தோழர்கள் 67 – முஹம்மது பின் மஸ்லமா محمد بن مسلمة

Share this:

முஹம்மது பின் மஸ்லமா

محمد بن مسلمة

அடர்த்தியான இரவு. மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தவனை நண்பர்கள் அழைக்கும் குரல் கேட்டது. உடனே எழுந்தான்.

“இந்நேரத்தில் எங்குச் செல்கிறீர்கள்?” என்று கேட்டாள் அவன் மனைவி.

“என் சகோதரர்கள் வந்திருக்கிறார்கள்”

“அவர்களுடைய குரலில் இரத்தம் சொட்டுவதை நான் உணர்கிறேன்” என்றாள் மனைவி. ஏதோ சரியில்லை என்று அவளுக்கு மட்டும் உள்ளுணர்வு எச்சரித்தது.

“அவர்கள் வேறு யாருமல்லர். என் சகோதரர்கள்தாம். அழைப்பவர் குரலுக்குப் பெருந்தகையாளன் பதிலளிக்க வேண்டும் – அது அவன் கொல்லப்படுவதற்காகவே அழைக்கப்பட்டாலும்” என்று செருக்கான பதில் வந்தது.

‘ம்ஹும்! சொப்பனம் கண்டேன்; போகாதே போகாதே என் கணவா’ என்று பாடினாலும் தடுத்தாலும் அவன் கேட்கப்போவதில்லை என்பது அவளுக்குப் புரிந்து அமைதியாகி விட்டாள்.

நறுமணம் கமழ இறங்கி வந்தான் அவன். காத்திருந்தவர்களுள் ஒருவர், “உனது தலையை நான் முகர்ந்து பார்க்க அனுமதி அளிப்பாயா?” என்றார்.

பெருமிதத்துடன் தன் தலையைக் கொடுத்தான் அவன். முகர்ந்து பார்த்தவர், “நீங்களும் முகர்ந்து பாருங்களேன்” என்று தம் உடன் வந்திருந்தவர்களிடம் சொல்ல அவர்களும் முகர்ந்தார்கள்.

“என்னே நறுமணம்.! மற்றொரு முறை முகர்ந்து கொள்கிறேனே” என்று அவர் கேட்க, மீண்டும் தலையைக் கொடுத்தான் அவன். ஆனால் இம்முறை அவன் தலையை அவர் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக்கொண்டு தம் தோழர்களுக்குச் சமிக்ஞை செய்ய, கொய்யப்பட்டது அவன் சிரம். முண்டமானான்.

oOo

இஸ்லாம் மீளெழுச்சியுற்றபின், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்மீது கொண்ட அன்பினாலும் மதிப்பினாலும் பலரும் ‘முஹம்மது’ என்ற பெயரைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்ட ஆரம்பித்து இன்று உலகளவில் அது மிகவும் இயல்பான பெயராகி விட்டதில்லையா? அன்று மதீனாவில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி அறியும் முன்னரே அப்பெயர் தற்செயலாக அமைந்து போனது ஓர் ஆச்சரியம்.

முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு மதீனா வந்தடைந்து, ஏகத்துவச் செய்தியைத் தெரிவிக்க ஆரம்பித்ததும், உடனே அதை ஏற்று இஸ்லாத்தினுள் நுழைந்துவிட்டார் அவர்.  இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் முக்கியப் புள்ளிகளாள ஸஅத் இப்னு முஆத், உஸைத் இப்னு ஹுளைர் ரலியல்லாஹு அன்ஹுமா போன்றோர் இஸ்லாத்தை ஏற்கும் முன்னரே இஸ்லாத்தினுள் ஐக்கியமாகிவிட்டார் முஹம்மது இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு.

கரிய நெடிய உருவம்; கட்டுறுதியான உடல்வாகு என்று ஆளுமையான தோற்றம். பத்து மகன்கள், ஆறு மகள்கள் என்று பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்த முஹம்மது இப்னு மஸ்லமா, நபியவர்களின் முக்கியமான தோழர்களுள் ஒருவர். அன்றைய யத்ரிபில் முக்கியமாகத் திகழ்ந்த அவ்ஸ் கோத்திரத்திற்கு இவரது குலம் ஒரு நட்பு அணி.

நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்ததும் மக்காவிலிருந்து வந்திருந்த முஹாஜிரீன்களுக்கும் மதீனாவின் அன்ஸாரிகளுக்கும் இடையே சகோதர பந்தத்தை ஏற்படுத்தினார்கள். உற்றார், உறவினர், பொருள், செல்வம் என அனைத்தையும் துறந்துவிட்டு, ஈமானை மட்டுமே நெஞ்சில் சுமந்து ஓடிவந்திருந்த முஹாஜிர்களுக்கு உடனடித் தேவையாகத் திகழ்ந்தவை கூரையும் ரொட்டியும். அந்தப் பிரச்சினையை இந்தச் சகோதர பந்தம் நொடியில் தீர்த்தது. பெயரளவில் நட்பாக இல்லாமல் உள்ளத்தளவில் உறவு உருவாகும் மாயம் நிகழ்ந்தது.

நபியவர்கள் அப்படியான சகோதர பந்தத்தை ஏற்படுத்தும்போது தம் தோழர்களின் குணாதிசயத்தைப் புரிந்து அதற்கேற்பவே அவர்களை இணைத்தார்கள். அவ்விதத்தில் அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு அமைதியான, ஆழ்ந்த சிந்தனை வாய்ந்த, நம்பிக்கைக்கு உகந்த, இறை வழிபாட்டில் பெரும் ஈடுபாடு கொண்ட முஹம்மது இப்னு மஸ்லமா சகோதரராக அமைந்தார். இத்தகு குணாதிசயத்தைப் படித்ததும் அவர் சாந்த சொரூபி போன்ற தோற்றம் மனதில் உருவாகும் இல்லையா? ஆனால் அவருக்கு மற்றொரு பக்கமும் இருந்தது. ஒப்பற்ற வீரம், தயக்கம் என்பதே கலக்காத – எடுத்ததை முடிக்கும் உறுதியான செயல்பாடு, புகழ்பெற்ற குதிரை வீரர் என்ற வீர முகம்.

தோழர்களின் வரலாற்றை நிதானமுடன் கவனித்தால் இந்தப் பொது அம்சத்தை அனைவரிடமும் காணலாம். ஆன்மீகம், இறை வழிபாடு, போர்க்களம் என்பதற்கான தனித்தனி பிம்பங்களை நம் மனம்தான் தனித்தனியாக உருவகித்து வைத்துள்ளதே தவிர நபித்தோழர்களுக்கு இவை அனைத்தும் சரிசமவிகிதத்தில் கலந்திருந்தன.

நபியவர்கள் நிகழ்த்திய அத்தனை போர்களிலும் படையெடுப்புகளிலும் முஹம்மது இப்னு மஸ்லமா தவறாமல் கலந்து கொண்டார். ஓய்வு, விடுமுறை, ‘குதிரைக்குக் கால்வலி’ போன்ற எந்தச் சாக்குபோக்கும் கிடையாது. தபூக் படையெடுப்பில் மட்டும் அவர் கலந்து கொள்ளவில்லை. அதுவும் ஏனெனில் நபியவர்கள் அலீ ரலியல்லாஹு அன்ஹுவையும் இவரையும் மதீனாவின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாளர்களாய் நியமித்துவிட்டுச் சென்றதால்.

மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் என்று மேலே பார்த்தோமில்லையா? அதற்கு அவரது வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உள்ளன. உஹதுப் போருக்கு முந்தைய இரவு நபியவர்களும் படையினருமாக சுமார் எழுநூறு முஸ்லிம்கள் திறந்த வெளியில் அமைந்திருந்த கூடாரத்தில் தங்கியிருந்தனர். எதிரிப் படையை அண்மையில் வைத்துக் கொண்டு அப்படியே உறக்கமோ, ஓய்வோ எடுத்துவிட முடியுமா என்ன? இரவு ரோந்துப் பணிக்கு ஐம்பது வீரர்களைத் தேர்ந்தெடுத்தார்கள் நபியவர்கள். அவர்களுக்குத் தலைமை முஹம்மது இப்னு மஸ்லமா.

அந்த உஹதுப் போரின்போது அதன் போக்கு மாறி, எழுபது முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பலர் சிதறி ஓடி, மிகவும் இக்கட்டான, துயரமான சூழ்நிலை; சொற்ப அளவிலான தோழர்கள் நபியவர்களைச் சூழ்ந்து நின்று எதிரிகளுடன் கடுமையாகப் போரிட்டபோது, அந்தச் சிறு அளவிலான தோழர்கள் அணியில் முஹம்மது இப்னு மஸ்லமாவும் ஒருவர்.

பிற்காலத்தில் அவர் தம் பிள்ளைகளைக் கூட்டி அமர வைத்துக்கொண்டு விறுவிறுப்பும் பரபரப்பும் நிரம்பிய தமது வாழ்க்கை வரலாற்றைக் கதையாக விவரிப்பதும் அந்தப் பிள்ளைகளும் அரபு மொழியிலேயே ‘உம்’ கொட்டிக்கேட்டு வீரர்களாய் உருவானதும் தனிக்கதை. அந்த வரலாற்றில் அவரது வீரத்திற்குச் சான்று கூறும் முக்கியமான ஓர் அத்தியாயம் இருந்தது. அதில் நாயகன் இவர் என்றால் வில்லன் ஒருவன் இருந்தான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நிரந்தரப் பகைவனாகிப்போன கஅப் இப்னு அஷ்ரஃப்.

oOo

நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து வந்ததும் அங்குப் பெரும் இடக்கு மடக்கு புரிந்து கொண்டிருந்த மூன்று யூத குலங்களிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். ஏக இறைவன் அனுப்பிவைத்த இறுதி நபியைத்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தொலையட்டும்; அவர்களுக்கான இறுதித் தீர்ப்பை அவன் பார்த்துக் கொள்ளட்டும். வாழும் காலத்திற்கு இணக்கமாய், அணுசரனையாய் இருந்து கொள்வோம் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்ட உடன்படிக்கை அது. அதன் ஒரு பகுதியாக,

“நமது அரசமைப்புடன் தங்களை இணைத்துக்கொள்ளும் யூதர்கள் அனைத்துவிதமான அவமதிப்பிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். நம்மிடம் உதவிபெறும் நம் மக்களைப்போல் அவர்களுக்கும் சமஉரிமை. அனைத்து எதிரிகளிடமிருந்தும் மதீனாவைத் தற்காத்துக்கொள்ள அவர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து தோள் கொடுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் அறிவிக்கவோ எவருடனும் உடன்படிக்கையோ, வாக்குறுதியோ அளிக்கக் கூடாது” என்ற விதி எழுதப்பட்டு அதை அனைத்துத் தரப்பும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார்கள். அமைதியான, இணக்கமான வாழ்க்கைக்கு எவ்வளவு எளிய விதி? ஆனால் யூதர்கள் அதை அப்பட்டமாக மீறினார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று குலங்களும் ஒன்றன்பின் ஒன்றாய்.

முதல் கட்டமாக பனூ கைனுக்காவின் அக்கிரமம். அவர்கள் முஸ்லிம்களிடம் வம்பிழுத்து, பிறகு அவமானப்பட்டு வெளியேறியதை உபாதா பின் அஸ்ஸாமித் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் வாசித்தோம். அந்த நிகழ்விற்குப் பிறகாவது மதீனாவில் தங்கியிருந்த மற்ற யூதர்கள் ஒழுங்காய் இருந்திருக்கலாமில்லையா? ஆனால் அவர்களுக்கு முஸ்லிம்களுடனான உறவில் எவ்வித இணக்கமும் ஏற்படவில்லை. அகமெல்லாம் குரோதம்.

அவர்களுள் நபியவர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் அளவற்ற வெறுப்பும் ஆத்திரமும் கொண்ட ஒரு யூதன் இருந்தான். கஅப் இப்னு அஷ்ரஃப். யூதர்கள் பலரும் அகம் ஒன்றும் புறம் வேறொன்றும் என்று பொய் பூசியாவது வாழ்ந்து வந்தார்கள். இவனுக்கோ இஸ்லாத்தின் மீது ஒளிவு மறைவில்லாத பகை. தெள்ளத் தெளிவான விரோதம்.

கஅபின் தந்தை அஷ்ரஃப், அத்தாயீ எனும் அரபு குலத்தைச் சேர்ந்தவர். குற்றம் ஒன்றைப் புரிந்துவிட்டு மதீனாவிற்குத் தப்பி ஓடிவந்த அஷ்ரஃபுக்கு மதீனாவில் இருந்த பனூ நளீர் யூதர்களுடன் நட்பு ஏற்பட்டுப்போனது. அது வளர்ந்து வலுவாகி, அந்தக் குலத்தைச் சேர்ந்த அஃகீலா பின்த் அப்துல் ஹகீக் என்ற யூதப் பெண்ணைத் திருமணம் புரிந்த சம்பந்தத்தில் முடிந்தது. இவர்களுக்குப் பிறந்தான் கஅப் இப்னு அஷ்ரஃப். நெடுநெடுவென்று உயரம்; கவர்ந்திழுக்கும் தோற்றம்; கவித் திறமை. இத்துடன் யூதர்களுள் குறிப்பிடத்தக்க செல்வந்தன் என்று செல்வச் செருக்கும் சேர்ந்து கொண்டது. அவனுடைய கோட்டை மதீனாவின் புறநகர்ப் பகுதியில். அதைச் சுற்றி விசாலமான, பரந்து விரிந்த ஈச்சந் தோப்பு. இப்படியான தகுதிகளெல்லாம் சேர்ந்துபோய், ஹிஜாஸ் பகுதி மக்களின் மத்தியில் அவனொரு முக்கியமான யூதத் தலைவனாகக் கருதப்பட்டான். யூத மதகுருவினர் பலருக்கு அவன் வாழ்வாதாரம் அளித்ததால், அவர்களது ஆதரவும் அவனுக்கு இருந்தது.

மக்காவிலிருந்து குரைஷிகள் படையெடுத்து வந்து பத்ருப் போர் உருவானதும், ‘இத்துடன் தொலைந்தார்கள் முஸ்லிம்கள்’ என்று நினைத்தார்கள் யூதர்கள். ஆனால் அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்துவிட, யூதர்களுக்குச் சகிக்கவியலாத வேதனை ஏற்பட்டுப்போனது. வந்தார்கள், கொன்றார்கள், சென்றார்கள் என்று குரைஷிகளைப் பற்றிப் பெருமை பேசக் காத்திருந்த கஅபுக்கு, வெற்றியாளர்களாய் மதீனாவிற்குத் திரும்பிய முஸ்லிம் படையினருடன் குரைஷிப் போர்க் கைதிகளைப் பார்த்ததும் ஆற்றாமையும் ஆத்திரமும் வெறுப்பும் தாங்கவியலாத எல்லைக்குச் சென்றன.

“குரைஷிகள் என்போர் அரபியர்களுள் உயர் குலத்தோர். மனிதர்களுள் அரசர்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். முஹம்மது இவர்களைவிட உயர்ந்தவர் என்றால் அந்த இழுக்கைத் தாங்கி அந்த குரைஷியர்கள் நிலத்தின்மேல் வாழ்வதைவிட மண்ணுள் அடக்கமாகி விடுவதே மேல்” என்று தன் ஆற்றாமையையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினான். முஸ்லிம்கள் அடைந்த வெற்றி பேரதிர்ச்சிதான். அதற்காக இந்த முஸ்லிம்களை அப்படியே விட்டுவிட முடியாது என்று கங்கணம் கட்டியவன், நேராக மக்காவுக்கு ஓடினான்.

அடைந்த தோல்வி, முகம் குப்புற வீழ்ந்த அவமானம் என்று அங்கு ஏற்கெனவே சோகத்திலும் துயரத்திலும் கோபத்திலும் வெறுப்பிலும் கொதித்துக் கொண்டிருந்த குரைஷிகளிடம் சென்று பக்கத்தில் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டான். கவலையைப் பகிர்ந்து கொள்கிறேன் பேர்வழி என்று அவர்களை ஏகத்துக்கும் உசுப்பேற்ற, உசுப்பேற்ற அது கனன்ற நெருப்பில் சுத்தமான நெய்யை ஊற்றியது.

அபூஸுஃப்யானுக்கு மட்டும் ஒரு சந்தேகம் எழுந்தது. ‘இவனோ வேதம் அருளப்பட்டவர்களான யூதர்களைச் சேர்ந்தவன். நாமோ சிலைகளை வழிபடுபவர்கள். பார்க்கப்போனால் வேதம் அருளப்படும் முஹம்மதுக்குத்தான் அவன் நெருக்கமானவனாக இருக்க வேண்டும். இங்கு வந்து இந்தச் சாத்தான் நம்மிடம் வேறு விதமாக வேதம் ஓதுகிறானே’. அதனால் நேரடியாகக் கேட்டேவிட்டார். “நீ யாருடைய மதத்தை விரும்புகிறாய்? மக்கத்தவர்களின் மதத்தையா? அல்லது முஹம்மதும் அவருடைய தோழர்களும் சார்ந்துள்ள மதத்தையா?”

“மக்கத்தவர்களே சரியான தடத்தில் உள்ளவர்கள்” என்று பதிலளித்தான் கஅப். இதைக் குறித்து அல்லாஹ் வசனம் ஒன்றை அருளி அது சூஃரா அந்-நிஸாவின் 51ஆம் ஆயத்தாக குர்ஆனில் பதிவாகிப்போனது.

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும் ஷைத்தானையும் நம்பி, காஃபிர்களைக் குறித்து இவர்கள்தாம் நம்பிக்கை கொண்டவர்களைவிட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

கஅப் அத்துடன் நிற்கவில்லை. ‘ம்ஹும். இது மட்டும் போதாது’ என்று அங்கிருந்த சுற்று வட்டாரத்துக் குலங்கள் ஒவ்வொன்றையும் சந்தித்து, “உயர்த்துங்கள் ஆயுதங்களை. கிளம்புங்கள் மதீனாவிலுள்ள முஸ்லிம்களை நோக்கி” என்று பிரச்சாரம் புரிந்து அவர்களையும் தூண்டிவிட்டான். அதைப்போலவே மதீனாவின் உள்ளும் புறமும் அமைந்திருந்த குலங்களையெல்லாம் நபியவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராகத் திருப்பும் பணி நடந்தது. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான போர் ஆயத்தங்களை ஏற்படுத்திவிட்டு, தன்னுடைய பங்காக மற்றொரு பெரும் கேடு புரிந்தான் அந்த அயோக்கியன். அவனிடம் கவித்திறமை இருந்தது என்று மேலே பார்த்தோமில்லையா? அத்திறமை பெரும்பாவத்திற்கு இப்பொழுது உதவி புரிந்தது. முஸ்லிம் பெண்களை அவமதித்து ஆபாசமான, காமக் கொடூரமான பாடல்கள் புனைய ஆரம்பித்தான்.

நபியவர்களைப்பற்றி இடைவிடாத வசைமொழி. முஸ்லிம் பெண்களின்மீது அப்பட்டமான அவதூறு, அபாண்டப் பழி என்பது அவனது முழுநேரத் தொழிலாகி நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சகிக்க இயலாத வேதனையாகிப் போனது. “இவையெல்லாம் நல்லதில்லை. நிறுத்திக்கொள்” என்ற ரீதியில் நபியவர்கள் பல எச்சரிக்கைகள் விடுத்துப் பார்த்தார்கள். அதற்கெல்லாம் அவன் அசைந்து கொடுப்பதாக இல்லை. நிராகரித்துவிட்டுத் தனது அவதூறுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். முஸ்லிம்களுக்கு எதிராக மதீனாவில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்துவிட வேண்டும் என்பது அவனது நோக்கமாக இருந்தது.

அமைதியான ஆட்சிக்கும் பரஸ்பர சமாதான சூழ்நிலைக்கும் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நபியவர்களின் முயற்சிகளுக்கு கஅபின் செயல்பாடுகள் அப்பட்டமான ஆபத்தாக உருமாறிப் போயின. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் இறைவனிடம் முறையிட்டு விட்டார்கள். “யா அல்லாஹ்! நீ எவ்விதம் விரும்புகிறாயோ அவ்விதத்தில் அஷ்ரஃபின் மகனின் கொடுமையிலிருந்து என்னை விடுவி.”

ஒருநாள் தம் தோழர்களிடம், “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தாக்கி இழிவுபடுத்தும் கஅப் இப்னு அஷ்ரஃபின் முடிவுக்குப் பொறுப்பேற்பவர் யார்?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! நான் அவனது விவகாரத்தைக் கவனிக்கிறேன். தாங்கள் விரும்புவீர்களா?” என்று சட்டெனக் கையை உயர்த்தி விட்டார் முஹம்மது இப்னு மஸ்லமா. நபியவர்களும் அனுமதி அளித்துவிட்டார்கள்.

அந்த நேரத்தில் தாமே முன்வந்து ஒப்புக்கொண்டாலும் பிறகு யோசிக்கும்போதுதான் அந்தச் செயலில் அடங்கியிருந்த ஆபத்தும் கடினமும் உணர்வுக்கு வந்தன. அவருக்குக் கவலை தோன்றியது. கவலை என்றால் என்ன கவலை? துடுக்குத்தனமாய் ஏன் பெயர் கொடுத்தோம் என்றா? இல்லை! நபியவர்களுக்குக் கொடுத்த வாக்கை எப்படித் திறம்பட வெற்றிகரமாய் முடிப்பது என்ற கவலை.

வீட்டிற்குத் திரும்பியவர் மூன்று நாள்வரை சரிவர உண்ணாமல், பருகாமல் யோசனையிலேயே மூழ்கிவிட்டார். நபியவர்களுக்கு அவரது கவலையும் நிலையும் தெரியவந்தன. வரச்சொல்லித் தகவல் அனுப்பினார்கள். வந்தவரிடம் நபியவர்கள் அக்கறையாய் விசாரிக்க, பதில் அளித்தார்.

“அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களுக்கு வாக்களித்துவிட்டேன். அதை வெற்றிகரமாய் நிறைவேற்றிட வேண்டுமே என்று கவலைப்படுகிறேன்.”

“உம்முடைய கடமை உம்மால் இயன்ற அளவிற்கு முயற்சி செய்வதே” என்று பதில் அளித்தார்கள் நபியவர்கள்.

முஹம்மது இப்னு மஸ்லமாவின் மனத்தில் தோராயமாகத் திட்டம் ஒன்று உருவாகிச் செயல்வடிவம் பெற ஆரம்பித்தது. சில தோழர்களைச் சென்று சந்தித்தார். அவர்களுள் அபூநாயிலா என்பவர் ஒருவர். அவரது இயற்பெயர் ஸில்கன் இப்னு ஸலமா. இவர் கஅப் இப்னு அஷ்ரஃபுக்குப் பால்குடி வகையில் சகோதரர். அவரிடம் தாம் நபியவர்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை விவரித்தார் முஹம்மது இப்னு மஸ்லமா. விஷயத்தைக் கேட்டுவிட்டுத் தாமும் தம் நண்பர்களும் அவருக்கு உதவத் தயார் என்று துணை சேர்ந்துகொண்டார் அவர். திட்டமொன்று உருவானது. பட்டை தீட்டப்பட்டது.

அதில் கஅபைச் சிக்க வைக்கச் சில ஏமாற்றுக் காரியங்கள் அடங்கியிருந்தன. அவை அவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தின. நபியவர்களை அணுகி விஷயத்தைச் சொன்னார்கள். “மேலும் அவனை ஏமாற்றும் நோக்கில் தங்களைப் பற்றித் தவறாகப் பேச, தாங்கள் அனுமதி அளியுங்கள்” என்று கேட்டார் முஹம்மது இப்னு மஸ்லமா.

ஏமாற்று, பொய், புரட்டு போன்றவை இயல்பு வாழ்க்கையில் அறவே தடுக்கப்பட்டிருப்பது சரியே. ஆனால் போர் என்றானபின் பொதுமக்களுக்கான சிவில் சட்டங்கள் போர்க் களத்தில் முற்றும் பொருந்துவதில்லை என்ற அடிப்படையில் அவற்றுக்கு அனுமதியளித்தார்கள் நபியவர்கள். திட்டம் நடைமுறையாகத் துவங்கியது.

முதல் கட்டமாக முஹம்மது இப்னு மஸ்லமாவும் அபூநாயிலாவும் கஅபின் இல்லத்திற்குச் சென்றார்கள். நலம், நலமறிய ஆவல் என்று குசல விசாரிப்புக்குப்பின் முஹம்மது இப்னு மஸ்லமா கஅபிடம் பேச ஆரம்பித்தார்.

“இந்த மனிதர் நம்மிடம் ‘சதக்கா கொடு, ஏழைகளுக்கு வழங்க வேண்டும்’ என்று கேட்கிறார். நமக்கோ உண்ணவே உணவில்லை. அவரது சட்டமும் திட்டமும் மிகவும் அழுத்தம் அளிக்கின்றன. உன்னிடம் ஏதாவது கடனுதவி பெற்றுச் செல்லலாம் என்று தோன்றியது. அதனால் வந்தேன்” என்றார்

“கடவுள் மீது ஆணையாக, அந்த மனிதரை நான் மிகவும் வெறுக்கிறேன்” என்றான் கஅப்.

“நாங்கள் அவரை ஏற்றக்கொள்வதாகச் சொல்லிப் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம். பார்ப்போம் இது இன்னும் எத்தனை நாளைக்கு எந்த அளவிற்குச் செல்கிறது என்று. நீங்கள் எங்களுக்கு ஒன்றோ இரண்டோ வஸக்* உணவு தானியத்தைக் கடனாகத் தர வேண்டும்” என்றார் முஹம்மது இப்னு மஸ்லமா.

“இப்பொழுதாவது புரிகிறதா நீங்கள் எத்தகைய பொய்யரைப் பின் தொடர்கிறீர்கள் என்று?” என்று குமட்டில் குத்தாதக் குறையாகச் சொல்லிவிட்டு, ‘சரி சரி கடன் தருகிறேன்’ என்று ஒப்புக் கொண்டவன், “அதற்கு ஈடாய் ஏதாவது அடைமானம் வைக்க வேண்டுமே” என்றான்.

“எத்தகைய அடைமானத்தை எதிர்பார்க்கின்றாய்?” என்று கேட்டார்கள்.

“உங்களுடைய மனைவியரை என்னிடம் அடைமானமாக அளிக்க வேண்டும்”

மானமுள்ள யாராவது கடனுக்கு மனைவியை அடைமானம் வைப்பார்களா? எழுந்த கோபத்தை சமயோசிதமாக மாற்றி, “அரபியர்களுள் மிகவும் அழகான உன்னிடம் எங்களுடைய மனைவியரை எப்படி அடைமானமாக விட முடியும்?” என்று மறுத்தார்கள். அதில் அடங்கியிருந்த முகஸ்துதி அளித்த பெருமையில் மாற்று யோசனை சொன்னான் கஅப்.

“எனில், உங்களுடைய பிள்ளைகள்”

“அது எப்படி முடியும். ஓர் ஒட்டகைச் சுமை உணவிற்காக இன்னார் அடைமானம் வைக்கப்பட்டார் என்று பிற்காலத்தில் அந்தப் பிள்ளைகளுக்கு இழிவு வந்து சேர்ந்துவிடுமே! அது எங்களுக்குப் பெரும் அவமானமாயிற்றே! வேண்டுமானால் எங்களது பாதுகாப்பிற்குப் பயன்படும் ஆயுதங்களை நாளை எடுத்து வந்து அடைமானமாக வைக்கிறோம். எப்படியிருந்தாலும் அது எங்களுக்குத் தேவை என்பது உனக்குத் தெரியும். நிச்சயமாக ,கடனைத் திருப்பிச் செலுத்தி அதை மீட்டுவிடுவோம் என்பதை நீ நம்பலாம்.”

“இது நல்ல யோசனை” என ஏற்றுக்கொண்டான் கஅப்.

எதிர்த் தரப்பிலிருந்து வருபவர்கள் ஆயதங்களுடன் வந்தால் அவனுக்குச் சந்தேகம் ஏற்படுமே என்று அன்று நிராயுதமாக வந்திருந்தார்கள் தோழர்கள். ஆனால் அடுத்து அவனைக் கொல்ல வரும்போது ஆயுதங்கள் வேண்டும். அதை அவனுக்குச் சந்தேகம் வராமல் எப்படிச் சுமந்து வருவது? அவனுக்குச் சந்தேகம் ஏதும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்பதற்காகவே மிகவும் கவனமுடன் திட்டமிட்டிருந்தார்கள் முஹம்மது இப்னு மஸ்லமாவும் தோழர்களும். அந்த வலையில் சரியாக விழுந்தான் கஅப்.

அதே சந்திப்பிலோ அல்லது அதற்குப் பிறகு தனியாகக் சந்தித்தோ அபூநாயிலா அதேவிதமாக உரையாடினார். “இந்த மனிதர் நம்மிடம் வந்தது நம்முடைய அராபிய பாரம்பரியத்திற்குத் தொல்லையாக அமைந்துவிட்டது. ஒரே நொடியில் நம் மத்தியில் பிளவை ஏற்படுத்தி நம்முடைய குடும்பங்களைப் பசியிலும் துன்பத்திலும் வாட விட்டுவிட்டார். நாங்களும் எங்களுடைய குடும்பங்களும் பெரும் கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறோம்.”

அதற்கு பதிலளித்தான் கஅப். “கடவுளின்மீது ஆணையாக. நான் உனக்கு அப்பொழுதே சொன்னேனே, நான் நினைத்தபடி விஷயம் உன்மீது விடியுமென்று.”

அதற்கு அபூநாயிலா, “நீ எனக்கு உணவுப் பொருட்களை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அதற்கு அடைமானமாக, உன் நம்பிக்கைக்கு உரிய வகையில் என்ன வேண்டுமோ அதை அளிக்கத் தயாராக உள்ளேன். நீ எங்கள் மீது கருணை புரிய வேண்டும். என்னைப் போலவே அபிப்ராயம் கொண்ட சில நண்பர்கள் உள்ளனர். அவர்களையும் அழைத்து வருகிறேன். அவர்களிடமும் கருணை புரி. உணவுப் பொருட்களை அளி. நாங்கள் எங்களது ஆயுதங்களை எடுத்து வந்து அடைமானமாக விட்டுச் செல்வோம்”

“ஆயுதங்கள் அடைமானத்திற்கு உகந்த சிறந்த பொருட்கள்” என ஏற்றுக்கொண்டான் கஅப். வந்த காரியம் நைச்சியப் பேச்சில் கைகூடிய திருப்தியுடன் அவர்கள் நபியவர்களிடம் வந்து, நடந்த விஷயங்களை விவரித்தனர்.

அன்றைய பகல் பொழுது முடிந்து இரவு சூழ்ந்தது. அது ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு. ரபியுல் அவ்வல் மாதத்தின் நிலவொளி பரவிய இரவு. முஹம்மது இப்னு மஸ்லமா, அபூநாயிலா, அப்பாத் பின் பிஷ்ரு, அல்-ஹாரித் இப்னு அவ்ஸ், மற்றுமொருவர் என ஐவர் அணி கஅபின் இல்லத்தை நோக்கிக் கிளம்பியது. நபியவர்கள் அவர்களுடன் சற்று தூரம் நடந்து வந்து “அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்து செல்லுங்கள்” என்று வழியனுப்பி வைத்து, “இறைவா! அவர்களுக்கு உதவி செய்” என்று இறைஞ்சினார்கள்.

ஐவர் அணி கஅபின் கோட்டையை அடைந்தது. அவனது பெயரை உரக்கக்கூவி அழைத்தனர். அதைக்கேட்டு படுக்கையிலிருந்து எழுந்தவனை அவன் மனைவி எச்சரித்தாள்.

“நீ போர்ச்  சூழலில் உள்ளவன். போரில் உள்ள மக்கள் இந்நேரத்தில் வெளியே செல்வதில்லை.”

“அவர்கள் என் உறவினர்கள்தாம். முஹம்மது இப்னு மஸ்லமாவும் அபூநாயிலாவும்…”

“அவர்களுடைய குரலில் இரத்தம் சொட்டுவதை நான் உணர்கிறேன்” என்றாள் அவள். அவளுக்கு மட்டும் உள்ளுணர்வு எச்சரித்தது.

“அவர்கள் வேறு யாருமல்லர். என் சகோதரர்கள்தாம். அழைப்பவர் குரலுக்குப் பெருந்தகையாளன் பதிலளிக்க வேண்டும் – அது அவன் கொல்லப்படுவதற்காகவே அழைக்கப்பட்டாலும்” என்று செருக்கான பதில் வந்தது.

‘ம்ஹும்! சொப்பனம் கண்டேன்; போகாதே போகாதே என் கணவா’ என்று பாடினாலும் தடுத்தாலும் அவன் கேட்கப்போவதில்லை என்பது அவளுக்குப் புரிந்து அமைதியாகிவிட்டாள். யார் என்ன செய்ய முடியும்? மாடியிலிருந்து புறப்பட்டவனை வரவேற்க விதி கீழே காத்திருந்தது.

அழகனாகத் திகழ்ந்த கஅப் இப்னு அஷ்ரஃப், தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மிகவும் மெனக்கெடுபவன். படுத்து உறங்கும் இரவு நேரத்திலும் அவன்மீது அத்தகையதொரு கத்தூரி மணம். உருவிய வாளுடன் இறங்கி வந்தான்.

அவனது ஒப்பனையையும் நறுமணத்தையும் நன்கு அறிந்திருந்ததால் அதற்கேற்பத்தான் திட்டம் தீட்டியிருந்தார்கள். “கஅப் வந்ததும் நான் அவனது தலையைத் தொட்டு முகர்வேன். அவனது தலையை நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன் என்பதை நீங்கள் கண்டதுமே நீங்கள் உங்கள் வேலையைச் செய்து முடியுங்கள்” என்று பேசி வைத்திருந்தார் அபூநாயிலா.

கஅபிடம் அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். மதீனாவின் புறவெளியில் ஷிஅபுல் அஜுஸ் என்றொரு இடம். ‘நிலா காய்கிறது. ரம்மியமான இரவு. வாயேன் காலாற நடந்து பேசிவிட்டு வருவோம்’ என்பதுபோல் ஏதோ சொல்லி அவனை அங்கு அழைத்தனர் தோழர்கள். ஒத்துக் கொண்டு, தான் பலியாடு என்பது தெரியாமல் அவர்களுடன் சென்றான் கஅப்.

அங்கு வந்ததும் அவனது தலையில் கையைத் தடவி அதை முகர்ந்து பார்த்து, “இப்படியான நறுமணத்தை நான் முகர்ந்ததே இல்லை” என்றார் அபூநாயிலா.

“இத்தகு உயர்தர நறுமணத்தைக் கொண்டவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையறிந்த அரேபியப் பெண்கள் என்னிடம் உள்ளனர்” என்று பெருமிதத்துடன் பதிலளித்தான் கஅப்.

சற்று தூரம் நடந்தபின், “உனது தலையை நான் முகர்ந்து பார்க்க அனுமதி அளிப்பாயா?” என்றார் மீண்டும்.

அனுமதித்து தன் தலையைக் கொடுத்தான் கஅப். அதைப் பிடித்து முகர்ந்து பார்த்தவர், “நீங்களும் முகர்ந்து பாருங்களேன்” என்று தம் உடன் வந்திருந்த தோழர்களிடம் சொல்ல அவர்களும் ஆளாளுக்கு முகர்ந்தார்கள்.

“என்னே நறுமணம். மற்றொரு முறை முகர்ந்து கொள்கிறேனே” என்று அடுத்த முறையும் கேட்டதும் கொஞ்ச நஞ்சம் இருந்த தயக்கமும் விலகி, தலைக்கு ஏறிய பெருமிதத்துடன் மீண்டும் தலையைக் கொடுத்தான் கஅப்.

ஆனால் இம்முறை இறைச்சிக் கடைக்காரரிடம் சிக்கிய ஆடுபோல் அது வசமாகச் சிக்கியது. அவனது தலையைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்தவர், “கொல்லுங்கள் அல்லாஹ்வின் எதிரியை” என்று தம் தோழர்களிடம் கத்தினார். அவர்கள் அவனைத் தங்களது வாள்களால் தாக்க, கவசம் தரித்து வந்திருந்த அவனிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. இப்பொழுது அனைத்தும் புரிந்து உரத்தக் குரலில் கஅப் கத்த ஆரம்பிக்க, சப்தம் கேட்டு அருகிலிருந்த யூதர்களின் கோட்டைகளில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி அதிகரிக்க ஆரம்பித்தது. அதற்குமேல் அதிகம் நேரமில்லை என்பதை உணர்ந்ததும் முஹம்மது இப்னு மஸ்லமா தம்மிடமிருந்த குறுவாளை கஅபின் அடிவயிற்றில் சரேலெனச் செருகி அதை அப்படியே சரசரவென கீழிறக்கினார். சரிந்து விழுந்தான் கஅப். தோழர்கள் அவனது தலையைக் கொய்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி ஓடினார்கள்.

நடந்த களேபரத்தில் அல்-ஹாரித் இப்னு அவ்ஸுக்கு காலில் சற்று பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்ட ஆரம்பித்திருந்தது. அவரால் விரைந்து ஓடிவர முடியவில்லை. ஹர்ரத்துல் உரைஸ் என்ற இடம் வரை வந்துவிட்ட தோழர்கள் ஹாரித் இல்லாதததைக் கவனித்துக் காத்திருக்க ஆரம்பித்தனர். அவர் நலமே வந்து சேர்ந்ததும் அவரைத் தூக்கிக் கொண்டு நபியவர்களிடம் விரைந்தார்கள். பகீஉல் ஃகர்கத் என்ற இடத்தை அடைந்ததும் “அல்லாஹு அக்பர்” என்று உரத்து ஒலி. அதைச் செவியுற்ற நபியவர்களுக்கு தொலைந்தான் துஷ்டன் என்று விஷயம் புரிந்து போனது. அவர்களும் “அல்லாஹு அக்பர்” என்று பதிலளித்தார்கள்.

தோழர்களைக் கண்ட நபியவர்கள், “இம்முகங்கள் வெற்றியடைந்தன” என்று வாழ்த்துத் தெரிவிக்க, “அல்லாஹ்வின் தூதரே! தங்களது முகம் வெற்றியடைந்தது” என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்து, கொண்டு வந்திருந்த பரிசைத் தரையில் போட, உருண்டது கஅபின் தலை.

இஸ்லாத்திற்கு மாபெரும் தீங்கிழைத்து, நபியவர்களின் மீதும் முஸ்லிம்களின் மீதும் சகிக்க இயலாத வசையும் பாடிக்கொண்டிருந்த கஅப் இப்னு அஷ்ரஃபின் கதை அவ்விதமாக ஒரு முடிவுக்கு வந்தது. அதற்குமுன், ‘இப்படியெல்லாம்கூட இந்த முஸ்லிம்களைத் துன்புறுத்தலாம் போலிருக்கிறதே’ என்று அவனது பாணியில் செயல்பட யோசிக்க ஆரம்பித்திருந்த மற்ற யூதர்களின் மனத்தினுள் அந்தக் கொலை கிலியை உருவாக்கியது. அவர்களது செயல்பாடுகளை அடங்க வைத்தது அது.

oOo

ஹிஜ்ரீ நான்காம் ஆண்டின் துவக்கம்.

மதீனாவில் வாழ்ந்து வந்த பனூ நளீர் எனும் யூதக் குலத்தினர் நிகழத்திய அக்கிரமத்தை அபூலுபாபா ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் வாசித்தது நினைவிருக்கலாம். அந்த யூதர்கள் ஒரு கட்டத்தில் முஹம்மது நபியவர்களின் தலைமேல் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலைபுரியும் அளவிற்குத் துணிந்துவிட்டனர். நபியவர்கள் பனூ நளீர் விஷயத்தில் கடைப்பிடித்த பொறுமையின் எல்லை அத்துடன் முடிவுக்கு வந்தது. அவர்களது விஷயத்தில் தெளிவான ஒரு முடிவை எட்டிவிட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

அந்தக் கொலைத் திட்டத்திலிருந்து அல்லாஹ்வின் அருளால் தப்பியதும் பனூ நளீர் குடியிருப்புப் பகுதியிலிருந்து நேரே மதீனாவிற்குள் வந்த நபியவர்கள் முஹம்மது இப்னு மஸ்லமாவைத்தான் தம்மிடம் வரச்சொல்லி தகவல் அனுப்பினார்கள். ‘பனூ நளீர் மக்களிடம் செல்லவும். அவர்களுக்குப் பத்தே நாள் அவகாசம். மூட்டை, முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அவர்கள் மதீனாவை விட்டு வெளியேறிவிட வேண்டும். அதன்பிறகு அவர்களுள் யாரேனும் நகரில் தென்பட்டால் அவர்களது உயிர் பறிக்கப்படும்’ என்று தெளிவான, கடுமையான உத்தரவைப் பிறப்பித்து, அதை அவர்களிடம் அறிவிக்கும் பொறுப்பை அவரிடம் நபியவர்கள் அளித்தார்கள்.

ஒரு தகவலை, தூதுவர் மூலம் நேரடியாகத் தெரிவிக்க வேண்டுமெனில் அதைப் பரிமாறத் தேர்ந்தெடுக்கப்படுபவரின் தோற்றமும் குணாதிசயமும் மிக முக்கியம். அவரது துணிவு, திடவுறுதி, இறை நம்பிக்கை ஆகியவற்றுக்கு அதில் பெரும்பங்கு உண்டு. ஹபீப் பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் இதை நீங்கள் கவனித்திருக்கலாம். எனவே இந்த முக்கியப்பணிக்கு நபியவர்களின் தேர்வு, முஹம்மது இப்னு மஸ்லமா. அவருக்கு ஓங்குதாங்கான உருவம். உரத்த, தெளிவான குரல்வளம்.

பனூ நளீர் மக்களிடம் வந்தார். அறிவித்தார். அவ்வளவுதான். அதில் புதைந்திருந்த கடுமை, ஒவ்வொரு எழுத்தும் உரைத்த உண்மை பனூ நளீருக்கு விஷயத்தின் ஆபத்தைச் சரிவர உணர்த்தியது. அதன்பின் அவர்கள் தங்களது கோட்டை-கொத்தளங்களுக்குள் சென்று பூட்டிக் கொண்டதும் அவை முற்றுகையிடப்பட்டதும் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்கள் சரணடைய, தண்டனை ஏதும் இன்றி ஊரைக் காலி செய்து கொண்டு செல்ல அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதும் வரலாற்றின் இதர நிகழ்வுகள்.

நபியவர்களின் காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, முஹம்மது இப்னு மஸ்லமா தமக்கு இடப்பட்ட பணியை, கட்டளையை அப்படியே நிறைவேற்றும் பாங்கு மக்கள் மத்தியில் பிரசித்தம். கூட்டியோ, குறைத்தோ அல்லாமல் சொன்னது சொன்னபடி செய்து முடிப்பது அவருக்கு இயல்பான குணமாக அமைந்து போனது. அவரது இந்த குணாதிசயமே பிற்காலத்தில் உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி புரிந்தபோது, அவரைத் தமக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வைத்தது.

ஞானத்தில் மிகைத்திருந்த தோழர்கள் பலரை மக்களுக்குக் கல்விப் புகட்ட சிரியா, ஈராக் பகுதிகளுக்கு அனுப்பிவைத்த உமர், சில முக்கியத் தோழர்களை தமது அரசாங்கத்திற்கு ஆலோசகர்களாக, தமக்கு நெருக்கமாக, மதீனாவில் வைத்துக்கொண்டார். உதுமான், அலீ, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், உபை இப்னு கஅப், ஸைது இப்னு தாபித் போன்ற அந்த முக்கியஸ்தர்களுள் முஹம்மது இப்னு மஸ்லமாவும் ஒருவர்.

கலீஃபா உமர் தம்முடைய நம்பிக்கைக்கு உரியவர்களைத்தாம் ஆளுநராக நியமிப்பது வழக்கம். அப்படியான அந்த ஆளுநர்களைக்கூட அவர் கண்காணிக்கத் தவறுவதில்லை. அந்தப் பொறுப்பு முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் அளிக்கப்பட்டது. ஆளுநர்களுக்கு எதிராகக் கூறப்படும் புகார்களை விசாரித்து ஆராயும் பொறுப்பு அவருடையது. கலீஃபாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் அவர் இயங்க ஆரம்பித்தார். ஆளுநர்கள் தங்களுடைய பணிகளைச் சரிவர நிறைவேற்றுகின்றனரா, அதில் ஏதும் குற்றம், குறை உள்ளதா என ஆராய்ந்து அப்படி ஏதும் இருந்தால் உடனே நடவடிக்கை எடுத்துவிடுவார். மக்களைச் சந்தித்து ஆளுநர்களைப் பற்றிய அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து அவற்றை நேரடியாக கலீஃபாவிற்குச் சமர்பிப்பதும் நடக்கும். பல பகுதிகள், பல ஆளுநர்கள் என்று அப்போது ஆட்சி விரிவடைந்திருந்ததால் இப்பணிக்காக அவருக்கு உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

கூஃபா நகர மக்கள் தங்களுடைய ஆளுநர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஆரம்பித்தனர். அவற்றில் துளியும் உண்மையில்லை என்பதை உமர் நன்கு உணர்ந்திருந்தாலும் முறைப்படி விசாரித்து உண்மையை அறிய முஹம்மது இப்னு மஸ்லமாவைத்தான் அனுப்பிவைத்தார். கூஃபாவிற்கு வந்தார் அவர். ஆளுநர் ஸஅத் இப்னு அபீவக்காஸையும் அழைத்துக்கொண்டார். நகரிலுள்ள பள்ளிவாசல்களுக்குச் சென்று மக்களிடம் பகிரங்கமான முறையில் விசாரணை நிகழ்த்தப்பட்டது. பொது விவகாரங்களை, பொது மக்களின் ஊழியர்களின் மீதான புகார்களை ரகசியமாகக் கையாளும் பழக்கமெல்லாம் அப்பொழுது இருந்ததில்லை. யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் ஒரே நியதி. பாரபட்சம் என்பது அந்நியம். இஸ்லாமிய ஆட்சியின் இலக்கணம் நடைமுறையில் இருந்த காலம் அது. விசாரணை ஸஅதின் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபித்தது. அவரது தூய்மையை ஊர்ஜிதப்படுத்தியது.

இந்நிகழ்வு ஒருபுறமிருக்கட்டும். கலீஃபா உமர் தமக்கும் தம் ஆளுநர்களுக்கும் என நியமித்து வைத்திருந்த தரக்கட்டுப்பாடு என்பது கடுமையின் உச்சம். ஆடம்பரம் என்ற வார்த்தையின் முதல் எழுத்தைக்கூட அவர்கள் உச்சரிக்க அனுமதி இருந்ததில்லை. அது சம்பந்தமான பல நிகழ்வுகள் கலீஃபா உமரின் வாழ்க்கையில் சுவையான அத்தியாயங்கள். இந்தத் தோழரின் வரலாற்றுடன் பிணைந்த ஒரு நிகழ்வை மட்டும் இங்குப் பார்த்து விடுவோம்.

ஸஅத் இப்னு அபீவக்காஸின் இல்லம் கடைகளுக்கு நெருக்கமாக அமைந்திருந்தது. வணிகம் நடைபெறும் இடங்களில் பேச்சும் இரைச்சலும் அதிகமாகத்தானே இருக்கும். எனவே, வெளிப்புறத்து இரைச்சல் வீட்டிற்குள் வராமல் தடுக்கத் தமது இல்லத்திற்குக் கதவுகள் அமைத்துச் சாத்திக் கொண்டார் ஸஅத். வீட்டிற்குக் கதவுகள் அமைக்காமல் வேலியா வைத்துக் கொள்வார்கள் என்று எடக்கு மடக்காக நமக்குக் கேள்வி தோன்றலாம். விஷயம் யாதெனில், கலீஃபா உமரின் காலத்தின் ஆளுநர்களின் இல்லங்களுக்குக் கதவுகள் கிடையா. திரைச்சீலை மட்டுமே. பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காகவும் சேவை வேண்டியும் தடங்கலின்றி ஆளுநரைச் சந்தித்துப் பேசிட ஏதுவாக இருக்க வேண்டும் என்பது கலீஃபாவின் எண்ணம்.

இந்நிலையில் ஸஅத் தமது இல்லத்திற்குக் கதவுகள் அமைத்ததும் குத்தல் பேச்சு பேசும் பொதுமக்கள், ‘அவருக்கென்னப்பா? மாளிகைவாசி’ என்பதுபோல் பேச ஆரம்பித்துவிட்டனர். ஆளுநர்களின் வீட்டிற்குக் கதவுகள் என்பதே மாளிகை சொகுசாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. விஷயம் கலீஃபாவை எட்டியது. வீட்டிற்குக் கதவுகள் தேவையா, அவசியமா என்பதெல்லாம் பேச்சில்லை. கலீஃபா உமரைப் பொருத்தவரை ஆளுநரின் இல்லத்திற்கு அது அனாவசியம். முஹம்மது இப்னு மஸ்லமாவை அழைத்து, “ஸஅதின் இல்லத்திற்குச் செல்லவும். அதன் கதவைக்  கொளுத்திவிட்டு நேராக இங்கு வரவும்” என்று சுருக்கமான கட்டளையிடப்பட்டது.

இட்ட பணியை அப்பட்டமாக அப்படியே செய்து முடிப்பது முஹம்மது இப்னு மஸ்லமாவின் வழக்கம் என்று பார்த்தோமில்லையா. நேராக கூஃபாவிற்கு வந்தார் அவர். ஸஅதின் இல்லத்திற்குச் சென்றார். கூடவே விறகுகள். கதவைக் கழற்றிக் கொளுத்திவிட்டு வந்துவிட்டார். தீர்ந்தது விஷயம்.

இதென்ன அக்கிரமம் என்று ஆளுநர் ஸஅத், கலீஃபாவை எதிர்த்து இரைச்சல் போட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவோ, அவருடைய ஆதரவாளர்கள் கல்லெறிதல், வாகனங்களுக்குத் தீயிடல் என்று திரிந்ததாகவோ எந்தக் குறிப்பும் இல்லை. கலீஃபாவின் கட்டளைக்கு அப்படியே அடிபணிந்தார் ஸஅத் இப்னு அபீவக்காஸ். அது உத்தமர்களின் உன்னதக் காலம்.

oOo

உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி புரிந்தபோதும் அவரது நம்பிக்கைக்கு உரியவராய் முஹம்மது இப்னு மஸ்லமா பணிபுரிந்திருக்கிறார். கலீஃபா உதுமானும் தம்முடைய கண்காணிப்பாளராக அவரைக் கூஃபா நகருக்கு அனுப்பி வைத்துள்ளார். கலீஃபாவின் முக்கிய ஆலோசகர்கள் என்று பார்த்தால் அவர்கள் அலீ, தல்ஹா, ஸுபைர், இப்னு ஆமிர், அப்துல்லாஹ் இப்னு ஸலம் முஹம்மது இப்னு மஸ்லமா எனும் முக்கியத் தோழர்களின் பட்டியல். ரலியல்லாஹு அன்ஹும்.

அந்த ஆட்சியின் இறுதியில் குழப்பவாதிகள் தலையெடுத்து அட்டூழியம் பெருகி, கலகங்கள் தோன்ற ஆரம்பித்தன. அது முற்றி, கலீஃபா உதுமான் கொல்லப்பட்டதும் பிறகு அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியில் ஒட்டகப்போர், ஸிஃப்பீன் யுத்தம் என்று அரசியல் குழப்பங்கள் உச்சமடைந்ததும் முஹம்மது இப்னு மஸலமாவுக்குத் தாங்க இயலாத மனவேதனை ஏற்பட்டுவிட்டது. எந்தச் சார்பும் எடுக்காமல், எதிலும் பங்குபெறாமல் முற்றிலுமாய் ஒதுங்கிவிட்டார் அவர்.

இஸ்லாத்தின் எதிரிகளை நோக்கி உயர்த்திய வாளை, சக முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரயோகிப்பதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பாறையில் குத்தித் தமது வாளை முறித்துத் தூர எறிந்துவிட்டார். ரப்தா எனும் பகுதிக்குக் குடிமாறிச் சென்று தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார் முஹம்மது இப்னு மஸ்லமா.

“கலீஃபா உதுமான் கொல்லப்பட்டதும் முஹம்மது இப்னு மஸ்லமா ஒரு பாறையில் தமது வாளைக் குத்தி உடைத்தார்” என்கிறது ஓர் அறிவிப்பு.

அபூபுர்தா என்பவர் ரப்தா பகுதியைக் கடந்து சென்றபோது அவர் முஹம்மது இப்னு மஸ்லமாவைச் சந்தித்ததைத் தெரிவித்திருக்கிறார். “நாங்கள் ரப்தா பகுதியைக் கடக்கும்போது முஹம்மது இப்னு மஸ்லமாவின் கூடாரத்தைக் கண்டோம். அவரை நெருங்கி, ‘நீங்கள் மக்களிடம் சென்று நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கக் கூடாதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் அளித்தார். ‘நபியவர்கள் ஒருமுறை என்னிடம், ஓ முஹம்மது! ஒரு காலத்தில் சண்டையும் சோதனையும் கருத்து வேறுபாடும் தோன்றும். நீ உனது வாளை முறி; தூரம் செல்; விலகி விடு; உன் இல்லத்தில் தங்கிவிடு என்று கூறினார்கள். ஆகவே எனக்கு என்ன கட்டளையிடப்பட்டதோ அதை நான் செய்கின்றேன்.”

ஹுதைஃபா என்பவர், “முஹம்மது இப்னு மஸ்லமாவைத் தவிர மற்ற ஒவ்வொருவரையும் ஃபித்னா தாக்கும் என அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், முஹம்மது இப்னு மஸ்லமாவை ஃபித்னா தாக்காது என்று தெரிவித்துள்ளார்கள்” என்று தெரிவித்த குறிப்பும் அவரது செயலுக்குக் காரணம் அளிக்கிறது.

தமது போர் வாளை முறித்தாலும் மற்றொரு காரியம் செய்தார் முஹம்மது இப்னு மஸ்லமா. மரக் கட்டையில் ஒரு வாளைச் செதுக்கி, அதை ஒரு மெய்யான வாளைப் போலவே உருவாக்கி, உறையினுள் செருகி, தம் வீட்டுச் சுவற்றிறில்மாட்டித் தொங்கவிட்டுவிட்டார். இதுபற்றி இஸ்ஹாக் இப்னு ஃபர்வாஹ், “நபியவர்களின் வீரத்திருத்தகை என்று முஹம்மது இப்னு மஸ்லமா குறிப்பிடப்படுபவர். அவர் தமது வாளை உடைத்ததும் கட்டையில் மற்றொரு வாளைத் தயாரித்து, உரையினுள் இட்டுத் தமது இல்லத்தில் சுவரில் தொங்க விட்டார். கேட்டால், துஷ்டர்களை அச்சுறுத்துவதற்காக என்று பதில் கூறுவார்” என்று கூறியிருக்கிறார்.

குழப்பவாதிகள் அப்படியும் அவரை விட்டுவிடத் தயாராக இல்லை. அவரைக் கொன்றனர். “முஆவியா மதீனா வந்தடைந்தார். ஷாமிலிருந்து ஒரு குழு அவருடன் வந்திருந்தது. ஜோர்டானைச் சேர்ந்த ஓர் இழிபிறவி முஹம்மது இப்னு மஸ்லமாவின் அமர்விற்குச் சென்றான். அவன் அலீயைச் சேர்ந்தவனா, முஆவியாவைச் சேர்ந்தவனா எனத் தெரியவில்லை. அவன் அவரைக் கொன்றான்” என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ், அந்த நிகழ்வைத் தெரிவித்துள்ளார்.

ஹிஜ்ரீ 46 ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் தமது 77ஆவது வயதில் உயிர்த் தியாகியானார் முஹம்மது இப்னு மஸ்லமா.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

* (ஒரு வஸக் என்பது ஏறத்தாழ 130 கிலோ)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.