தோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் عبد الله بن عمر

Share this:

அப்துல்லாஹ் இப்னு உமர்

عبد الله ابن عمر

டை வீதியில் ஒருவர் தம்முடைய பிராணிக்குத் தீவனம் வாங்குவதைக் கண்டார் அய்யூப் இப்னு வாய்ல். ‘பணம் இல்லை. பிறகு தருகிறேன்’ என்று கடன் சொல்லிக் கொண்டிருந்தார் அவர். அதைக் கண்டு அய்யூபுக்கு மிகவும் அதிர்ச்சி! ஒருவர் தீவனம் வாங்குவதில், அதைக் கடனுக்கு வாங்குவதில் என்ன அதிர்ச்சி இருக்க முடியும்? ஆனால் அய்யூப் அதிர்ச்சி விலகாமல் தீவனம் வாங்கிக் கொண்டிருந்தவரின் வீட்டிற்கு ஓடினார்.

இஸ்லாமிய அரசாங்கத்தின் கருவூலம் நிரம்பி வழிந்த காலம் அது. முஸ்லிம்களுக்கு அவரவர் பங்கு என்று நிறைய பணம் வினியோகம் ஆகும். முந்தைய நாள்தான் தீவனக் கொள்முதல் செய்பவருக்கு நாலாயிரம் திர்ஹமும் வெல்வெட் துணியும் அவருடைய பங்காக அரசாங்கத்திடமிருந்து கிடைத்திருந்தது. இந்தக் காலத்திலேயே நாலாயிரம் திர்ஹம் என்பது குறிப்பிடும் அளவிலான தொகை. எனும்போது அந்தக் காலத்தில்?  அப்படியொரு பெருந்தொகை ஒருவருக்குக் கிடைத்திருக்க, அடுத்த நாளே அவர் கடனுக்கு தீவனம் வாங்குகிறார் என்றால் பார்ப்பவருக்கு அதிர்ச்சி ஏற்படாது?

ஓடிய அய்யூப் வீட்டாரிடம், “அபூஅப்துர்ரஹ்மானுக்கு நேற்று நாலாயிரம் திர்ஹமும் வெல்வெட் துணியும் கிடைத்தனவா இல்லையா?” என்று விசாரித்தார்.
 
“ஆம் கிடைத்தன” என்றார்கள்.
 
“இப்பொழுது அவரைக் கடைவீதியில் பார்த்தேன். கடனுக்குத் தீவனம் வாங்கிக் கொண்டிருக்கிறாரே?”
 
“அந்தப் பணம் முழுவதையும் நேற்றே ஏழைகளுக்குப் பிரித்து அளித்துவிட்டார். பிறகு, வெல்வெட் துணியையும் எடுத்துக் கொண்டு வெளியில் சென்றார். திரும்பி வரும்போது அது அவரிடம் இல்லை. எங்கே என்று கேட்டோம். அதையும் ஓர் ஏழைக்கு அளித்துவிட்டதாகச் சொன்னார். பிறகுதான் உறங்கவே சென்றார்.”
 
அய்யூப் இப்னு வாய்ல் வருத்தத்துடன் தம்முடைய கைகளை குத்திக்கொண்டு மீண்டும் கடைவீதிக்குச் சென்றார். உயரமான ஓர் இடத்தில் ஏறி நின்று அங்கிருந்தவர்களிடம் உரத்தக் குரலில் முழங்கினார். “மக்களே! ஆயிரக்கணக்கான திர்ஹம் கிடைத்தும் உடனே அதை தானமளித்துவிட்டு, மறுநாளே தம்முடைய மிருகங்களுக்கான தீவனத்தைக் கடனுக்கு வாங்கும் இப்னு உமர் நம் மத்தியில் இருக்கிறார். இப்படி ஒருவரைக் கண்டபின், இந்த உலகம் உங்களுக்கு என்ன பெரிசு?”
 
உமர் இப்னுல் கத்தாபின் மைந்தரான அப்துல்லாஹ் இப்னு உமரின் வாழ்க்கை நெடுக அப்படியான விந்தைகள்தாம் நிறைந்திருந்தன. ஆச்சரியத்திற்கும் வியப்பிற்கும் குறைவில்லாத வாழ்க்கை. ரலியல்லாஹு அன்ஹு.

oOo

அப்துல்லாஹ் பாலகப் பருவத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர். உமர் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்தபோது தம் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு இப்னு உமரும் மதீனாவிற்கு வந்துவிட்டார். அச்சமயம் அவரது வயது 10.
 
உமரின் மனைவியருள் ஒருவர் ஸைனப் பின்த் மள்ஊன். இத் தம்பதியருக்குப் பிறந்தவர்கள் அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், ஹஃப்ஸா – ரலியல்லாஹு அன்ஹும். ஹஃப்ஸா, நபியவர்களின் கரம் பற்றி அன்னை ஹஃப்ஸா என்றானவர். இவர்களுடைய தாய் மாமன் உத்மான் பின் மள்ஊன் ரலியல்லாஹு அன்ஹு என்பதும் அவருடைய சுவையான வரலாறும் இத் தொடரில் இடம்பெற்ற அத்தியாயம் என்பதும் துணைச் செய்தி.
 
ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு. பத்ரு யுத்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, நானும் போரிட வருகிறேன் என்று வாளைத் தூக்கிக்கொண்டு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் வந்து நின்றுவிட்டார் இப்னு உமர். பன்னிரெண்டு வயது சிறுவரின் துணிச்சலை மெச்சிவிட்டு, ‘களப் பணிக்கு இன்னமும் வேளை வரவில்லை’ என்று அவரைத் திருப்பி அனுப்பினார்கள் நபியவர்கள். சற்றொப்ப இவரது வயதை ஒத்த ஸைது இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹுவும் இவரைப் போலவே குதித்துக்கொண்டு களத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய அதே அனுபவம் இவருக்கும் நேர்ந்தது.
 
அதற்கு அடுத்த ஆண்டு உஹதுப் போருக்கான மேகம் மதீனாவைச் சூழ்ந்தபோது, ஒரு குழுவாய் சிறுவர்கள் கூடி வாள், ஈட்டி, வில்-அம்பு, கவசம் ஆகியனவெல்லாம் எடுத்துக்கொண்டு முஹம்மது நபியவர்களிடம் ஓடினார்கள். ஏதாவது செய்து படையில் இடம்பெற்றுவிட வேண்டும் என்ற பெரும்போட்டி அவர்களுக்குள். அதில் ரஃபி இப்னு கதிஜ், சமுரா இப்னு ஜுன்துப் எனும் இருவர் தங்களது வயதுக்கு மீறிய வலிமையோடும் தேகபலத்துடனும் திகழ்ந்தவர்கள். மல்யுத்தம் புரிவதிலும் போர்க்கருவிகளைக் கையாள்வதிலும் அவர்களிடம் அசாத்திய லாவகம் இருந்தது. அதைப் பார்த்த முஹம்மது நபி அனுமதியளித்துவிட்டார்கள்.  ஆனால் அப்துல்லாஹ் இப்னு உமருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அந்தச் சிறுவர் பட்டாளத்துடன் சேர்ந்து முயற்சி செய்த ஸைது இப்னு தாபித்திற்கும் வாய்ப்பு அமையவில்லை. போருக்கான பக்குவம் அவர்களிடம் இன்னமும் ஏற்படவில்லை என்பது நபியவர்களின் மதிப்பீடு.
 
பின்னர் அவருக்குப் பதினைந்து வயதான போது பனூ முஸ்தலிக் படையெடுப்பில்தான் நபியவர்களுடன் போரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. அதன் பிறகு அனைத்துப் போரிலும் அவர் ஆஜர்.
 
இவ்விதம் தம்முடைய இளமையில் துறுதுறுப்பாகவும் துடிப்பாகவும் போரில் கலந்துகொள்ள ஓடியவர், வயதில் மூத்தவர்களிடம் காட்டிய பணிவும் அவையடக்கமும் ஓர் உன்னதம்.
 
ஒருநாள் தோழர்களுடன் அமர்ந்திருந்த நபியவர்கள், “ஒரு மரத்தைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அதன் நிலை ஒரு முஸ்லிமின் நிலைக்குச் சமமாகும். அந்த மரம் தன் அதிபதியின் ஆணைக்கேற்ப எல்லா நேரங்களிலும் கனி தருகிறது. அதன் இலை உதிர்வதில்லை. அது எந்த மரம்?” என்று கேட்டார்கள்.
 
அந்தக் கூட்டத்தில் தம் தந்தையுடன் சிறுவரான இப்னு உமரும் அமர்ந்திருந்தார். அவருடைய மனத்தில் அது பேரீச்சை மரம்தான் என்று தோன்றியது. ஆனால் அவையில் அமர்ந்திருந்த மூத்தவர்களான அபூபக்ரு, உமர் போன்றோர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததால் தாமும் அமைதியாக இருந்துவிட்டார். இறுதியில் நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சை மரம்” என்றார்கள்.
 
பிறகு தம் தந்தை உமருடன் வெளியில் வந்தபோது, “தந்தையே! அது பேரீச்சை மரம்தான் என்று என் மனத்தில் தோன்றியது’ என்றார் இப்னு உமர்.
 
“நீ ஏன் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்லவில்லை? நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்னதைவிட எனக்கு மிகவும் விருப்பமனாதாய் இருந்திருக்குமே!” என்றார் உமர்.
 
“தாங்களும் அபூபக்ரு அவர்களும் பேசாமல் இருந்ததைக் கண்டேன். அதனால் நான் பேச விரும்பவில்லை”.
 
இக்காலத்தில் அவையடக்கம் என்பது தொலைந்துபோன விஷயம். போலவே, இளைஞர்களையும் சிறுவர்களையும் ‘இவர்களுக்கு என்ன தெரியும்’ எனும் மட்டந்தட்டும் மனவோட்டம் மூத்தவர்களிடம் பரவியுள்ளது வேறுவகை சோகம்.
 
பருவ வயதை எட்டி, படையெடுப்புகளிலும் யுத்தங்களிலும் பங்கெடுக்க ஆரம்பித்தவர் ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மரத்தின் அடியில் நபியவர்களிடம் சத்தியப்பிரமாணம் செய்தது, மக்கா படையெடுப்பின்போது பங்கெடுத்தது என்று இஸ்லாமிய வரலாற்றின் வெகு முக்கிய நிகழ்வுகளில் அழுத்தமாகப் பதிந்து போனார். மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது இப்னு உமர் இருபது வயது வாலிபர்.
 
நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி செலுத்தியபோது பைஸாந்தியர்களை நோக்கிப் பெரும் படையை அனுப்பினார். அதை நான்காகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் முக்கியமான நபித்தோழர் ஒருவர் தளபதி. அந்த நால்வர் யஸீத் இப்னு அபூஸுஃப்யான், ஷுராஹ்பில் இப்னு ஹஸனாஹ், அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ், அம்ரு இப்னுல் ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹும்). இவர்களுள் அம்ரு இப்னுல் ஆஸ் தலைமையின் கீழ் ஆறாயிரத்திலிருந்து ஏழாயிரம் வரையிலான படை வீரர்கள் அணிவகுக்க அதில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
 
சாக்கடல் அருகிலுள்ள வாதி அர்ரபாஹ் பகுதியைத் தம் படையுடன் நெருங்கிய அம்ரு இப்னுல் ஆஸ், ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு வேவுப்படையை உருவாக்கி, அதன் தலைமையை அப்துல்லாஹ் இப்னு உமரிடம் ஒப்படைத்தார். பைஸாந்தியப் படைகளின் முதல் கட்டப் பிரிவை நோக்கிச் சென்றது அந்தப் படை. சென்றவர்கள் அவர்களுடன் மோதி, தாக்கி, வென்று, சிலரைக் கைதிகளாகவும் சிறைபிடித்து வந்துவிட்டனர். இவ்விதம் போரும் களமும் என்று அவர் இருந்தாலும் ஆன்மீகமும் இறை அச்சமும் உபரிப் பாடங்களாக ஆகிவிடவில்லை. மாறாக அவரது வாழ்க்கையில் அனைத்துச் செயல்களும் இறை அச்சத்தையும் நபிவழியையும் அடித்தளமாகக் கொண்டுதான் நிகழ்ந்திருக்கின்றன.
 
சிறுவராக இருந்து கருத்து அறிய வந்த காலம் முதல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வெகு நுணுக்கமாகக் கவனித்து வளரும் வாய்ப்பு அவருக்கு அமைந்ததால் அது அவரது வாழ்க்கையைச் சிறப்பான ஒரு கோணத்தில் செதுக்கிவிட்டது. தவிர அவருடைய தந்தையோ இஸ்லாத்தின் முதன்மையான உன்னதர்களுள் ஒருவரான உமர் கத்தாப் (ரலி). இவை இரண்டும் சேர்ந்தால் என்னாகும்? வாழ்க்கையின் பக்கங்கள் வியப்புக் குறிகளால் நிறையும். ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அதற்குமுன் கனவொன்று.
 
நபியவர்களின் காலத்தில் மக்கள் தங்களது கனவுகளை அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நபியவர்கள் அதற்கு விளக்கமளிப்பார்கள். தாமும் ஒரு கனவு கண்டு அதை நபியவர்களிடம் சொல்ல வேண்டும் என்று இளைஞரான இப்னு உமருக்குப் பெரிய ஆசை. பள்ளிவாசலில் உறங்கும் வழக்கம் அவருக்கு. ஒருநாள் அவரது உறக்கத்தில் கனவு வந்தது.
 
இரண்டு வானவர்கள் அவரைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்குக் கட்டப்பட்டிருந்தது அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. நரகிற்குள் அவருக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அதைக் கண்டு இப்னு உமர் நரகத்தைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றார். அப்போது வேறு ஒரு வானவர் இப்னு உமரைச் சந்தித்து, “நீர் பயப்படாதீர்!” என்று கூறுகிறார்.
 
இக்கனவைத் தம் சகோதரியும் நபியவர்களின் மனைவியுமான ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹாவிடம் சென்று தெரிவித்தார் இப்னு உமர். அன்னை ஹஃப்ஸா நபியவர்களிடம் தெரிவிக்க, “அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்” என்று மட்டும் கூறுகிறார்கள் நபியவர்கள்.
 
அவ்வளவுதானே கூறினார்கள். ஆனால் அதன்பின் தம் வாழ்நாள் முழுவதும் இரவில் அவரது உறக்கம் வெகுவாகக் குறைந்து போனது. மீத இரவு? அதெல்லாம் தொழுகை மயம்.

oOo

தம் தந்தை உமர் ரலியல்லாஹு அன்ஹுவிடம் இப்னு உமர் பயின்ற பாடம் அவர் மீது செலுத்திய தாக்கம் சிறப்பானது. தம் தந்தையிடம் அவர் கற்று உணர்ந்து பக்குவப்பட்டது ஏராளம். பிற்காலத்தில் இப்னு உமரின் மேன்மைக்கு அவையும் உதவியிருக்கின்றன.

மதீனாவின் புறநகர்ப் பகுதியில் அல்-ஹிமா என்றொரு நஞ்செய் நிலம் இருந்தது. பொதுநிலம். புல் பூண்டு வளர்ந்திருக்கும். மக்கள் தங்களுடைய ஆடு, மாடு, குதிரை, ஒட்டகங்களைக் கொண்டுவந்து அங்கு விட்டுவிடுவார்கள். மிருகங்கள் தங்களுக்குள் அரட்டை அடித்தபடி மேய்ந்து பசியாறிக் கொள்ளும். அப்துல்லாஹ் இப்னு உமரும் சில ஒட்டகங்களை விலைக்கு வாங்கி அங்கு மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அவை உண்டு கொழுத்து நன்றாக வளர்ந்தன. விற்பனைக்கு தயார் என்று ஆனதும் அவற்றைச் சந்தைக்குக் கொண்டு வந்தார். அந்த நேரம் பார்த்து சந்தையை மேற்பார்வையிடுவதற்கு வந்திருந்தார் கலீஃபா உமர். இஸ்லாமிய அரசின் ஆக உசத்தியான தலைமையில் இருந்தாலும் இப்படியான எளிய வேலைகளையும் பெரும் முனைப்போடு செய்வது கலீஃபா உமரின் இயல்பு.
 
திடகாத்திரமாக நின்றிருந்த ஒட்டகங்களைப் பார்த்து, “இவை யாருடையவை?” என்று விசாரித்தார் உமர். அங்கிருந்தவர்கள், “அப்துல்லாஹ் இப்னு உமருக்கு உரியவை” என்றார்கள்.
 
“ஓ! அப்துல்லாஹ் இப்னு உமர்… அமீருல் மூஃமினின் மகனார்” என்று வியந்தவர், தம் மைந்தரிடம், “இந்த ஒட்டகங்களின் செய்தி என்ன?” என்று விசாரித்தார்.
 
“நான் இதை விலைக்கு வாங்கி அல்-ஹிமாவில் மேய விட்டிருந்தேன். மற்ற முஸ்லிம்கள் என்ன செய்தார்களோ அதையே நானும் செய்தேன்” என்று பதில் அளித்தார் இப்னு உமர்.
 
“அது சரி. அங்குள்ளவர்கள், இவை கலீஃபாவின் மைந்தருடைய ஒட்டகங்கள். நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். சிறப்பான முறையில் தண்ணீர் புகட்டுங்கள் என்று சிறப்புச் சலுகையல்லவா அளித்திருப்பார்கள். அப்துல்லாஹ்! இவற்றை விற்று நீ போட்ட முதல் தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு லாபம் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு உரிய பைத்துல் மாலில் செலுத்திவிடு” என்று கட்டளையிட்டுவிட்டார்.
 
இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். கலீஃபாவின் மைந்தர் எவ்விதமான தில்லுமுல்லு வணிகத்திலும் ஈடுபடவில்லை. பொதுமக்களுள் ஒருவராக, அனுமதிக்கப்பட்ட வர்த்தகத்தில் ஈடுபடுகிறார். அப்படியிருந்தும் கலீஃபாவின் மைந்தர் என்பதற்காக ஏதேனும் சிறப்புச் சலுகை ஏற்பட்டிருக்கும், இதர முஸ்லிம்களின் உரிமை பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில் லாபத்தை எல்லாம் முஸ்லிம்களின் பைத்துல்மாலுக்குச் அளித்துவிடச் சொல்லிவிடுகிறார் கலீஃபா.
 
தலைமை, பதவி என்று ஒருவர் பொது வாழ்வில் அடியெடுத்து வைப்பதே தானும் தன்னுடைய சுற்றமும் நட்பும் ஊரை அடித்து உலையில் போடத்தான் என்பதற்கும் அதற்குத் தொண்டர்களும் துணை போவதுமல்லாவா இன்றைய அரசியல்? கூட்டுக் கொள்ளையை அரசியல் என ஏற்றுக்கொண்ட பொதுஜனத்துக்கு, கலீஃபா உமரின் உத்தரவு விசித்திரமாகத்தான் தோன்றும்.
 
உமரின் கிலாஃபத்தின்போது பாரசீகர்களுடன் நிகழ்ந்த ஜலூலா போர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்தப் போரில் அப்துல்லாஹ் இப்னு உமரும் கலந்துகொண்டார். போரில் முஸ்லிம்கள் பெரு வெற்றியடைந்தனர். கைப்பற்றப்பட்ட பொருள்கள் சிலவற்றை நாற்பதாயிரம் திர்ஹம் விலை கொடுத்து வாங்கினார் அப்துல்லாஹ் இப்னு உமர். அதை அங்கு வாங்கி மதீனாவுக்குக் கொண்டுச் சென்று விற்று லாபம் சம்பாதிக்கும் எளிய வர்த்தகத் திட்டம் அவருக்கு. இதில் என்ன குற்றம் இருக்கிறது?
 
பொருள்களைச் சுமந்து கொண்டு மதீனாவுக்கு வந்தால், கலீஃபா உமர், “நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு நரக நெருப்பு காண்பிக்கப்பட்டு, அதிலிருந்து மீள, மீட்புத் தொகை கொடு என்றால் கொடுப்பாயா மாட்டாயா? அங்கு நிகழ்ந்தது அப்படியே என் கண்ணுக்குத் தெரிகிறது. அங்கிருந்தவர்கள், ‘இவர்தாம் அப்துல்லாஹ் இப்னு உமர், நபி (ஸல்) அவர்களின் தோழர்; கலீஃபாவின் மகன்; அதுவும் அவருக்கு மிகவும் உவப்பான ஒருவர்’ என்று கூறியிருப்பார்கள். அவர்களது கூற்று உண்மையும்கூட. அதனால் அவர்கள் மற்றவர்களுக்கு விற்பதைவிடச் சகாயமான விலையில் உனக்கு இதை விற்றிருப்பார்கள். போரில் கைப்பற்றப்பட்டவற்றை பிரித்தளிப்பதற்கு நான் தான் பொறுப்பு. குரைஷி வர்த்தகர் ஒருவர் என்ன லாபம் ஈட்டுவாரோ அதை நான் உனக்கு அளிப்பேன். ஒரு திர்ஹத்திற்கு ஒரு திர்ஹம் லாபம். அவ்வளவுதான்” என்று தம் மகனிடம் காரசாரமாகக் கூறிவிட்டு, வர்த்தகர்களை அழைத்து அப்பொருள்களை விலைபேசி எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான்கு இலட்சம் திர்ஹத்திற்கு அவற்றை அவர்கள் வாங்கினர்.
 
“இந்தா நீ போட்ட முதல் நாற்பதாயிரத்துக்கு எண்பதாயிரம்” என்று அப்துல்லாஹ் இப்னு உமரிடம் எண்பதாயிரம் திர்ஹம் அளித்துவிட்டு, மீதமுள்ள அத்தனைப் பணத்தையும் ஸஅத் பின் அபீவக்காஸுக்கு அனுப்பி அவற்றைப் போர் வீரர்களுக்குப் பிரித்தளிக்கச் சொல்லிவிட்டார் உமர். அமைதியாக அதை ஏற்றுக்கொண்டார் இப்னு உமர்.
 
உமரிடம் சேவகராக இருந்த அஸ்லம் ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளார். உமரின் மைந்தர்களான அப்துல்லாஹ்வும் உபைதுல்லாஹ்வும் ஈராக் நாட்டிற்குச் சென்ற படையுடன் இணைந்து போருக்குச் சென்றார்கள். போர் முடிந்து சகோதரர்கள் இருவரும் மதீனா திரும்பும்போது பஸ்ரா நகரின் ஆளுநராக இருந்த அபூமூஸா அல்-அஷ்அரீயை (ரலி) சந்தித்தார்கள். அவர்களை வரவேற்றவர், “கலீஃபாவுக்குக் கொடுத்தனுப்ப வேண்டிய அல்லாஹ்வின் செல்வம் என்னிடம் உள்ளது. அதை நான் உங்களிடம் அளிக்கிறேன். அந்தப் பணத்தில் நீங்கள் ஈராக்கில் சரக்கு வாங்கி மதீனாவில் விற்பனை செய்யலாம். கிடைக்கும் இலாபத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு நான் கொடுத்த பணத்தை கலீஃபாவிடம் கொடுத்துவிடலாம்” என்றார். இதை விவரித்து கலீஃபாவுக்கு ஒரு கடிதமும் கொடுத்தனுப்பினார் அபூமூஸா.
 
இதில் தவறோ, கையாடலோ இல்லை, நல்ல யோசனை என்று இருவரும் அந்தப் பணத்திற்கு சரக்கு வாங்கிக்கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர்.
 
உமரிடம் வந்தால், “இப்படியான சலுகையைப் படை அணியில் இருந்த அனைவருக்கும் அபூமூஸா அளித்தாரா?” என்று கேட்டார்.
 
“இல்லை” என்றார்கள்.
 
“முதலும் இலாபமும் – இரண்டையும் என்னிடம் தாருங்கள்” என்றார் உமர்.
 
தம் தந்தையின் நோக்கத்தையும் சுபாவத்தையும் உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு உமர் அமைதியாக இருக்க, உபைதுல்லாஹ்வோ, “நீங்கள் அப்படிச் செய்ய முடியாது அமீருல் மூஃமினீன். இந்த முதல் நட்டமடைந்திருந்தாலோ, தொலைந்திருந்தாலோ நாங்கள் அந்த முழுத்தொகையையும் எங்களது பணத்திலிருந்துதானே தந்திருப்போம்” என்றார்.
 
‘இரண்டையும் என்னிடம் தாருங்கள்’ என்று உமர் வற்புறுத்த, உபைதுல்லாஹ் மறுத்துக்கொண்டே இருக்க, அப்துல்லாஹ்வோ அமைதியாகிவிட்டார்.
 
பிறகு அங்கு அமர்ந்திருந்த ஒருவர், “அமீருல் மூஃமினீன். வேண்டுமானால் நீங்கள் லாபத்தில் பங்கு பிரித்துக் கொள்ளுங்களேன்” என்று ஆலோசனை அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட உமர், அபூமூஸா அனுப்பிய தொகையையும் இலாபத்தில் பாதியையும் முஸ்லிம்களின் பைத்துல்மாலுக்கு எடுத்துக்கொள்ள, அப்துல்லாஹ்வும் உபைதுல்லாஹ்வும் மீதமிருந்த தொகையில் சரிபாதி பிரித்துக் கொண்டனர்.
 
மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் உரிய செல்வத்தில் தானோ, தம் குடும்பமோ எவ்விதமான முறைகேட்டிலும் தவறான பயனடைதலிலும் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக கலீஃபா உமர் கடைப்பிடித்த ஒழுக்கமுறை வரலாற்றில் ஆக உச்சம்.

மட்டுமின்றி, மக்களுக்குப் பிரித்தளிக்க வேண்டிய செல்வத்தில் தம் மைந்தர்களுக்கான பங்கில் அவர் எவ்வித முன்னுரிமையும் அளித்ததில்லை. மாறாக, இஸ்லாத்தினுள் முதலில் நுழைந்தவர்கள், நபியவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில்தான் அவர் தரவரிசை ஏற்படுத்தியிருந்தார்.
 
ஒருமுறை உஸாமா இப்னு ஸைதுக்கு நாலாயிரம் திர்ஹமும் தம் மைந்தர் அப்துல்லாஹ் இப்னு உமருக்கு மூவாயிரம் திர்ஹமும் அளித்தார் உமர்.
 
“தந்தையே! உஸாமாவுக்கு நாலாயிரமும் எனக்கு மூவாயிரமும் அளித்துள்ளீர்கள். அவருடைய தந்தையின் தகுதி உங்களுடையதைப் போன்றது தானே? உஸாமாவைப் போன்றதுதானே என்னுடைய தகுதியும்?” என்று கேட்டார் அப்துல்லாஹ்.
 
அதற்கு உமர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஸாமாவின் தந்தை உன்னுடைய தந்தையைவிடப் பிரியமானவர். அல்லாஹ்வின் தூதருக்கு உஸாமா உன்னைவிடப் பிரியமானவர்” என்று கூறிவிட்டார் உமர். யோசித்து உணர இதில் ஏராளம் உள்ளது.
 
தம் மைந்தர் அப்துல்லாஹ்வுக்கு பெரும் பதவிகள் வகிப்பதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் நிர்வாகப் பணிகளில் எதிலுமே உமர் அவரை நியமிக்கவில்லை.
 
“உறவு, நட்பு என்ற அடிப்படையில் ஒருவரைப் பணியில் அமர்த்தினால் அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் துரோகம் இழைத்தவராவார்” என்பது உமர் அடிக்கடி கூறும் வாசகம். தம்முடைய மரணத்திற்குப்பின் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுள்ளவர்கள் என்று சிலரை அடையாளம் காட்டி அதற்கான தேர்வுக் குழுவில் தம் மைந்தர் அப்துல்லாஹ் ஓர் ஆலோகராக – ஆலோசகராக மட்டுமே – இருக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டு மறைந்தார் உமர் (ரலி).
 
இப்னு உமரும் தம் தந்தையின் காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி எந்தப் பதவியின்மீதும் மோகம் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் தவிர்த்து விலகி ஓடியிருக்கிறார்.
 
ஆனால் –
 
பட்டம், பதவி, அதிகாரம் ஆகியவற்றிலிருந்துதான் உமர் தம் மைந்தரை விலக்கி வைத்தாரே தவிர, அவரும் விலகியிருந்தாரே தவிர, போர்க்களத்தில் இருந்து ஒளிந்துகொள்ள அவருக்கு எவ்வித விலக்கும் சலுகையும் அளிக்கப்படவில்லை. பாரசீகத்தில் நடைபெற்ற போர்களுக்கு தம் மைந்தர்களை அனுப்பி வைத்திருக்கிறார். நஹாவந்த் நோக்கி முஸ்லிம் படைகளை அனுப்பியபோது முஹாஜிர்கள், அன்ஸார்கள் உள்ளடங்கிய அந்த அணிக்கு அப்துல்லாஹ் இப்னு உமரைத்தான் தலைவராக நியமித்திருக்கிறார்.
 
சமகாலத்தில் இவையெல்லாம் தலைகீழ். எந்தத் தலைவன் தன் வாரிசுகளை இராணுவத்திற்கும் எல்லையைக் காப்பதற்கும் அனுப்பி வைக்கிறான்?

oOo

இன்னும் வருவார், இன்ஷா அல்லாஹ்!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.