96. நான்காம் பால்ட்வினின் ஆரம்பகால ஆட்சி
ஷட்டியோனின் ரேனால்ட்! இயல்பிலேயே இரத்த வேட்கை நிறைந்திருந்த இந்த வில்லனைச் சற்றொப்ப நாற்பது அத்தியாயங்களுக்கு முன் அறிமுகம் செய்துகொண்டது நினைவிருக்கும். நூருத்தீனின் சிறைக்கொட்டடியில் கிடந்த அவனைப் பதினாறு ஆண்டுகள் கழித்து விடுவித்து அனுப்பி வைத்தார் அலெப்போவின் குமுஷ்திஜின். அந்தாக்கியாவின் அதிபதியாக இருந்த காலத்திலேயே பைஸாந்திய சக்கரவர்த்தியை எதிர்த்து நின்றவன் இவன். தன் மதத்தவர் என்ற கரிசனம், இரக்கம்கூட இன்றி சைப்ரஸில் பாதிரியார்களின் மூக்கை அறுத்து எறிந்தவன். கன்னியாஸ்திரிகளை வன்புணர்ந்த காமுகன். இப்படிப்பட்டவன் முஸ்லிம்களின் சிறையிலிருந்து விடுதலையானால் எப்படி இருப்பான்? இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தீராப் பகை உணர்ச்சியுடனும் நெஞ்சம் நிறைய வன்மத்துடனும் ஜெருசலம் வந்து சேர்ந்தவன், ராஜா நான்காம் பால்ட்வினுடன் இணக்கமானான்.
ரேனால்ட் சிறையிலிருந்த காலத்தில் அவனுடைய மனைவி கான்ஸ்டன்ஸ் மரணமடைந்து அவருடைய முதலாம் கணவருக்குப் பிறந்த மகன் – மூன்றாம் பொஹிமாண்ட் அந்தாக்கியாவின் அதிபதியாக ஆகியிருந்தார்; மகள் மரியா பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெலுக்கு (Manuel I Komnenos) மணமுடிக்கப்பட்டிருந்தார். அதனால் ரேனால்டுக்கு ஆட்சி அதிபராகும் வாய்ப்புப் பறிபோயிருந்தது. ஆனாலும் பைஸாந்திய சக்கரவர்த்தி, கான்ஸ்டன்ஸின் முதல் கணவருக்குப் பிறந்தவளும் தன் வளர்ப்பு மகளுமான மரியாவின் கணவர் என்பதால் சக்கரவர்த்தியின் மாமனார் என்ற செல்வாக்கு அவனுக்கு ஒரு கவர்ச்சியை அளித்தது. எந்த சக்கரவர்த்திக்கு ஒரு காலத்தில் எதிரியாகத் திகழ்ந்தானோ அவருடன் அவனுக்குக் குடும்ப உறவு ஏற்பட்டிருந்தது.
அந்த உறவு அடையாளத்திற்குச் சரிபட்டு வரும். ஆனால், முஸ்லிம்கள் மீது வெறுப்பும் செல்வத்தின் மீது மோகமும் ஆட்சி அதிகாரத்தின் மீது வேட்கையும் இரத்த நாளங்களில் ஓடிய அவனுக்கு அதுமட்டும் போதுமா என்ன? ஆலாய்ப் பறந்தது அவனுடைய மனது. முஸ்லிம்களைக் கொல்ல எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்த ரேனால்ட்டின் இரத்த வெறியை ஜெருசல ராஜா பால்ட்வினின் ஆலோசகர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதையும் திட்டமிட்டார்கள். அதை வடிவமைத்து அவனுக்குப் பரிந்துரைத்தார்கள்.
மில்லீயின் ஸ்டெஃபனி (Stephanie of Milly) என்பவர் டிரான்ஸ்ஜோர்டானின் அரசி. அச்சமயம் இளம் விதவையாக இருந்தார் அவர். தவ்ரனின் மூன்றாம் ஹம்ஃப்ரியுடன் (Humphrey III of Toron) அவருக்கு முதலாம் திருமணம் நடைபெற்றிருந்தது. அந்த தாம்பத்தியத்தில் அவருக்கு ஒரு மகனும் மகளும் பிறந்திருந்தனர். அந்தத் திருமண வாழ்க்கை ஹம்ஃப்ரியின் மரணத்துடன் முடிவுற்றது. அவருக்கு மறுமணம் செய்து வைத்தார்கள். ஆனால் அந்த இரண்டாம் கணவர் கொல்லப்பட்டு ஓராண்டில் மீண்டும் விதவையானார் ஸ்டெஃபனி. இந்த இரண்டாம் கணவரின் மூலமாக வாரிசுரிமை அடிப்படையில் கெராக் கோட்டை ஸ்டெஃபனியிடம் வந்து சேர்ந்திருந்தது.
72ஆம் அத்தியாயத்தில் நாம் பார்த்த இந்த கெராக் கோட்டையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் இங்குப் பார்த்துவிடுவோம்.
சாக்கடலின் கிழக்கே கி.பி. 1142ஆம் ஆண்டு உருவானது கெராக் கோட்டை. பேகன் தி பட்லர் (Pagan the Butler) என்பவர் டிரான்ஸ்ஜோர்டன் பகுதியின் சிலுவைப்படை அதிபதியாக இருந்தபோது கட்டிய பாறைக் கோட்டை அது. அக்கோட்டைக்குக் கோபுரங்களைக் கட்டி, வடக்கு-தெற்குப் பகுதிகளில் பாதுகாப்பிற்காகப் பாறைகளை வெட்டி ஆழமான அகழி அமைத்தார்கள். உள்ளே இரண்டு அடுக்குகளில், மிகப்பெரிய வளைவு மண்டபங்கள். அவை வசிப்பிடங்களாகவும் குதிரைத் தொழுவங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. கவண் தாக்குதல்களை எல்லாம் எளிதில் சமாளித்துத் தாங்கும் அளவுக்கும் வாகாகவும் எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக கனமான சுவர்கள் கட்டப்பட்டிருந்தன. டிரான்ஸ்ஜோர்டன் நிலப்பரப்பில் வெகு முக்கியமான இடத்தில் அமைந்துவிட்டது இந்த கெராக் கோட்டை. டமாஸ்கஸிலிருந்து எகிப்துக்குச் செல்வதாக இருந்தாலோ, மக்காவுக்குப் போக வேண்டும் என்றாலோ அதுதான் பாதை. எனவே, அதைக் கடக்கும் வணிகர்கள் மீதும் மக்காவுக்குச் செல்லும் பயணிகள் மீதும் திடீர்த் தாக்குதல் தொடுக்க, கொள்ளையடிக்க, அல்லது வரி வசூலிக்க வெகு வசதியாக அமைந்து விட்டது கெராக்.
அத்தகு முக்கியத்துவம் வாய்ந்த கெராக் கோட்டை சொத்தாகவும் அதன் அரசி மனைவியாகவும் வந்து சேர்கிறாள் என்றால் ரேனால்ட்டுக்கு எப்படி இருக்கும்? ராஜா பால்ட்வினின் ஆசீர்வாதத்துடன் ஜாம்ஜாமென்று திருமணம் செய்துகொண்டான். டிரான்ஸ்ஜோர்டான், கெராக் கோட்டைகளின் ஆட்சித் தலைமை, அப்பகுதிகளின் வருமானம் ஆகியனவெல்லாம் கூரையைப் பிய்த்துக்கொண்டு அவன் தலைமேல் கொட்டின. விளைவு? போர்த்தலைவன்-கொள்ளைக்காரன் எனும் இரண்டின் கலவையாக, ஸலாஹுத்தீனுக்கு எதிரியாக, தொழுநோய் ராஜா பால்ட்வினுக்கு உதவும் உற்ற ஆலோசகனாக, கட்டுக்கடங்காத மிருகமாக உருவெடுத்தான் ஷட்டியோனின் ரேனால்ட்.
இதனிடையே, பரங்கியர்கள் தரப்பு ஐரோப்பாவிலிருந்தும் பைஸாந்தியத்திலிருந்தும் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கியது. காரணம், எகிப்தும் டமாஸ்கஸும் ஸலாஹுத்தீனுக்குக் கீழ் வந்துவிட்டன; அலெப்போவின் நிலைமையும் இப்போ, அப்போ என்றுதான் உள்ளது; அதன் பிறகு சிரியா முழுவதையும் அவர் ஒன்றிணைக்காமல் விடப்போவதில்லை; இங்கு நம் ராஜா பால்ட்வினின் உடல்நிலையோ தொழுநோயினால் சிதைந்து வருகிறது. முற்கூட்டியே காரியத்தில் இறங்கினால்தான் சரிவரும் என்பது அவர்களது கவலை. ஆகவே பைஸாந்தியத்திற்குத் தூது அனுப்பினார்கள்.
பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் மேனுவெல் (Manuel I Komnenos) ராஜா பால்ட்வினின் மாற்றாந்தாய் மரியாவுக்குச் சின்ன தாத்தா என்பதிருக்க, அவர் ஒருவகையில் ரேனால்ட்டின் மருமகன் என்பதால் பைஸாந்தியத்திற்கும் பரங்கியர்களுக்கும் இடையே உருவாகியிருந்த உறவுப் பிணைப்பையும் ஜெருசலம் இராணுவக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு சாதகமாக்க விழைந்தார்கள். 1176ஆம் ஆண்டின் இறுதியில் ரேனால்ட்டை ஜெருசல ராஜாவின் அரச தூதனாக கான்ஸ்டன்டினோபிளுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் மைரீயோஹ்கெஃப்ஹலோன் யுத்தத்தில் சக்கரவர்த்தி மேனுவெல் ரோம ஸல்தனத்தின் சுல்தான் இரண்டாம் கிலிஜ் அர்ஸலானிடம் தோற்று, அவமானத்துடன் உட்கார்ந்திருந்த நேரம் அது. உலக அரங்கில் பைஸாந்தியத்தின் செல்வாக்கையும் புகழையும் மீண்டும் உயர்த்தித் தலைநிமிர வேண்டுமென்றால் பரங்கியர்களுடன் கைகோர்த்து ஸலாஹுத்தீன் அய்யூபிக்கு எதிராக வியூகம் அமைத்து, அவரைப் போட்டுத் தாக்கினால்தான் சரிவரும் என்று கணக்கிட்டார் மேனுவெல். கூடுதலாக, எகிப்தின் மீதும் மேனுவெலுக்கு ஆர்வம் இருந்தது. அங்கு சிசிலியர்கள் வந்து காலூன்றி , துறைமுகங்களின் கட்டுப்பாடு அவர்களிடம் சென்றுவிட்டால் அது இத்தாலியின் வணிகர்களுக்கு நல்வாய்ப்பாக ஆகிவிடும்; ஆகவே அதைத் தடுத்துவிட வேண்டும் என்பது அவரது விருப்பம்.
அனைத்தையும் கூட்டிக்கழித்து யோசித்துவிட்டு, ரேனால்ட்டின் பேச்சுக்குத் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்து, ‘கடற்படையை உதவிக்கு அனுப்புகிறோம்; பகரமாக பரங்கியர்களின் அரசு பைஸாந்தியத்திற்குக் கட்டுப்பட்டாக வேண்டும்; ஜெருசலத்தில் கிரேக்கர்களின் மரபுவழி கிறிஸ்தவ மதகுரு அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தார் மேனுவெல். ஏற்றுக்கொண்டது பரங்கியர் தரப்பு.
1177ஆம் ஆண்டின் கோடைப் பருவத்தின் பிற்பகுதியில், 150 கப்பல்களில் கிரேக்கக் கடற்படை பாய்மரங்கள் படபடக்க அணிதிரண்டு வந்து ஏக்கர் நகர் கடலை அலங்கரித்தது. அதே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தது ஐரோப்பாவிலிருந்து பெரியதொரு படை. அதற்குத் தலைமையேற்று வந்திருந்தார் ஃப்ளண்டர்ஸின் கோமான் ஃபிலிப் (Count Philip of Flanders). திடீரென்று வந்து நுழைந்திருக்கும் இந்தக் கோமான் ஃபிலிப் என்பவர் யார்? அவருக்கும் இன்றைய ஜெருசல ராஜா நான்காம் பால்ட்வினுக்கும் என்ன உறவு? பார்ப்போம்.
oOo
நாற்பத்து மூன்றாம் அத்தியாயத்தில் அன்ஜுவின் கோமான் ஃபுல்க் என்பவரைப் பற்றிப் வாசித்தோம். அச்சமயம் ஜெருசல ராஜாவாக இருந்த இரண்டாம் பால்ட்வின் தமக்குப் பின் நாடாள அரச வாரிசு வேண்டுமே என்ற கவலையில் அன்ஜுவின் கோமான் ஃபுல்க் (Fulk of Anjou) என்பவரைத் தம் மூத்த மகள் மெலிஸாண்ட் என்பவருக்கு மணமுடித்து வைத்தார். பின்னர் ஃபுல்க் ஜெருசலம் ராஜாவாக ஆனார். அவருக்கு மற்றொரு மனைவியும் இருந்தார். இவர்களுள் மனைவி மெலிஸாண்ட்டின் மகன் அமால்ரிக் வழி பேரனே இப்போதைய ராஜா நான்காம் பால்ட்வின். ராஜா ஃபுல்க்கின் மற்றொரு மனைவியின் மகள் வயிற்றுப் பேரன் ஃப்ளண்டர்ஸின் கோமான் ஃபிலிப். ஆக இவ்விருவருக்கும் தாத்தா, அன்ஜுவின் கோமான் ஃபுல்க்.
கோமான் ஃபிலிப், அல்ஸாஸின் ஃபிலிப் (Philip of Alsace) என்றே பொதுவாகக் குறிப்பிடப்படுகிறார். புனித சிலுவையுத்தத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று இரண்டு முறை ஐரோப்பாவிலிருந்து கிளம்பி வந்தவர் இவர். அதில் முதலாவதே இப்போதைய அவரது வருகை. புனித பூமியாம் ஜெருசலத்திற்குச் சிலுவைப் பயணம் மேற்கொள்ளுங்கள் என்று லெவண்த்தில் வாழ்ந்த பரங்கியர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்தபடி இருந்தார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக 1175ஆம் ஆண்டிலேயே ஜெருசலத்திற்கு அணிவகுப்பது என்று நேர்ச்சையைப் போல் ஃபிலிப் மனத்தில் முடிவெடுத்து விட்டார். ‘சிலுவைப் பயணம் சென்று சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்; லெவண்த்தில் கிறிஸ்தவர்களின் நிலையைப் பாதுகாக்க உதவியதைப் போலவும் இருக்கும்; எனது கௌரவத்திற்கும் அது பெருமை சேர்க்கும்’ என்றெல்லாம் அவருக்கு எண்ணம். ஆனால் அவற்றையெல்லாம் மீறி மற்றொரு கணக்கும் அவர் மனத்துள் ஓடியது. குறிப்பாகச் சொல்வதென்றால் அதுவே பிரதானமாக மாறியது.
அதை இங்கிருந்த பரங்கியர்கள் முதலில் அறியவில்லை. அல்ஸாஸின் ஃபிலிப் வந்துவிட்டார் என்றதுமே நாம் ஐரோப்பாவிடம் உதவி வேண்டி அனுப்பிய முறையீடுகளுக்கு முடிவு கிடைத்து விட்டது; அவர் சிலுவைப்போர் மரபிலிருந்து வந்தவர்; அவருடைய தந்தையும் சிலுவைப்போர் வீரராக இருந்தவர்; அவருடைய தாயோ ஜெருசலத்தின் முன்னாள் ராஜா ஃபுல்க்கின் மகள்; ஆகவே இனி போருக்குப் பஞ்சமில்லை என்று அவர்களுக்கு எக்கச்சக்க நம்பிக்கை. ஃபிலிப்புக்குத் தடபுடலான வரவேற்பு நிகழ்ந்தது. தொழுநோய் ராஜா பால்ட்வின் தமது நோயின் உபாதைகளைக் கூடப் பொருட்படுத்தாமல் பல்லக்கில் ஏறிப் பயணித்து வந்து, தம் உறவினர் ஃபிலிப்பை வரவேற்றார். ஜெருசலத்தின் நிர்வாகம் இனி உங்கள் பொறுப்பு என்று அவரை அதிர வைத்தார். ஜெருசல இராஜ்ஜியத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் விடையாக, தீர்வாக அவர்கள் தம்மைக் கருதுவதைப் பார்த்து வியந்துவிட்டார் ஃபிலிப். ஆனால், ‘பொறுங்கள். பொறுங்கள். ஃப்ளண்டர்ஸை விட்டுவிட்டு என்னால் இங்கு நீண்டகாலம் தங்கிவிட முடியாது. அங்கு எனது சேவை மிகவும் தேவை’ என்று பவ்யமாக மறுத்துவிட்டார்.
பார்த்தார் ராஜா பால்ட்வின். அடுத்து என்ன என்று யோசித்தார். பைஸாந்தியக் கப்பற் படை வந்திருக்கிறது; ஃபிலிப்பும் படையுடன் வந்திருக்கிறார்; ஸலாஹுத்தீன் ஆட்சியின் மையம் எகிப்து; எனவே நாம் அதன் மீது ஒருமித்த தாக்குதல் தொடுப்போம் என்று திட்டமிட்டார். அதற்கு ஃபிலிப், ‘அதெல்லாம் சரிதான். எகிப்தைத் தாக்க நானும் தயார்தான். ஆனால் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இந்தப் படையெடுப்பு தோல்வியில் முடிந்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. வெற்றிகரமாக முடிந்தால் நான் என் ஊருக்குத் திரும்பும் முன் எகிப்தை ஜெருசலத்திற்கோ, பைஸாந்தியற்கோ விட்டுத்தர முடியாது’ என்று பதிலளித்து அவர்களைத் திகைக்க வைத்தார். பரங்கியர்கள்தாம் திகைத்தார்களே தவிர, அவரது உள்நோக்கம் தெளிவாக இருந்தது. அது ஏதேனும் சாக்குபோக்குச் சொல்லி அந்தக் கூட்டணிப் படையெடுப்பில் கலந்துகொள்ளாமல் தப்பித்துவிட வேண்டும் என்பதே.
அடுத்து மற்றொரு காரணத்தையும் முன் வைத்தார் ஃபிலிப். இலையுதிர் காலத்தில் நைல் நதியில் பெருகும் வெள்ளம் எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் இப்பொழுது எகிப்துப் படையெடுப்பு வேண்டாம். வேறு எங்காவது என்றால் சொல்லுங்கள். நான் சேர்ந்துகொள்ளத் தயாராக இருக்கின்றேன் என்றார். அப்படியெனில், பைஸாந்தியக் கடற்படையை என்ன செய்வது? எகிப்தில் ஸலாஹுத்தீனுக்கு எதிரான போருக்கு அன்றி வேறு நிலப்பரப்பில் நடக்கும் படையெடுப்புகளுக்கு அவர்களை எப்படிப் பயன்படுத்த முடியும்? கான்ஸ்டண்டினோபிளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கையை மதிப்பது பரங்கியர்களுக்கு முக்கியமானதாக இருந்ததால் அவர்களின் நிலைமை தர்மசங்கடமாகி விட்டது. எரிச்சலும் ஆத்திரமும் எழுந்தன. வாத-விவாதங்கள் தொடங்கின.
‘சரி! நீங்கள் இங்குத் தங்கி ஓய்வெடுங்கள். நாங்களும் பைஸாந்தியமும் இணைந்து சென்று எகிப்தை ஒரு கை பார்த்துவிடுகிறோம்’ என்றார்கள். அதையும் ஏற்காமல் முட்டுக்கட்டை போட்டார் ஃபிலிப். ‘நீங்கள் அங்குப் போரில் ஈடுபட்டிருக்க நான் இங்கு குளிர்காலத்தில் ஓய்வடுத்துப் படுத்துக்கிடந்தால் அது எனது கௌரவத்திற்குப் பேரிழுக்கு. ஆகவே நான் வேறு பகுதியில் போரிடுகிறேன். ஆனால், பெரும் எண்ணிக்கையில் உங்களது படைவீரர்கள் எனக்குத் தேவை. ஏனெனில் எனது படை சிறியது’ என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்று அவருக்குப் படைவீரர்களை அளித்தால் எகிப்துப் படையெடுப்பிற்குப் போதுமான வீரர்கள் இல்லாத நிலை பரங்கியர்களுக்கு ஏற்படும் . திகைத்தார்கள் அவர்கள்.
இவற்றையெல்லாம் கவனித்த பைஸாந்தியர்களுக்கோ விரக்தியும் மனச்சோர்வும் ஏமாற்றமும் எகிறின. ‘மஅஸ் ஸலாமா’ என்பதை கிரேக்க மொழியில் தெரிவித்துவிட்டு கான்ஸ்டண்டினோபிள் திரும்பியது அவர்களது கப்பற்படை.
வெறுத்துப்போன பரங்கியர்கள், ஃபிலிப்பிடம், ‘என்னதான் உன் நோக்கம், திட்டம்?’ என்று கேட்டார்கள். அதற்கு மேல் மறைக்காமல், ‘சிலுவைப்போர் பிரதானம் என்று நான் வரவில்லை. ராஜா பால்ட்வினின் சொந்த சகோதரி சிபில்லாவையும் அவருடைய மாற்றாந்தாய் சகோதரி இஸபெல்லாவையும் என் உறவினர்கள் இருவருக்குத் திருமணம் பேசி முடிக்கவே வந்தேன்’ என்று தான் போட்டு வந்த மனக் கணக்கை ஒப்புக்கொண்டார் ஃபிலிப். அதைக்கேட்டு ஆத்திரத்தில் கொதித்தார்கள் பரங்கியர்கள். ‘சிலுவைக்காகப் போரிட வந்திருக்கிறாய் என்று நினைத்தால், நீ திருமணத்தைப் பற்றிப் பேசுகிறாயே’ என்று பெருங்குரலில் கத்தினார் ஒருவர்.
இப்பிரச்சினையின் பஞ்சாயத்தில் ஈடுபட்டிருந்த வரலாற்று ஆசிரியரான டைரின் வில்லியம் ஃபிலிப்பிடம், ‘என்ன பேசுகிறீர்கள்? சிபில்லாவின் இரண்டாம் கணவர் வில்லியம் இறந்து சில மாதங்கள்கூட ஆகவில்லை. அவளுடைய வயிற்றிலோ அவருடைய கரு. அதற்குள் அவளுடைய மறுமணத்தைப் பற்றிப் பேசுகிறீர்களே’ என்றார். கோமான் மூன்றாம் ரேமாண்டும் தம் பங்கிற்குக் கடிந்தார். ஏனெனில் அவருக்குத் தம்முடைய உறவினர்களுக்கு அப்பெண்களைத் திருமணம் முடிக்கத் திட்டம் இருந்தது. என்ன செய்ய? அவரவருக்கு அவரவர் அரசியல் திட்டம். ஆனால் ஆண்டவனின் திட்டமாக ஸலாஹுத்தீனின் வலிமையைத் தடுக்க ராஜா பால்ட்வின் மேற்கொண்ட எகிப்தியப் படையெடுப்பு இவ்விதம் முறிந்து போனது. அவர்களுக்கு அச்சமயம் இருந்த சிறந்த வாய்ப்புப் பறிபோனது.
எனினும் சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு வேறு வகையில் வெகு விரைவில் பெரும் பின்னடைவு ஒன்று ஏற்பட்டது.
அது–
(தொடரும்)
