“பாபரி மஸ்ஜித் நிலை கொண்டு இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது?” எனும் நில உரிமையியல் வழக்கில், எழுபதாண்டு இழுபறிகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் ஐவர் குழு அரசியல் அமர்வு இன்று தனது 9/11 2.0 19 விசித்திரமான தீர்ப்பை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் சார்பாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார்.
முன்னுக்குப் பின் முரண்களும் இடைச் செருகல்களும் நிறைந்த அந்தத் தீர்ப்பின் சுருக்கப் புள்ளிகள்:
- கடந்த 22.12.1949 அன்று இரவில் பாபர் மஸ்ஜிதுக்குள் திருட்டுத்தனமாக சிலைகள் வைக்கப்பட்டது சட்டவிரோதச் செயல்.
- கடந்த 6.12.1992 அன்று பா.ஜ.க. தலைவர் அத்வானியின் தலைமையில் பாபாரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்ட விரோதச் செயல்.
- ‘ராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மஸ்ஜித் கட்டப்பட்டது’ என்ற குற்றச்சாட்டு தவறானது.
- இந்தியத் தொல்லியல் துறை சமர்ப்பித்த ஆய்வறிக்கையில், பாபரி மஸ்ஜித் இருந்த இடத்துக்குக் கீழே கட்டுமான தளங்கள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் “அவை கோவில் இருந்ததற்கான கட்டுமான தளங்கள் அல்ல” என்பதையும் தொல்லியல் துறை குறிப்பிட்டிருக்கிறது.
- அலஹாபாத் உயர் நீதிமன்றதில் நடைபெற்று வந்த ‘பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்?’ எனும் இதே (Tilte Suit) நில உரிமை சிவில் வழக்கில் கடந்த 30.9.2010 அன்று லக்னவ் பெஞ்ச் வழங்கிய ‘மூவருக்குப் பங்கு’ எனும் தீர்ப்பு தவறானது.
- நில உரிமை வழக்குகளில் ஆவணங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இவ்வளவு நியாயங்களையும் சம்பிரதாயத்திற்குக் குறிப்பிட்ட பின்னர், வழக்கின் மூலக் கருவான ‘பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்?’ என்பதில் மட்டும் பொருத்தமில்லாத, சட்டத்துக்குப் புறம்பான தலைகீழ் முடிவை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்:
நம்பிக்கையின் அடிப்படையில், பாபர் பள்ளிவாசல் அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலமும் ராமருக்குக் கோவில் கட்டுவதற்காக அனுமதி அளிக்கப்படுகிறது.
ராமர் பிறந்த இடம் இதுதான் என்பதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? என்று யாரும் கேட்கக் கூடாது. ஏனெனில், “மத நம்பிக்கையில் நீதி மன்றங்கள் குறுக்கிடக் கூடாது” என்று இந்துமத அமைப்புகள் பலமுறை நீதிபதிகளை அன்புடன் எச்சரித்திருக்கின்றன. அந்த எச்சரிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போது கடைசி வரி, தீர்ப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு எண் மிக முக்கியமானது. இந்த எண்ணை மேற்கோள் காட்டி, ‘நம்பிக்கையின் அடிப்படையில்’ எதிர்காலத்தில் பல தீர்ப்புகள் ‘பெறப்பட’ இருக்கின்றன.
இதற்குமேல், இந்நாட்டில் நீதிமன்றங்கள் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் சொல்லும் என்று நம்புகின்றவர்கள் எவ்வளவு பெரிய ஏமாளிகளாக இருப்பார்கள்?
முஸ்லிம்களுக்கு பாபரி மஸ்ஜித் அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலம் உரிமையானதல்ல என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு போர்டுக்குப் பிச்சை போடுவது ஏன்? இந்தப் பிச்சை நிலத்தை ஏற்றுக்கொள்வது சன்னி வக்ஃபு போர்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் மானத்துக்கும் உகந்ததல்ல.