வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 3

Sword at door“அப்பன்மார்கள் வேற்று ஜாதி உறவைத் தேடிச் சென்றபோது நம்பூதிரிப் பெண் குட்டிகள் இல்லங்களில் இருள்படர்ந்த அறை மூலைகளில் இருந்து நரைத்தனர். 1885இல் மலபாரில் மட்டும் 1017 இல்லங்கள் இருந்ததாக லோகன் ஆதாரப்படுத்தியுள்ளார். இக்காலகட்டத்தில் கேரளத்தில் மொத்தமாக 1500 இல்லங்களில் சுமார் 8000 க்கும் மேற்பட்ட வாழ்க்கை கிடைக்காத கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருந்ததாக கணிக்கப்பட்டிருந்தது” (ஜாதிப் பாகுபாடும் கேரள வரலாறும் – பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம்: 159).



இதற்கும் மேலாக சிறு வயதுள்ள கன்னிப் பெண்களை வயதான நம்பூதிரிகள் திருமணம் புரிவதும் சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது. அதன் மூலம் சிறுவயது விதவைகள் சமூகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தனர். (வாட்டர் எனும் திரைபடத்தில் தீபா மேத்தா இதனை மையமாக வைத்து, உயர்சாதிப் பிராமணச் சமூகத்தில் முன்பு நடந்த இத்தகைய அநியாயங்களால் விதவைகளாக்கப்பட்ட பால பருவப் பெண் குழந்தைகளின் மோசமான நிலையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியதாலேயே சங்கபரிவார அமைப்புகள் அப்படத்தைத் திரையிட விடாமல் அட்டூழியம் புரிந்தன). பல நம்பூதிரிப் பெண்களுக்கும் திருமணம் புரியும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவில்லை. பல வேளைகளிலும் பெண்கள் கன்னிகளாகவே மரணமடைய வேண்்டிய துர்பாக்கிய நிலை இருந்தது.


“1912இன் கணக்குப்படி 1000 நம்பூதிரிமார்களில் 516 பேர் திருமணம் புரிந்தவரும் 457 பேர் திருமணம் செய்யாதவரும் ஆவர். பெண்களில் 1000 க்கு 393 பேர் திருமணம் புரிந்தவர்களும் 387 பேர் திருமணம் புரியாதவர்களும் 230 பேர் விதவைகளுமாவர்” (கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்த கால வரலாறும் நிகழ்கால நிலைமையும் – டாக்டர். கெ.பி. ஸ்ரீதேவி).


இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நம்பூதிரிகளுக்கிடையில் நடைமுறையிலிருந்த வரதட்சணை பழக்கவழக்கம் பெண்களுக்கு உருவாக்கிய பிரச்சனைகள் ஏராளம்.


“இரண்டு, மூன்று திருமணங்கள் புரிய நம்பூதிரிகளுக்கு, அச்சமூகத்துப் பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை ஒரு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது முதல் விஷயமாகும். இரண்டாவது இதனை விடக் கொடுமையானது: நம்பூதிரிகளில் அனைவரும் செல்வந்தர்கள் இல்லை. பொருளாதார – சமூக தலைமைகளைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த ஒரு பகுதி மட்டுமே தனவந்தர்களாக இருந்தனர். வறுமையில் வாடியவர்களும் அச்சமூகத்தில் நிறைந்திருந்தனர். வரதட்சணை கொடுக்கப் பணம் இல்லாமல் இருக்கும் பொழுது, உதவ ஆளில்லாத தந்தைகள் வயதிற்கு வந்தப் பெண்களைக் கர்நாடகா, சிர்சியி, சித்தாப்பூர் அல்லது கோயம்புத்தூர் போன்ற ஏதாவது இடத்திற்குக் கொண்டு சென்று ஏதாவது ஒரு பிராமணனுக்குத் திருமணம் செய்து கொடுப்பர்”.(“கேரள நம்பூதிரிப் பெண்களின் கடந்தகால வரலாறும் நடப்புக் காலமும்” – டாக்டர். கெ.பி.ஸ்ரீதேவி)


நம்பூதிரிகளிடையே நடைமுறையிலிருந்து இத்தகையத் திருமண நிகழ்வுகளில் பெண்கள் வஞ்சிக்கப்படுவது இயல்பாகிப் போயிருந்தது. வி.டி. பட்டத்திரிபாடின் “பதில் கிடைக்காத கேள்வி” என்ற சிறுகதை, இதுபோன்று வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கொடுமையான அனுபவங்களைக் கூறுகிறது. இந்தியாவில் பல பாகங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததன் ஓர் அங்கமாகக் கேரளத்திலும் நம்பூதிரிகளிடையே பெண்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளுக்குக் குறைவில்லை. பிராமணர்கள் பெண்களைப் போகப்பொருட்களாக மட்டுமே நினைத்துச் செயல் பட்டதன் விளைவே இது. சமீபத்தில் தீபாமேத்தா தயாரித்து வெளியான “வாட்டர்” என்ற திரைப்படமும் பெண் சமூகத்திற்கு எதிராக பிராமண சமூகம் கையாண்டிருந்த கொடூரமான பழக்கவழக்கங்களையும் அநியாயங்களையும் காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனாலேயே சங் பரிவாரத்தின் கடுமையான எதிர்ப்புக்கும் அத்திரைப்படம் இலக்கானது.


இதுபோன்ற அனைத்துத் சுரண்டலுக்கும் இலக்காகி, வீடுகளின் உள்தளங்களில் ஒதுங்கி மறைந்து வாழவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப் பட்ட பெண்கள், கடுமையான உடற்பசியால் வாடி, பலவேளைகளிலும் வழிகெட்டுப் போக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அவ்வாறு சோரம் போவது நம்பூதிரி ஆண்களுடனாக இருந்தாலும்கூட, அவர்கள் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். அவ்விதம் ஜாதிவிலக்கிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு, கோழிக்கோடு சேட்டுகளிடம் தஞ்சமடைவது அல்லது தெரு விபச்சாரிகளாவது ஆகிய இரண்டு மட்டுமே வாழ்க்கைக்கான வழிகளாக இருந்தன.


ஒரு பக்கம் நம்பூதிரிப் பெண்கள், நம்பூதிரிகளிடையே இருந்த மோசமான ஆச்சாரங்களால் கடுமையான உடல்-மன கொடுமைகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, மறுபக்கம் நாயர் பெண்களுக்கான மணவாழ்க்கை என்பது கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் ‘புதுமைப் பெண்’களாக அவர்களை மாற்றிப் போட்டிருந்தது.


நாயர் பெண்கள் வயதிற்கு வருவதற்கு முன் ஒன்பது-பத்து வயதிருக்கும் பொழுது “கெட்டு கல்யாணம்” என்ற ஒரு திருமணச் சடங்கு நடைபெறும். சில வேளைகளில் ஒரு ஆணே பல பெண்களுக்குத் தாலி கட்டுவார். அவ்வாறு தாலிகட்டும் ஆணுக்கு, தாலி கட்டிய பெண்ணுடன் தொடர்பு கொள்வதற்கு அனுமதி கிடையாது. ‘கட்டிய கணவனை’த் தவிர்த்து உயர்ஜாதியிலோ அல்லது அதே ஜாதியிலோ உள்ள வேறு எந்த ஆணுடனும் அப்பெண் இணைந்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை உடைய நாயர் பெண்கள், அதனை மோசமான பழக்கமாகக் கருதவில்லை. மாறாக, அதிகமான பிராமணர்களுடைய, வழிபோக்கர்களுடைய உறவை நாயர் பெண்கள் மிகப்பெரும் கொடுப்பினையாக – பெருமையாகக் கருதியிருந்தனர். அத்தகைய தொடர்புகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்திருந்தது அப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள்தாம் என்பது அதிர்ச்சியின் உச்சகட்டம்!


“கெட்டு கல்யாணம்” என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் நிலை முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. வீட்டிற்கு வெளியே வாள் வைக்கப்பட்டிருப்பது காணப்பட்டால், உள்ளே வேறு நபர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, பிற கணவர்களும் காதலர்களும் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. நாயர் பெண்களுக்குப் பல கணவர்மார்கள் இருப்பதைச் சமூகம் அங்கீகரித்திருந்தது. அது அவர்களது மதச் சட்டமாகக் கருதப் பட்டதால் அதனைக் குறித்து கேள்வி கேட்பது தடை செய்யப்பட்டிருந்தது. 1800-1801இல் மலபாரில் பிரயாணம் செய்து அங்குள்ள நிலைமைகளைச் சேகரித்த வரலாற்றாசிரியர் புக்கானல் இவ்விஷயங்களைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  இதனைக் குறித்து ஸைனுத்தீன் மக்தூமின் விளக்கத்தை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:


“ஒவ்வொரு பெண்ணிற்கும் தொடர்பு வைத்துக் கொள்ள இரண்டோ நான்கோ கணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாமல் மிகுந்த இணக்கத்துடன் வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் ஒன்றுக்கும் மேற்பட்ட தன் தனது மனைவிகளிடத்தில் நேரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் ரீதியில், நாயர் மனைவியானவள் தனது சௌகரியத்திற்கு ஏற்ப கணவர்களை மற்றி மாற்றி உபயோகப்படுத்துகின்றாள்”.


“மேற்கண்ட இந்தத் தொடர்பில் மனைவி கர்ப்பம் தரித்தால் குழந்தையின் தகப்பன் யார் என்பதை மனைவி நிச்சயிப்பாள். தகப்பனாக சுட்டிக் காட்டப்பட்டவன் குழந்தைக்குத் தேவையானவைகளைச் செய்துக் கொடுத்துப் பாதுகாப்பான்; கல்வியளிப்பான். ஆனால், அவனது சொத்துகளுக்கு இதுபோன்ற குழந்தைகள் வாரிசுகள் ஆக மாட்டார்” (மலபார் மேனுவல் – வில்லியம் லோகன், பக்கம் 139).



இன்ஷா அல்லாஹ் தொடரும்…

 

பகுதி – 1 | பகுதி – 2