில் இணைத்துக் கொள்ள கட்டளை அனுப்பினார் என்று.

எண்பது சிறு சிறு யுத்தங்கள் நடைபெற்றதல்லவா? அவை அனைத்திலும் முஸ்லிம்களின் தாக்குதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அகழிக்குமேல் அமைந்திருந்த பாலங்களை விட்டுவிட்டு, கோட்டைச் சுவர்களுக்கு பின்னால் ஓடி மறைந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது எதிரிகளுக்கு.

ஆனால் அதேநேரத்தில் அவ்வளவு நீண்டகால முற்றுகை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அயர்வையும் சோர்வையும் ஏற்படுத்தியிருந்ததும் உண்மை. முஸ்லிம்களுக்கு அசாத்தியப் பொறுமை இருந்ததென்றாலும் ஒவ்வொரு நாளும் உல்லாசமாகவா கழிந்தது? நகரின் உயர்ந்தோங்கிய சுவர்களுக்குப் பின்புறமிருந்து பாரசீகர்கள் முஸ்லிம்களின்மேல் அம்பு மழை பொழிந்து கொண்டிருந்தனர். அதில் முஸ்லிம்களுக்கு உயிரிழப்பும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. தவிரவும் பாரசீகர்கள் கடைப்பிடித்த மற்றொரு யுக்தி முஸ்லிம்களுக்கு பெரும் சோதனை.

பெரிய பெரிய கொக்கிகளை சிவந்துவிடும் அளவிற்கு மட்டும் நெருப்பில் சுட்டுக் கொள்வார்கள். அதை இரும்புச் சங்கிலிகளில் இணைத்துவிட சுவர்களின் மேலிருந்து கீழிறங்கும் அக்கொக்கிகள். முஸ்லிம் வீரர்கள் சுவரை ஏறிக் கடக்கவோ சுவரை அண்மவோ நெருங்கும்போது அந்த நெருப்புக் கொக்கிகளை அவர்கள்மேல் மாட்டி, கட்டி இழுக்க… என்னாகும்? சகிக்கவியலாத வேதனையுடன் தசை பொசுங்கி முஸ்லிம்கள் உயிரிழிக்க நேர்ந்தது.

போரும் பொறுமையும் தொழுகையும் பிரார்த்தனையுமாக முற்றுகை நீடித்துக் கொண்டிருந்தது. இறைவனிடம் முஸ்லிம்கள் கையேந்த ஒருநாள் அந்த விசித்திரம் நிகழ்ந்தது. உதவி புரிவோருள் எல்லாம் சிறந்த உதவி புரிவோன் அவன்தானே?

உடைக்க இயலாத பெரும் அரணாய் நின்று கொண்டிருந்த தஸ்தரின் அந்த நெடிய சுவரை ஒருநாள் அபூமூஸா கூர்ந்து பார்வையிட்டுக் கொண்டேயிருந்தார். எங்காவது, ஏதாவது ஒருவழி தென்படாதா என்று கவலையுடன் சுற்றிவர, விண்ணிலிருந்து வந்து விழுந்தது ஓர் அம்பு. அதன் நுனியில் செய்தி ஒன்று!

பிரித்துப் படித்தால், “முஸ்லிம்களை நம்பலாம் என்று எனக்கு உறுதியாகிவிட்டது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் என்னைச் சேர்ந்த சிலருக்கும் நீங்கள் அபயம் அளிக்க வேண்டும். எனது உடமைகளுக்கு நீங்கள் பாதுகாவல் அளிக்கவேண்டும். அதற்கு என்னுடைய கைம்மாறு உண்டு. நகருக்குள் ஊடுருவும் ஓர் இரகசியப் பாதை எனக்குத் தெரியும். அதை நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்”

பாரசீக ஆட்சியில் சிக்குண்டிருந்த மக்கள், பாரசீகர்கள்மேல் பாசம், அபிமானம் ஆகியனவெல்லாம் கொண்டவர்களாய் இருக்கவில்லை. மாறாய் அந்த அரசின் கொடுங்கோல் ஆட்சி அவர்களுக்குத் தாங்கமாட்டாத தொல்லை. உழுபவன் சில்லறை எண்ணிக் கொண்டிருக்க, அதிகாரத்தில் உள்ளோர் மூட்டை மூட்டையாக அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தனர். “ஆமாம், இப்பொழுதுவரை நம் நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது?” என்று நமக்கு அலுப்பு ஏற்படலாம். அது வேறு விஷயம்.

பாரசீக மன்னர்களிடம் சிக்குண்டிருந்த அந்த மக்களுக்கு முஸ்லிம்களின் நேர்மையும் வாய்மையும் இறை விசுவாசமும் அவர்கள் கற்பனைகூட செய்திராத ஆச்சரியமாய் அவர்கள் கண்ணெதிரே விரிந்தன. அது தஸ்தர் நகரின் வலுவான அரணின் அஸ்திவாரத்தை அசைக்க ஆரம்பித்தது.

செய்தியைப் படித்த அபூமூஸா அவர்களுடைய பாதுகாவலுக்கு உறுதிமொழி அளிக்கும் பதிலொன்றை உடனே எழுதி, அதை ஓர் அம்பில் கட்டி உள்ளே எய்தார். அம்பஞ்சல் வேலை செய்தது. அன்றைய இரவின் இருட்டில் யாருக்கும் தெரியாமல் அந்த மனிதன் நகருக்கு வெளியே வந்து அபூமூஸாவைச் சந்தித்தான்.

“நாங்கள் உயர்குடியைச் சேர்ந்த மக்கள். ஆனால் ஹுர்முஸான் என் அண்ணனை அநியாயமாகக் கொலை செய்துவிட்டு என் அண்ணனின் குடும்பத்தையும் உடமைகளையும் தனதாக்கிக் கொண்டான். இப்பொழுது அவனுக்கு என்மேல் கடுமையான கடுப்பு. அவனிடமிருந்து எந்த நொடியும் ஆபத்து வரலாம் என்ற பயத்திலேயே நானும் என் குடும்பமும் உள்ளோம். அவனது அநீதியை மிகக் கடுமையாய் வெறுக்கிறோம். முஸ்லிம்களான உங்களது நேர்மை எங்களுக்கு மிகவும் உவப்பானதாய் இருக்கிறது. அவனது துரோகத்தைவிட உங்களது வாய்மை மகா மேன்மை. தஸ்தர் நகரினுள் ஊடுருவும் ரகசியப் பாதை ஒன்றை உங்களுக்குக் காட்ட நான் முடிவெடுத்துவிட்டேன். அதன் வழியே நீங்கள் நகருக்குள் புகுந்துவிட முடியும். உங்களுள் சிறந்த வீரரும் மதிநுட்பம் வாய்ந்தவரும் நன்றாக நீச்சல் அறிந்தவருமான ஒருவரை என்னுடன் அனுப்புங்கள். நான் அவருக்கு வழி காண்பிக்கிறேன்”

அந்தப் பாரசீக நாட்டுக் குடிமகன் பேசியதில் நமக்கு எண்ணற்றப் பாடங்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு அடிப்படைத் தகுதிகளாய் இருக்க வேண்டியதில் மிக முக்கியமானவை உறுதியான இறைநம்பிக்கையும் எத்துணைப் பெரிய சோதனை வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் மனத்திடமும்தாம். அவை அவர்களிடம் இருந்தன. ஈருலுகிலும் வென்றார்கள்! அவற்றிலிருந்து நாம் அந்நியப்பட்டுக் கிடந்தால், எதை நொந்து என்ன பயன்?

அபூமூஸா, முஜ்ஸாவை தனியே அழைத்துப் பேசினார். பதினெட்டு மாதகாலப் பொறுமைக்குப் பயனாய் திடீரென ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றத்தை விவரித்து, “உமது குழுவிலிருந்து அந்த மனிதன் கேட்கும் தகுதியுடைய ஒருவரை எனக்குத் தந்து உதவவும்”

“வேறொருவர் எதற்கு? நானே செல்கிறேனே! தாங்கள் அனுமதியுங்கள்”

யோசித்தார் அபூமூஸா. “அதுதான் உமது விருப்பமெனில், நீரே செல்லவும். அல்லாஹ்வின் அருள் உமக்குண்டு”

அடுத்து முக்கிய ஆலோசனைகளை அவருக்கு வழங்கினார் அபூமூஸா. “கவனமாய்ப் பாதையை மனதில் குறித்துக் கொள்ளுங்கள். நகரின் வாயில் எங்கு அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டியது முக்கியம். ஹுர்முஸான் எப்படி இருப்பான், எங்கு இருக்கிறான் என்பதை அறிய வேண்டும். அடுத்து இந்தப் பணியில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாமல் காரியமாற்றித் திரும்ப வேண்டும்”

எதிரியின் கோட்டைக்குள் ஊடுருவுவது என்பார்களே, இது உண்மையிலேயே அந்தப் பணிதான். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் உள்ளே சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் அடுத்தநொடி சென்றவர் தலை அவருக்கு சொந்தமில்லை.

“அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு இரவின் இருளில் அந்தப் பாரசீக மனிதனுடன் கிளம்பினார் முஜ்ஸா.

மலையைக் குடைந்து அமைத்த சுரங்கவழி ஒன்று இருந்தது. அது தஸ்தர் நகரையும் ஆறு ஒன்றையும் இணைத்தது. அதன் வழியே தொடங்கியது பயணம். சில இடங்களில் அந்தச் சுரங்கவழி அகலமாய் இருக்க நீரினுள் நடந்தே செல்ல முடிந்தது. வேறு சில இடங்களில் மிகக் குறுகலாய் நீந்தி மட்டுமே செல்ல வேண்டிய நிலை. சில இடங்கள் வளைந்து நெளிந்து இருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து கிளைச் சாலைகள் பிரிவதைபோல் அங்கெல்லாம் இவர்கள் சென்று கொண்டிருந்த சுரங்கவழிப் பாதையிலிருந்து கிளைகள் பிரிந்திருந்தன. வேறு சில இடங்களில் வெகு நேராய் எளிதாய்க் கடக்கும் வகையில் அமைந்திருந்தது பாதை.

மெதுமெதுவே முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்கள் முஜ்ஸாவும் அந்த மனிதனும். ஒருவழியாய் சுரங்கப்பாதை தஸ்தர் நகரினுள் வந்து முடிய, நகருக்குள் அடியெடுத்து வைத்தார் முஜ்ஸா. தேர்ந்த சுற்றுலா வழிகாட்டிபோல் ரகசியமாய் முஜ்ஸாவை நகரினுள் கூட்டிவந்த அந்தப் பாரசீக மனிதன், ஹுர்முஸான் இருக்கும் இடத்திற்கு அருகில் அழைத்துச் சென்று மிகத் தெளிவாக அடையாளம் காட்டினான். “அதோ அவன்தான் ஹுர்முஸான். இதுதான் அவன் இருக்கும் இடம், நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துவிட்டான்.

அவ்வளவு நெருக்கத்தில், கை நீட்டி எளிதாய்ப் பறித்துவிடும் தூரத்தில் எதிரியைக் கண்டதும் முஜ்ஸாவிற்கு கைகாலெல்லாம் பரபரத்தது. ஒரே அம்பு. தீர்ந்தது விஷயம் என்று அவன் ஜோலியை முடித்துவிடலாம்! ஆனால் தலைவரின் கட்டளை அந்த நினைவிற்குத் தடையிட, தனது உணர்ச்சிகளையெல்லாம் மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு,  அந்த மனிதனுக்கு நன்றி நவின்றுவிட்டு விடிவதற்குள் வந்து வழியே தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார் முஜ்ஸா.

அபூமூஸாவைச் சந்தித்து நடந்த அனைத்தையும் விவரிக்க, அடுத்து பரபரவென காரியம் துவங்கியது. சிறப்பான முந்நூறு வீரர்களைத் தேர்ந்தெடுத்தார் அபூமூஸா. பொறுமையிலும் உடல் வலிமையிலும் உளவலிமையிலும் சிறந்தவர்கள் அவர்கள். முக்கியமாய் நீந்துவதில் அவர்களுக்கு அசாத்தியத் திறமை இருந்தது. அவர்களுக்கு முஜ்ஸஅதிப்னி ஃதவ்ர் தலைவர். அந்த கமாண்டோ படைக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

“வெற்றிகரமாய் ஊடுருவி நகரின் உள்ளே நுழைந்ததும் ‘அல்லாஹு அக்பர்’ என்று உரத்து ஒலியெழுப்புங்கள். வெளியில் உள்ளவர்களுக்கு அதுவே சங்கேதக் குறியீடு. அதைக் கேட்டதும் வெளியில் உள்ள படை நகரைத் தாக்கத் துவங்கும்.”

பெரியதொரு போருக்கு தயாரானது தஸ்தர்.

தம் வீரர்களை இயன்றவரை குறைவான ஆடைகள் உடுத்தி்க் கொள்ளச் சொன்னார் முஜ்ஸா. நீரில் துணி கணத்தால் எப்படிச் சுளுவாய் நீந்துவது? தவிர, வாளைத் தவிர வேறு எந்த ஆயுதமும் எடுத்துக் கொள்ளக் கூடாது; அந்த வாளையும் ஆடையினூடே மறைத்து உடம்பினுள் கட்டிக் கொள்ள வேண்டும்.


oOo

அடுத்த நாள் –

முன்னிரவில் கிளம்பியது அந்தப் படை.

மிகவும் கடினமான, ஆபத்தான அந்த சுரங்கவழியை சில மணி நேரங்கள் போராடிக் கடந்தனர் அவர்கள். நகரினுள் முடிந்த அந்த சுரங்க வாயிலை அடையும்போது இருநூற்று இருபது வீரர்கள் அந்தக் கொடிய பயணத்தில் இறந்துவிட்டதை அறிந்தார் முஜ்ஸா. முந்நூறில் எண்பது பேர் மட்டுமே மீந்திருந்தனர். எனில், அது எத்தகைய கடினமான வழியாக இருந்திருக்க வேண்டும்? தம் சகாக்கள் வழியிலேயே மாண்டுபோனதற்கு நின்று வருந்தக்கூட நேரமில்லை மிஞ்சியவர்களுக்கு. புயலாய் நுழைந்தனர் தஸ்தருக்குள்!

நகரினுள் நுழைந்த அந்தச் சிறிய எண்பதுபேர் படை வீர விளையாட்டு நிகழ்த்தியது. வாளை உருவிக் கொண்டு அரணுக்குப் பாதுகாவலாய் இருந்த வீரர்களை சப்தமேயின்றி விறுவிறுவென்று கொன்று எறிந்தனர் அவர்கள். அரணின் கதவுகளைத் திறந்து “அல்லாஹு அக்பர்” என்று அவர்கள் உரத்து ஒலியெழுப்ப, அவ்வளவுதான் … வெளியில் காத்துக் கொண்டிருந்த முஸ்லிம்களின் படை பதிலுக்கு “அல்லாஹு அக்பர்” என்று சொல்லி நகருக்குள் காட்டாற்று வெள்ளமாய்ப் புகுந்தது.

விடிந்தது பொழுது!

குருதி பெருக்கெடுத்தோடிய மிகக் கடுமையான போர் அது. இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமானதொரு போர். பதினெட்டு மாதகால முற்றுகையை எதிர்த்துக் கொண்டிருந்த பாரசீகர்கள் அன்று நிலைகுலைந்து போயினர். ஈட்டியும் அம்பும் வாளும் பறந்து சுழன்றுகொண்டிருக்க படுஆக்ரோஷமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது போர். அவ்வளவு அமளியின் நடுவே ஹுர்முஸானையே முஜ்ஸாவின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன. ஒருவழியாய் அவனைக் கண்டதும் தனது வாளை உருவி ஏந்தி கிடுகிடுவென முன்னேறினார் முஜ்ஸா. ஆனால் தனது படை வீரர்களின் குழுவில் மறைந்து போனான் ஹுர்முஸான். ஏமாற்றமடைந்த முஜ்ஸா அவனைத்தேட சிறிது நேரத்தில் மீண்டும் அவனைக் கண்டுவிட்டார்.

இம்முறை தாமதியாமல் பாய்ந்து முன்னேறினார் முஜ்ஸா. அவனை நெருங்கி, தாக்கத் தொடங்க இருவர் மத்தியிலும் பொறி பறக்கும் வாள் சண்டை உருவானது. மணல் புழுதி கிளம்பி எழ, வாட்களின் உரசலில் தீப்பொறி பறந்தது. கடுமையான அந்தச் சண்டையின் இறுதியில் தனது வாளால் ஹுர்முஸானைத் தீர்த்துக் கட்ட முஜ்ஸா பாய்ந்த வேகத்தில் அவர் இலக்குத் தப்பியது. ஆனால் ஹுர்முஸான் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். தனது வாளை அவர்மேல் அவன் பாய்ச்ச, வீர மரணம் எய்தினார் முஜ்ஸா.

தொடர்ந்து நடைபெற்ற போரில் முஸ்லிம் படையினர் வென்று ஹுர்முஸானை உயிருடன் சிறைப் பிடித்ததும், அவனை அவனுடைய ராஜ அலங்காரத்துடன் இரத்தினக்கல் பதித்த மகுடம், தங்க இழையிலான ஆடை ஆகியனவற்றுடன் மதீனாவிற்கு கலீஃபா உமரிடம் அழைத்துச் சென்றதும், ஹுர்முஸானுக்கும் உமருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலும், இறுதியில் ஹுர்முஸான் இஸ்லாத்தை ஏற்றதும் சுவையான தனிக் கதை. மற்றொரு முக்கியத் தோழரின் வரலாறும் இந்தப் போரில் வந்து முடிவுறும். அந்த சாகசமும் ஒரு தனிக் கதை.

தோழர்கள் யாரும் தங்களை வரலாற்று நாயகர்களாக நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வாழவில்லை, நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவில்லை, முன்தீர்மானங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. வாழ்ந்தார்கள் –  உயிரும் மூச்சும் மரணமும் இறைவனுக்காக அவனுடைய திருத்தூதருக்காக என்று வாழ்ந்தார்கள். அதுபோதும், அதுமட்டும் போதும் என்று வாழ்ந்தார்கள். அதை பொருந்திக் கொண்டான் இறைவன். விளைவு? வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணம், அதில் அவர்களின் சாகசம் என்று அவர்களது மேன்மை, உயர்வு, பெருமை வரலாற்றின் அத்தியாயங்களாய்ப் பதியப்பட்டுவிட்டன.

தஸ்தர் வெற்றியின் பின்னணியில் பெரும்பங்கு வகித்த முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீக்கு வீரமரண அந்தஸ்துடன் இவ்வுலகில் முடிவிற்கு வந்தது அவருடைய அத்தியாயம்.

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

தோழர்கள் முகப்பு |  தோழர்கள்-18 >


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.