தோழர்கள் – 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة

Share this:

அபூஹுதைஃபா இப்னு உத்பா
أبو حذيفة ابن عتبة

மக்காவிலிருந்து குரைஷிகளின் படை வந்து கொண்டிருந்தது. ஆரவாரமும் ஆவேசமும் கோபமுமாகக் கிளம்பியிருந்த குரைஷியருள் ஆர்வம் குன்றிய சிலரும் இருந்தனர். அவர்கள் வேண்டாவெறுப்பாகவும் வேறு வழியின்றியும் படையில் இணைந்திருந்தவர்கள். முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட அவர்களுக்கு எண்ணமே இல்லை.

ஆனால் அச்சமயம் மக்காவில் நிலவி வந்த அரசியல் சூழ்நிலை – அவர்களை, அழைத்து வராமல் சங்கிலியில் கட்டாத குறையாக இழுத்து வந்திருந்தது. அத்தகையோர் குறிப்பாக நபியவர்களின் பனூ ஹாஷிம் கோத்திரத்தினர். அதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.

எனவே பத்ருப் போர் துவங்குவதற்குமுன் நபியவர்கள் தம் தோழர்களிடம் அறிவுரை வழங்கினார்கள். ‘அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப், அபூபுஃக்தாரி பின் ஹிஷாம் ஆகியோரைக் கொன்றுவிட வேண்டாம்; ஆனால் போர்க் கைதிகளாகக் கைப்பற்றுங்கள்.’

அதைக் கேட்டு முஸ்லிம்களின் படையில் இருந்த ஒருவர் ஆச்சரியத்துடன் கூறினார். “நம்முடைய தந்தையர்கள், பிள்ளைகள், சகோதரர்கள், குல மக்களைக் கொன்றுவிட்டு அப்பாஸை எப்படி விட்டு விடமுடியும்? நான் அவரைக் கண்டால் எனது வாளால் வெட்டாமல் விடப்போவதில்லை.”

நபியவர்களின் கட்டளையை உதாசீனப்படுத்தி அவர் பேசியது அவரது வாழ்நாளிலேயே அந்த ஒரே ஒரு தருணத்தில் மட்டுமே. வாய் நழுவிய அந்த வார்த்தைகளுக்காக அதன்பின் நிறைய வருந்தி, பரிகாரம் செய்யத் தமது வாழ்நாளின் சொச்ச நாளும் ஆர்வமுடன் காத்திருந்தார் அந்தத் தோழர் அபூஹுதைஃபா இப்னு உத்பா ரலியல்லாஹு அன்ஹு.

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில் ஏகத்துவத்தைச் சொல்ல ஆரம்பித்ததும் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்க ஆரம்பித்த குரைஷிப் பெருந்தலைகளுள் ஒருவன் உத்பா இப்னு ரபீஆ. இந்த உத்பாவுக்கு அபூஹுதைஃபா, வலீத் என்ற இரு மகன்களும் ஹிந்த் என்றொரு மகளும் இருந்தனர். ஹிந்த் பின்த் உத்பா வேறு யாருமல்லர், அபூஸுஃப்யான் இப்னு ஹர்பினுடைய மனைவி. ஹிந்தினுடைய அரக்கத்தனமான இஸ்லாமிய எதிர்ப்பும் மக்கத்து வெற்றியின்போது அவர் இஸ்லாத்தை ஏற்றதும் நாம் முன்னரே பார்த்த ஒன்று. உத்பாவின் இரு மகன்களுள் ஒருவனான வலீத், அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த மகன். தன் தந்தையின் வில்லத்தனத்திற்குத் தோளோடு தோள் நின்றவன்.

அப்படியான அக்குடும்பத்தில் உத்பாவின் மற்றொரு மைந்தர் அபூஹுதைஃபா. நெடிய உயரம்; அழகிய தோற்றம். துபைதா பின்த் யஆர் என்பவரை அபூஹுதைஃபா திருமணம் புரிந்திருந்தார். துபைதாவுக்கு உமரா, ஸல்மா ஆகிய வேறு பெயர்கள் இருந்தாலும் பிரபலமான பெயர் துபைதா.

மேட்டுக்குடியைச் சேர்ந்த உத்பாவுக்கு ஓர் ஆசை இருந்தது. அது, தனக்கு அடுத்து அபூஹுதைஃபாவும் குரைஷித் தலைவர்களுள் ஒருவராய் உயரவேண்டும் என்று புத்திரப் பாசம் கலந்த பேராவல். அசந்தர்ப்பமாய் அதையெல்லாம் துடைத்து எறிந்து போட்டது ஓர் ஒற்றைச் செய்தி: லா இலாஹா இல்லல்லாஹ்!

நபியவர்களின் இஸ்லாமியச் செய்தியை அறிய வந்த ஆரம்பத் தருணங்களிலேயே கவரப்பட்டு, உண்மையுணர்ந்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார் அபூஹுதைஃபா. ரலியல்லாஹு அன்ஹு. தோழர் அர்கமின் இல்லத்தில் முஸ்லிம்கள் கூடுவார்கள் என்று படித்தோமே அந்த நிகழ்வுகளுக்கு முன்னரேயே அது நிகழ்ந்துவிட்டது. அபூஹுதைஃபாவுடன் இணைந்து இஸ்லாத்தை ஏற்றவர் ஸாலிம். அவர் துபைதாவிடம் அடிமையாய் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர். என்ன ஆயிற்று என்றால் அபூஹுதைஃபா, ஸாலிம் இருவரின் அந்த ஏகோபித்த முடிவு ஒரே நாளில் அவர்கள் மத்தியில் இருந்த அன்பிலும் உறவிலும் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட்டது.

“ஸாலிம்! இனி நீ என் மகன்” என்று, தம் மனைவியிடம் அடிமையாக இருந்தவரை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார் அபூஹுதைஃபா. அதை ஊர் உலகத்திற்கும் அறிமுகம் செய்துவிட்டார். அதன்படி, “ஸாலிம் இப்னு அபூஹுதைஃபா”, என்று அறியப்பட்டு, பின்னர் இஸ்லாம் தத்தெடுப்பு முறையை ரத்துச் செய்ததும், ஸாலிம் மௌலா அபீஹுஃதைபா என்ற பெயரில் வரலாற்றில் சிறப்புப் பதிவு ஸாலிமின் வரலாறு.

பின்னர் மக்காவில் இஸ்லாமியப் பிரச்சாரம், பற்பல போராட்டங்கள், குரைஷிகளிடம் சித்திரவதை என்று வரலாறு நகர்ந்து, நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்தது நிகழ்ந்தது. பின் தொடர்ந்தது பத்ரு யுத்தம். படை திரட்டி வரும் குரைஷிகளை எதிர்த்து, சொற்ப அளவிலான முஸ்லிம் படை வீரர்களை அணி திரட்டிவிட்டு நபியவர்கள் அறிவித்த செய்தியொன்றுதான், ‘அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப், அபூபுஃக்தாரி பின் ஹிஷாம் ஆகியோரைக் கொன்றுவிட வேண்டாம்; ஆனால் போர்க் கைதிகளாகக் கைப்பற்றுங்கள்.’

நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபுக்கு முஸ்லிம் விரோதப் போக்கு என்பதோ, முஸ்லிம்களிடம் போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ அறவே இல்லை. மாறாக நபியவர்கள் மதீனா புலம்பெயர முகாந்திரமாய் அமைந்த நிகழ்வில் முக்கியப் பங்காற்றியவர் அவர். அல்-அகபா எனும் சிறுகுன்றில் இரவு நேரத்தில் நபியவர்களை யத்ரிபிலிருந்து வந்திருந்த மக்கள் ரகசியமாகச் சந்திப்பது என்று முடிவான போது, நபியவர்கள் தம் சிற்றப்பா அப்பாஸ் இப்னு முத்தலிபோடு வந்து சேர்ந்தார்கள். அப்பாஸ் அப்பொழுது முஸ்லிமாக இல்லையென்றாலும் தம் அண்ணனின் மைந்தர்மீது அவருக்கு அளவற்ற பாசம்; மெய்யான கவலை; உள்ளார்ந்த அக்கறை. வெகுதொலைவான ஊரிலிருந்து வந்துள்ள மக்களிடம் தம் குலத்து மைந்தரை, அசட்டையாக ஒப்படைத்துவிட அவர் மனம் துணியவில்லை. அப்பாஸ் மதீனத்து முஸ்லிம்களிடம் பேசினார்.

“கஸ்ரஜ் கூட்டத்தினரே! நிச்சயமாக முஹம்மது எங்களிடம் எவ்வாறு இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் கூட்டத்தில் இணைவைக்கும் கொள்கையில் இருப்பவர்களிடமிருந்து நாம் அவரை இதுநாள் வரை பாதுகாத்து வந்திருக்கிறோம். அவர் எங்களது கூட்டத்தில் கண்ணியமாகவே இருக்கிறார். அதே நேரத்தில் அவரது ஊரில் பாதுகாப்புடனும் இருக்கிறார். எனினும், அவர் உங்களுடன் இணைந்துவிடவும் உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். நீங்கள் அவருக்குத் தரும் வாக்கைக் காப்பாற்றி எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்பவர்களாக இருந்தால் அவரை அழைத்துச் செல்லலாம். இல்லை, நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள்; இங்கிருந்து அழைத்துச் சென்றவுடன் கைவிட்டு விடுவீர்கள் என்றிருப்பின் இப்போதே அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் தமது கூட்டத்தினருடன் தமது ஊரில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்கிறார்.”

அதன்பின் நபியவர்களும் மற்றும் பலரும் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தபின் வேறுவழியின்றியே அப்பாஸ் மக்காவில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவரையும் குரைஷிகள் தங்களது படையுடன் சேர்த்த இழுத்துவர, இங்கு நபியவர்கள் தம் தோழர்களிடம் செய்த அறிவிப்புதான் நாம் மேலே பார்த்தது. அந்நிகழ்வு அப்பாஸின் மைந்தர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்க, ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.

“பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் மற்றொருவரும் தம் விருப்பமின்றி, குரைஷிகளின் கட்டாயத்தினால் நம்மை எதிர்த்துவரும் படை அணியில் இணைக்கப்பட்டுள்ளர் என்பதை நான் அறிவேன். எனவே பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்தவரை எதிர்கொள்ள நேரிடுபவர் அவரைக் கொல்ல வேண்டாம். எவரேனும் அபுல்பஃக்தாரி பின் ஹிஷாம் பின் அல்-ஹாரித் பின் அஸதை எதிர்கொள்ள நேர்ந்தால் அவரைக் கொல்ல வேண்டாம். எவரேனும் அல்லாஹ்வின் தூதரின் சிறிய தந்தை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபை எதிர்கொள்ள நேர்ந்தால் கொல்ல வேண்டாம்”

அதைக் கேட்டு அபூஹுதைஃபாவுக்குப் பெரும் ஆச்சரியம். “எங்களுடைய தகப்பன்கள், பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோரைக் கொன்றுவிட்டு அப்பாஸை விட்டுவிடுவதா? நான் அவரை எதிர்கொள்ள நேர்ந்தால் அவர் எனது வாளுக்கு இரையாவார்” என்று சொல்லிவிட்டார்.

தம்முடைய வாழ்வில் முதல்முறை, அதுவும் ஒரே ஒருமுறை நபியவர்களின் கட்டளையை அவர் எதிர்த்துப் பேசியது, அந்த ஒரு தருணத்தில் மட்டுமே. அபூஹுதைஃபாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நபியவர்களுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டுவிட்டது. உமர் ரலியல்லாஹு அன்ஹுவிடம் திரும்பி, “ஓ அபூ ஹஃப்ஸ்! நபியின் சிறிய தந்தையை யாரேனும் கொல்வார்களா?” அன்றுதான் நபியவர்கள் உமரை “அபூ ஹஃப்ஸ்” என்று முதல்முறையாக அழைத்தது.

உமர் உடனே வெகுண்டெழுந்த்தர். “அல்லாஹ்வின் தூதரே! அபூஹுதைஃபாவின் தலையைக் கொய்ய எனக்கு அனுமதியளியுங்கள். அவர் நயவஞ்சகராகிவிட்டார்.”

தமது பதிலின் விபரீதத்தை அப்பொழுதுதான் உணர்ந்தார் அபூஹுதைஃபா. உள்ளத்தை அச்சம் சூழ்ந்தது. அது உமர் தம்மைக் கொன்றுவிடுவாரோ என்பதனால் எழுந்த அச்சமன்று. இது வேறு. நபியவர்களின் வார்த்தையை மீறுவேன் என்று கூறினாரல்லவா, அதிலிருந்த துடுக்குத்தனம்; அவ்வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருந்த குற்றம்.

“அதன் பிறகு எனக்கு நிம்மதி என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. இறைத் தூதரின் கட்டளையை மீறியதால் எனக்கு என்னென்ன துன்பங்கள் வந்து சேருமோ என்று கவலையுற்றேன். இறைவனுக்காக உயிர்த் தியாகம் செய்யும் வாய்ப்பு அமைந்தால் மட்டுமே அந்தப் பாவத்திலிருந்து மீட்சி என்று கருதினேன்” என்று கூறியுள்ளார் அபூஹுதைஃபா. பிராயச்சித்தம் என ஒன்று இருக்குமானால் அது இஸ்லாத்திற்காக உயிர்த்தியாகி ஆவதே என்ற அழுத்தமான சிந்தனை அபூஹுதைஃபாவின் மனத்தில் அன்று ஆழப்பதிந்து போனது.

நபியவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீத் இது, கட்டளை அது என்று தெரியவந்தாலும்கூட நாளும் பொழுதும் அதை வெகு அலட்சியமாகக் கையாளும் நமக்கெல்லாம் இதில் செய்தி ஒளிந்துள்ளது.

குரைஷிகளின் படை வந்து சேர்ந்தது. பத்ருக் களம் யுத்தத்திற்குத் தயாரானது. அன்றைய அரபிகளின் வழக்கப்படி முழுஅளவிலான போர் துவங்கும் முன் நடைபெறும் ‘ஒற்றைக்கு ஒற்றை’ மல்யுத்தம் துவங்கியது. குரைஷிகளின் முக்கியப்புள்ளியும் அபூஹுதைஃபாவின் அப்பனுமான உத்பா இப்னு ரபீஆ, தன் சகோதரன் ஷைபா, மகன் வலீத் ஆகியோருடன் முன்னால் வந்து நின்று முஸ்லிம்களிடம் அறைகூவல் விடுத்தான். ஒற்றைக்கு ஒற்றை என்பது ‘சாகடி; அல்லது செத்துமடி’. இரண்டில் ஒன்றுதான். எனவே, களமிறங்குவதற்குச் சண்டைக் கலையும் துணிவும் சரிசமம் தேவை. அந்த அழைப்பை ஏற்றுச் சண்டையிட ‘திடுதிடு’வென்று ஓடி வந்து நின்றார்கள் மூன்று இளைஞர்கள். அவர்கள் அஃப்ராவின் மூன்று மகன்களான முஆத், முஅவ்வித், அவ்ஃப். அவர்களை ஏறிட்டுப் பார்த்தான் ஷைபா இப்னு ரபீஆ. மூவருமே மதீனாவாசிகள் என்பதை அறிந்துகொண்டவன், கத்தினான்.

“இதோ பார்! நாங்கள் உங்களிடம் சண்டையிட வரவில்லை. எங்களுக்கு எங்களின் மக்கள் வேண்டும்”

குரைஷிகளின் ஆத்திரமெல்லாம் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட தங்கள் இன-சொந்த பந்தங்களின் மீது இருந்தது. இன்றுடன் அவர்களை நசுக்கி அழித்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தனர்.

‘உங்களுக்கு அந்த இளைஞர்களே போதும். ஆனால் நாங்கள்தானே வேண்டும். இதோ…’ என்பதுபோல் முன்னால் வந்து நின்றார்கள் – ஹம்ஸா, அலீ, உபைதுல்லாஹ் இப்னுல் ஹாரித், ரலியல்லாஹு அன்ஹும். அடுத்து என்ன? மூண்டது கடுமையான சண்டை. ‘திடும் திடுமென’ அவர்கள் மோதிக்கொள்ள, சுற்றிலும் புழுதி மயம். முடிவில், ஹம்ஸா ஷைபாவைக் கொல்ல, அலீ வலீதைக் கொன்றார். உபைதுல்லாஹ்வுக்கும் உத்பாவுக்கும் இடையில் முடியாமல் நீடித்த சண்டையை உத்பாவைக் கொன்று முடித்து வைத்தனர் அலீயும் ஹம்ஸாவும்.

அதன்பின் யுத்தம் முழுஅளவில் துவங்கியது. ஐம்பத்தெட்டு அத்தியாயங்களை நாம் கடந்துவிட்டதால், அப்போரில் முஸ்லிம்கள் அடைந்த பெருவெற்றி நாம் நன்கறிந்த வரலாறு. முஸ்லிம்கள் தரப்பில் பதினான்கு தோழர்கள் உயிரிழந்திருந்தனர். குரைஷிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்கள் எழுபது. போர்க் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டவர்களும் எழுபது. கொல்லப்பட்டவர்களுள் இருபத்து நால்வர் குரைஷிப் பெருந்தலைகள்.

ஃகலீப் என்றொரு பாழ் கிணறு அங்கிருந்தது. அதனுள் கொல்லப்பட்டக் குரைஷிப் பெருந்தலைகளின் சடலங்கள் தள்ளப்பட்டன. அவர்கள் ஒவ்வொருவரையும் “ஓ உத்பா இப்னு ரபீஆ! ஓ ஷைபா இப்னு ரபீஆ! ஓ உமைய்யா இப்னு ஃகலஃப்! ஓ அபூஜஹ்லு இப்னு ஹிஷாம்” என்று பெயர் சொல்லி அழைத்தார்கள் நபியவர்கள். “உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்தவற்றை இப்பொழுது கண்டு கொண்டீர்களா? என் இறைவன் எனக்கு வாக்களித்ததை நான் கண்டுகொண்டேன்” அதைக் கேட்டு வியந்துபோனார்கள் தோழர்கள். “இறந்து போய்விட்டவர்களிடமா பேசுகிறீர்கள் அல்லாஹ்வின் தூதரே?” என்றார்கள்.

“நீங்கள் செவியுறுவதைப் போலவே அவர்களும் செவியுறுகின்றனர். ஆனால் அவர்களால் பதிலளிக்க முடியாது” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.

இறை நிராகரிப்பாளனாகவே வாழ்ந்து, கூடாத அட்டூழியமெல்லாம் புரிந்து, அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் போரிட்டு, மோட்சமடைய வழியே இல்லாமல் மாண்டு மடிந்த தம் தந்தையை சோகமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் அபூஹுதைஃபா. நபியவர்களின் பதிலைக்கேட்டு வெளிறிப்போனது அவரது முகம்.

“ஓ அபூஹுதைஃபா! உம் தந்தையின் கொடிய முடிவைக் கண்டு வருந்துகிறீரோ?” விசாரித்தார்கள் நபியவர்கள்.

ஈமானில் மூழ்கிய உள்ளத்திலிருந்து அழுத்தமான பதில் வந்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் வருந்தவில்லை அல்லாஹ்வின் தூதரே! அவரது முடிவை நினைத்து நான் துயருறவில்லை. என் தந்தை நல்ல புத்திக்கூர்மையுள்ள மனிதர். அவரது அறிவும் மேன்மையும் சத்தியத்தின் பக்கம் அவரை என்றாவது ஒருநாள் இழுத்து வந்துவிடும் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அவருக்கு வந்து வாய்த்ததைக் காணும்போது எனது நம்பிக்கையை அவரது இணைவைப்பு தகர்த்து விட்டதே என்று பரிதாபப்படுகிறேன்”

நபியவர்கள் அபூஹுதைஃபாவுக்காக இறைஞ்சினார்கள்.

oOo

முஸைலமாவும் அவனுடன் முஸ்லிம்கள் நிகழ்த்திய இறுதிகட்ட யமாமா யுத்தமும் நினைவிருக்கிறதா? அந்தப் போரில், காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு தம் படையின் இரு பிரிவுகளுள் ஒன்றின் தலைமையை ஸைது இப்னு கத்தாபிடமும் மற்றொன்றின் தலைமையை அபூஹுதைஃபா இப்னு உத்பாவிடமும் அளித்தார். யுத்தம் கடுமையான சூழலை அடைந்து களத்தில் ஏகக் களேபரம். மலைபோல் நின்று போரிட்டுக் கொண்டிருந்தார் அபூஹுதைஃபா. முஸைலமாவின் படையினரைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார்.

முஸ்லிம் வீரர்களை நோக்கி உரத்த குரலில், “குர்ஆனின் மக்களே! உங்களுடைய குர்ஆன் ஞானத்தை உங்களது செயல்களால் அலங்கரியுங்கள்” என்று இரைந்து கத்தினார். பெரும் உத்வேகம் அளித்த வெகு சுருக்கமான வாக்கியம் அது. குர்ஆனும் ஞானமும் என்பது வீரமும் செயலுமாக தோழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து போயிருந்ததை விவரிக்கும் அற்புத வாக்கியம் அது.

சொல்லிவிட்டு, மற்றவர்களை முன்தள்ளிவிட்டு அபூஹுதைஃபா பின்தங்கி நின்று விடவில்லை. ஆற்று நீரில் உல்லாசமாய்த் தலைகுப்புறக் குதிப்பவரைப் போன்று எதிரிகளின் படையினுள் ஒரு பாய்ச்சல். எதிரிகளை அவர் வெட்டித் தள்ளிக்கொண்டே செல்ல, அவரது உடலிலும் எண்ணற்ற வெட்டுக் காயங்கள்.

பத்ருப் போரின்போது தாம் உரைத்த துடுக்கு வார்த்தைகளுக்குப் பிராயச்சித்தம் நாடிய அவருக்கு, யமாமாவில் அது வாய்த்தது. அந்தப் போரில் உயிர்த் தியாகியானார் அபூஹுதைஃபா இப்னு உத்பா.

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.